நெருக்கடியின் மத்தியிலும், கிரெம்ளின் "வெற்றி அணிவகுப்பு" நடத்துகிறது

By Clara Weiss
29 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, கிரெம்ளின் 14,000 துருப்புக்களுடன் மாஸ்கோவின் மையத்தில் ஒரு பெரிய "வெற்றி நாள்" அணிவகுப்பை நடத்தியது. இந்த அணிவகுப்பு இரண்டாம் உலகப் போரின் 75 ஆவது ஆண்டுவிழாவான முதலில் மே 9 ஆம் தேதி திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதால் இது தாமதமானது.

அணிவகுப்பு நடைபெறும் வகையில் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூக விலக்கல் நடவடிக்கைகளும் திங்களன்று முதலில் திட்டமிடப்பட்டதை விட ஒரு வாரம் முன்னதாகவே நீக்கப்பட்டன. இருப்பினும், ரஷ்யாவில் 80 சதவீத புதிய தொற்றுநோய்கள் மாஸ்கோ பகுதியில் இன்னும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், நாட்டில் 7,000 முதல் 8,000 வரை புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை புதன்கிழமை 600,000 இனை தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் புட்டினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த தேசிய வாக்கெடுப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த அணிவகுப்பும் பொருளாதாரமும் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் 2024 இல் புட்டினை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதிப்பதுடன், மேலும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தும்.

இந்த அணிவகுப்பு என்பது எல்லாவற்றிற்கும் மேலாக, தேசியவாதத்தை வளர்ப்பதற்கும் "தேசிய ஒற்றுமை" என்ற தவறான உணர்வை முன்னெடுப்பதற்கும் ஆகும். 1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜிகளின் படையெடுப்பு குறைந்தது 27 மில்லியன் சோவியத் குடிமக்களின் உயிரைக் பலியெடுத்தது. ஸ்ராலினிசத்தின் பேரழிவுகரமான பங்கையும் மீறி, நாஜி ஜேர்மனியை தோற்கடிப்பதில் செம்படையானது முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி கணிசமான அரசியல் குழப்பம் நிலவுகின்ற அதே வேளையிலும், ரஷ்ய மக்களில் பெரும்பான்மையானவர்கள் பாசிசத்திற்கு எதிரான அந்த போராட்டத்துடன் தமக்கு ஒரு ஆழ்ந்த தொடர்பு இருப்பதாக உணர்கிறார்கள்.

உலக ஏகாதிபத்தியத்தால் முற்றுகையிடப்பட்டு, வளர்ந்து வரும் வர்க்க பதட்டங்களின் நிலைமைகளின் கீழ், அக்டோபர் புரட்சிக்கு எதிரான ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியில் இருந்து வெளிவந்த ரஷ்ய நிதிய தன்னலக்குழுவானது இந்த தேசியவாத உணர்வுகளுக்கு அழைப்புவிடவும், தேசியவாதத்தை முன்னெடுப்பதற்கும் சாதகமாக பயன்படுத்தவும் முயல்கிறது.

ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு பொது சுகாதார பேரழிவுக்கான ஒரு வரவேற்பாக இருக்கையிலும் அணிவகுப்புகள் 28 நகரங்களில் நடாத்த திட்டமிடப்பட்டன. அதில் 64,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நகரங்களில் பெரும்பாலானவை மீண்டும் திறக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பிராந்தியங்களில் அமைந்துள்ளதுடன், அங்கு பாரியளவில் மக்கள் ஒன்றுகூடுவது இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த அணிவகுப்பு ஒரு தோல்வியாக இருந்ததுடன், ரஷ்யாவிற்குள் வளர்ந்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் அதிகரித்துவரும் சர்வதேச தனிமைப்படுத்தலையே எடுத்துக்காட்டியது. தொடர்ந்துகொண்டிருக்கும் தொற்றுநோய் காரணமாக, எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரும் அணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் சோவியத் குடியரசுகளின் தலைவர்களும், இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் மட்டுமே கலந்து கொண்டனர். கிர்கிஸ்தானின் ஜனாதிபதி கலந்துகொள்ள மாஸ்கோ சென்றபோதும் அவரது தூதுக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் மாஸ்கோ வந்தவுடன் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் அணிவகுப்பில் பங்கேற்பதை இரத்து செய்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோர் அழைக்கப்பட்டனர், ஆனால் அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.

மாஸ்கோவில், மேயர் அனைத்து குடியிருப்பாளர்களையும் வீட்டிலேயே இருக்கும்படியும் வீட்டிலிருந்து அணிவகுப்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அழைப்புவிடப்பட்டவர்கள் வைரஸை சோதிக்க வேண்டும். எவ்வாறாயினும், அழைக்கப்பட்ட படையினருக்கு சமூக விலத்தல் விதிகள் இருந்தபோதிலும், பலர் முகமூடிகள் இல்லாமலும் மற்றும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக தொலைவிலும் இருந்தார்கள். இதன்போது நிருபர்களும் முகமூடிகள் இல்லாமல் மற்றும் சமூக தூரத்தை கடைப்பிடிக்காமல் காணப்பட்டனர். பாரிய தொற்றுநோய்களின் அபாயத்தை சுட்டிக்காட்டி இருபத்தைந்து நகரங்கள் அணிவகுப்புகளை நடத்த மறுத்துவிட்டன.

ஒரு கிளர்ந்து எழும் தொற்றுநோய்களின் கீழ் மில்லியன் கணக்கான பங்கேற்க செய்ய உள்ள வெற்றி அணிவகுப்பு மற்றும் தேசிய வாக்கெடுப்பு நடத்துவது என்பது, ரஷ்ய நிதிய தன்னலக்குழுவின் குற்றவியல் மற்றும் நெருக்கடி இரண்டையும் எடுத்துக்காட்டுகிறது.

மற்ற நாடுகளைப் போலவே, ரஷ்யாவிலும் பொருளாதாரம் மீண்டும் காலத்திற்கு முன்னர் திறக்கப்படுவது மிக விரைவாக பல மில்லியன் கணக்கான வறிய தொழிலாளர்களை தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்ள வைக்கிறது. ஏப்ரல் மாதத்தில் தொழிற்சாலைகள் முன்கூட்டியே மீண்டும் திறக்கப்படுவது ஏற்கனவே சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களிடையே பெருமளவில் வைரஸ் பரவ வழிவகுத்தது. சைபீரியாவில் ஒரு சுரங்கத்தில் 1,200 க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட, மே மாதத்தில் உலகின் மூன்றாவது பெரிய எண்ணிக்கையிலான தொற்றுநோய்களுக்கு ரஷ்யா விரைவாக உயர நேரடியாக பங்களித்தது.

செவ்வாயன்று தேசத்திற்கான மற்றொரு உரையில் வைரஸ் பரவுகிறது என்ற அச்சத்தைத் தணிக்க புட்டின் முயன்று, நாட்டினால் அதைச் சமாளிக்க முடியும் என்று மக்களுக்கு உறுதியளித்தார். சமூக பதட்டங்களை தணிக்கச்செய்ய விரும்பும் ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் முயற்சியில், ஆண்டுக்கு ஐந்து மில்லியன் ரூபிள் (73,000 டாலர்) சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு வருமான வரியை 13 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார்.

சுகாதார மற்றும் சமூக சேவையாளர்களுக்கான கொடுப்பனவுகள் உட்பட ஏப்ரல் தொடக்கத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட சில அற்ப சமூக சீர்திருத்தங்களின் விரிவாக்கத்தையும் அவர் அறிவித்தார். இந்த கொடுப்பனவுகளில் பல ஒருபோதும் செய்யப்படவில்லை. 16 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கிரெம்ளின் 10,000ரூபிள் கொடுப்பனவு (சுமார் 135$) செலுத்தும் என்றும் வேலையில்லாத பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாதத்திற்கு 12,130 ரூபிள் (175$) பெறும் என்றும் புட்டின் கூறினார்.

ஆகக்குறைந்தது 4.5 மில்லியன் மக்கள் இப்போது வேலையில்லாமல் இருப்பதாக கணிப்பிடப்பட்டிருக்கும் நிலைமைகளின் கீழ், இந்த கொடுப்பனவுகள் மிகவும் தீவிரமான சமூகத் துயரங்களைக் கூட குறைக்க உதவாது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரஷ்யர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் பரந்தளவில் குறைத்து மதிப்பிடப்படுவதுடன், ரஷ்யாவின் தொழிலாளர் தொகுப்பில் கணிசமான பகுதியினர் ஒழுங்கமைக்கப்படாத வழமைக்குமாறான பொருளாதார அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள்.

தொழில்துறை மற்றும் மருத்துவ ஊழியர்களிடையே பெரும் தொற்று, குறிப்பாக, குறிப்பிடத்தக்க சமூக மற்றும் அரசியல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மே மாதத்தில், Chayanda வயலில் ஆயிரக்கணக்கான Gazprom தொழிலாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பயங்கரமான நிலைமைகளை எதிர்த்து போராட்டம் செய்த பின்னர் சோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பெற்றனர்.

சுகாதார உள்கட்டமைப்பு உடைந்துவருவதாலும், சுகாதாரப் பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) முற்றிலும் போதிய அளவு வழங்கப்படாததாலும், ரஷ்யா உலகில் மிக அதிகமான தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளைக் கொண்டுள்ளது. சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 8,503 பேரில் (5.75 சதவீதம்) குறைந்தது 489 மருத்துவ ஊழியர்கள் வைரஸால் இறந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரு மாதத்திற்கு சில நூறு டாலர்கள் பட்டினி ஊதியத்தை பெறும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி, தொற்றுநோய் முழுவதும் எதிர்ப்பு கடிதங்களை எழுதினர்.

தொற்றுநோய் முழுவதும் பொதுவில் அரிதாகவே வெளித்தோன்றிய புட்டினின் புகழ் மதிப்பீடு பிப்ரவரி முதல் மே வரை 69 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக சரிந்தது. ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு ஐந்து சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தரமதிப்பீட்டு நிறுவனமான Fitch இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு டாலருக்கு 72 ரூபிள் என பணமதிப்பு குறைக்கும் என்று மதிப்பிடுகிறது. ரூபிள் ஏற்கனவே 70 இற்கு ஒரு டாலராக உள்ளது, இது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சரிந்ததிலிருந்து எந்த நேரத்திலும் இவ்வளவு குறைவாக இருந்ததில்லை.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிஸ்டுகளால் கலைக்கப்பட்டதிலிருந்து வெளிவந்த குற்றவியல் நிதிய தன்னலக்குழுவின் பரந்த செல்வமயமாக்கலை புட்டின் மேற்பார்வையிட்டுள்ளார். பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புதிய உலகளாவிய சுகாதார அறிக்கை, 1999 மற்றும் 2019 க்கு இடையில், பணக்கார ரஷ்யர்களின் தனிப்பட்ட செல்வம் 16 மடங்கு பெருகி 0.1 டிரில்லியன் டாலரிலிருந்து 1.6 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டது. இதற்கு மாறாக, ரஷ்யாவில் சராசரி வருமானம் மாதத்திற்கு 47,000 ரூபிள் (675$) மட்டுமே. ஆனால் மில்லியன் கணக்கானவர்கள் இன்னும் மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இந்த தொற்றுநோயால் ரஷ்ய மக்களின் பரந்த அடுக்குகளின் பாரிய வறுமை மற்றும் அதன் பொருளாதார வீழ்ச்சி இந்த தீவிர சமூக சமத்துவமின்மையின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.