உலக வரலாற்றின் இரண்டு அமெரிக்கப் புரட்சிகள்

6 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவை இங்கே கேட்கலாம்.

இன்று அமெரிக்கா ஸ்தாபிக்கப்பட்ட 1776 ஜூலை 4 அன்றான சுதந்திரப் பிரகடனம் வெளியான 244வது ஆண்டுதினத்தை குறிக்கின்றது. இந்த பிரகடனம் வெளியிடப்பட்ட நேரத்தில், அமெரிக்க காலனித்துவத்தினர், அதிலும் குறிப்பாக மசாசூசெட்ஸ் மக்கள் ஏற்கனவே 15 மாதங்களாக பெரிய பிரித்தானியாவின் பெரும் சக்திவாய்ந்த இராணுவப் படைகளுடன் போரில் ஈடுபட்டிருந்தனர். சுதந்திரத்திற்கான இறுதி முடிவு அதுவரை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றபோதும், பிரகடன அறிவிப்பினை வரைவு செய்யும் பணி ஜூன் 11 அன்று பிலடெல்பியா நகரில் கூடிய Continental Congress ஆல் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவிடம் வழங்கப்பட்டிருந்தது. பென்சில்வேனியாவின் பெஞ்சமின் பிராங்ளின், மசாசூசெட்ஸை சேர்ந்த ஜோன் ஆடம்ஸ், வேர்ஜினியாவின் தோமஸ் ஜெபர்சன், நியூயோர்க்கின் ரோபர்ட் லிவிங்ஸ்டன், மற்றும் கனெக்டிகட்டின் ரோஜர் ஷெர்மான் ஆகிய ஐந்து பேர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஆவணம் குறித்த ஒரு முதல் வரைவு தொடர்பாக உடன்பாட்டை எட்டிய பின்னர், குழுவானது, அசாதாரண புத்திக்கூர்மைக்கும் ஆற்றல்மிக்க இலக்கியத் திறனுக்கும் ஏற்கனவே பரவலாய் அறியப்பட்டிருந்தவரான 33 வயது தோமஸ் ஜெபர்சனால் அதன் முதல் வரைவு எழுதப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. ஜூன் 28 அன்று அவர் தனது வரைவை நிறைவு செய்தார், பின் அது காங்கிரசின் உறுப்பினர்களால் திறனாய்வு செய்யப்பட்டது. திருத்தல் முறையின் போது பல்வேறு மாற்றங்கள் அதில் செய்யப்பட்டன. அதில் மிக முக்கியமான மாற்றம் அடிமைமுறையை காலனிகளின் மீது சுமத்தியமைக்காக பெரிய பிரித்தானியாவின் மீது ஜெபர்சன் குற்றம் சுமத்தியிருந்தமை அகற்றப்பட்டதாகும். 1776 ஜூலை 2 அன்று, பெரிய பிரித்தானியாவுடனான முறிவை அங்கீகரிக்கும் ஒரு தீர்மானத்தை Continental Congress நிறைவேற்றியது. அதற்கு இரண்டு நாட்களின் பின்னர், ஜூலை 4 அன்று, சுதந்திரப் பிரகடனத்தின் இறுதி வரைவுக்கு அது ஒப்புதலளித்தது.

பிரித்தானியாவுடனான உத்தியோகபூர்வ முறிவு மற்றும் அமெரிக்காவின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு முழுவீச்சிலான போரை முன்னெடுப்பது ஆகிய ஆவணத்தின் உடனடி அரசியல் விளைவுகளே பிரகடனத்திற்கு செறிந்த மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவத்தை அளிப்பதற்கு போதுமானதாய் இருந்தன. எனினும், ஆவணத்தின் நேரடி அரசியல் தாக்கம் மட்டுமல்லாது, அது பிரகடனம் செய்த கோட்பாடுகளும் பிரகடனத்தின் உலக வரலாற்று அந்தஸ்தை தீர்மானித்தவையாக இருந்தன.

அந்த ஆவணம் பின்வரும் வார்த்தைகளுடன் தொடங்குகிறது: “மனித நிகழ்வுகளின் பாதையில், ஒரு மக்களுக்கு அவர்களை இன்னொரு மக்களுடன் இணைத்து வைத்திருந்த அரசியல் பிணைப்புகளைக் கலைப்பது அவசியமாக ஆகின்றபோது...”. இந்த வார்த்தைகளின் அர்த்தம், அரசாங்கங்களும் அவை அடித்தளமாகக் கொண்டிருந்த மற்றும் பாதுகாத்த அரசியல் மற்றும் சமூக உறவுகளும் காலத்திற்கு அப்பாற்பட்டவையாகவோ மாற்ற முடியாதவையாக இருக்கவில்லை என்பதாகும். அவை மனிதனால் உருவாக்கப்பட்டவையே அன்றி, கடவுளால் அல்ல. இந்த வலியுறுத்தலானது, மதத்தினால் புனிதமாக நியாயப்படுத்தப்பட்டிருந்த முடியாட்சி மற்றும் பிரபுத்துவம் ஆகிய அதாவது வம்சங்களை மூடத்தனமாக தொழுவதன் அடிப்படையிலான அரசியல் அதிகாரத்தின் அத்தனை வடிவங்களினது நியாயப்படுத்தலை தகர்த்தெறிந்தது. அதாவது மனிதனால் உருவாக்கப்பட்டது மனிதனால் மாற்றப்பட முடியும்.

பிரகடனம் அதன்பின் ஒரு மகத்துவமிக்க உறுதிபூண முன்சென்றது: “இந்த உண்மைகளை நாங்கள் இயல்பாகவே உறுதியாக பிடித்திருக்கின்றோம். அதாவது மனிதர்கள் அனைவரும் சமமாக உருவாக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத குறிப்பிட்ட சில உரிமைகளை அவர்களது படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் வாழ்வது, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும்.”

ஒரு கண்டிப்பான அனுபவரீதியான அர்த்ததில் பார்த்தால், இதைவிட ”சுய-வெளிப்பாடான” எதுவுமில்லை. அதாவது, இவ்வளவிற்கு வெளிப்படையாக இருக்கும் “உண்மைகளில்”, அதற்கு மேலதிக விவாதம் எதுவும் அவசியமாக இல்லை. காலனிகள் உள்ளிட உலகின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் யதார்த்தமோ, பிரகடனத்தில் “சுய-வெளிப்பாடாக” இருப்பதாக கூறியதற்கு முரண்பட்டதாய் இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி உலகத்தில், அநேக மனிதர்கள் சுமைதூக்கி மிருகங்களைப் போல அல்லது அதைவிட மோசமாகவே நடத்தப்பட்டனர். உலகின் எந்தப் பகுதியில் மனிதகுலம் அனைத்தும் “சமமாகப் படைக்கப்பட்டிருந்ததை” ஊர்ஜிதப்படுத்துகின்ற விதமாய் நிலைமைகள் இருந்தன? முடியாட்சிகளும் பிரபுத்துவங்களும் வழிவழியாக வந்திருந்த சமத்துவமின்மையின் சவாலுக்கிடமற்ற நியாயப்படுத்தலையே அடித்தளமாகக் கொண்டிருந்தன. சமூகத்தில் மனிதர்களின் இடமானது, நிலப்பிரபுத்துவ உறவுகள் மெதுமெதுவாக அரிக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்த இடங்களிலும் கூட, ஒரு புனித வடிவமைப்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டது.

எங்கே பரந்த வெகுஜனங்களுக்கு வாழ்க்கை மரியாதைமிக்கதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் இருந்தது? முன்னேறிய பிரித்தானியாவில், ஆறு வயதுக் குழந்தையும் கூட ஒரு செல்வந்த மனிதனின் கைக்குட்டையை திருடிய குற்றத்திற்காக தூக்கிலிடப்படக் கூடியதாய் இருந்தது. மக்களில் மிகப் பெருவாரியானோர், பிரபுத்துவ மற்றும் அரைப்பிரபுத்துவ கண்டிப்பான உறவுகளால் திணிக்கப்பட்ட படுமோசமான வறுமையில் வாழ்ந்து வந்தனர். பொதுவான மக்களின் வாழ்க்கையிலேயே “மகிழ்ச்சி” அதிகமிருக்கவில்லை என்கிறபோது, உலகெங்கிலும் மற்றும் அமெரிக்காக்களிலும் அடிமைப்படுத்தப்பட்டு அபூர்வமாகவே மனிதராகவும் கருதப்பட்டிருந்த மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை குறித்து சொல்லவும் தேவையில்லை.

ஒரு பண்பற்ற அனுபவரீதியான அர்த்தத்தில், ஜெபர்சன் முன்வைத்த “உண்மைகள்” “சுய-வெளிப்பாடானவை”யாக இருக்கவில்லை. மாறாக அவை, விஞ்ஞானபூர்வ சிந்தனையை, அதாவது பகுத்தறிவை --வரலாறு மற்றும் மனித சமூகத்தின் மீதான ஆய்வானது இயற்பியல் அறிஞர் நியூட்டன், ஜோன் லாக் போன்ற சடவாத சிந்தனையாளர்கள், மற்றும் மகத்தான அறிவொளி இயக்க மெய்யியலாளர்கள் போன்றவர்களது தாக்கத்தின் கீழ் அது அபிவிருத்தி கண்டிருந்த நிலையில்-- செயலுறுத்தி பெறப்பட்ட “உண்மைகளாக” இருந்தன. பகுத்தறிவின் செயற்படுத்தலே அரசியல்ரீதியாக எது நியாயமானது, நியாயமற்றது என்பதைத் தீர்மானித்தது. எது நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதை, பகுத்தறிவற்ற ஊர்ஜிதப்படுத்தப்படாத புனித ஒழுங்கின் முன்வைப்புகள் அல்ல, விஞ்ஞானமே தீர்மானித்தது. இந்த ஆழமான அர்த்தத்தில் தான், மனிதர்களது சமத்துவமும் “வாழ்க்கை, சுதந்திரம், மற்றும் மகிழ்ச்சிக்கான தேடல்” இவற்றுக்கான அவர்களது “பிரிக்கவியலாத உரிமை”களும் “சுய-வெளிப்பாடானவையாக” இருந்தன.

ஜெபர்சனும் அவரது உடனிருந்த தோழர்களும் அனுபவரீதியாக, நிலவும் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் பிரகடனத்தில் நிலைநாட்டப்பட்ட “சுய-வெளிப்பாடான உண்மைகளுக்கு” இணங்கிய நிலை இல்லை என்பதை நன்கறிந்தே இருந்தனர். இந்த உண்மையில் இருந்து பின்வரும் முடிவு தேற்றம் செய்யப்பட்டது: அரசாங்கங்கள் “ஆளப்படுபவர்களது சம்மதத்தில் இருந்தே நியாயமான அதிகாரங்களை” பெற்றுக்கொள்கின்றன. ஆகவே, “எப்போதெல்லாம் அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு வடிவம் இந்த நோக்கங்களை சிதைக்கின்றதாக ஆகிறதோ, அப்போது மக்கள் அதனை மாற்றுவது மற்றும் ஒழிப்பதும், அத்துடன் தமது பாதுகாப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உகந்ததாக அவர்கள் கருதக்கூடிய கொள்கைகள் மீது தனக்கான அடித்தளம் அமைத்துக் கொள்கின்றதும் அதற்கேற்றதொரு வடிவத்தில் தனது அதிகாரங்களை ஒழுங்கமைத்துக் கொள்கின்றதுமான ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதும் மக்களின் உரிமையாக உள்ளது.”

இவ்வாறாக, ஒடுக்குமுறை கொண்டதாகவும் மக்களின் ”மகிழ்ச்சி”க்கு ஊறு விளைவிப்பதாகவும் ஆகிவிட்டிருக்கும் அரசாங்கங்களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான ஒரு நியாயமான இன்னும் ஒரு அத்தியாவசியமான வழிமுறையாகவும் கூட புரட்சியை சுதந்திரப் பிரகடனம் அறிவித்தது. ஜெபர்சன் இந்தக் கோட்பாட்டை பின்பற்றினார், பிரான்சின் மக்கள், அமெரிக்க புரட்சியால் உத்வேகம் பெற்று, பதினாறாம் லூயி மன்னருக்கும் பிரபுத்துவத்திற்கும் எதிராக இரத்தக்களரியாக பழிதீர்த்தபோது, அவர் கொஞ்சமும் முகச்சுளிப்பு காட்டவில்லை. லூயி “மற்ற குற்றவாளிகளை” போல தண்டிக்கப்பட வேண்டியவர் என்று ஜெபர்சன் அறிவித்தார். பிரெஞ்சு புரட்சி தோல்வியடையக் காண்பதைக் காட்டிலும், “பாதி பூமி மனிதவாடையற்றுப் போவதைக் காணவே எனக்கு விருப்பமாய் இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் ஆதாமும் ஏவாளும் மட்டும் தான் எஞ்சியிருக்கிறார்கள், சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறார்கள் என்றால், அது இப்போதிருப்பதை விடவும் மேம்பட்டதாகவே இருக்கும்.” ”மன்னர்களையும், பிரபுக்களையும், மதகுருக்களையும் அவர்கள் வெகுகாலமாக எந்த தூக்குமேடைகளை மனித இரத்த வெள்ளத்தால் மூழ்கடித்திருந்தார்களோ அந்த தூக்குமேடைகளுக்கு கொண்டுவரக் கூடிய” புரட்சி வெற்றிபெறத்தக்க சாத்தியம் குறித்து அவர் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனிப்பட்ட விதத்தில் ஜெபர்சன் அடிமைகளை உடமையாக கொண்டிருந்தார் என்பதும் அடிமை அமைப்புமுறையுடனான அவரது சமரசங்களும் அவரது வாழ்வின் மிகப்பெரும் நகைமுரணை இன்னும் மிகப்பெரும் துன்பியலைக் குறிக்கின்றன என்பது மறுக்கவியலாத ஒரு வரலாற்று உண்மையாகும். அவை அப்போதிருந்த சமூக நிலைமைகளும் முரண்பாடுகளும் மற்றும் அவர் பிறந்த உலகில் இருந்த அடிமைமுறை, விவசாய அடிமை முறை, மற்றும் ஏராளமான கொத்தடிமை வடிவங்கள் செறிந்து இருந்ததுடன் அவை நியாயமானவையா என்பது குறித்து அரிதாகவே கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையும் கொண்டிருந்த ஒரு உலகு, அவரது தனிமனித வாழ்க்கைச் சரிதத்தில் காட்டிய வெளிப்பாடாக இருந்தன. கல்விச்சாலைகளது அறநெறி கற்பிக்கும் அற்பர்கள் தொடர்ந்தும் ஜெபர்சன் மீது கண்டனத்தைப் பொழிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அவர்களது கண்டனத்தால் சுதந்திரப் பிரகடனத்தின் புரட்சிகரத் தாக்கத்தில் இம்மியளவையும் மாற்றி விட முடியாது.

1775-83 அமெரிக்கப் புரட்சி அடிமைத்தன பிரச்சினையை தீர்த்து விட முடியவில்லை. அதற்குக் காரணம் அடிமைகளைக் கொண்டிருந்த ஜெபர்சன் அல்லது வாஷிங்டன் போன்ற மற்ற புரட்சிகரத் தலைவர்கள் பிரச்சினையை தீர்ப்பதில் தடையாக இருந்தார்கள் என்பதல்ல. அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் முதலாவது கட்டத்தின் பூர்த்தியடையாத தன்மை என்பது நிலவிய புற நிலைமைகளால் தீர்மானிக்கப்பட்டது என்றால், அவை வெறுமனே வட அமெரிக்காவில் மட்டும் நிலவிய நிலைமைகளால் அல்ல. மார்க்ஸ் பிற்காலத்தில் விளக்கியதைப் போல, மனிதகுலமானது, “எப்போதும் தன்னால் தீர்க்கக்கூடிய கடமைகளை மட்டுமே தனக்கு வரித்துக் கொள்கிறது; ஏனென்றால், விடயத்தை மிக நெருக்கத்தில் பார்த்தால், கடமைகளை தீர்ப்பதற்கு அவசியமான பொருளாதாய நிலைமைகள் ஏற்கனவே இருக்கின்றபோதோ அல்லது குறைந்தபட்சம் அவை உருவாகிக்கொண்டு இருக்கின்றபோது மட்டும் தான் எழுகிறது என்பதையே நாம் எப்போதும் காண்போம்.” அடிமைமுறையுடன் தீர்மானகரமாக கணக்குத்தீர்ப்பதற்கான நிலைமைகள் அப்போது இன்னும் உருவாகியிருக்கவில்லை. பல தசாப்த கால தொழிற்துறை வளர்ச்சியும் வடக்கில் பொருளாதாரரீதியாக சக்திவாய்ந்த ஒரு முதலாளித்துவ வர்க்கம் எழுவதும் இன்னும் அதற்கு அவசியமாக இருந்தன. அதற்கும் பின், அந்த வர்க்கம் வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கும் ஒரு நீண்ட மற்றும் கடுமையான உள்நாட்டுப் போரில் தாக்குப்பிடிப்பதற்கும் திறம்கொண்ட ஒரு ஜனநாயக அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்யவும் வேண்டியிருந்தது.

இந்த அத்தியாவசியமான சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கானது அமெரிக்கப் புரட்சியை தொடர்ந்து வந்த தசாப்தங்களில் துரிதகதியில் கட்டவிழ்ந்தது. வடக்கின் முதலாளித்துவ அபிவிருத்தியானது அமெரிக்கா அடிமை சக்தி மூலம் அரசியல் மேலாதிக்கம் செய்யப்படுவதுடன் மேலும் மேலும் அதிகமாய் இணக்கமற்றதாய் ஆனது. இந்த புறநிலை இணக்கமின்மையானது அதன் சித்தாந்த வெளிப்பாட்டை, சுதந்திரப் பிரகடனத்தின் மனித சமத்துவ இலட்சியங்கள் அடிமைத்தனத்தின் திகிலூட்டும் யதார்த்தத்துடன் சமரசப்பட முடியாததாக இருந்தன என்பதிலான முன்னெப்போதினும் தீவிரமான விழிப்புணர்வில் கண்டது.

எவ்வாறாயினும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த வரலாற்று காரணத்தின் நிகழ்ச்சிப்போக்கு சமூக பொருளாதார காரணிகளால் ஒருதலைப்பட்சமாக இயக்கப்படவில்லை என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும். அத்துடன் கருத்தியல் மோதல்கள் முந்தையவற்றின் பிரதிபலிப்பாகும். சுதந்திரப் பிரகடனத்தில் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளின் செல்வாக்கானது வடக்கில் வெகுஜன அரசியல் நனவில் செல்வாக்கு செலுத்துவதிலும், அடிமை சக்திக்கு எதிரான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்திற்கு அதனை தயாரிப்பு செய்வதிலும் ஒரு தீவிரமான, கிட்டத்தட்ட சுயாதீனமான, பாத்திரத்தை வகித்தது.

ஆபிரகாம் லிங்கனின் புத்திஜீவித மற்றும் அரசியல் அபிவிருத்தியானது தோமஸ் ஜெபர்சன் மற்றும் அவர் எழுதிய பிரகடனத்தினால் செலுத்தப்பட்ட செல்வாக்கின் மகுடமாய் இருந்தது. லிங்கன், எண்ணற்ற அவரது உரைகளில், மீண்டும் மீண்டும் ஜெபர்சனின் அரசியல் பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். உதாரணத்திற்கு, 1859 இல் எழுதிய ஒரு கடிதத்தில் லிங்கன் கூறினார்:

ஒரு குறிப்பிட்ட மக்களது தேசிய சுதந்திரத்திற்கான போராட்டத்தின் ஸ்தூலமான அழுத்தத்திற்கு மத்தியில், ஒரு அகழ்ந்தெடுத்த உண்மையை தெளிந்த ஒரு புரட்சிகர ஆவணத்தில் அறிமுகம் செய்யவும், அதன்மூலம் அது என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும்படி செய்யவும், இன்றும் இனி வரும் நாட்கள் அனைத்திலும், கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறை மீண்டும் தோன்றுவதற்கான ஆரம்ப அறிகுறிகளுக்கே ஒரு கண்டனமாகவும் ஒரு தடைக்கல்லாகவும் அது திகழும்படி செய்யவுமான நிதானம், தொலைநோக்கு மற்றும் செயல்திறன் பெற்றிருந்த மனிதரான ஜெபர்சனுக்கு அனைத்து மரியாதையும் உரித்தாகட்டும்.

1860 இல் ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், லிங்கன் அறிவித்தார்: “அரசியல்ரீதியாக சுதந்திரப் பிரகடனத்தில் பொதிந்திருக்கும் உணர்வுகளில் இருந்து எழுந்திராத ஒரேயொரு உணர்வும் கூட ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை.”

ஜனாதிபதி பொறுப்பேற்க வாஷிங்டன் வரும் வழியில், லிங்கன் விளக்கினார்:

அது [புரட்சி] வெறுமனே காலனிகளை தாயகத்தில் இருந்து பிரிக்கின்ற விடயமாக மட்டும் இருக்கவில்லை, மாறாக இந்த நாட்டின் மக்களுக்கு சுதந்திரம் வழங்கியதுடன் மட்டுமின்றி, அனைத்து உலகிற்கும், அத்தனை வருங்காலத்திற்குமாய் நம்பிக்கையை வழங்கிய, சுதந்திரப் பிரகடனத்தில் இருந்த உணர்வின் விடயமாக இருந்தது. அந்த உணர்வு தான் உரிய நேரத்தில் அனைத்து மனிதர்களின் தோள்களில் இருந்தும் சுமைகள் இறக்கப்பட்டு, அனைவரும் சம வாய்ப்பை பெற்றிருக்கின்ற ஒரு நிலைக்கு வாக்குறுதி வழங்கியது. இதுவே சுதந்திரப் பிரகடனத்தில் பொதிந்திருக்கிற உணர்வாகும்.

ஜெபர்சன் உள்நாட்டுப் போருக்கான சித்தாந்த உத்வேகத்தை வழங்கிய மகத்தான புரட்சிகர அறிக்கையை எழுதியவராய் இருந்தார். லிங்கனின் தலைமையின் கீழ், இறுதியாக, அடிமைமுறை ஆதரவு மாகாணங்களுக்கு (Confederacy) எதிரான போராட்டத்தில் பத்தாயிரக்கணக்கான அடிமைகளை அணிதிரட்டி ஆயுதபாணியாக்கிய ஒன்றிய இராணுவப் படைகள் அடிமைமுறையை அழித்தன.

உள்நாட்டுப் போரில் இருந்து வெளிவந்த அமெரிக்கா, லிங்கன் அளித்திருந்த ஜனநாயக மற்றும் சமத்துவ வாக்குறுதிகளை விரைவிலேயே காட்டிக் கொடுத்தது என்பது உண்மையே. ”சுதந்திரத்தின் புதுப்பிறவி” நவீன முதலாளித்துவத்தின் கட்டாயங்களுக்கு வழிவிட்டது. தோன்றியெழுந்து வந்த தொழிலாள வர்க்கத்திற்கும் தொழிற்துறை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான சமூகப் போராட்டத்தின் ஒரு புதிய வடிவம் அரசியல் மற்றும் சமூக பரப்பில் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்த புதிய வர்க்கப் போராட்டத்தில், வடக்கின் முதலாளித்துவ வர்க்கம் பழைய அடிமை-உடைமையாளர்கள் வர்க்கத்தின் எச்சசொச்சங்களுடன் ஒரு கூட்டணி வைப்பதில் ஆதாயமிருப்பதைக் கண்டது. மீள்கட்டுமானம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இனவெறி தூண்டப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

அரசியல் பிற்போக்குத்தனத்தின் இந்த குறிப்பான வடிவத்திற்கு எதிரான தளர்ச்சியற்ற எதிர்ப்பானது சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு மையமான கடமையாக ஆனது. தொழிலாளர்களது அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்டு, முதலாளித்துவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, உலக அளவில் ஒரு சோசலிச சமூகம் கட்டியெழுப்பப்படுவதன் மூலமாக மட்டுமே நிறவெறி மற்றும் சமூக ஒடுக்குமுறையின் அத்தனை வடிவங்களது கொடுமையும் வெல்லப்பட முடியும். இந்தப் போராட்டத்தில் ஜெபர்சன் மற்றும் லிங்கன் இருவரது சொற்களும் செயல்களும் ஆதர்சமாய் தொடர்ந்து திகழும். அவர்களது வாழ்க்கைப் பணிகளில் இருந்த வரலாற்று முற்போக்கான அனைத்தும் நவீன சோசலிச இயக்கத்தில் தொடர்ந்து உயிர்வாழ்கிறது.

David North