வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்

By Johannes Stern and Alex Lantier
2 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 1 இல் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலுக்கான ஜேர்மன் தலைமையைத் தொடங்குவதற்கு முன்னதாக, இந்த திங்கட்கிழமை ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பேர்லின் அருகே மெஸ்ஸபேர்க் கோட்டையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை வரவேற்றார்.

கோவிட்-19 தொற்றுநோய், இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பிந்தைய ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. அமெரிக்காவில் இந்த தொற்றுநோய் கொடூரமாக தீவிரமடைந்து வருகையிலும் கோவிட்-19 க்கு எதிராக அதிகாரிகள் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் எடுக்க மறுத்து வரும் நிலையிலும், அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார சிதைவின் மீது சர்வதேச அளவில் அதிர்ச்சியும் கலக்கமும் அதிகரித்து வருகிறது.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் (வலதுபுறம்) மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் இருதரப்பு சந்திப்புக்குப் பின்னர் திங்களன்று ஜூன் 29, 2020 ஜேர்மனியின் பேர்லினுக்கு அருகே கிரென்சியிலுள்ள ஜேர்மன் அரசு விருந்தினர் மாளிகை மெஸ்ஸபேர்க் கோட்டையில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். 2020 இன் இரண்டாவது பாதியில் ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் வரவிருப்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடக்கிறது. (படம்: Hayoung Jeon, Pool via AP)

அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த பின்னர், மேர்க்கெலும் மக்ரோனும் வாஷிங்டனிடம் இருந்து சுதந்திரமாக போர் தொடுப்பதற்கான ஐரோப்பாவின் பலத்தை உறுதிப்படுத்துவதற்காக இராணுவச் செலவினங்களை அதிகரிக்கவும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.

“நாம் ஒரு கடினமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்ற வார்த்தைகளுடன் மேர்க்கெல் அந்த கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தைத் தொடங்கினார். அந்த தொற்றுநோயையும் "அதனுடன் சம்பந்தப்பட்ட பொருளாதார சவாலையும்" அவர் மேற்கோளிட்டார், “இதுபோன்றவற்றை பல தசாப்தங்களாக அல்லது அனேகமாக முன்னொருபோதும் நாம் பார்த்ததில்லை,” என்றார்.

ஜேர்மனியும் பிரான்சும் "வரவிருக்கும் மாதங்களில் ஒரு கூட்டு பாத்திரம் வகிக்க" விரும்புகிறது, “ஐரோப்பா தான் நமது எதிர்காலம் என்பதை … ஐரோப்பிய சமூகத்தில் மட்டுந்தான் நாம் பலமாக இருப்போம், உலகில் நமது பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை அது தெளிவுபடுத்துகிறது,” என்றார். டிஜிட்டல்மயப்படுத்தல், காலநிலை மாற்றம், அத்துடன் "வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் போர் மற்றும் சமாதான பிரச்சினை" உள்ளடங்கலாக "மிகப்பெரிய சவால்களை" அவர் அனுமானித்தார்.

மேர்க்கெலும் மக்ரோனும் எந்த போர்கள் உடனடியாக வரவிருக்கின்றன என்பதை விவரிக்கவில்லை, மாறாக ஐரோப்பிய அரசுகள் ஒன்றாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே மற்ற பிரதான சக்திகளுடன் உலகளவில் போட்டியிட முடியும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். “நாம் ஓர் ஐரோப்பிய ஒன்றியமாக உலகில் நமது உறவுகளை வரையறுக்க வேண்டும்,” மேர்க்கெல் தெரிவித்தார். “இது ஆபிரிக்காவுடன், சீனா உடனான உறவுகளுடன், நிச்சயமாக, அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இங்கே நாம் மிகப்பெரிய சவாலை முகங்கொடுத்து வருகிறோம் என்ற உண்மையை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது,” என்றார்.

மெஸ்ஸபேர்க்கில் சம்பந்தப்பட்டிருந்த கேள்விகளின் நீண்டகால தாக்கம் கொண்ட தன்மை, ஐரோப்பிய பத்திரிகைகளின் கூட்டுக்குழுமத்திற்கு மேர்க்கெல் அளித்த ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. பிரிட்டனில் கார்டியன், ஜேர்மனியில் Sueddeutsche Zeitung, பிரான்சில் Le Monde, இத்தாலியில் La Stampa, ஸ்பெயினில்La Vanguardia, போலாந்தில் Polityka இல் பேசுகையில், அவர், ஜேர்மனி ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைக்கு வரவிருப்பதைக் குறித்து விவாதித்ததுடன், வாஷிங்டன் உடன் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வரும் கவலைகளுக்கும் குரல் கொடுத்தார்.

ஐரோப்பா வாஷிங்டனிடம் இருந்து மூலோபாய தன்னாட்சியை ஸ்தாபிக்குமா என்று வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “அட்லாண்டிக் கடந்த நாடுகளின் பாதுகாப்பு சமூகத்திற்கும் மற்றும் நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட அணுசக்தி குழுமத்திற்கும் பொறுப்பேற்று இருப்பதற்கு அங்கே உறுதியான காரணங்கள் உள்ளன. ஆனால் நிச்சயமாக பனிப்போரின் போது கொண்டிருந்ததை விட ஐரோப்பா இன்னும் அதிக சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா ஓர் உலக சக்தியாக இருக்கவேண்டும் என்ற குறிப்பிட்ட புரிதலுடன் தான் நாம் வளர்ந்தோம். அமெரிக்கா இப்போது அதன் சொந்த விருப்பத்தின் பேரில் அதன் பாத்திரத்திலிருந்து பின்வாங்க விரும்பினால், நாம் அதற்கு மிகவும் ஆழமாக விடையிறுக்க வேண்டியவர்களாக உள்ளோம்,” என்றார்.

வாஷிங்டன் முன்னணி உலக சக்தியாக அதன் பாத்திரத்தை எது கைவிட செய்கிறது என்பதைக் குறித்து மேர்க்கெல் எதுவும் கூறவில்லை. ஆனால் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஸ்தாபகமும் ஐக்கிய அரசுகள் வேகமாக இழந்து வரும் உலக மேலாதிக்கத்தைப் பேணுவதற்காக பெரும்பிரயத்தனத்தில் உள்ளது. யதார்த்தத்தில் மேர்க்கெலும் மற்ற ஐரோப்பிய அரசு தலைவர்களும் எதை "பிரதிபலித்து" கொண்டிருக்கிறார்கள் என்றால் வாஷிங்டன் "அதன் சொந்த-விருப்பத்துடன்" முடிவெடுக்கும் கொள்கை மாற்றத்தை அல்ல, மாறாக உலக இடத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் தீவிரமடைந்து வரும் பொறிவையாகும்.

சர்வதேச பிரச்சினைகள் மீது வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் இடையிலான மோதல்கள் சீராக அதிகரித்து கொண்டிருக்கின்றன. ஜேர்மனி மற்றும் சீனா இரண்டின் மீதும் வர்த்தகப் போர் வரிவிதிப்புகளாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகின்ற நிலையில், மேர்க்கெல் உலகளாவிய அரசியல் குறித்து குரல் "வெம்ப" புலம்பினார்: “இந்த நாட்களில், நாம் பாதுகாப்புவாதத்திற்குள் பொறிந்து போவதைத் தடுக்க நம்மால் ஆன அனைத்தும் செய்ய வேண்டும். … பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்குச் சிக்கலாக இருக்கும் என்பதன் மீது எனக்கு எந்த பிரமையும் இல்லை,” என்றார்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியை "நமது தாராளவாத ஜனநாயகங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால்" என்று குறிப்பிட்ட மேர்க்கெல், அதேவேளையில் சீனாவின் கடல் எல்லைகளை அச்சுறுத்த விமானந்தாங்கி மூன்று போர்க்கப்பல்களை அனுப்பியும், சீனாவிடமிருந்து பெற்ற அமெரிக்க கடன்கள் மீது திவால்நிலைமையை அறிவிக்கவும் அச்சுறுத்தி வரும் வாஷிங்டனிடம் இருந்து கண்கூடாகவே ஒரு வேறுபட்ட அணுகுமுறையை முன்மொழிந்தார். ஐரோப்பாவும் சீனாவும் "பொருளாதார கூட்டுறவிலும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் பங்காளிகள், ஆனாலும் வெவ்வேறு அரசியல் அமைப்புகளுடன் போட்டியாளர்களும் கூட. ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பது நிச்சயமாக ஒரு மோசமான யோசனையாக இருக்கும்,” என்று மேர்க்கெல் தெரிவித்தார்.

புதிய உலக சக்தியாக ஆவதற்கான ஜேர்மனியின் முயற்சிக்கு அதிகமாக கடன்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, அந்நாடுகளது அரசுகளுக்கு வரைமுறைக்கு உட்பட்ட விட்டுக்கொடுப்புகள் வழங்கவும் அப்பெண்மணி அறிவுறுத்தினார். “ஜேர்மனிக்கு குறைந்த கடன் விகிதமே இருப்பதாலும், இந்த அசாதாரண சூழ்நிலையில், அது இன்னும் கூடுதல் கடனைப் பெற முடியும்" என்பதாலும் கோவிட்-19 பிணையெடுப்பு நிதிக்கு ஜேர்மனியால் இன்னும் கூடுதல் பணம் வழங்க முடியுமென அவர் சுட்டிக்காட்டினார். யூரோ மண்டல நிதியமைச்சர்களின் யூரோ குழு தலைவராக ஸ்பானிய பொருளாதார அமைச்சர் Nadia Calviño ஐ அவர் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதாரரீதியில் பலவீனமான ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள், “நிச்சயமாக எங்களின் சொந்த விருப்பமாகும். ஒரு பலமான உள்சந்தையைக் கொண்டிருப்பதையும், ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றிலிருந்து ஒன்று விலகி அல்ல, நெருக்கமாக ஒருங்கிணைந்து வளர்வதையும் ஜேர்மனி விரும்புகிறது,” என்று மேர்க்கெல் தெரிவித்தார்.

இந்த நெருக்கடிக்கான விலையைத் தொழிலாள வர்க்கமே தாங்கியாக வேண்டும் என்பதில், மெஸ்ஸபேர்க்கில், மேர்க்கெலும் மக்ரோனும் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் முன்மொழிந்த 500 பில்லியன் டாலர் "நிவாரண நிதி" உழைக்கும் மக்களுக்கு எதிரான கடுமையான சிக்கன நடவடிக்கைகளுடன் பிணைந்திருக்கும் என்பதை மேர்க்கெல் தெளிவுபடுத்தினார். “ஒவ்வொருவரும் தமது நாட்டிலேயே எதிர்காலத்திற்கு பொருத்தமாக தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்" மற்றும் "தங்களின் சொந்த போட்டித்தன்மையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார். அவர் இத்தாலிய பிரதம மந்திரி யூசெப்ப கொந்தேயின் கருத்தை மேற்காளிட்டு காட்டினார், அவர் ஏற்கனவே "அவர் நாட்டை நவீனமயப்படுத்த முன்மொழிகளை கூறியிருப்பதாக" அப்பெண்மணி தெரிவித்தார்.

தற்போது ஐரோப்பிய சக்திகள், அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக செயல்படக்கூடிய அவசியமானால் அதற்கு எதிராக செயல்படக்கூடிய —நேட்டோவைப் போலல்லாத— ஒரு இராணுவக் கூட்டணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றுவதன் மீது நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஐரோப்பிய தலைநகரங்களுக்கு இடையிலும் மோதல்கள் மீள மேலெழுந்து வருகின்றன. ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு இயங்குமுறையை (ESM) நெருக்கடியால் பாதிக்கப்பட்ட “ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அவரின் பேட்டியில் மேர்க்கெல் கூறிய போது, கொந்தே அவரை மறுத்துரைத்தார்: “நான் கணக்கை வைத்திருக்கிறேன். நிதியமைச்சர் Roberto Gualtieri, அரசு கணக்காளர்கள் மற்றும் பிற அமைச்சர்களுடன் சேர்ந்து இத்தாலிய வரவு-செலவுக் கணக்கை நான் பார்த்துக் கொள்வேன்,” என்றார்.

இந்த தருணத்தில் ஐரோப்பிய அரசுகளை ஒருங்கிணைத்து வைத்திருப்பது எதுவென்றால் அது ஒருமித்த நலன்கள் அல்ல, மாறாக வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராகவும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், கூட்டாளிகளுக்கான கடுமையான தேடல்தான் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. சிக்கன நடவடிக்கைகள், ஒடுக்குமுறை மற்றும் இராணுவவாதம் மட்டுமே அவர்கள் உடன்படக்கூடிய ஒரே கொள்கையாக உள்ளது. இவ்விதத்தில், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர்கள் கோவிட்-19 தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ஒரு மிகப்பெரிய கூட்டு ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கட்டமைப்புக்கு அழைப்பு விடுத்து, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு கொள்கை மற்றும் இராணுவக் கொள்கை தலைவர் ஜோசெப் போரெல்லுக்கு கூட்டாக ஒரு கடிதம்ம எழுதினர்.

இந்த தொற்றுநோயின் போது, அவர்கள் எழுதினார்கள், “ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் இரண்டு விதத்திலும் முன்நிற்கும் சவால்களைக் கையாள உதவுவதில் நமது ஆயுதப்படைகள் கருவியாக இருந்துள்ளன. இன்று இந்த தொற்றுநோயின் பாதிப்புகள் இப்போதிருந்து வரும் மோதல்கள் மற்றும் நெருக்கடியை ஏற்கனவே இன்னும் அதிகரிக்க தொடங்கி உள்ளதுடன், பலவீனமான அரசுகளை கூடுதலாக பலவீனப்படுத்தி வருகின்றன மற்றும் ஏற்கனவே சுமையேறிய அமைப்புகள் மற்றும் பிரதேசங்கள் மீது இன்னும் கூடுதலாக அழுத்தத்ததை அளித்து வருகின்றன. ஆகவே பாதுகாப்பும் இராணுவமும் தலையாய முன்னுரிமையாக இருக்க வேண்டும். நாம் நமது பொறுப்புகளுக்கேற்பவும் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போதைய மற்றும் வரவிருக்கும் சவால்களை முகங்கொடுக்கக் கூடியவர்களாகவும் வாழ விரும்புகிறோம்,” என்றனர்.

அவர்கள், இராணுவப் பிரச்சினைகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்புக்குட்பட்ட நிரந்தர கூட்டுறவு அமைப்பை (PESCO) பலப்படுத்தவும்; ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு தொழில்துறைகளை வலுப்படுத்தவும்; பொதுவான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான "மூலோபாய திசையை" அபிவிருத்தி செய்யவும்; மாலி, லிபியா மற்றும் கினேயா வளைகுடாவில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கவும்; கூடுதலாக ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கொள்கையை ஒருங்கிணைக்கவும் அழைப்பு விடுத்தனர். நேட்டோவுடனான கூட்டுறவு பட்டியலில் கடைசியாக வைக்கப்பட்டிருந்தது, நான்கு ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் "நேட்டோவுடன் ஐரோப்பிய தூணைப் பலப்படுத்துவதற்காக" அத்துடன் "மற்ற பங்காண்மை அமைப்புகளுடன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டுறவை முன்னெடுத்து செல்வதற்காக" பொறுப்பேற்றிருந்த ஒரு பிரிவில் வைக்கப்பட்டிருந்தது.

வாஷிங்டனில் இருந்து சுதந்திரமாக மிகப் பெரியளவில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆற்றலைக் கட்டமைப்பதற்கு, ஐரோப்பாவின் போர் இயந்திரங்களுக்குள் நிதியியல் ஆதாரவளங்களைப் பாய்ச்சுவது அவசியமாகும் என்றவர்கள் வலியுறுத்தினர்.

“ஐரோப்பாவின் தொழில்துறை இறையாண்மை, தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் இறையாண்மையைக் கட்டமைப்பதற்கு நமது பாதுகாப்பு நலன்களுடன் சேர்ந்து இன்னும் பலமாக நமது பொருளாதார கொள்கைகளை நாம் இணைக்க வேண்டியுள்ளது … எதிர்கால இராணுவ நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கவும் அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கவும் நமது ஆற்றலை வலுப்படுத்தும் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் தகைமை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கவும் மற்றும் பலப்படுத்தவும் ஐரோப்பிய பாதுகாப்புத்துறை நிதியம் (EDF) அவசியமாகும். ஆகவே பாதுகாப்புத்துறை பகுதியில் ஒரு முன்னுரிமையாக இலட்சியப்பூர்வமான EDF வரவு-செலவுத் திட்டக்கணக்கை நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்பதையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

ஐரோப்பிய சக்திகள் போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற அதேவேளையில், அமெரிக்கா உடனான அவற்றின் உறவுகள் பொறிந்து வருவதையும் அவை பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றன. ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) DPA க்குக் கூறுகையில், “ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வந்தால் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான பங்காண்மை முன்னொரு சமயம் இருந்தவாறு ஒவ்வொன்றும் மீண்டும் அதே நிலைமைக்குத் திரும்பிவிடும் என்று யாரேனும் நினைத்தால், அவர் கட்டமைப்பு மாற்றங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்,” என்றார்.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்றுள்ள வரலாற்றுரீதியில் வேரூன்றிய முதலாளித்துவ முரண்பாடுகள் மீண்டும் வேகமாக வெடித்து வருகிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தையும் மற்றும் சோசலிச புரட்சிக்கான ஒரு போராட்டத்தையும் கட்டமைப்பதே அட்லாண்டிக்கிற்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள இந்த முதலாளித்துவ போர்வெறியர்களுக்கு எதிரான முன்னோக்கிய பாதையாக உள்ளது.