லிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர்! உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்!

By Niles Niemuth
7 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவை இங்கே கேட்கலாம்.

ஆப்ரகாம் லிங்கன் மற்றும் அடிமைத்தனத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு பொது நினைவுச்சின்னமான விடுதலைமீட்புக் குழுவை நீக்குவதென பாஸ்டன் கலை ஆணையத்தின் (Boston Art Commission - BAC) ஒருமனதான தீர்மானம், உள்நாட்டு போரின் முற்போக்கான மரபியம் மீதான நீண்டகால விளைவுகளை கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான தாக்குதலாகும்.

அதன் இடத்திலிருந்து நீக்கப்பட்டு "தற்காலிகமாக" பாதுகாப்பிடத்தில் வைக்கப்பட உள்ள அந்த பொது நினைவுச்சின்னம் வாஷிங்டன் டிசி இன் விடுதலைமீட்பு நினைவுச்சின்னத்தின் நகல்வடிவமாகும். கட்டுக்கள் உடைக்கப்பட்டு, கண்கள் வானத்தைப் பார்க்கும் நிலையில், விரல்கள் மடக்கிய வலது கை முன்னோக்கி நீண்டிருக்க, தரையிலிருந்து எழுந்து நிற்கும் முன்னாள் அடிமை ஒருவரை நோக்கி ஆப்ரகாம் லிங்கன் அவர் கரங்களை நீட்டியிருப்பதைப் போல அச்சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் அஸ்திவார கல்லில் "விடுதலை" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

லிங்கன் மீதும் மற்றும் உள்நாட்டு போரின் முற்போக்கான மரபியத்தின் மீதும் இதுபோன்றவொரு தாக்குதல், அடிமை அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக அதிகளவில் பங்களிப்பு செய்த நகரமான அமெரிக்க புரட்சியின் பிறப்பிடமாக இருந்த பாஸ்டனில் நடக்க முடிந்தது என்றால் அது ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் அவற்றின் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்களிடையே அவை ஊக்குவித்துள்ள ஆழ்ந்த வரலாற்று அறியாமைக்கு அடையாளமாக உள்ளது.

பாஸ்டன் சிலை விடுதலைமீட்பு நினைவுச்சின்னத்தின் நகல் வடிவமாகும், விடுதலைமீட்பு குழு என்றும் சுதந்திரமனிதனின் நினைவுச்சின்னம் என்றும் அழைக்கப்படும் இது வாஷிங்டன் டிசி, லிங்கன் பூங்காவில் 1876 இல் அமைக்கப்பட்டது. (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Steven Senne)

பொலிஸ் வன்முறை மற்றும் இனவாதத்திற்கு எதிராக ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர் எழுந்த இயக்கம் ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் செயல்பாட்டாளர்களால் வலதுசாரி பாதையில் தடம்புரளச் செய்யப்பட்டு, கூட்டாட்சி சிலைகளை நொருக்குவதற்கான நியாயமான கோரிக்கைகள், ஜோர்ஜ் வாஷிங்டன், தோமஸ் ஜெஃபர்சன், ஆப்ரகாம் லிங்கன், யூலிஸீஸ் எஸ். கிரான்ட் (Ulysses S. Grant) போன்றவர்களின் நினைவுச்சிலைகளையும், ரோபர்ட் கௌல்ட் ஷா (Robert Gould Shaw) மற்றும் ஹன்ஸ் கிறிஸ்டியான் ஹெக் (Hans Christian Heg) போன்ற அடிமை ஒழிப்புவாத ஒன்றிய அதிகாரிகளின் சிலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்த திருப்பி விடப்படுகின்றன.

பாஸ்டன் தீர்மானமானது, அதே போலியான காரணங்களின் அடித்தளத்தில் வாஷிங்டன் டிசி இல் உள்ள மூலமுதல்சிலையை நீக்குவதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது. அந்த நினைவுச்சின்னத்தை அகற்றுவதற்கான அவர்களின் விருப்பத்தைப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர், வாஷிங்டனுக்கான வாக்களிப்பு உரிமையில்லா காங்கிரஸ் பிரதிநிதியான ஜனநாயகக் கட்சியின் Eleanor Holmes Norton, லிங்கன் பூங்காவிலிருந்து அந்த "பிரச்சினைக்குரிய" சிலையை நீக்குவதை அங்கீகரித்து ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார்.

பாஸ்டன் கலைத்துறை ஆணையத்தின் அவமானகரமான அந்த வாக்கெடுப்பு, பொது விவாதத்திற்கு இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் நடந்தது. அந்த பொது விசாரணையில் இனவாத பொய்மைப்படுத்தல்களும் லிங்கன் மற்றும் நினைவுச்சின்னம் மீதான அவதூறுகளும் வெள்ளமெனத் திறந்து விடப்பட்டன.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க அமெரிக்க ஆய்வுகள் துறையின் விரிவுரையாளர் Anne Boelcskevy ஆணையத்திற்குக் கூறுகையில், அந்த சிலையைக் கடந்து செல்கையில் அவருக்கு "குமட்டல்" உணர்வு ஏற்படுவதாக கூறியதுடன், அடிமை ஒழிப்புவாதி பிரெடெரிக் டக்ளஸ் அந்த நினைவுச்சின்னத்தை விரும்பவில்லை என்ற பொய்யான வாதத்தையும் மீண்டும் வலியுறுத்தினார். Liberty Mutual Insurance இன் மக்கள்தொடர்பு சிறப்பு அதிகாரி Thalia Yunen கூறுகையில், அந்த விடுதலைமீட்பு நினைவுச்சின்னம் லிங்கனை "வெள்ளையின மீட்பராக" சித்தரிப்பதால் ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிய மக்கள் ஆகிய "சிறுபான்மையினருக்கு எதிரான ஆத்திரமூட்டல்" என்றார்.

பாஸ்டனில் தனிநபருக்கான பிரத்யேக பயிற்சியாளரும் ஒரு சிறுநிதிய இலாபமில்லா அமைப்பின் ஸ்தாபகருமான Greg Ux ஆல் படுமோசமான அவதூறுகள் உச்சரிக்கப்பட்டன. அவர் அறிவிக்கையில், லிங்கன் ஜனாதிபதியாக இருந்தபோது "அந்நாட்டின் உயர்மட்ட அலுவலகங்களில் இருந்து தீண்டாமை மற்றும் இனவாத கருத்துக்கள் வெளிப்பட்டன" என்பதால் லிங்கன் ஒரு இனவாதி, ஒரு நினைவுச்சின்னம் வைக்குமளவுக்கு மதிப்புடையவர் அல்ல என்றார்.

அந்த நினைவுச்சின்னத்தில் சுதந்திரமளிக்கப்படும் மனிதராக சித்தரிக்கப்பட்ட ஆர்சர் அலெக்சாண்டர் (Archer Alexander) இன் கொள்ளுப்பேரன் Cedric Turner உட்பட ஒரு சிலரின் கருத்துக்கள் மட்டுமே அந்த பொது விவாதத்தின் போது நினைவுச்சின்னத்திற்கு ஆதரவாக அனுமதிக்கப்பட்டன. அலெக்சாண்டரின் வாழ்க்கைவரலாறை எழுதிய Dorris Keeven-Franke உம் அந்த நினைவுச்சின்னத்திற்கு ஆதரவாக பேசினார். லிங்கனின் காலடியில் ஓர் அடிமை இருப்பதாக அந்த சிலை சித்தரிக்கவில்லை மாறாக அவர் "எதிர்காலத்தினை நோக்கி எழுவதை" சித்தரிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். MIT பட்டதாரியான Anne Khaminwa அந்த ஆணையத்திடம் கூறுகையில், அந்த நினைவுச்சின்னம் "விடுவிக்கப்பட்ட அடிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் தருணத்தை அருமையாக படம் பிடித்துள்ளது” என்றார்.

இத்தகைய முயற்சிகளுக்கு மத்தியிலும், இனவாதிகளே அந்நாளை ஆட்கொண்டிருந்தனர். அந்த நினைவுச்சினத்திற்கு எதிராக விளக்கமளித்தவர்களின் கருத்துக்கள் வெறுமனே அவர்களின் சொந்த கருத்துக்கள் இல்லை, மாறாக அதை அவமதிப்பதற்கான நீண்டதொரு பிரச்சாரத்தின் விளைவாக இருந்தன.

பாஸ்டன் பல்கலைக்கழக கலைத்துறை வரலாற்று முனைவர் பட்ட மாணவர் Ewa Matyczyk ஆல் பாஸ்டன் கலைத்துறை ஆணையத்திற்காக தயாரிக்கப்பட்ட "மாற்றுவதற்கான சந்தர்ப்பம்" என்றவொரு 2018 அறிக்கை குறிப்பிடுகையில், ஒரு "ஆபிரிக்க அமெரிக்க நபர் வெள்ளையின சமதரப்பினருக்கு அடிபணிந்து இருப்பதை" சித்தரிப்பதற்காக அந்த நினைவுச்சின்னத்தை "இனவாதத்திற்குரியது மற்றும் தகுதியற்றது" என்று அறிவித்தது. "அடிமை ஒழிப்பு இயக்கத்தையும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரேயொருவர் வசம் ஒப்படைத்து விட முடியும் என்பதை" அந்த சிலை "உணர்த்துகின்றது" என்றது வாதிட்டது.

விடுதலைமீட்பு நினைவுச்சின்னம் பொதுப்பார்வையிலிருந்து அகற்றப்பட வேண்டுமென விரும்புவர்களின் அகநிலையான உணர்வுகளுக்கு மத்தியில், அங்கே அந்த சிலை சம்பந்தமாக புறநிலைரீதியாக எந்த இனவாதமும் இல்லை. இது அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் முடிவை சித்தரிக்கிறது. உண்மையில், இது லிங்கனுக்கு ஒரு நியாயமான அஞ்சலியாகும்.

பகிரங்கமான அடிமை ஒழிப்புவாதியாக இல்லை என்றாலும், உள்நாட்டு போருக்கு முந்தைய லிங்கனின் அரசியல் முன்வரலாறு தலைச்சிறந்ததாக இருந்தது, 1860களுக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்தே அவர் அமெரிக்காவின் அடிமைத்தன ஒழிப்பு சக்திகளின் முன்னணி பேச்சாளராக பார்க்கப்பட்டார். அவர் ஜனாதிபதி பதவிக்கு வந்தபோது அது என்ன அர்த்தப்படுத்தியது என்பதை நிச்சயமாக தெற்கு அடிமையாட்சி முறை புரிந்து கொண்டு, வெள்ளை மாளிகைக்கு அவர் மேலுயர்ந்ததை பிரிவினைவாதத்தைக் கொண்டு விடையிறுத்தது. அடிமைத்தன ஒழிப்பில் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்ததற்காக வரலாற்றில் யாரேனும் ஒருவருக்கு மதிப்பளிக்க வேண்டுமானால், அவர் சந்தேகத்திற்கிடமின்றி லிங்கனாக உள்ளார்.

அதை விட, அந்த சிலை அலெக்சாண்டரை ஓர் இனவாத விதத்திலோ அல்லது கீழான மனிதராகவோ சித்தரிக்கவில்லை, மாறாக அடிமை ஒழிப்புவாத இலக்கியத்திலிருந்து பெறப்பட்ட கற்பனையுடன், அவரை ஒரு மனிதராகவே சித்தரித்தது. அந்த நினைவுச்சின்னம் குரூர ஒடுக்குமுறை வடிவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையும், அந்த நிகழ்வுபோக்கில் லிங்கன் இரண்டாம் அமெரிக்க புரட்சியின் தலைவராக மற்றும் சுதந்திர பிரகடனத்தின் ஆசிரியராக பாத்திரம் வகித்ததையும் கொண்டாடுவதாக உள்ளது.

முன்னாள் அடிமைகளின் சந்தாவிலிருந்து நிதி வழங்கப்பட்டு, இத்தாலியின் ஃபுளோரென்ஸில் வசித்த ஒரு பிரபல அமெரிக்க சிற்பி தோமஸ் பால் (Thomas Ball) உருவாக்கி இருந்த அந்த மூலமுதல் நினைவுச்சின்னம் அடிமை ஒழிப்புவாதி வில்லியம் க்ரீன்லீஸ்ப் எலியாட்டால் திறந்து வைக்கப்பட்டது. ஃபுளோரென்ஸில், கவிஞர்கள் ரோபர்ட் பிரௌனிங் மற்றும் எலிசபெத் பாரெட் பிரௌனிங்கின் அடிமை ஒழிப்புவாத கலைத்துறை வட்டாரத்திற்குள் பால் இருந்ததால், அவரை அடிமை ஒழிப்புவாத எழுத்துக்களின் உயரத்திற்கு இட்டுச்சென்றது.

எலியாட், பாலின் சிலைக்கூடத்திற்கு விஜயம் செய்தபோது லிங்கன் மற்றும் விடுவிக்கப்பட்ட அடிமைகளின் சிறிய மாதிரி வடிவத்தைப் பார்த்ததையும், அது நினைவுச்சின்னத்திற்கு பொருத்தமான ஒன்றாக கருதியதையும் எலியாட் நினைவுகூர்ந்தார். விடுவிக்கப்பட்ட அடிமையின் மாதிரி வடிவம் அலெக்சாண்டரால் செய்யப்பட்டது என்பதே எலியாட்டின் வலியுறுத்தலாக உள்ளது. லிங்கன் மற்றும் அலெக்சாண்டர் உருவங்களை யதார்த்தமான விரும்பத்தக்க விதத்தில், பால் இயற்கையான பாணியில் அதை செய்திருந்தார்.

பாஸ்டன் கலை ஆணையத்தில் விளக்கமளித்த பலரின் கருத்துக்களைப் போலவே, அந்த 1876 நினைவுச்சின்னத்தை திறந்துவைத்தபோது டக்ளசால் வழங்கப்பட்ட உரையும் தவறாக விளங்கப்பட்டிருந்தது அல்லது அந்த ஒப்புயர்வற்ற ஆபிரிக்க அமெரிக்க அடிமை ஒழிப்புவாதி அந்த நினைவுச்சின்னத்தை ஆட்சேபித்தார் என்றும் லிங்கனாலேயே பெரிதும் அது கண்டு கொள்ளப்படவில்லை என்பதையும் அறிவிப்பதாக இருந்தது. தவறாக பொருள்விளங்கப்படுத்தவும் டக்ளஸின் பேச்சு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. சுதந்திர கறுப்பின மக்களும் முன்னாள் அடிமைகளும், போரின் ஆரம்பத்தில் அடிமைத்தனத்தை ஒழிப்பதை நோக்கிய லிங்கனின் குறைபாடுகளை மற்றும் மெதுவாக நகர்ந்ததையெல்லாம் பார்த்தார்கள் என்பதை அவர் விவரித்தாலும், டக்ளஸின் உரை வரலாற்றில் லிங்கனின் முற்போக்கான மற்றும் நிலைபேறான பாத்திரத்தை புறநிலைரீதியாகவும் ஆழ்ந்த உணர்வுடன் அங்கீகரிப்பதாகவும் உள்ளது.

லிங்கனுக்கு எதிராக டக்ளஸைப் பயன்படுத்தும் முயற்சியின் உள்ளடக்கத்தில், அவரின் அர்பணிக்கப்பட்ட உரையிலிருந்து ஒரு நீண்ட பகுதியை மேற்கோளிடுவது மதிப்புடையதாக இருக்கும். விடுதலைமீட்பு நினைவுச்சின்னத்தின் முக்கியத்துவமாக அவர் என்ன பார்க்கிறார் என்பதைக் குறிப்பிட்டு அவர் தொடங்கினார். “இந்த குடியரசின் வாழ்வில் அண்மித்து முதல் நூற்றாண்டின் முடிவில், புதிதாக விடுதலை பெற்றுள்ள நாம், நம் இரத்தம் சிந்திப்பெற்ற சுதந்திரத்தை அனுபவித்து வரும் கறுப்பின மக்களாகிய நாம், ஒவ்வொரு வரியிலும், அம்சத்திலும், இந்த தலைமுறையினரின் நபர்கள் வாசிக்கும் வகையில், எதிர்வரவிருக்கும் தலைமுறைகள் வாசிக்கும் வகையில், அமெரிக்க தியாகிகளின் முதல் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் மாபெரும் படைப்புகள் மற்றும் மாட்சியமை பொருந்திய தன்மையின் சிலவற்றை இப்போது இங்கே பளிங்குக்கல் மற்றும் பித்தளைக் கலந்த ஒரு நிரந்தரமான நினைவுச்சின்னமாக அமைத்துள்ளோம், நிலைநிறுத்தி உள்ளோம்.”

பின்னர் அவர், லிங்கனிடம் முரண்பாடுகள் இருந்தபோதும் முன்னாள் அடிமைகள் அவரை ஏன் உயர்ந்த மட்டத்தில் மதித்தார்கள் என்பதை விளக்கினார்:

அவரைச் சுற்றியிருந்த குழப்பங்கள் மற்றும் தெளிவின்மைக்கு மத்தியில்; கொந்தளிப்பு, அவசரம், அந்நேரத்தின் குழப்பத்திற்கு மத்தியில், நம்மால் ஆப்ரகாம் லிங்கனைக் குறித்து ஒரு முழுமையான நோக்கை எடுக்க முடிகிறது, அவரின் நிலைப்பாட்டிற்கான சூழ்நிலைமைகளுக்கு பகுத்தறிவார்ந்த விட்டுக்கொடுப்பை வழங்க முடிகிறது. நாம் அவரை, அவற்றின் தொடர்புகளிலிருந்து பிரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட காரணிகளால் அல்லாது பெரும்பாலும் தனது பொறுமைக்கு முயன்ற நடுநிலை பிறழ்ந்த மற்றும் சலிப்பூட்டும் பிரதிநிதிகளுக்குரிய தவறான வலியுறுத்தல்கள் மூலமாக அல்ல, மாபெரும் சம்பவங்களது கடுமையான தர்க்கத்தின் வெளிச்சத்தில் பார்த்தோம், மதிப்பிட்டோம், அந்த புனிதமான கண்ணோட்டம் நமது தரப்பை கூர்மையாக்குகிறது, நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை செதுக்கினோம், நமது மீட்கும் இந்நேரத்திற்குரிய மனிதரை ஏதோ விதத்தில் ஆப்ரகாம் லிங்கனின் உருவில் நாம் கண்டு கொண்டோம் என்ற முடிவுக்கு நாம் வந்தோம். முக்கிய சந்தர்ப்பங்களில் என்ன மாதிரியான மொழியை அவர் பயன்படுத்தினார் என்பது நமக்கு விடயமாக இருக்கவில்லை; அவரை நாம் முழுமையாக அறிந்த போது, அவர் இயக்கங்களில் அவர் மெதுவாக அல்லது திசை மாறி இருக்கிறாரா என்பது நமக்கு பெரிய விடயமாக இருக்கவில்லை; ஒரு தலைச்சிறந்த இயக்கத்தின் தலைவராக ஆப்ரகாம் லிங்கன் விளங்கினார், இயற்கையின் போக்கில், அமெரிக்காவில் அடிமைத்தனம் முற்றிலுமாக எப்போதைக்கும் அழிக்கப்படும் வரையில் செல்ல வேண்டும் என்ற அந்த இயக்கத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் மற்றும் நேர்மையான அனுதாபம் கொண்டிருந்தார் என்பதே நமக்கு போதுமானதாக இருந்தது.

பின்னர் உரையில் அவர் குறிப்பிட்டார்:

ஆப்ரகாம் லிங்கன் அவரது நிர்வாகத்தின் போது கண்டனத்திற்கு உள்ளானதை விட, பொதுவாழ்வில் இருந்த தலைச்சிறந்த வெகுசில மனிதர்கள்தான், கடுமையான கண்டனத்திற்கு பலியாகி இருக்கிறார்கள். அவர் பெரும்பாலும் அவரது நண்பர்களின் வீடுகளில் கூட காயப்படுத்தப்பட்டார். பழிச்சொற்கள் கனமாகவும் வேகமாகவும் உள்ளுக்குள் இருந்தும், வெளியில் இருந்தும், எதிர்தரப்புகளில் இருந்தும் அவரை நோக்கி வந்தன. அவர் அடிமை ஒழிப்புவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்; அவர் அடிமை-உடைமையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்; என்ன விலை கொடுத்தாவது அமைதியை ஏற்படுத்த விரும்பியவர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார்; அவர் அந்தப் போரை மிகவும் தீவிரமாக குற்றஞ்சாட்டியவர்களால் படுகொலை செய்யப்பட்டார்; அந்த போரை அடிமை ஒழிப்பு போராக அவர் ஆக்கக்கூடாது என்பதற்காக அவர் படுகொலை செய்யப்பட்டார்; அந்த போரை அடிமை ஒழிப்பு போராக ஆக்கியதற்காக அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது மாற்றத்தைப் பாருங்கள்: இப்போதைய இந்த தருணத்தின் நீதி, அவருக்கு முன்பிருந்த பணியின் அளப்பரிய முக்கியத்துவத்தை அளவிட்டு, முடிவின் அவசியமான அர்த்தத்தைக் கருத்தில் கொண்டு, ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையில் ஆய்வு செய்து, அவரை எல்லோரையும் விட உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது, எல்லையற்ற மெய்யறிவு ஆபிரகாம் லிங்கனை விட எந்தவொரு மனிதனையும் தனது பணிக்கு மிகவும் பொருத்தமாக உலகிற்கு அனுப்பவில்லை.

அமெரிக்காவிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டிய தனிப்பட்ட அடிமைத்தனத்தில் அவரின் இறுதி வெற்றியின் மூலமாகவே லிங்கனை மதிப்பிட வேண்டியவது அவசியம் என்பதை டக்ளஸ் புரிந்து கொண்டார், அந்தவொரு உலக வரலாற்று பணியை அவர் உறுதியாக முன்னெடுத்திருந்தார் என்பதுடன் அதை அவர் சதிக் கும்பலின் தோல்வியுடன் முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக பார்த்தார். தெற்குடன் அவர் ஒரு சமரசம் கோர வேண்டுமென்ற பலரின் முறையீடுகளை லிங்கன் மறுத்தார், அது அடிமைத்தனத்தை தொடர்வதற்கான அதன் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கும். அவர் அடிமைகளின் எஜமானர்களுக்கு முன்னால் தலைவணங்க மறுத்தார். 14 வது மற்றும் 15 வது அரசியலமைப்பு சாசனங்களைக் குறிப்பிடாமல் விட்டாலும் கூட, குடியுரிமையை நீடித்து வாக்குரிமை அளித்த 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு லிங்கன் அரசியல் ஆசானாக இருந்தார்.

ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்கின் 2012 ஆம் ஆண்டு திரைப்படமான லிங்கன் இல் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருந்ததைப் போல, அந்த ஜனாதிபதி போர் நடந்து கொண்டிருந்த போதே கூட அடிமைத்தனத்தை ஒரேயடியாக முற்றிலுமாக ஒழிக்கும் 13 வது அரசியலமைப்பு சாசனத்தைப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றுவதற்காக அவரின் முழு அரசியல் பலத்தையும் புத்திக் கூர்மையையும் பயன்படுத்தினார். பொதுமக்களுக்கான அவரின் உரையில், போர் நடைமுறையளவில் முடிவுக்கு வருவதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இனவாதியும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாளரான நடிகர் ஜோன் வில்கெஸ் பூத்தால் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்னரும் லிங்கன் அப்போது விடுவிக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு ஆதரவாக பேசினார்.

இந்த காரணத்திற்காக தான், லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஒப்புயர்வற்ற அரசியல் பிரமுகராக விளங்குகிறார். இது எதுவும் அறியாதவர்கள் லிங்கன் மீது காறி உமிழ்கிறார்கள் —அவர்கள் அமெரிக்காவில் அடிமைத்தனம் அழிக்கப்பட்டத்தில் அவர் வகித்த அடிப்படை பாத்திரத்தை மறுக்கிறார்கள் என்பதுடன் எல்லா காலத்திற்கும் அடிமைத்தனத்திற்கு மரண ஒலியை ஒலித்த ஆவணமாக விடுதலைமீட்பு பிரகடனத்தின் அதிமுக்கியத்துவத்தை நிராகரிக்கிறார்கள்— அவர்கள் படுகொலையாளர் பூத்தின் தரப்பிலும் மற்றும் அரசியல் பிற்போக்குத்தன சக்திகளின் தரப்பில் தங்களைக் காண்கிறார்கள்.

விக்டோரியா பைனம், கிளேபோர்ன் கார்சன், ரிச்சர்ட் கார்வார்டைன், ஜேம்ஸ் ஓக்ஸ் மற்றும் கோர்டன் வூட் என ஐந்து தலைச்சிறந்த வரலாற்றாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவதன் மூலமாக ஜூலை 4 இல் சுதந்திர பிரகடனத்தின் 244 வது நினைவாண்டை உலக சோசலிச வலைத் தளம் கொண்டாட உள்ளது. அவர்கள் அமெரிக்க புரட்சிகளை அவற்றின் காலங்களில் வைத்து அத்துடன் அவற்றின் தேசிய மற்றும் உலகளாவிய விளைவுகளின் உள்ளடக்கத்தில் வைத்து மதிப்பீடு செய்வார்கள். இந்த முக்கிய நிகழ்வில் எல்லா வாசகர்களும் கலந்து கொள்ள பதிவு செய்யுமாறு நாம் வலியுறுத்துகிறோம்.