ஆசியாவில் COVID-19 தொற்றுநோயின் மையப்புள்ளியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது

By Wasantha Rupasinghe
27 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நோய்த்தொற்று விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை வேகமாக அரை மில்லியனை நெருங்கி வருகின்றன. புதிய நோய்த் தொற்றுகள் நேற்று மற்றொரு உச்ச நிலையை பதிவு செய்தன. 16,857 தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன் மொத்தம் 472,000 க்கும் அதிகமாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கத்தின் கிரிமினல் அலட்சியத்தின் விளைவாக இந்த தொற்றுநோய் விரைவாக, பெரும்பாலும் கட்டுப்பாடில்லாமல் பரவியது. சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுகள் பெரிதாக வெடித்ததால், கிட்டத்தட்ட அனைத்து முடக்க நடவடிக்கைகளிலிருந்தும் படிப்படியாக வெளியேறுவதை மோடி மேற்பார்வையிட்டுள்ளார், மேலும் இதுபோன்ற இரண்டாவது பணிநிறுத்தம் ஏற்படாது என்று பெருவணிகத்திற்கு உறுதியளித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, இந்தியாவின் ஆளும் உயரடுக்கு "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது, அது நூறாயிரக்கணக்கான, அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் பலியாகும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

இதன் விளைவாக இந்தியாவில் மொத்த தொற்றுகள் மூன்று வாரங்களுக்குள் இரு மடங்காக அதிகரித்துள்ளன. மொத்த தொற்று எண்ணிக்கை 226,000 ஆக இருந்த ஜூன் 5 முதல் 250,000 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய 100,000 தொற்றுகள் கடந்த எட்டு நாட்களில் பதிவாகியுள்ளன.

அரசாங்கத்தின் மிகக் குறைவான இறப்பு எண்ணிக்கை கணக்குப்படி ஜூன் 14 அன்று 14,907 பேர் உயிர் இழந்துள்ளனர். இது ஜூன் 1 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு (5,608), இருப்பினும், இது மோடிக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் ஒரு சிறிய எண்ணிக்கைதான். அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான நிபுணர்களில் ஒருவர் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் கொள்கையால் 2 மில்லியன் உயிர்களை இழக்க நேரிடும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்த கொடூரமான எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், மோடி அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கைப் பற்றி எந்தவொரு தீவிரமான விமர்சனமும் ஆளும் உயரடுக்கினுள் எந்தவொரு பிரிவினரிடமிருந்தோ அல்லது எதிர்க் கட்சிகளிடமிருந்தோ வரவில்லை, அவை தாம் மாநில அரசாங்கங்களை அமைத்திருக்கும் இடங்களில் மரணம் விளைவிக்கும் வேலைக்கு திரும்பும் கொள்கையை அமுல்படுத்துகின்றன.

இந்தியாவின் உத்தியோகபூர்வ COVID-19 தொற்றுக்களில் நாற்பத்தைந்து சதவீதம் இரண்டு மாநிலங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன – மேற்கு கடற்கரையிலுள்ள மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிராவில் 139,010 உடனும் மற்றும் தேசிய தலைநகரான டெல்லி 70,000 க்கும் அதிகமாக உள்ளது.

தெற்கில் உள்ள தமிழ்நாடு, இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள குஜராத், மற்றும் வடக்கு மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மொத்த COVID-19 தொற்றுக்களில் 25 சதவிகிதம் ஆக இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உருவாகி வரும் ஒட்டுமொத்த காட்சி என்னவென்றால், மும்பை, டெல்லி மற்றும் சென்னை போன்ற பெரிய நகர மையங்கள் உட்பட நாட்டின் பெரும்பகுதிகளில் கொரோனா வைரஸ் இப்போது ஆழமாகப் பதிந்துள்ளது, மேலும் மருத்துவ கவனிப்பு இன்னும் குறைவாக கிடைக்கக்கூடிய கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தியோகபூர்வ அரசாங்க புள்ளிவிவரங்கள் மோசமானதாக எப்போதும் இருக்கும் நிலையில், தொற்றுநோயின் உண்மையான அளவு மிகவும் மோசமானது என்ற பரவலான ஒருமித்த கருத்து உள்ளது. COVID-19 க்கு முன்பே, இந்தியாவில் 70 சதவீத இறப்புகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே மருத்துவ சான்றிதழ் பெற்றவர்கள், இது இந்தியாஸ்பென்ட் இணைய (IndiaSpend web) தளத்தால் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின் தீவிர நம்பமுடியாத தன்மையின் ஒரு எடுத்துக்காட்டாக, அந்த வலை போர்டல் 2017 இல் மலேரியா குறித்த அதிகாரபூர்வ தரவை சுட்டிக்காட்டியது. அரசு மருத்துவமனைகள் இந்தியாவில் வெறும் 194 மலேரியா இறப்புகள் நிகழ்ந்ததாகக் கூறினாலும், வாய்மொழி பிரேத பரிசோதனைகள் உட்பட பல ஆதாரங்களைப் பயன்படுத்தும் குளோபல் பேர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease), அதே ஆண்டில் 50,000 இறப்புகள் என மதிப்பிட்டுள்ளது.

ஜூன் 17 முதல் ஒவ்வொரு நாளும் டெல்லியில் குறைந்தது 2,000 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் மொத்த நோய்த்தொற்றுகள் வெறும் 12 நாட்களுக்குள் இரட்டிப்பாகின்றன.

இந்தியாவின் தலைநகரில் தீவிரமான முறையில் வைரஸ் பரவுவது பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் மோடியின் பொறுப்பற்ற கொள்கையுடன் நேரடியாக இணைந்துள்ளது. ஜூன் 8 அன்று, மோடி “அன்லாக் 1” என அழைக்கப்படும் மறு திறப்பு பிரச்சாரம் தொடங்கியபோது, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்தம் 29,500 தொற்றுகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. கடந்த 16 நாட்களில், 40,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிகிச்சை பெறமுடியாத நிலை குறித்த ஏராளமான அறிக்கைகள் வந்துள்ளன. மருத்துவமனை வார்டுகளில் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக அகற்றப்படாமல் இருக்கும் இறந்த உடல்கள் மற்றும் நிரம்பி வழிகின்ற பிணவறைகள் பற்றிய பல அறிக்கைகளிலிருந்து வேகமாக பரவும் தொற்றுகளின் அழிவுகரமான தாக்கத்தை காணமுடியும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) இல்லாததால், அதிக நேரம் வேலை செய்யும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் தொற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெல்லியின் மிகப்பெரிய COVID-19 மருத்துவமனையான லோக் நாயக் மருத்துவமனையில் 2,000 படுக்கைகள் கொண்ட பயங்கரமான நிலைமை குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற உறவினர்கள் மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். “நோயாளிகளின் உறவினர்களிடமிருந்து முன்னேற்றம் பற்றிய தகவல் அறிந்து கொள்வதற்கான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன” என்று மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறினார்.

சுவாசக்கருவிகள் பற்றாக்குறை காரணமாக COVID-19 நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்துமாறு மகாராஷ்டிரா மாநில அரசாங்கம், மருத்துவமனைகளை கேட்டுக் கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 114 மில்லியன் மக்கள் வசிக்கும் மகாராஷ்டிராவில் வெறும் 3,028 சுவாசக்கருவிகள் தான் உள்ளன.

பல்வேறு மாநில அரசாங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 50,000 "இந்திய தயாரிப்பு" சுவாசக்கருவிகளை வழங்குவதாக ஒரு பாஜக அரசாங்க வெளியீடு கூறியிருந்தாலும், இதுவரை 2,923 சுவாசக்கருவிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன, வெறும் 1,340 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக, மத்திய அரசாங்கம் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியால் வழிநடத்தப்பட்டிருந்தாலும், இந்திய அரசாங்கம் பொது சுகாதாரத்துக்கு வளங்கள் கிடைக்காமல் செய்தது. ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 1.5 சதவிகிதம் வரை சுகாதார பராமரிப்புக்காக செலவழிக்கிறது. அதிக மக்கள் தொகை அடர்த்தி, உள்ளூர் வறுமை மற்றும் மோசமான சுகாதாரப் பாதுகாப்பு முறை காரணமாக இந்தியா தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியது என்று சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு வளங்களை வழங்க மோடி அரசாங்கம் தவறிவிட்டது. ஜூன் 23 நிலவரப்படி, இந்தியா ஆயிரம் பேருக்கு 5.17 சோதனைகளை மேற்கொண்டது, இது பெரிய அளவில் COVID-19 வெடித்த எந்தவொரு நாட்டிலும் செய்யப்பட்டதை விட மிகக் குறைந்த சோதனை விகிதமாகும்.

வரவிருக்கும் வாரங்களில் பேரழிவு தரும் சுகாதார நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அரசாங்க கணிப்புகள் காட்டுகின்றன. ஜூலை மாத இறுதிக்குள் இந்த தொற்று எண்ணிக்கை 550,000 ஆக இருக்கும் என்று டெல்லியில் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான குர்கானில், உற்பத்தி ஆலைகளில் மிருகத்தனமான நிலையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உழைக்கும் நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் நோய்த்தொற்றுகள் 150,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் புதிய பெருக்கத்திற்கான இடமாக கிராமப்புறங்களை கண்டுள்ளது. அங்கு நாட்டின் 1.37 பில்லியன் மக்களில் 70 சதவீதம் பேர் வாழ்கின்றனர். முக்கிய நகரங்களில் சுகாதாரப் பாதுகாப்பு முறை பாழடைந்து சரிந்தால், கிராமப்புற இந்தியாவில் அது முற்றிலும் இல்லாத நிலை தான் உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள நெருக்கடியை மேலும் கூட்டுவது பல்வேறு நகராட்சி அதிகாரிகள் உள்ளூர்வாசிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிப்பதற்கான முடிவாகும், இதனால் கிராமப்புற நோயாளிகள் நகர்ப்புறங்களுக்கு மருத்துவமனை சிகிச்சைக்காக பயணிக்கும் வழக்கமான நடைமுறையை நிறுத்தப்படுகிறது.

கிராமப்புறங்களில் COVID-19 தொற்றுகள் விரைவாக அதிகரிப்பது கிட்டத்தட்ட 10 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்லமுடியாத குழப்பத்தினால் தூண்டப்பட்டது - இது ஒரு சமூக மற்றும் சுகாதார பேரழிவாகும், இதற்கு பாஜக அரசாங்கமும் இந்திய உயரடுக்கினரும் முழு பொறுப்பு.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக COVID-19 பரவுவதைத் தடுக்க மோடி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. எந்தவொரு தீவிரமான தயாரிப்பும் இல்லாமல், நான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் பொது அறிவிப்பு மூலம் மார்ச் 25 அன்று நாடு தழுவிய அளவில் கடுமையான பொது முடக்கம் திணிக்கப்பட்டது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நாள் தொழிலாளர்கள் ஒரே இரவில் வேலை இழந்தனர். பாஜக அரசாங்கம் அவர்களுக்கு எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் வழங்க மறுத்ததால், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு கால்நடையாக திரும்பத் தொடங்கினர். 1947 ஆம் ஆண்டு துணைக் கண்டத்தின் வகுப்புவாதப் பிரிவினைக்குப் பின்னர் நிகழ்ந்த மிகப் பெரிய இந்த இடம்பெயர்வு நகரங்களில் இருந்து கிராமப்புற இந்தியாவுக்கு வைரஸ் பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்பதை அதிகாரிகள் அங்கீகரிக்க பல நாட்கள் ஆனது. பின்னர் அரசாங்கம் வழக்கமான மிருகத்தனமான முறையில் பதிலளித்தது, அவர்களை மந்தைகளை அடைப்பது போல் தற்காலிகமாக உள்ளூர் அகதி முகாம்களுக்கு கொண்டு செல்ல பாதுகாப்புப் படையினரை நிறுத்தியது, அங்கு அவர்கள் பெரும்பாலும் மோசமான உணவளிக்கப்பட்டனர், இல்லையெனில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.

முதலில் 21 நாட்கள் நீடிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட முடக்கம் மீண்டும் மீண்டும் நீட்டித்த பின்னர், பாஜக அரசாங்கம் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, இறுதியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு செல்ல அனுமதித்தது. ஆனால், மேலும் கவனக்குறைவான செயலில், அவர்கள் COVID-19 க்கு முறையாக சோதிக்கவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் தவறிவிட்டனர்.

இந்த குற்றவியல் கொள்கையின் காரணமாக, பீகார், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் போன்றவற்றிற்கு திரும்பி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்ட மாநிலங்கள், நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் COVID-19 நோய்த்தொற்று விகிதங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளன. அரசாங்கத்தின் திட்டமிடல் அமைப்பான NITI Aayog வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் 112 ஏழ்மையான கிராமப்புற மாவட்டங்களில் 98 நோய்த்தொற்றுகள் இப்போது பரவியுள்ளன, இது ஏப்ரல் 15 அன்று 34 ஆக இருந்தது.

திங்களன்று, தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட "புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக" 10 பில்லியன் ரூபாயை (132 மில்லியன் அமெரிக்க டாலர்) மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவித்ததாக அரசாங்கம் கூறியது. முடக்கம் நடைமுறைப்படுத்த பட்டதிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தனர் என்ற உண்மையைப் பொறுத்தவரை, இது பஞ்ச ரேஷன்களுக்கு சமம்.

இந்தியாவின் வறிய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கான உடல்நலம் மற்றும் சமூக பேரழிவு ஆழமடைந்து வரும்போது, மோடி அரசாங்கத்தின் மற்றும் பாராளுமன்ற எதிர்ப்பு என்று கருதப்படுபவர்களின் முக்கிய அக்கறையாக இருப்பது பெருவணிகங்கள் இலாபம் ஈட்டும் வழியில் எந்த தடையும் இருக்காது என்று மறு உத்தரவாதம் அளிப்பதாகும். கடந்த வாரம் மாநில முதல்வர்களுடனான சந்திப்பில், இரண்டாவது முடக்கம் குறித்த “வதந்திகளை” மோடி நிராகரித்தார். நோய்த்தொற்றின் வேகமான வீதம் இருந்தபோதிலும், பொருளாதாரத்தை "மீண்டும் திறக்கும்" அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார்.