இலங்கை பொலிஸ் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வன்முறையுடன் அடக்கியது

By our reporters
1 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க பொலிசார் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை படுகொலை செய்தமைக்கு எதிராக, ஜூன் 9 மத்திய கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது, இலங்கை கலகம் அடக்கும் பொலிசார் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் முன்னிலை சோசலிசக் கட்சியினால் (மு.சோ.க.) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் நடத்தப்படவிருந்தது.

முதல் நாள், இந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தின் கோவிட்–19 தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக கூறி, பொலிசார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றை பெற்றிருந்தனர். இலங்கை அரசாங்கம், நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சகல நடவடிக்கைகளையும் சாதாரணமாக மீள ஆரம்பிக்க முடியும் என தொடர்ச்சியாக வலியுறுத்தியதுடன், சகல ஊழியர்களும் வேலைக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலேயே பொலிஸ் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

செவ்வாய்கிழமை, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடையும் முன்பே, அவர்களை வலுக்கட்டாயமாக கலைப்பதற்கு பொலிஸ் தலையீடு செய்திருந்தது. பொலிசார் தங்களின் பலத்தைப் பிரயோகித்ததுடன், மு.சோ.க பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவவையும் மற்றும் பலரையும் கைது செய்தனர்.

கலகத் தடுப்பு பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர்ப்புகைக் கொண்டு அச்சுறுத்துகின்றனர் (Credit: WSWS)

பின்னர், நூறு வரையான மு.சோ.க. ஆர்ப்பாட்டக்காரர்கள் லிப்டன் சதுக்கத்தில் ஒன்று திரண்டு ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அவர்கள், பொலிஸ் காவலில் உள்ள தங்களின் கட்சி அங்கத்தவர்களை விடுவிக்குமாறு கோரியும், ஃபுளோய்ட்டின் கொலையை எதிர்த்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளைப் பிடித்திருந்தனர்.

மு.சோ.க. தலைவர் குமார் குணரட்ணம் ஊடகங்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்லுகளால் தாக்கியதுடன், அவர்களை கட்டாயமாக வாகனத்துக்குள் இழுத்துப் போட்டார்கள். குணரட்ணமும் ஏனைய மு.சோ.க. தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதல்களை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்திருந்தார்.

தங்களின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட 53 அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டதாக மு.சோ.க. அறிவித்துள்ளது. அவர்கள் அன்று மாலையே நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

மு.சோ.க. தலைவர் குமார் குணரட்னத்தை பொலிஸ் பிடித்து வைத்திருக்கிறது. (Credit: WSWS)

சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ.ச.க.), இந்தப் போலி- இடது குழுவுடன் அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ், மு.சோ.க. மீது நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அதன் மீதான சகல குற்றச்சாட்டுக்களையும் வாபஸ் பெறுமாறும் கோரிக்கை விடுக்கின்றது.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிரான ஆரப்பாட்டத்தின் மீதான ஜனநாயக விரோத மற்றும் வன்முறைத் தாக்குதல்கள், தங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் நடத்தும் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களையும் இலங்கை அரசாங்கம் சகித்துக்கொள்ள மாட்டாது என்ற தெளிவான செய்தியை தெரிவிக்கின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சிங்கள இனவாதக் குழுக்கள் மற்றும் வலதுசாரி சக்திகளை அணிதிரட்டிக் கொண்டதன் மூலமே கோட்டாபய இராஜபக்ஷ கடந்த வருடம் ஜனாதிபதியாக வந்தார்.

அதிகாரத்துக்கு வந்த பின்னர், தனது நிர்வாகத்தை வேகமாக இராணுவ மயப்படுத்தத் தொடங்கிய இராஜபக்ஷ, ஓய்வுபெற்ற மற்றும் தற்போது சேவையாற்றும் இராணுவ ஜெனரல்களை அராசாங்கத்தின் பிரதான பதவிகளுக்கு நியமித்ததுடன், மேலும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை பலப்படுத்துவதற்காக, கோவிட்-19 தொற்று நோயை பற்றிக்கொண்டார். கடந்த வாரம், இராஜபக்ஷ தனக்கு மட்டுமே பதிலளிக்கக் கூடியவகையில், பாரதூரமான அதிகாரம் கொண்ட ஒரு இராணுவ ஆதிக்கத்திலான “செயலணியை” ஸ்தாபித்தார்.

ஒரு மு.சோ.க. உறுப்பினரை பொலிசார் கைது செய்கிறார்கள் (Credit: WSWS)

பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன, ஊடகங்களுடன் பேசும்போது, கைது செய்யப்படவர்கள் மீது நீதிமன்ற கட்டளைகளை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை போன்ற குற்றங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்படும், என கூறினார்.

செவ்வாய் பிற்பகல், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலனியா டெப்லிஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிகழ்வினைத் தடுக்குமாறு தூதரகம் பொலிசாரைக் கேட்கவில்லை எனத் தெரிவித்த போதிலும், அவர்கள் (பொலிசார்) இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறி, பொலிஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

“நாட்டில் உள்ள இராஜதந்திரிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உள்ளூர் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் மற்றும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி கோவிட்–19 பரவல்களைக் கட்டுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளையும்” அமெரிக்கா பாராட்டுகின்றது என அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

போராட்டத்தைத் தாக்கும் பொலிசார் (Credit: WSWS)

“அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பன, மனித உரிமைகளின் அனைவருக்குமான பிரகடனத்தின் அடிக்கற்களாகும். எங்களுக்கு சிரமமாக இருந்தாலும் கூட, அமெரிக்கா அந்த உரிமைகளை ஆதரிக்கும்.” என டெப்லிஸ் மேலும் கூறினார்.

அமெரிக்க பொலிசார் ஆர்ப்பாட்டக்கார்ரர்களை வன்முறை மூலம் அடக்குவதோடு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல்களாகவும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு முன்நகர்வாகவும் இராணுவத்தினை அணிதிரளுமாறு தூண்டுகின்ற ஒரு நிலமைகளிலேயே டெப்லிஸ் இந்த சிடுமூஞ்சித்தனமான அறிக்கையை விடுத்திருந்தார்.