தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன

By Peter Symonds
8 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அப்பட்டமாக மற்றும் ஆத்திரமூட்டும் விதத்தில் இராணுவ பலத்தைக் காட்டும் நடவடிக்கையாக, தென் சீனக் கடலில் சீனக் கடற்படையின் பயிற்சிகள் நடந்து வரும் அதே நேரத்தில் அமெரிக்க கடற்படை இரண்டு மிகப்பெரிய அணுஆயுதமேந்திய விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் அதே பிரதேசத்தில் போர் ஒத்திகைகள் மேற்கொண்டு வருகிறது.

USS ரொனால்ட் ரீகனும் மற்றும் USS நிமிட்ஸூம் துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் தாங்கிய விரைவு போர்க்கப்பல்கள் (guided-missile cruisers) மற்றும் துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் தாங்கிய நடுத்தர அழிப்புப் போர்க்கப்பல்கள் (guided-missile destroyers) உள்ளடங்கலாக அவற்றின் தாக்கும் குழுக்களுடன் சேர்ந்து தென் சீனக் கடலில் நுழைந்தன. நிலையான-இறக்கை கொண்ட போர்விமானங்கள் (fixed-wing warplanes) மற்றும் ஹெலிகாப்டர்களுடன் சேர்ந்து 10,000 க்கும் அதிகமான கடற்படை சிப்பாய்கள் அந்த விமானந்தாங்கி போர்க்கப்பல்களில் இருந்தனர்.

வழமையானது என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, “ஈடிணையற்ற இலகுத்தன்மை, தாங்கும் ஆற்றல், திசையமைவு மாறும்வீதம், போர் நடத்தும் சூழலில் எவ்விடத்திற்குமான ஆயுதபலம்" ஆகியவற்றை கட்டமைப்பதை நோக்கமாக கொண்ட "உயர்மட்ட ஒருங்கிணைந்த பயிற்சிகள்" அந்த போர் ஒத்திகைகளில் சம்பந்தப்பட்டிருந்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போர் விமானங்களைப் பயன்படுத்தும் தாக்கும் நடவடிக்கைகளும் மற்றும் எந்தவொரு சீன எதிர்தாக்குதலில் இருந்தும் கப்பல்களைப் பாதுகாக்கவும் இரண்டும் சம்பந்தப்பட்ட சீனாவுடனான ஒரு மோதலில் கடற்படையின் ஆற்றல்களைப் பரிசோதிப்பதே நோக்கமாக இருந்தது.

“நிஜமாகவே நாங்கள் அதிஉயர் வேகத்தில் செயல்படுத்தி, எப்போதும் நாங்கள் மேற்கொள்ளும் குறைந்த தூர பயிற்சிகளை விட அதிஉயர் போர் ஆற்றலை ஒத்திகை செய்து வருகிறோம்,” என்று USS ரொனால்ட் ரீகன் தாக்கும்-படையின் தளபதி அட்மிரல் George Wikoff தெரிவித்தார். “நாங்கள் நாள் முழுவதும் பறந்து கொண்டிருந்தோம், 24 மணி நேரத்தில் ஒரு நாளில் நூற்றுக் கணக்கான தரம் சுற்றிப் பறந்தோம்,” என்றார்.

ஜூலை 4 இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் Wikoff குறிப்பிடுகையில், அவரின் தாக்குதல் குழு தென் சீனக் கடலில் "ஈடிணையற்ற கடற்படை பலத்துடன்" சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருவதாக பெருமைப்பீற்றினார். அவ்விரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் குழுக்களும் "உலகில் மிகவும் ஆற்றலும் வேகமும் கொண்ட சண்டையிடும் படையை" உருவாக்கி இருப்பதாக அவர் அறிவித்தார்.

இந்த கடைசி செயல்பாடு, மேற்கு பசிபிக்கில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் குழுக்களை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படை நடத்திய போர் ஒத்திகைகளில், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆறாவது முறையாக மட்டுமே நடந்துள்ளது. தென் சீனக் கடலின் இந்த ஒத்திகைகளுக்கு முன்னர் கடந்த வாரம் மூன்றாவதொரு விமானந்தாங்கி போர்க்கப்பலும் —USS ரூஸ்வெல்ட்— மற்றும் அதன் தாக்கும் குழுக்களும் பிலிப்பைன்ஸ் கடலின் அண்டைப்பகுதியில் இதே போன்ற ஒத்திகைகளை நடத்தி இருந்தன.

“கடற்போக்குவரத்து சுதந்திரத்தை" உறுதிப்படுத்துவதே இந்த கடற்படை பயிற்சிகளுக்கான சாக்குபோக்கு காரணமாக இருந்தது — இதே சாக்குபோக்கு காரணம் தான் தென் சீனக் கடலில் தீவிரமடைந்து வரும் அமெரிக்க கடற்படை ஆத்திரமூட்டல்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் "கடற்போக்குவரத்து சுதந்திரம்" என்றழைக்கப்படுவது உள்ளடங்கும், இதில் அமெரிக்க போர்க்கப்பல்கள் —ஒரு மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்தும் விதத்தில்— வேண்டுமென்றே சீனா உரிமைகோரும் கடல் எல்லைகளுக்குள்ளும் அதைச் சுற்றிய பகுதிகளில் உள்ள தீவுக்குன்றுகளுக்குள்ளும் ஊடுருவுகின்றன.

ஏப்ரலில், அமெரிக்க கடற்படை இதுபோன்ற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது பின்னர் சில நாட்களுக்குப் பின்னர் மே 7 இல் மற்றொரு நடவடிக்கை மேற்கொண்டது. மே 28 இல், துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் தாங்கிய நடுத்தர அழிப்புப் போர்க்கப்பல் USS முஸ்டின் தசாப்தங்களாக சீனா ஆக்கிரமித்திருந்த பாராசெல் குழுவின் வூடி தீவின் 12 கடல் மைல் தூர எல்லை வரம்புக்குள் ஊடுருவியது.

தென் சீனக் கடலின் போர் ஒத்திகைகளில் அமெரிக்கா அதன் கூட்டாளிகளையும் ஈடுபடுத்தி வருகிறது, இதில் ஏப்ரலில் ஆஸ்திரேலிய கடற்படை உடனான நிஜமான குண்டுகளுடன் நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் ஜூனில் ஜப்பானிய கடற்படையுடன் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளும் உள்ளடங்கும். ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக நான்குமுனை இராணுவக் கூட்டணி என்றழைக்கபடுவதை ஸ்தாபிக்கவும் வாஷிங்டன் முயன்று வருகிறது.

இந்த வாரயிறுதி நடவடிக்கை "எந்தவித அரசியல் அல்லது உலக நிகழ்வுகளுக்கும் விடையிறுப்பாக நடத்தப்படவில்லை" என்றும், அவ்விதத்தில் சீனாவுக்கு எதிராக திரும்பியதல்ல என்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைப் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபத்தமாக வாதிட்டார். ஆனால் தென் சீனக் கடலில் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள பாராசெல் தீவுகளுக்கு அருகே ஜூலை 1-5 வரை நடத்தப்பட்ட சீன கடற்படை ஒத்திகைகளைக் கண்டித்து பென்டகன் கடந்த வாரம் ஓர் அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை சீன ஒத்திகையை "சட்டவிரோதமாக கடல்வழி உரிமைகோரல்களை வலியுறுத்துவதற்காகவும் மற்றும் தென் சீனக் கடலில் அதன் தென்கிழக்கு ஆசிய அண்டைநாடுகளை அனுகூலம் இழக்குமாறு செய்யவும் PRC நடவடிக்கைகளின் நீண்ட பல நடவடிக்கைகளில் சமீபத்தியது" என்று முத்திரை குத்தியது. “ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியம்" மற்றும் அப்பிராந்தியத்தில் எல்லா தேசங்களின் இறையாண்மை மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தி வைப்பதுமே அமெரிக்காவின் குறிக்கோள் என்றது குறிப்பிட்டது.

யதார்த்தத்தில், தென் சீனக் கடலில் அமெரிக்க தலையீடானது, சீனாவை இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் அடிபணிய வைப்பதை நோக்கமாக கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் ஆக்ரோஷமான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" ஒரு அம்சமாகும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக ஹிலாரி கிளிண்டன் தென் சீனக் கடலில் அமெரிக்கா "தேசிய நலன்களை" கொண்டுள்ளது என்று அறிவித்ததன் மூலமாக, சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே சிறியளவிலான பிராந்திய எல்லை பிரச்சினைகளாக இருந்தவற்றை ஓர் அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக மாற்றினார்.

சீனாவின் கடல்வழி உரிமைகோரல்களை "சட்டவிரோதமானது" என்று அமெரிக்கா அறிவிப்பது முற்றிலும் பாசாங்குத்தனமானது ஏனென்றால் வாஷிங்டன் ஒருபோதும் கடல்வழி சட்டம் மீதான ஐ.நா. தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை. எந்தவொரு கடல்எல்லை பிரச்சினைகளிலும் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரிய நாடாக இல்லாத அமெரிக்கா, ஐ.நா. சபையின் பொதுதீர்ப்புக்கான நிரந்தர நீதிமன்றத்தில் சீனாவின் உரிமைகோரல்களை சவால்விடுக்க பிலிப்பைன்ஸை ஊக்குவித்து ஆதரித்தது. அந்த நீதிமன்றம் தென் சீனக் கடலில் நீண்டகாலமாக சீனாவின் வரலாற்று உரிமைகோரல்களை நிராகரித்து 2016 இல் ஒரு மிகப்பெரிய அரசியல் முடிவை அறிவித்தது.

யதார்த்தத்தில், தென் சீனக் கடலிலும் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு அருகாமையில் உள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளுக்கும் சீனாவின் அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாறாக அவை போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன. போர்கப்பல்களில் இருந்தும் அப்பிராந்தியத்தில் உள்ள இராணுவத் தளங்களில் இருந்தும் பாரியளவில் வான்வழி ஏவுகணை தாக்குதல்கள் அத்துடன் சேர்ந்து சீனாவை அடிபணிந்து கெஞ்ச வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கடற்படை முற்றுகை ஆகியவற்றை தொடங்குவது தான் சீனாவுடனான மோதலுக்கான அமெரிக்க மூலோபாயமாக உள்ளது. தென் சீனக் கடல் தென் கிழக்கு சீனாவின் ஹைனன் தீவில் உள்ள முக்கிய சீன நீர்மூழ்கிக் கப்பல் தளங்களுக்கு பக்கவாட்டில் உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடன் நுண்மையான பல பிரச்சினைகளில் அதன் மோதலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இந்த அமெரிக்க இராணுவ ஒத்திகைகள் நடக்கின்றன. கோவிட்-19 தொற்றுநோய்க்கு பெய்ஜிங் மீது பழிசுமத்துவது, ஹாங்காங் சம்பந்தமாக சீனாவின் புதிய பாதுகாப்பு சட்டத்தின் மீது அபராதங்களைத் திணிப்பது, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான எல்லை மோதலைக் கிளறிவிடுவது, சீன தொலைதொடர்பு பெருநிறுவனம் ஹவாய் மீது தடையாணைகளைத் திணிப்பது ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை MSNBC உடனான பேட்டியில், வெள்ளை மாளிகை வர்த்தகத்துறை ஆலோசகர் பீட்டர் நவார்ரோ கோவிட்-19 ஆல் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் மரண எண்ணிக்கைக்கு பெய்ஜிங் தான் பொறுப்பு என்று அறிவித்து அதன் மீது ஒரு கொடிய தாக்குதலைத் தொடுத்தார். ஒரு துணுக்கு ஆதாரமும் இல்லாமல், சீனா அந்த வைரஸை "ஆயுதமாக்கி" கொண்டுள்ளதாக அவர் அறிவித்தார்: “அவர்கள் வைரஸை மறைத்திருந்தார்கள். அந்த வைரஸ் குறித்து நமக்கு தெரிவதற்கு முன்னரே அவர்கள் நூறாயிரக் கணக்கான சீனர்களை இங்கே அனுப்பி அந்த வைரஸை பரப்பி விட்டார்கள்,” என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் மிகப்பெரும் பொய்கள் இந்த தொற்றுநோயை அது கையாள்வதன் மீதிருக்கும் மக்கள் கோபத்தை ஒரு வெளிநாட்டு எதிரியை நோக்கி திசைதிருப்புவதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. சீனா மீதான நவார்ரோவின் தாக்குதல், கடந்த தசாப்தத்திலிருந்து அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் இராணுவ மோதல் மற்றும் பொருளாதார போருக்காக வேகமாக தீவிரப்படுத்தப்பட்டு வரும் தயாரிப்புகளின் பாகமாக உள்ளது. ஒபாமாவின் கீழ் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயை அடுத்து, ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவிலும் உலகளவிலும் அதன் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு சீனாவை தலையாய தடையாக கருதுகிறது. இந்த தொற்றுநோய் அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியைச் சித்திரம் போல எடுத்துக்காட்டி உள்ளது, இதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எல்லா முகப்பில் இருந்தும் சீனா உடனான அதன் மோதலை அதிகரிப்பதன் மூலமாக விடையிறுத்து வருகிறது.