ஒரே மாதத்தில் கோவிட்-19 நோயாளிகள் மூன்று மடங்காக உயர்ந்த போதும், இலத்தீன் அமெரிக்க உயரடுக்குகள் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன
27 June 2020
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவில் கோவிட்-19 வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை தெரிவித்தது. உலக மக்கள்தொகையில் அமெரிக்க மக்கள்தொகை 13 சதவீதத்திற்கும் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்கிறது என்றாலும், இப்போது உலகளவில் உறுதி செய்யப்பட்ட 9.1 மில்லியன் நோயாளிகளில் பாதிப் பேர் அமெரிக்காவில் உள்ளனர்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் அகில அமெரிக்க சுகாதார அமைப்பின் (Pan American Health Organization – PAHO) இயக்குனர் டாக்டர் கரிஸ்சா எத்தியான் (Carissa Etienne), இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் எங்கிலும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 690,000 இல் இருந்து 2.1 மில்லியனுக்கும் அதிகமாக மும்மடங்கு உயர்ந்திருப்பதைக் குறித்து புலம்பினார். இதே காலகட்டத்தில் அமெரிக்கா 46 சதவீத அதிகரிப்புடன், உலகின் அதிகபட்ச எண்ணிக்கையாக மொத்தம் 2.4 மில்லியன் நோயாளிகளைக் கண்டது.
அதேநாளில் இலத்தீன் அமெரிக்காவும் கரீபியனும் கொரொனா வைரஸ் நோயால் 100,000 உயிரிழப்புகளின் கொடூரமான மைல்கல்லைக் கடந்தது. இது கடந்த மாதத்தில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த வைரஸ் உலகளவில் 485,000க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது.
சமீபத்தில் பிரேசில் உலகளவில் நாளொன்றுக்கு அதிகபட்ச தொற்றுநோய்கள் மற்றும் மரணங்களைப் பதிவு செய்துள்ளது. புதன்கிழமை இலத்தீன் அமெரிக்காவின் அந்த மிகப் பெரிய நாடு 1,185 உயிரிழப்புகள் மற்றும் 42,725 நோயாளிகளைப் பதிவு செய்து, மொத்தம் 53,830 உயிரிழப்புகள் மற்றும் 1.19 மில்லியன் நோயாளிகளை எட்டியது. அப்பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகள் இப்போது புதிய உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் அதிகரிப்பைக் கண்டு வருகின்றன. சிலி, பெரு மற்றும் மெக்சிகோவில் அதிகபட்ச அதிகரிப்புகள் உள்ளன.
மத்திய அமெரிக்காவில் இந்த வைரஸின் "பரந்தளவில் பரவல்" உள்ளது, அங்கே ஒரு வாரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து, அண்மித்து 60,000 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழப்புகள் 22 சதவீதம் அதிகரித்து 1,564 ஆக அதிகரித்துள்ளது. கரிபீயனில், அண்டை நாடுகளான ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசும் மிகப்பெரியளவில் வெடிப்பை அனுபவித்து வருகின்றன.
குறிப்பாக இக்கட்டான நேரத்தில் வேலைக்குத் திரும்புவதைத் திணித்து உலகளாவிய நிதி மூலதனத்தை ஈர்ப்பதற்காக உற்பத்தியை ஆக்ரோஷமாக அதிகரிக்க பொருளாதார நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதாலேயே அமெரிக்கா எங்கிலும் இந்த தொற்றுநோய் தீவிரமாக அதிகரித்து வருகிறது, ஏனென்றால் அந்த நடவடிக்கைகள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலுமான அரசாங்கங்களால் பிணையெடுப்புகளுக்கு ட்ரில்லியன் கணக்கான பணம் செலுத்த உலகெங்கிலும் இலாபங்களை துடைத்தெடுக்கிறது.
பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ, கோவிட்-19 ஒரு "சிறிய சளி-காய்ச்சல்" என்று வலியுறுத்தி அவர் கொள்கையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ள அதேவேளையில், அப்பிராந்தியம் எங்கிலுமான அரசாங்கங்கள் திட்டமிட்டு அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கைவிட்டு வருகின்றன. அதற்கு பதிலாக அவற்றின் கொள்கைகள் உலகின் மிகவும் சமநிலையற்ற அப்பிராந்தியத்தில் அவற்றிற்குரிய முதலாளித்துவ உயரடுக்குகளின் இலாப நலன்கள் மற்றும் செல்வவளத்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.
மொத்தம் 25,000 உயிரிழப்புகளையும் மற்றும் 200,000 நோயாளிகளையும் கடந்து நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேலான மரணங்கள் மற்றும் சாதனையளவிலான புதிய நோயாளிகளைத் தொடர்ந்து அறிவித்து வரும் மெக்சிகோவில், “இடது" ஜனரஞ்சக ஜனாதிபதி Andrés Manuel López Obrador “வானத்தையும், சூரியனையும், சுத்தமான காற்றையும் அனுபவிக்க" மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
இதுபோன்ற வர்க்க-போர் கொள்கைகளின் விளைவாக, குடிப்பதற்கேற்ற குடிநீர், சுகாதார நலன், உணவு, சமையல் எரிவாயு, கழிவுநீர் வெளியேற்றுவதற்கான வசதிகள் இல்லாத அதிக நெரிசல் நிறைந்த வறிய அண்டைப்பகுதிகளில் பகுதிகளில் வசிப்பவர்களிடையே நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையுமே கூட மிகவும் குறைவாக எடுத்துக்காட்டப்படுகின்றன.
சான்றாக அந்நாட்டின் பெரும்பகுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக ஆர்ஜென்டின தலைநகர் Buenos Aires இல் ஜனாதிபதி அல்பெர்டோ பெர்னான்டேஸ் நேற்று உத்தரவிட்டார். அங்கே சேரிகளில் (villas) வாழும் 2 மில்லியன் மக்களிடையே சமீபத்தில் கோவிட்-19 நோயாளிகள் 42 சதவீதத்திற்கும் அதிகமாக மிக அதிகளவில் அதிகரித்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
மெக்சிகோவில் தீவிரமடைந்து வரும் இந்த தொற்றுநோயின் குவிமையமாக ஆகியுள்ள மெக்சிகோ நகரில், “மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்... Iztapalapa, Ciudad Neza மற்றும் Ecatepec போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட குறைந்த வருமானம் கொண்ட மாவட்டங்களாகும்,” என்பதை புதன்கிழமை வெளியிட்ட Forbes Magazine இன் ஒரு பகுப்பாய்வு கண்டறிந்தது. அந்நகரில் உயிரிழந்த அண்மித்து ஒவ்வொரு 10 நோயாளிகளில் 8 பேருக்கு ஒருபோதும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படவே இல்லை.
PAHO மற்றும் தொற்றுநோய் நிபுணர்களைப் பொறுத்த வரையில், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும், இந்த நெருக்கடியால் சீரழிந்து போயுள்ள "அமைப்புசாரா துறையை" நாளாந்தம் நம்பி வாழும் நூறு மில்லியன் கணக்கானவர்களுக்கும் அனைத்து பொருளாதார நிதியுதவியையும் நிறுத்துவதன் மூலமாக வேலையிடங்களுக்குத் தொழிலாளர்கள் திரும்ப செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதே முக்கிய கவலையாக உள்ளது.
இந்த தொற்றுநோயின் போது டாக்டர் எத்தியான் வழங்கிய மிகவும் கடுமையான எச்சரிக்கையில், அப்பெண்மணி புதன்கிழமை கூறினார்: “பெரும்பாலும் நோயில் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பவர்கள் மற்றும் பழங்குடி மக்கள், ஆபிரிக்க-வம்சாவழியினர், நகர்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்ற மிகவும் குறைவாகவே மருத்துவ உதவி பெறக்கூடியவர்கள் என மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், இந்த நெருக்கடியை நம்மால் கடந்து செல்ல முடியாது.”
“கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதற்கான இலக்கு வைக்கப்பட்ட நீடித்த மூலோபாயத்தின் அடித்தளமாக, சந்தேகத்திற்குரிய நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது, ஆய்வக பரிசோதனை, தொடர்புகளைப் பின்தொடர்வது மற்றும் தனிமைப்படுத்துவது" ஆகியவற்றை வலியுறுத்திய டாக்டர் எத்தியான், “பிராந்தியளவிலும் உலகளவிலும் இந்த போக்கை சீர்படுத்தாவிட்டால், மீண்டும் உண்டாவதற்கான அபாயம் எப்போதும் நீடித்திருக்கும்,” என்றவர் தெரிவித்தார்.
நேற்று சிலியில் சாண்டியாகோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சிலியில் பிராந்திய தனிமைப்படுத்தல்களை விமர்சித்து PAHO இன் எச்சரிக்கைகளையே எதிரொலித்தனர். மருத்துவர் அஞ்செலிக்கா வேர்டுகோ கூறுகையில், “தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மிகப் பெருமளவில் சமத்துவமின்மை உள்ள நிலைமைகள் பிரச்சினையாகும்... மிக வறியவர்களில் [இரண்டு குவின்டைல்ஸ்] 57 சதவீதத்தினர் மட்டுமே பணம் அல்லது உணவு மானியங்களைப் பெற்றுள்ளனர், இதன் அர்த்தம் அவர்கள் தனிமைப்படுத்தலுக்குக் கீழ்படிவதற்கான நிலைமை இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு உணவு பாதுகாப்பு இல்லை” என்றார்.
பின்னர் மருத்துவர் வேர்டுகோ தெரிவிக்கையில், அத்தியாவசியமல்லாத வேலையிடங்களுக்கும் தொழிலாளர்களைப் பலவந்தமாக திரும்ப அனுப்புவதற்கான பொருளாதார அழுத்தங்களைக் கண்டித்தார். “மிகவும் வறிய ஏழைகள், போதுமான ஆதாரவளங்கள் இல்லாதவர்கள் தான் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்படுகிறார்கள்,” என்றார்.
ஆனால் மருத்துவத்துறை வல்லுனர்களின் வழிகாட்டுதல்கள் செவிட்டு காதுகளில் விழுவதில்லை.
பிராந்தியளவில், ஆரம்ப பொதுமுடக்கங்கள், இவை சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படவே இல்லாத நிலையில், நிறமிட்ட வரைபடங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் காட்டும் "குறிப்புகளால்" நிரப்பப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் வெளியிடப்படாத "தொற்றுநோய் அறிக்கைகள்" அடிப்படையிலான அவர்களின் தீர்மானங்களை வாதிட்டு, அரசு அதிகாரிகள் மனித உயிரிழப்புகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், "உற்பத்தி வாழ்வையும்" “பொருளாதார வளர்ச்சியையும்" பாதுகாப்பதன் அடிப்படையில் மீண்டும் திறக்கப்படுவதை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் அதிகரித்து வரும் சமூக பேரழிவுக்கு அடியிலிருக்கும் சமூக நிலைமைகள், ஒரு நூற்றாண்டாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் அப்பிராந்தியத்தின் மூலவளங்கள் மற்றும் உழைப்பை நவகாலனித்துவமாக சூறையாடியதன் விளைவாகும். எவ்வாறிருப்பினும் பிரேசிலின் பாசிசவாத ஆட்சி மற்றும் கொலம்பியா, சிலி மற்றும் பொலிவியாவின் வலதுசாரி அரசாங்கங்களில் தொடங்கி, அர்ஜென்டினா, மெக்சிகோ மற்றும் வெனிசுவேலாவின் "இடது" தேசியவாத அதிகாரங்கள் வரையில் அப்பிராந்தியத்தின் அனைத்து ஸ்தாபக அரசியல் சக்திகளும், அவற்றின் உற்பத்தி பண்டங்களுக்கான முதலீடுகள் மற்றும் சந்தைகளுக்கான போட்டியில் நிலவும் தவிர்க்கவியலாத நிர்பந்தங்களுக்கு சமூக மற்றும் பொருளாதார வாழ்வை மேற்கொண்டும் அடிபணிய வைக்க உத்தேசித்துள்ளன.
இந்த நோக்கத்திற்காக, ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கிய அதன் திருப்பத்தைத் தீவிரப்படுத்தவும் மற்றும் சுரண்டல் மட்டங்களைத் தீவிரப்படுத்தவும் இந்த தொற்றுநோயை மூலதனமாக்கிக் கொள்ள முயல்கின்றன. ஆனால் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும், மிகவும் குறிப்பாக சிலி, ஈக்வடோர் மற்றும் பொலிவியாவில், கடந்தாண்டு பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களாக வெடித்த வர்க்க பதட்டங்கள் அதிகரித்து மட்டுமே உள்ளன. “வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான" பிரச்சாரத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த தொற்றுநோய்க்கான உத்தியோகபூர்வ விடையிறுப்பு இவ்விதத்தில் மேற்கொண்டும் வர்க்க போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்.
தொழிலாளர்களின் இந்த அதிகரித்து வரும் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறிகளில், அமெரிக்காவை ஒட்டியுள்ள மெக்சிகோ எல்லையில் மக்கில்லாடோரா எங்கிலுமான தன்னியல்பான வேலைநிறுத்தங்களும், பெருவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும், முறையான பாதுகாப்பு சாதனங்கள் வழங்குமாறு கோரி அந்த ஒட்டுமொத்த பிராந்தியம் எங்கிலும் மருத்துவத் துறை பணியாளர்களின் தொடர் போராட்டங்களும் உள்ளடங்கும்.
ஒரு சமீபத்திய அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விவரித்தது: “இந்த வைரஸை தடுப்பதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளும் — அதாவது அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்துவது, தனிமைப்படுத்துவது, பாரியளவில் பரிசோதனை மற்றும் தொடர்புகளைப் பின்தொடர்வது ஆகியவை ஆளும் வர்க்கத்தின் இலாபகர நலன்களுக்கு எதிராக செல்கின்றன. இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகளை உறுதிப்படுத்துவதற்கு பாரியளவில் சமூக ஆதாரவளங்களைத் திருப்பிவிட வேண்டியுள்ளது.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தொற்றுநோய்க்கு எதிரான அவசியமான போராட்டத்திற்குத் தீர்மானகரமாக உள்ள மற்றும் தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும், இந்த போராட்டத்தை, சோசலிச அடித்தளங்களின் கீழ் உலகளாவிய பொருளாதார மாற்றத்திற்காகவும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தின் பாகமாகவும் மட்டுமே வென்றெடுக்கப்பட முடியும். இந்த போராட்டம், இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் ஒவ்வொரு நாட்டிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதை அவசியப்படுத்துகிறது.
Andrea Lobo
Follow the WSWS