அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு ஆட்கொணர்வு மனு அல்லது உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை இல்லை என தீர்ப்பளிக்கிறது

By Eric London
30 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை அல்லது ஆட்கொணர்வு மனுவுக்கு அரசியலமைப்புரீதியான உரிமை இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு கருத்தை வெளியிட்டது. அவர்கள் கூட்டாக நாடுகடத்தப்படுவதை எதிர்த்து சட்டபூர்வமாக சவால் செய்ய "நீதிமன்றத்தில் ஒரு நாள்" வழங்குவது கூட இதன் மூலம் மறுக்கப்படுகின்றது.

சட்டத்தின் கீழ் சம நீதி என்று பொறிக்கப்பட்டுள்ள வாஷிங்டன் தலைநகரின் உச்சநீதிமன்றம். ஞாயிறு மே 3, 2020. (AP Photo/Patrick Semansky)

7-2 என்ற முடிவு நீதிமன்றத்தின் ஐந்து குடியரசுக் கட்சி நீதிபதிகள் வழங்கிய பெரும்பான்மை கருத்தை அடிப்படையாகக் கொண்டதும் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ரூத் பாடர் கின்ஸ்பேர்க் மற்றும் ஸ்டீபன் பிரேயர் ஆகியோரின் கருத்தாலும் ஆதரிக்கப்படுகிறது.

சாமுவேல் அலிட்டோ இனால் எழுதப்பட்ட பெரும்பான்மையான கருத்து, நீதிமன்றத்தின் மதிப்பிழந்த Dred Scott v. Sandford (1857) இன் தீர்ப்பை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் எதிரொலிக்கிறது. (ட்ரெட் ஸ்காட் (1799 - செப்டம்பர் 17, 1858) அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்)

ட்ரெட் ஸ்காட் தீர்ப்பை போலவே, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் நீதிமன்றத்திற்கு எதிரான வி. துரைசிங்கத்தின் வழக்கு, இந்த வழக்கில் அரசாங்கத்தின் தலையீடு கூட அவசியமாக இருந்ததை தாண்டி மிகவும் கடுமையான, தீவிரமான மற்றும் ஜனநாயக விரோத தீர்ப்பை சாத்தியமாக்கியது. இலங்கையிலிருந்து குடியேறிய விஜயகுமார் துரைசிங்கத்தின் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் மறுத்தது மட்டுமல்லாமல், சமீபத்தைய புகலிடம் கோருவோர் அனைவருக்கும் நாடுகடத்தப்படுவதை சவால் செய்ய உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.

அரசியலமைப்பு அடிமைகளுக்கு பொருந்தாது, ஏனென்றால் அவர்கள் “மக்கள்” அல்ல என ட்ரெட் ஸ்காட் க்கு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் போலவே, இங்குள்ள நீதிமன்றம் ஒரு துணை வர்க்க மக்களை உருவாக்கியுள்ளது. இந்த பெரும்பான்மையான கருத்து கூறுவதுபோல் அவர்கள் சட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அடங்குகின்றனர், ஏனெனில் அவர்கள் "இந்த நாட்டில் தமது ஸ்தாபிக்கப்பட்ட தொடர்புகள்” எதையும் கொண்டிருக்கவில்லை என்கிறது.

உண்மையில், நேற்றைய தீர்ப்பிற்குப் பின்னர், புதிய புகலிடம் கோருவோர் உள்நாட்டுப் போருக்கு முந்தைய தசாப்தத்தில் தப்பியோடிய அடிமைகளை விட குறைவான உரிமைகளையே கொண்டுள்ளனர். தப்பி ஓடிய அடிமைகளுக்கு குறைந்தபட்சம் அவர்கள் ஏன் வடக்கிலிருந்து அகற்றப்படக்கூடாது என்று வாதிடுவதற்கும், அமெரிக்க புரட்சியின் போது கண்டத்தின் இராணுவத்தில் பணியாற்றியது போன்ற விதிவிலக்கான காரணங்களை வாதிடுவதற்கும் ஒரு நீதிபதி முன் ஆஜராக உரிமை இருந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கை தமிழரான புகலிடம் தேடிய ஒருவர், அமெரிக்க-மெக்சிகோ எல்லையைத் தாண்டிய உடனேயே தடுத்து வைக்கப்பட்டார். துரைசிங்கம் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) முகவர்களிடம் தஞ்சம் கோரி, நாட்டின் நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டுவரும் தமிழ் சிறுபான்மையினரை தான் சேர்ந்ததால் அரசாங்க குண்டர்களால் இலக்கம் குறிக்கப்படாத வாகனத்தில் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் அவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார். அங்கு அதிகாரிகள் நீரில் மூழ்கடித்தும் (waterboarding) துரைசிங்கத்தை சித்திரவதை செய்திருந்தனர்.

ஒரு புகலிட அதிகாரியும் மேற்பார்வையாளரும் துரைசிங்கம் நாடுகடத்தப்படுவதால் "நம்பகரமான அச்சத்தை" எதிர்நோக்க முடியாது என்று முடிவு செய்து அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பவும், அதனூடாக துன்புறுத்தல் அல்லது மரணத்தை ஏற்படுத்தவும் தயாராக இருந்தனர். 1996 ஆம் ஆண்டின் இரு கட்சி சட்டவிரோத குடிவரவு சீர்திருத்தம் மற்றும் புலம்பெயர்ந்தோர் பொறுப்புச் சட்டத்தில் (IIRAIRA) காங்கிரஸால் நிறுவப்பட்ட “விரைவாக நாடுகடத்தல்” செயல்முறையின் கீழ், நாடுகடத்தப்படுவதால் நம்பகமான அச்சத்தைக் எதிர்நோக்கக்கூடிய புலம்பெயர்ந்தோர் குடியேற்ற வழக்கில் உள்வாங்கப்பட்டு உதவி கோருவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறார்கள். நம்பகரமான அச்சத்தை காட்ட முடியாதவர்கள் அவ்விடத்தில் வைத்தே நாடுகடத்தப்பட்டனர்.

துரைசிங்கத்தின் வக்கீல்கள் கூட்டாட்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். Habeas corpus (இலத்தீன் மொழியில் “உங்களுக்கு உடல் இருக்கிறது”) என்னும் ஆட்கொணர்வு மனு, பல நூற்றாண்டுகள் பழமையான ஜனநாயக உரிமையாகும். இதன் மூலம் கைதிகள் தங்களது தடுப்பு சட்டபூர்வமானதா என்பதை தீர்மானிக்க தம்மை ஒரு நீதிபதி முன் கொண்டு வருமாறு தமது சிறைப்பிடித்தவர்களை கோரலாம்.

வக்கீல்கள் தங்கள் மனுவில், வழக்கின் Kafkaesque தொடரின் ஒழுங்கான வழக்கு வழிமுறை மீறல்களை விவரித்தனர். இது எதிர்மறையான நம்பகரமான பயத்திற்கு இட்டுச்சென்றது. மொழிபெயர்ப்பு சிக்கல்கள் காரணமாக, துரைசிங்கம் தனது கடந்தகால துன்புறுத்தல்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. துரைசிங்கத்தை நாடு கடத்த விரைந்த அதிகாரிகள், அவரால் ஏன் நாடுகடத்தப்படுவது தொடர்பாக ஒரு நம்பகரமான அச்சம் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்பதற்கு நியாயமான விளக்கம் அளிக்கவில்லை.

துரைசிங்கத்தின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை என்று மாவட்ட நீதிமன்றம் கூறியது. IIRAIRA இன் ஒரு பிரிவை மேற்கோளிட்டு, எல்லையில் கைப்பற்றப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கான ஆட்கொணர்வு மனுவிற்கான உரிமையை பறித்தது. இந்த சட்டமானது நான்சி பெலோசி, பேர்னி சாண்டர்ஸ், ஜேம்ஸ் கிளைபர்ன் மற்றும் கிட்டத்தட்ட முழு ஜனநாயகக் கட்சியின் “ஆம்” என வழங்கப்பட்ட வாக்குகளுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது வாய்மூலமான வாக்கெடுப்பு மூலம் செனட்டில் நிறைவேற்றப்பட்டு மற்றும் ஜனநாயகக் கட்சியின் பில் கிளிண்டனால் சட்டத்தில் கையெழுத்திடப்பட்டது.

துரைசிங்கத்திற்கு எதிராக மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், ஒன்பதாவது வட்டார மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை பின்வாங்கி மற்றும் IIRAIRA இன் விரைவான நாடுகடத்தல் மற்றும் ஆட்கொணர்வை அகற்றும் விதிகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்பதாவது வட்டார தீர்ப்பைத் அகற்றுகின்றது. பெரும்பான்மையினருக்காக தீர்ப்பை எழுதுகையில், நீதிபதி சாமுவேல் அலிட்டோ பயந்துபோன அகதியை: "அவரை விடுவிப்பதில் அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது - இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் ஒரு இடம் இருக்கும்வரை இந்த விடுவித்தல் இருக்கும்." என இழிந்த முறையில் கேலி செய்தார்.

இந்த முடிவு, ஒரு அரசியலமைப்பு பேரழிவாகும்.

எந்தவொரு நீதித்துறை மேற்பார்வையுமின்றி ஆயிரக்கணக்கான நபர்களை தடுத்து வைப்பதற்கும், அதிகாரங்களை மீறுவதற்கும், சட்டத்தை மீறுவதற்கு CBP மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க பிரிவுக்கும் (ICE) உரிமத்தை வழங்குவதற்கும், இது சட்ட நிறைவேற்றுத்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

எந்தவொரு நீதித்துறை மறுஆய்வு இல்லாமல் "உரிய வழக்குமுறை" இப்போது திருப்தி அடைய முடியும் என்று அது வலியுறுத்துகிறது. பராக் ஒபாமாவின் அரச வழக்குத்தொடுனர் எரிக் ஹோல்டர் அறிவித்த சர்வாதிகாரக் கோட்பாட்டை உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கிறது, அவர் வெள்ளை மாளிகையின் அதிகாரிகளின் மரணப் பட்டியல்களை மறுஆய்வு செய்வதற்கு நீதிமன்ற மதிப்பாய்வு தேவையற்றது எனக் கூறி அமெரிக்க குடிமக்கள் மீதான ஆளில்லா படுகொலைகளை நியாயப்படுத்தினார். ஏனெனில் “அரசியலமைப்பு உரிய வழக்குமுறைக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது, நீதித்துறை செயல்முறை அல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த தீர்ப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, விசாரிக்காமலே கூட்டாக நாடுகடத்தப்படுவதற்கான கதவைத் திறக்கிறது.

கடந்த வாரம், டி.சி. வட்டாரத்திற்கான மேல்முறையீட்டு நீதிமன்றம், எல்லையில் கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் எந்தப் பகுதியிலும் நுழைந்த குடியேறியவர்களுக்கும் இரண்டு வாரங்களுக்குள் (தற்போதைய கட்டுப்பாடுகள், துரைசிங்கத்தின் வழக்கும் இவ்வரையறைக்குள் வருகின்றது), IIRAIRA இன் விரைவான நாடுகடத்தல் செயல்முறையை விரிவுபடுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த முடிவை, ஒபாமா நியமனம் செய்த பாட்ரீசியா மில்லட் மற்றும் ஜிம்மி கார்ட்டர் நியமனம் செய்த ஹாரி எட்வார்ட்ஸ் ஆகிய இரண்டு ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டனர்.

ஒரு ஒழுக்காற்று விடயமாக, நேற்றைய முடிவு, எண்ணற்ற அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் இறப்பிற்கு வழிவகுக்கும். அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முறையிடும் உரிமை இல்லாமல் அரசியலமைப்பிற்கு விரோதமாக நாடு கடத்தப்படுவார்கள்.

இதிலிருந்து திட்டவட்டமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டாக வேண்டும். ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்த தாக்குதல்களுடன் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பின் மனநிலையை சந்திக்க ஆளும் வர்க்கம் தயாராகி வருகிறது என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கின்றது என்பதற்கான தெளிவான அடையாளங்கள் காணப்படுகின்றன.

ஆளும் வர்க்கம் ஒரு சிறிய 5-4 கட்சி வேறுபாட்டுடனான தீர்ப்பு மூலமாக அல்ல, ஆனால் தெளிவான 7-2 பெரும்பான்மையுடன், பொலிஸ் வன்முறைக்கு எதிரான இந்த வசந்தகால வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும், கொரோனா வைரஸ் தொடர்பான வேலை நிலைமைகள் மீதான வேலைநிறுத்த அலைகளையும் அதன் வர்க்க ஆட்சிக்கு அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்த மாத தொடக்கத்தில் டொனால்ட் ட்ரம்பின் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு ஒரு ஆரம்ப பின்னடைவை சந்தித்திருக்கலாம். ஆனால் நேற்றைய தீர்ப்பு, ஆளும் வர்க்கத்தில் சர்வாதிகாரத்தை நோக்கிய அடிப்படைப் போக்குகள், ட்ரம்பின் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அவரது போட்டி ஜனநாயகக் கட்சியினரிடையே வலுவாக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

இந்த தீர்ப்பானது சமூக சமத்துவத்திற்கான பொதுவான போராட்டத்திலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும், இனம், தேசியம், வகுப்புவாதம் அல்லது குடியேற்ற அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் அதைப் பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டும் என்பதற்கான ஒரு அவசர எச்சரிக்கையாகும்.