அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைகிறது, ஆனால் மில்லியன் கணக்கானனோர் வேலையின்மையை அல்லது ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்

By Jerry White
7 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டிய அவசரத்தின் ஒரு பகுதியாக, பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறைகளும், சில்லறை மற்றும் பிற பெரும்பாலான குறைவூதிய வணிகங்களும் கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் 4.8 மில்லியன் வேலைகள் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்கள் குறித்து பதிலளிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப், “இது நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள மாதாந்தர வேலைவாய்ப்பாக உள்ளது,” என்றும், இது “நமது பொருளாதாரம் மீண்டும் அதிரடியாக வளர்ந்து வருவதையே” நிரூபிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் அவர், “பங்குச் சந்தை மிகச் சிறப்பாக செயல்படுகிறது” என்று பெருமை பீற்றிக் கொண்டதுடன், தனது நிர்வாகம் தொற்றுநோய்க்கு எதிராக “சிறப்பாக செயலாற்றி வருகிறது” என்றும் கூறினார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாற்று ரீதியாக 22.2 மில்லியன் வேலைகளை இழந்த பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் வேலைவாய்ப்பு 7.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஆனால், பெப்ரவரியில் இருந்து 14.7 மில்லியன் அல்லது 9.6 சதவிகித வேலையிழப்பை அமெரிக்கா முகங்கொடுத்துள்ளது.

2020 ஜூன் 23, செவ்வாய்க்கிழமை, இல்லினாய்ஸ் மாநிலத்திலுள்ள வினெட்கா பகுதியில் கொரொனா வைரஸ் காரணமாக திவாலான ஒரு சில்லறை விற்பனைக் கடையை ஒருவர் கடந்து செல்கிறார் (AP Photo/Nam Y.Huh)

மேலும், உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 11.1 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது என்ற புள்ளிவிபரம், ஜூன் மாத மத்தியில், அதாவது கடந்த இரண்டு வாரங்களாக கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவிகிதம் அதிகரித்ததன் காரணமாக குறைந்தது 19 மாநிலங்கள் வணிகங்களை மீண்டும் திறக்கும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அல்லது திரும்பப் பெறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. வியாழக்கிழமை, டெக்சாஸ், அரிஸோனா, கலிஃபோர்னியா மற்றும் ஃபுளோரிடா மாநிலங்களிலுள்ள இந்த நோயின் புதிய மையப்பகுதிகளின் நோய்தொற்றுக்கள் உட்பட 53,000 என புதிய தினசரி நோய்தொற்று எண்ணிக்கையை அமெரிக்கா எதிர்கொண்டது.

தொழிலாளர்துறை அமைச்சின் அறிக்கையின்படி, பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறையில் வேலைவாய்ப்பு 2.1 மில்லியனாக அதிகரித்துள்ளது, இது ஜூன் மாதத்தில் பண்ணைத்தொழில் அல்லாத வேலைவாய்ப்பின் அதிகரிப்பில் ஐந்தில் இரண்டு பங்கைக் குறிக்கிறது. மே மாதத்தில் நிகழ்ந்த இதையொத்த அதிகரிப்பை தொடர்ந்து, உணவு சேவைகள் மற்றும் குடிநீர் விநியோக துறைகளில் வேலைகள் கடந்த மாதம் 1.5 மில்லியன் அதிகரித்தது. இந்த நன்மைகள் இருந்தபோதும், பெப்ரவரி முதல் உணவு சேவைகள் மற்றும் குடிநீர் விநியோக துறைகளில் வேலைவாய்ப்பு 3.1 மில்லியன் குறைந்துள்ளது.

சில்லறை வணிகங்களை பொறுத்தவரை, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மொத்தம் 2.4 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டது, என்றாலும் மே மாதத்தில் 372,000 புதிய வேலைவாய்ப்புக்களின் அதிகரிப்பை கண்டதன் பின்னர், வேலைவாய்ப்பு எண்ணிக்கை 740,000 ஆக உயர்ந்துள்ளது. தொழில்துறையில் வேலைவாய்ப்பு, பெப்ரவரியில் இருந்ததை காட்டிலும் 1.3 மில்லியனுக்கு குறைவான நிகர எண்ணிக்கையை கொண்டுள்ளது.

உணவகங்கள், மதுபான அருந்தகங்கள் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட பல புதிய வேலைவாய்ப்புக்கள் அரசாங்கத்தின் கூலி வருவாய் பாதுகாப்புத் திட்டத்தை (Patcheck Protection Program) சார்ந்திருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இத்திட்டம் எட்டு வார கால ஊதியங்களையும் மற்றும் பிற செலவினங்களையும் ஈடுசெய்யும் வகையில் சிறு வணிகங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. இந்த கடன்களின் காலமுடிவு பணிநீக்கங்களின் புதிய அலைக்கு வழிவகுக்கும்.

கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு வைரஸ் நோய்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும், தொழிற்சாலைகளுக்குள் தொழிலாளர்களை மொத்தமாக மீண்டும் வேலை செய்ய அனுமதித்த காரணத்தால், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்த பாதிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களும் சேர்ந்து உற்பத்தி வேலைவாய்ப்பை 356,000 ஆக அதிகரிக்கச் செய்தது. என்றாலும், பெப்ரவரி முதல் உற்பத்தி வேலைவாய்ப்பு இன்னும் 757,000 குறைந்துள்ளது. கட்டுமான வேலைவாய்ப்புக்களைப் பொறுத்தவரை, மே மாதத்தில் 453,000 வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதத்திலும் 158,000 வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், கலிஃபோர்னியா, டெக்சாஸ் மற்றும் பிற மாநிலங்களில் பல கட்டுமான தளங்களில் கொரொனா வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதமானது, ஆவணமற்ற புலம்பெயர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், முழுநேர வேலை செய்ய விரும்பும் தொழிலாளர்களில் பகுதிநேர வேலையை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தொழிலாளர் தொகுப்பிலிருந்து வெளியேறிய தொழிலாளர்கள் ஆகியோரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பெப்ரவரியில் 5 மில்லியனாக இருந்து தற்போது சுமார் 8.2 மில்லியனாக அதிகரித்துள்ள இந்த தொழிலாளர்களை வேலையில்லாதவர்களாக அது கருதவில்லை, காரணம் அவர்கள் கடந்த நான்கு வாரங்களாக தீவிரமாக வேலை தேடவில்லை அல்லது வேலைக்கு வரவில்லை. மற்றொரு 9.1 மில்லியன் தொழிலாளர்கள் ஜூன் மாதத்தில் பகுதிநேர வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர், இது பெப்ரவரி மட்டத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு தனிப்பட்ட அறிக்கையில், தொழிலாளர் துறை அமைச்சகம் கடந்த வாரம் வேலையின்மை சலுகைகள் கோரி 1.43 மில்லியன் தொழிலாளர்கள் முதல் முறையாக விண்ணப்பங்களை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தது. கடந்த 15 வாரங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட 48 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை சலுகைகளை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதுடன், தொடர்ச்சியான வாரங்களில் சலுகைகளைப் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 59,000 ஆக அதிகரித்து மொத்தம் 19.29 மில்லியனாக உயர்ந்திருந்தது. கடந்த வாரம் இந்தியானாவில் 24,033 விண்ணப்பங்கள், வாஷிங்டனில் 8,110 விண்ணப்பங்கள் மற்றும் வேர்ஜினியாவில் 7,769 விண்ணப்பங்கள் வந்தது உட்பட, பல மாநிலங்களில் வேலையின்மை சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

“பொருளாதாரம் மீண்டும் அதிரடியாக வளர்ச்சி காண்கிறது,” என்ற ட்ரம்பின் கூற்று ஒருபுறம் இருந்தாலும், பெருநிறுவனங்கள் பாரிய பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் செலவு குறைப்புத் திட்டங்களை செயல்படுத்த தொற்றுநோயைப் பயன்படுத்தி வருகின்றன. அக்டோபர் 1 ஆம் திகதிக்கு முன்னர் தன்னிச்சையான பணிநீக்கங்களை செயல்படுத்தாமல் இருப்பதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, இருகட்சி CARES சட்ட விதிமுறைகளின் கீழ், 25 பில்லியன் டாலர் பிணையெடுப்பை அரசாங்கம் வழங்கியது. என்றாலும், அதன் பின்னர் பணிநீக்கங்களின் தொடர்ச்சியான அலை எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க எயர்லைன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை, 8,000 விமான பணிப்பெண்கள் உட்பட 20,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை அது கொண்டுள்ளது என்றும், விமான பயணத் திட்டங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வளவு பணியாளர்கள் தேவையில்லை என்றும் ஊழியர்களிடம் தெரிவித்தது. கடந்த மாதம், AA நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Doug Parker, நிறுவனம் “20 சதவிகித அளவிற்கு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களையே கொண்டிருக்கும்,” என்றும், “இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இன்னும் மிகத் திறமையாக செய்யக்கூடிய விடயங்களை எங்களால் கண்டறிய முடியும்” என்றும் முதலீட்டாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்டா எயர்லைன்ஸ் நிறுவனம் கடந்த வாரம் 2,558 விமானிகளுக்கு பணிநீக்க அறிவிப்புகளை விரைவில் அனுப்பவிருப்பதாக தனது விமானிகளிடம் தெரிவித்தது, இது அண்ணளவாக அதன் விமானிகளில் 20 சதவிகிதமாகும். யுனைடெட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் கிர்பி, வேலை நேரங்களும் ஊதியங்களும் குறைக்கப்படுவதை ஊழியர்கள் ஏற்றுக் கொள்வார்களானால் எயர்லைன் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர்க்க முடியும் என்று கடந்த மாதம் தெரிவித்தார். “யுனைடெட்டில் நாங்கள் எங்கள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து எங்கள் ஊதிய கட்டமைப்பை மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிறோம், மேலும் வெளிப்படையாக, ஊழியர் எவரும் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது, மேலும் எங்கள் முன்னணி ஊழியர்கள் எவரும் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது. அதற்கு பதிலாக, தன்னார்வ திட்டங்களை பயன்படுத்தி, குறிப்பாக, நாங்கள் நெருக்கடியைச் சந்திக்கும் காலம் வரை குறைவான மணி நேரங்களுக்கு வேலை செய்யும்படி ஊழியர்களிடம் கேட்க வேண்டும்.”

குறுகிய வேலை நேரம் மற்றும் குறைந்த ஊதியத்திற்கான கோரிக்கைகள் பொருளாதாரம் முழுவதும் செய்யப்படுகின்றன. “கொரொனா வைரஸ் மந்தநிலையின் வரையறுக்கப்பட்ட அம்சமாக, ஊதிய வெட்டுக்கள் மாறி வருகின்றன,” என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இந்த வாரம், பெரு மந்தநிலையை காட்டிலும் இந்த தொற்றுநோய் காலத்தில் இரு மடங்கிற்கு கூடுதலான அமெரிக்க தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டது.

University of Chicago’s Becker Friedman Institute க்கான தொழிலாளர் சந்தை பகுப்பாய்வில் ஈடுபட்ட பொருளாதார வல்லுநர்கள் Post பத்திரிகைக்கு வழங்கிய தரவுகளின்படி, குறைந்தது 4 மில்லியன் தனியார் துறை தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர், “ஊதிய வெட்டுக்கள் மிக வேகமாக பரவுகின்றன,” என்றும், “நிர்வாகப்பணி தொழில்களில், இது ஆழ்ந்த மந்தநிலையும் மெதுவான மீட்சியும் இருப்பதைக் குறிக்கிறது, ஏனென்றால் நிர்வாகப்பணி தொழிலாளர்கள் நிதி தொடர்பான வலியை பொதுவாக கடைசியாகவே உணர்கிறார்கள்,” என்றும் கட்டுரை குறிப்பிடுகிறது.

மணிநேர வேலை தொழிலாளர்கள் தங்களது வேலை நேரங்களும் ஊதியங்களும் குறைக்கப்படுவதை எதிர்கொண்டுள்ளனர். ஜெனரல் மோட்டார்ஸ், BuzzFeed News, ஆக்ஸிடெண்டல் பெட்ரோலியம், ஹெச்.சி.ஏ. ஹெல்த்கேர், மாஸ் ஜெனரல் பிரிகாம், டெஸ்லா மற்றும் சோதெபிஸ் போன்ற நிறுவனங்களும், அத்துடன் ஒஹியோ மற்றும் கலிஃபோர்னியா மாநிலங்களும், தொழிலாளர்கள் தங்களது வேலைகளை காப்பாற்றிக் கொள்ள 5 முதல் 50 சதவிகிதம் வரையிலான ஊதிய வெட்டுக்களை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளன. சராசரி ஊதிய குறைப்பு 10 சதவிகிதமாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், குறைந்த அளவிலான வேலையின்மை மட்டங்கள் “இறுக்கமான தொழிலாளர் சந்தைகளுக்கு” வழிவகுத்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஊதியங்களின் மிகப்பெரிய அதிகரிப்புக்கு வழிவகுத்ததாகவும் வணிகத் தலைவர்களும் பெருநிறுவன ஊடகங்களும் புகார் கூறின. ஊதிய அதிகரிப்பு, அதாவது 3.1 சதவிகித அதிகரிப்பு என்பது வெளிப்படையாக பணவீக்கத்திற்கு மேலானது என்பதுடன், 2008 முதல் மட்டுமல்லாமல், 1978 ஆம் ஆண்டிலிருந்து நிகழ்ந்து வரும் உண்மையான ஊதியங்களின் வீழ்ச்சியைக் கூட குறைக்கவில்லை என்றாலும், இந்த அற்பமான உயர்வு பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கால் ஏற்றுக்கொள்ள முடியாததாக கருதப்பட்டது.

பல மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதால் —அதிலும் கிட்டத்தட்ட 40 சதவிகித வேலை ஒருபோதும் திரும்ப கொண்டுவர முடியாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது— ஆளும் வர்க்கம் அதன் “இறுக்கமான தொழிலாளர் சந்தை” பிரச்சினையிலிருந்து விடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் மேலும் குறைக்க பரந்த வேலையின்மையை ஒரு சுத்தியலாகப் பயன்படுத்தலாம் என இப்போது அது நம்புகிறது.

அதே நேரத்தில், இன்னும் கொடிய கோவிட்-19 நோயின் உற்பத்தி மையங்களாக உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்வதற்கு வறுமையை வாய்ப்பாக பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.

புதனன்று, ட்ரம்பின் தொழிலாளர் துறை அமைச்சக செயலாளர் Eugene Scalia, வேலையில்லாத தொழிலாளர்கள் பெறும் சலுகைகளில் வாரத்திற்கு கூடுதலாக 600 டாலர் வழங்க வகை செய்யும் இந்த திட்டத்தை ஜூலை 25 இல் முடியும் வாரத்திற்கு பின்னர் நிர்வாகம் புதுப்பிக்காது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். “பொருளாதாரம் மூடப்பட்டு, அமெரிக்கர்களிடம் ‘நீங்கள் வேலைக்குச் செல்ல முடியாது’ என்று கூறப்படும் நிலையில் “கூடுதல் 600 டாலர்,” என்பது “அமெரிக்கர்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கியமான சலுகையாக இருந்தது என்பதே உண்மை.” மேலும், வணிகங்களை நாங்கள் மீண்டும் திறக்கும் நிலையில், அதை நாங்கள் தொடர விரும்புவோம் என்று நான் நினைக்கவில்லை,” என்று ஸ்காலியா கூறினார்.

அரை நூற்றாண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில் கூட, சலுகைகளை நீக்குவதானது வேலையற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வாராந்திர வருமானத்தில் 66 சதவிகிதம் குறைவதை குறிக்கிறது. இந்த அற்ப சமூக பாதுகாப்பு வலையை அகற்றுவதுடன், பாரிய பிணை எடுப்புக்களால் பயனடைந்த நிறுவனங்களின் மேலும் தியாகத்திற்கான கோரிக்கைகள் பெரும் சமூக மோதல்களை தூண்டும் என்பதுடன், அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் சோசலிச மாற்றத்தை கொண்டு வருவதற்கான பெரும் ஆதரவை வளர்த்தெடுக்கும்.

“வோல் ஸ்ட்ரீட் என்பது சமூகத்தில் உள்ள அனைத்து பணத்தையும் ஊறிஞ்சிக் கொள்ளும் ஒரு மிகப்பெரிய வெற்றிட சுத்திகரிப்பானாகும்,” என்று கோவிட்-19 நோய்தொற்று பரவுவது தொடர்பாக கடந்த வாரம் தனது தொழிற்சாலையில் நடந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற டெட்ராய்ட்டில் உள்ள ஒரு ஃபியட் கிறைஸ்லர் தொழிலாளி கூறினார். மேலும், “இது ஒரு வர்க்கப் போர்” என்றார்.