கோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது

By Alex Lantier
30 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவின் கௌரவத்திற்கு ஓர் அவமானகரமான அடியாக, ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளியன்று இரவு, கோவிட்-19 பரவுதல் மீதான கவலைகளையிட்டு அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதைத் தடுக்க இருப்பதாக அறிவித்தது. உலகின் மிகவும் செல்வசெழிப்பான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்கா அதைவிட கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளில் உலகின் மிக அதிகபட்ச எண்ணிக்கையைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதுடன், அமெரிக்க அரசு இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கிய மருத்துவ நடவடிக்கைகளை ஆக்ரோஷமாக எதிர்க்கின்ற நிலையில், அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் அதிகரித்து வருகின்றன.

2.6 மில்லியன் நோயாளிகள் மற்றும் 130,000 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிய நிதியுதவிகளை நிறுத்தி உள்ளதுடன், இந்த வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தும் கொள்கைகளை ஏற்க மறுத்துள்ளது. ஆலைகள் மற்றும் தொழிலாள வர்க்க சமூகங்களைக் கோவிட்-19 சின்னபின்னமாக்கி வருகின்ற போதும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசோதனையை மட்டுப்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறார். ஒக்லஹாமாவின் துல்சாவில் கடந்த வாரம் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில், அவர் கூறினார்: “அந்தளவுக்கு நீங்கள் பரிசோதனைகளைச் செய்யும் போது, நீங்கள் நிறைய நபர்களைக் காண்பீர்கள், நீங்கள் நிறைய நோயாளிகளைக் காண்பீர்கள்... ஆகவே தான் 'தயவுசெய்து பரிசோதனைகளைக் குறையுங்கள்,' என்று என் மக்களுக்குக் கூறியுள்ளேன். அவர்கள் பரிசோதிக்கின்றார்கள், பரிசோதித்துக்கொண்டே இருக்கின்றார்கள்!”

மக்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தின் மீது முற்றிலும் அவமதிப்பைக் காட்டும் இதுபோன்ற கருத்துக்கள், நீண்டகால தாக்கங்களுடன் வெளிநாடுகளில் வாஷிங்டனின் அந்தஸ்திற்கு வேகமாக குழிபறித்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பாவை விட கோவிட்-19 வேகமாக பரவாத நாடுகளின் ஒரு பட்டியலை வெளியிட்டனர். ஆகவே அந்நாட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான், ருவாண்டா, தாய்லாந்து, உருகுவே, அல்ஜீரியா, மொரொக்கோ, துனிசியா, ஜோர்ஜியா, மொண்டெனேக்ரோ மற்றும் சேர்பியா ஆகியவை அதில் உள்ளடங்குகின்றன. சீன அதிகாரிகள் சீனாவுக்குள் ஐரோப்பிய பயணிகளை அனுமதித்தால் சீனப் பயணிகளும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் அமெரிக்க குடிமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த முடிவு தயாரிக்கப்பட்டு வந்த போதே, இந்த விவாதங்களைக் குறித்த விபரங்கள் நியூ யோர்க் டைம்ஸிற்கு கசிய விடப்பட்டன. இந்த கோடையில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் ஐரோப்பாவைப் பார்க்க முடியுமா இல்லையா என்பதற்கும் அப்பாற்பட்டவை இந்த முடிவில் சம்பந்தப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்தி அது கவலையுடன் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு "வரவேற்கப்படாதவர்களில் ரஷ்யர்கள் மற்றும் பிரேசிலியர்களுடன் சேர்ந்து அமெரிக்க பார்வையாளர்களையும் ஒன்று சேர்க்கிறது,” என்று குறிப்பிட்ட டைம்ஸ், அது "உலகளவில் அமெரிக்காவின் கௌரவத்திற்கும், அமெரிக்காவில் அந்த வைரஸைக் கையாள ட்ரம்ப் மறுப்பதற்கும் கொடுக்கப்பட்ட ஒரு பலமான அடி,” என்று குறிப்பிட்டது. ஆனால் டைம்ஸ் அந்த விவகாரத்தை வெறுமனே பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவோ அல்லது தேசிய கௌரவத்தின் மீதான காயப்படுத்தலாகவோ மட்டும் கையாளவில்லை. அதுபோன்றவொரு முடிவு "குறிப்பிடத்தக்க பொருளாதார, கலாச்சார மற்றும் புவிசார் அரசியல் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

அமெரிக்க அழுத்தத்தால் உதைபட்டு, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சமிக்ஞையை அனுப்புவதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதைப் பிரெஞ்சு நாளிதழ் Le Monde அதன் கட்டுரையில் தெளிவுபடுத்தியது. அமெரிக்கா என்று பெயரிட்டுக் குறிப்பிடாமல், அது எழுதியது: “இந்த முடிவு அரசியல் விளைவுகளை ஏற்படுத்துமா? சந்தேகத்திற்கிடமின்றி சில குறிப்பிட்ட அழுத்தங்கள் பயன்படுத்தப்பட்டாலும், பொருளாதார, மூலோபாய மற்றும் சுற்றுலாத்துறை காரணங்களுக்காக குறிப்பிட்ட சில தேசங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதிப்பதைக் குறித்து பரிசீலிப்பதில் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தெளிவாக சிரமங்கள் இருந்தன என்றாலும், ஒரு முடிவை எடுக்க 'வலுவான அர்ப்பணிப்பு' செய்யப்பட்டதாக இராஜந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்”.

ஐரோப்பாவில், வாஷிங்டனின் ஏகாதிபத்திய போட்டியாளர்களது கொள்கையை முன்நகர்த்திக் கொண்டிருப்பது என்னவென்றால் பிரதானமாக மக்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான ட்ரம்ப் கொள்கைகளின் பாதிப்பு மீதான அக்கறையில்லை. உண்மையில் ஐரோப்பாவினுள் அமெரிக்க மக்களை அனுமதிப்பதில்லை என்று அவை முடிவெடுத்த போதே கூட இந்த தொற்றுநோய்க்கு இடையே பத்து மில்லியன் கணக்கான ஐரோப்பிய தொழிலாளர்களை பொறுப்பின்றி வேலைக்குத் திரும்ப அவை உத்தரவிட்டிருந்தன. மாறாக, இந்த தொற்றுநோய் உலகப் பொருளாதாரத்தில் இலாபங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்காக பிரதான சக்திகளுக்கு இடையே ஈவிரக்கமற்ற போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

பெரும் பணக்காரர்களுக்கு பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்புகளும் மற்றும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் உயிரைக் குறித்த அவமதிப்பும் இந்த தொற்றுநோய்க்கான வாஷிங்டனின் விடையிறுப்பில் உள்ளடங்கி உள்ளது. இந்த வசந்த காலத்தில், அமெரிக்க வங்கித்துறைக்குள் செலுத்தப்படும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அச்சிடுவதற்கு, பெடரல் ரிசர்வ் உறுதியளித்தது, அதேநேரத்தில் செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதைத் தவிர்ப்பதற்காக பற்றாக்குறை செலவுகளுக்கு நிதி வழங்க அமெரிக்க அரசு இன்னும் ட்ரில்லியன் கணக்கில் கடன்களைப் பெற்றது. அமெரிக்க பொருளாதார நடவடிக்கையே பொறிந்த போதும் கூட மற்றும் தொற்றுநோய் பரவுகின்ற போதும் கூட, இத்தகைய பிணையெடுப்புகள் அமெரிக்க பங்குச் சந்தைகளின் உயர்ச்சிக்கு கொண்டு சென்றன.

இத்தகைய நடவடிக்கைகள், ஐரோப்பாவிலுள்ள வெளிப்படையான அமெரிக்க கூட்டாளிகளிடமிருந்தே கோபத்தைத் தூண்டியது. இலண்டனில், பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் கிடியோன் ராஹ்க்மன் "கொரோனா வைரஸூம், அமெரிக்க மேலாதிக்க அச்சுறுத்தலும்" என்று தலைப்பிட்டு ஏப்ரல் 13 இல் எழுதுகையில், “கொரோனா வைரஸிற்கான அமெரிக்க விடையிறுப்பு டாலர் மீதான உலகத்தின் நம்பிக்கையை பரிசோதிக்கக்கூடும்” என்றார்.

ராஹ்க்மன் எழுதினார்: “சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2 ட்ரில்லியன் டாலர் ஊக்கப்பொதி, ட்ரம்ப் ஆண்டுகளில் ஏற்கனவே கூர்மையாக அதிகரித்துள்ள அமெரிக்க தேசிய கடன் மேற்கொண்டும் அதிகரிக்கும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. இதற்கிடையே, பெடரல் ரிசர்வ் கருவூலத்துறை பத்திரங்களை மட்டுமல்ல பெருநிறுவன கடன்பத்திரங்களையும் விலைக்கு வாங்குவதால், பெடரல் ரிசர்வின் இருப்புநிலை கணக்கும் மிகப் பெரியளவில் விரிவடைந்து வருகிறது. ஒரு 'மூன்றாம் உலக' நாடு இவ்விதம் நடந்து கொண்டால், வாஷிங்டனின் அறிவார்ந்த தலைவர்கள் ஒரு நெருக்கடி அண்மையில் இருப்பதாக எச்சரிக்கக்கூடும். அமெரிக்க நாணயம் கூட இறுதியில் தவிர்க்கவியலாமல் உலகின் நம்பிக்கையை இழந்துவிடக் கூடிய அபாயம் உள்ளது,” என்றார்.

உண்மையிலேயே அதன் கொள்கைகளின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு மத்தியில் அதன் சொந்த செல்வந்தர்களைப் பிணையெடுப்பதற்கான அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் தகைமை வரம்பற்றது அல்ல. இத்தகைய கொள்கைகள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தினுள் சமூக கோபத்தை உண்டாக்குகின்றன என்றாலும், ஏனைய பிரதான சக்திகளுடன் வெடிப்பார்ந்த பதட்டங்களையும் உண்டாக்குகின்றன. இத்தகைய பதட்டங்கள், மற்ற நாடுகள் அவற்றின் பண்டங்கள், சேவைகள் மற்றும் நிதியியல் சொத்திருப்புகளை வர்த்தகம் செய்வதற்காக சர்வதேச பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தி வரும் அமெரிக்க டாலர் உலக கையிருப்பு நாணயமாக வகிக்கும் பாத்திரத்துடன் பிணைந்துள்ளன.

இந்த பாத்திரம், இரண்டாம் உலக போர் முடிவில், 1944 இல் நிறுவப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் நிதிய அமைப்புமுறையில் உள்ளடக்கப்பட்டிருந்தது, இதிலிருந்துதான் அமெரிக்க முதலாளித்துவம் மேலாதிக்க பொருளாதார சக்தியாக மேலெழுந்தது. அப்போது பெரிதும் போட்டித்தன்மை நிறைந்த அதன் தொழில்துறை போரில் உயிர்பிழைத்திருந்தது, அது அப்போரில் வேறு நாடுகளின் மண்ணில் சண்டையிட்டிருந்தது. உலக தொழில்துறை உற்பத்தியில் பாதியை அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. டாலர் மதிப்பைப் பாதுகாக்க அது பாரியளவில் தங்கத்தையும் கையிருப்பில் கொண்டிருந்தது. டாலர் கையிருப்பு வைத்திருப்பவர்கள் 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும். உலக போருக்குப் பின்னர், டாலர் மதிப்பு பலமாகவும் ஸ்திரமாகவும் இருந்தது, பல நாடுகளும் அமெரிக்க பண்டங்களைத் தேடி தங்களுக்காக கொள்முதல் செய்யும் விதத்தில் டாலரைக் கொண்டிருக்க விரும்பின.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டியாளர்கள் மீண்டும் பலம் பெற்றவுடன், டாலர் அதிகரித்த எதிர்ப்பைத் தூண்டியது. 1965 இல், அப்போதைய பிரெஞ்சு நிதி அமைச்சர் வலெரி ஜிஸ்கார்ட் டெஸ்ரான் (Valéry Giscard d’Estaing), அமெரிக்காவின் தேசிய நாணயம் உலக கையிருப்பு நாணயமாக இருந்ததால் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த "மிகைப்படுத்தப்பட்ட தனிச்சிறப்புரிமையை" கண்டித்தார்.

அமெரிக்க நிதியியல் அமைப்பானது, தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து பெறப்பட்ட நிஜமான மதிப்பை கொண்டிராத டாலர்களை அச்சிடுவதன் மூலமாக, உலக சந்தைகளில் பாரிய செல்வ வளத்தை விலைக்கு வாங்க முடியும். இதையும் அதற்கான விலையை செலுத்தும்வரையில் இதை செய்ய முடியும். அல்லது, அமெரிக்க பொருளாதார நிபுணர் Barry Eichengreen விவரித்ததைப் போல: “நாணயம் தயாரித்தல் மற்றும் அச்சிடுவதற்கான அமெரிக்க ஆணையத்திற்கு 100 டாலர் தொகையைத் தயாரிக்க வெறும் ஒரு சில சென்ட்கள் தான் செலவாகும், ஆனால் மற்ற நாடுகளுக்கோ அதுபோன்றவொன்றைப் பெறுவதற்கு 100 டாலர் பெறுமதியான நிஜமான பண்டங்களை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.”

இந்த "மிகைப்படுத்தப்பட்ட சிறப்புரிமை" நீண்டகாலமாகவே ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கடுமையான எதிர்விரோதங்களை அடிக்கோடிடுகின்றன. 1960 களில், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் டாலர்களை சம்பாதித்திருந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து தங்கத்தைத் திரும்ப பெற தொடங்கினர், இது அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனை 1971 இல் டாலர்-தங்கம் பரிமாற்ற முறையை முடிவுக்குக் கொண்டு வர இட்டுச் சென்றது. அமெரிக்காவில் வேகமான விலைவாசி உயர்வுகள் டாலர் மூலமாக தங்களின் பொருளாதாரங்களுக்கு வருவதாக ஐரோப்பிய அதிகாரிகள் குறைகூறிய போது, அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஜோன் கொன்னல் தயக்கமின்றி டாலர் "எங்கள் நாணயம், ஆனால் பிரச்சினை உங்களுடையது" என்றார்.

உலக முதலாளித்துவத்தின் இத்தகைய முரண்பாடுகளை இந்த தொற்றுநோய் புதிய, கொடூரமான தீவிரத்துடன் கொண்டு வந்துள்ளது. 1971 இல் இருந்து, அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் நிதியியல் நிலைமை இடைவிடாது அழிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து, இரத்தந்தோய்ந்த மற்றும் பேரழிவுகரமான மத்திய கிழக்கு போர்களுக்காக ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் வீணடிக்கப்பட்டதன் மூலமாக அமெரிக்க பொருளாதாரத்திற்குக் குழிபறிக்கப்பட்டுள்ளது. டாலர் இன்னமும் கையிருப்பு நாணயமாக சேவையாற்றுகிறது ஏனென்றால் உலகின் பெரும்பான்மை தொழில்துறையும் அல்லது நிதியியல் சொத்திருப்புகளும் அமெரிக்கர்களுடையது என்பதால் அல்ல, அல்லது அமெரிக்க ஏற்றுமதிகளை வாங்குவதற்கு உலகிற்கு டாலர்கள் தேவை என்பதற்காக அல்ல, மாறாக ஒரு மாற்றீடு இல்லை என்பதால் ஆகும்.

ஆனால் இப்போதோ, இந்த தொற்றுநோயின்போது, வாஷிங்டனின் நிதியியல் அடாவடித்தனம் புதிய உயரங்களுக்கு எட்டி வருகிறது. அது முன்னொருபோதும் இல்லாதளவில் டாலர்களை அச்சிடுவதற்காக அதன் "மிகைப்படுத்தப்பட்ட தனிச்சிறப்புரிமையை" பயன்படுத்தி வரும் அதேவேளையில், சீனாவுக்கான அமெரிக்க கடன்களுக்கும் —சாத்தியமான அளவுக்கு ஏனைய வெளிநாட்டு கடன் வழங்கியவர்களுக்கும்— திவால்நிலைமையை அறிவிக்கவும் ட்ரம்ப் அச்சுறுத்துகிறார். ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஆளும் வட்டாரங்கள் டாலருக்கு ஒரு மாற்றீட்டைத் திட்டமிட அழைப்பு விடுத்து விடையிறுத்து வருகின்றன, இது வாஷிங்டனிடம் இருந்து ஒரு வெடிப்பார்ந்த அரசியல் அல்லது இராணுவ எதிர்வினையைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

ராஹ்க்மன் அவரின் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையைப் பிரசுரித்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஐரோப்பாவில் இத்தாலி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினும், ஆபிரிக்காவில் எத்தியோப்பியா, ருவாண்டா, மாலி, கென்யா, தென்னாபிரிக்கா, செனகல், எகிப்து மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவற்றின் அரசு தலைவர்கள் பைனான்சியல் டைம்ஸில் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டனர். அது, இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க செலவுகளுக்கு நிதி வழங்க சிறப்பு நிதி உரிமை (Special Drawing Rights - SDR) என்றழைக்கப்படுவதை உருவாக்க, இதை டாலரின் அடிப்படையில் அல்ல, மாறாக பல தேசிய செலாவணிகளின் தொகுப்பாக உருவாக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுத்தது.

அவர்கள் எழுதினார்கள், “இந்த நிகழ்ச்சிப்போக்கை ஆதரிக்கவும், அடிப்படை பண்டங்கள் மற்றும் இன்றியமையா மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு கூடுதல் பணம் ஒதுக்கவும், சர்வதேச நாணய நிதியம் உடனடியாக சிறப்பு நிதி உரிமைகளை வழங்க முடிவெடுக்க வேண்டும்.” “உலக வங்கி, ஆசிய அபிவிருத்த வங்கி [ADB] மற்றும் சம்பந்தப்பட்ட பிற சுகாதார அமைப்புகளுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு … அவற்றிற்கு உரிய அதிகாரங்களைக் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அடிப்படையில் ஒரு கூட்டு நடவடிக்கை திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஆனால் SDR "அவசர தேவைகளுக்கு விடையிறுக்க ஒரு சரியான கருவி அல்ல" என்று கூறி, அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் அதற்கடுத்த நாள் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்துவிட்டார்.

சீனாவின் அதிகரித்து வரும் பொருளாதார பலத்தின் புவிசார் அரசியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. யுரேஷியா எங்கிலும் சீன முதலீடுகளுக்கு நிதி வழங்கி, சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கெடுப்பு அமெரிக்க டாலரின் வேகமான பொறிவு குறித்த ஊகங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

கடந்தாண்டு டென்மார்க்கின் Saxo வங்கியானது, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி “1 ADR 2 அமெரிக்க டாலருக்கு சமம் என்ற விதத்தில், ஆசிய நிதி உரிமை அல்லது ADR என்றழைக்கப்படும் ஒரு புதிய கையிருப்பு சொத்துக்களை உருவாக்கக்கூடும், இது ADR ஐ உலகின் மிகப்பெரிய நாணய அலகாக ஆக்கும்,” என்றவொரு அறிக்கையை வெளியிட்டது. இத்தகைய சூழலில், யுரேஷிய வர்த்தகத்தை ADR எனக் குறிப்பிடப்படுவதால் நடத்துவது "விரைவிலேயே உலக வர்த்தகத்தின் பெரும் பங்கிலிருந்து அமெரிக்க டாலரை நீக்கி, அமெரிக்காவின் இரட்டை இலக்க பற்றாக்குறைக்கு நிதியளிக்க அதற்கு தேவைப்படும் உள்பாய்ச்சலை இன்னும் குறைக்கக் கூடும்.” “ஒரு சில மாதங்களுக்கு உள்ளேயே ADR க்கு எதிராக அமெரிக்க டாலர் 20 சதவீதமான பெறுமதியையும் மற்றும் தங்கத்திற்கு எதிராக 30 சதவீத பெறுமதியையும் இழக்கக்கூடும்,” என்பதையும் அந்த வங்கி சேர்த்துக் கொண்டது.

இதுபோன்று உருவாகும் சூழ்நிலைமைகள் யுரேஷிய பெருநிலத்தைக் கட்டுப்பாட்டில் கொள்வதற்கு அத்தியாவசியமாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா பிராந்தியங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக மூன்று தசாப்த கால அமெரிக்க போர்களுக்கு அடித்தளத்திலிருக்கும் நிதியியல் நலன்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

இயல்பாகவே இதுபோன்ற சூழ்நிலைமைகள் அனைத்தும் அனுமானங்கள் தான். ஆனால் 1930 களின் பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய்க்கு மத்தியில் மேலெழுந்துள்ள வெடிப்பார்ந்த அரசியல் மோதல்களுக்காக அவை பேசப்படுகின்றன மற்றும் விவாதப் புள்ளிகளாக உள்ளன என்பதே உண்மையாகும். பிரதான சக்திகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு பேரழிவுகரமான பொறிவு என்பது ஒரு நிஜமான சாத்தியக்கூறாக அதிகரித்து வருகிறது என்பதும், ஒரு புதிய உலகப் போரைத் தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர இயக்கம் கட்டமைக்கப்பட்டால் ஒழிய புதிய உலக போரின் வெடிப்பு விரைவுபடுத்துகின்றது என்பதும் ஓர் எச்சரிக்கையாகும்.