இலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்

By Arun Kumar
8 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு சொந்தமான நிலக்கரி இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனத்தில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நேற்று மூன்று நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். சில அறிக்கைகளின்படி 500,000 க்கும் மேற்பட்ட முழுநேர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

எந்தவொரு வேலைநிறுத்தமும் சட்டவிரோதமாக கருதப்படும் என்ற CIL தலைவர் பிரமோத் அகர்வால் எச்சரிக்கையை வெளிப்படையாக மீறி சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைத் தொடங்கினர். நிலக்கரித் தொழில் ஒரு பொதுப் பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் “வேலை செய்யவில்லை என்றால் -ஊதியம் இல்லை மற்றும் பிற ஒழுக்க நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும்” என்று ஜூன் 29 அன்று அவர் அறிவித்தார்.

வேலைநிறுத்தம் செய்யும் இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் (Credit: Twitter/ @prasenjitberaES)

இந்த வேலைநிறுத்தத்தால் 4 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தின் கிழக்கு நிலக்கரி வயல்களில் ஜான்ஜ்ரா பகுதியில் அதிகாரிகள் பலமாக பதிலிறுத்துள்ளனர், குறைந்தது ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொழிற்சங்க செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் செயல்படும் CIL இன் தென்கிழக்கு நிலக்கரி வயல் துணை நிறுவனத்தில் பணியாற்ற நிர்வாகம் வெளி நபர்களை அழைத்தது, ஒரு “அசாதாரண சூழ்நிலையை” உருவாக்குகிறது, இதற்கு முன் இப்படி எப்போதுமே நடந்தது இல்லை.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சரிவாக மாற்றப்பட்ட ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மோடி அரசாங்கம், முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சீர்திருத்தங்களில் "மிகப்பெருமளவிலான பாய்ச்சலை" அறிவித்தது, இதில் நிலக்கரித் தொழிலை தனியார் முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிடுவது மற்றும் CIL இன் சில பகுதிகளை தனியார்மயமாக்குவதும் உள்ளடங்கும்.

வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் இறுதி முயற்சியில், நிலக்கரி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, நிலக்கரி செயலாளர் அனில் குமார் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் புதன்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினர். இருப்பினும், எந்தவொரு சலுகையும் வழங்க அரசாங்கம் மறுத்ததால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வணிகரீதியான சுரங்க வேலைகளுக்கான திட்டங்களை திரும்பப் பெறுதல் மற்றும் நிலக்கரித் தொழிலில் அந்நிய நேரடி முதலீடு செய்வதை திரும்ப பெறுதல் மற்றும் மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் லிமிடெட் (CMPDIL) ஆகியவற்றை CIL இலிருந்து பிரிக்கும் முடிவை இரத்து செய்வது ஆகியவை வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். CIL மற்றும் இந்திய மற்றும் தெலுங்கானா மாநில அரசாங்கங்களுக்கு கூட்டாக சொந்தமான மற்றொரு பொதுத்துறை-நிலக்கரி நிறுவனமான சிங்காரேனி கோலியரீஸ் கம்பெனி லிமிடெட் ((SCCL) நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் வேலைநிறுத்தக்காரர்கள் கோருகின்றனர்.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த முக்கிய தொழிற்சங்கங்களில் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) ஆகியவை அடங்கும், அவை இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) முறையே இணைக்கப்பட்டுள்ளன. இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருக்கும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐ.என்.டி.யூ.சி), மற்றும் ஹிந்த் மஜ்தூர் சபா (எச்.எம்.எஸ்) ஆகியவையும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.

இந்த தொழிற்சங்கங்கள் தனியார்மயமாக்கலுக்கும் மோடி அரசாங்கத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியைத் திரட்டும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்களின் முக்கிய அக்கறை என்னவென்றால், மோடியின் கடுமையான அலட்சியத்தால் தொற்றுநோயின் பேரழிவு தரும் உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக தாக்கங்களினால் மேலும் தூண்டப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக பெருகிவரும் எதிர்ப்பின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதும், அதை காங்கிரஸ் மற்றும் பிற வலதுசாரி எதிர்க்கட்சிகளுடன் இணைப்பதும் ஆகும்.

தொற்றுநோய் வெடித்தபின் இந்திய தொழிலாளர்கள் மேற்கொண்ட முதல் பெரிய தொழில்துறை நடவடிக்கை நிலக்கரி வேலைநிறுத்தம் ஆகும். நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள கோபம் மிகவும் பரவலாக உள்ளது, இது மோடியின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியுடன் (பிஜேபி) இணைந்திருக்கும் பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) கூட வேலைநிறுத்த அழைப்பில் சேர நிர்பந்திக்கப்பட்டது.

சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் போர்க்குணத்தைத் தணிக்கும் முயற்சியாக, தொழிற்சங்கங்கள் ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. ஆயினும், ஜூன் 11 அன்று வணிகரீதியான சுரங்க வேலைகளுக்கு அனுமதி வழங்கி நாடு முழுவதும் 41 நிலக்கரித் தொகுதிகளை ஏலம் விடுவதற்கான முடிவை மோடி அரசு அறிவித்து, ஏலம் எடுக்கும் பணியைத் ஜூன் 18 இல் தொடங்கியது. அதே நாளில், தொழிற்சங்கங்கள் மூன்று நாள் வேலைநிறுத்த அறைகூவல் விடுத்தன.

CIL தலைவர் அகர்வால் தொழிலாளர்களை ஏமாற்ற முயன்றார், அரசாங்கத்தின் நடவடிக்கையால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி, "CIL நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி தொகுதி ஏலம் விடப்படாது." CIL க்கு தற்போது "463 நிலக்கரி தொகுதிகள் உள்ளன, அவை எதிர்காலத்தில் மின்சார நிலக்கரியின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்," என்று அவர் கூறினார். அவரது கூற்றுகளுக்கு மாறாக, நிலக்கரித் துறையில் தனியார் மூலதனத்தை அனுமதிப்பது தவிர்க்க முடியாமல் CIL இல் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளில் அழுத்தத்தை தீவிரப்படுத்தும்.

தனியார்மயமாக்கல் உந்துதலுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை எதிர்த்து பிற்போக்குத்தனமான இந்திய தேசியவாதத்தைத் தூண்டிவிடும் முயற்சியில், நிலக்கரித் துறையில் வணிக சுரங்க மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை ஒரு "சுய – சார்பு” கொண்ட இந்தியாவை வளர்ப்பதையும், நிலக்கரி இறக்குமதியை வெகுவாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மோடி அரசு கூறியது. அவர் ஏலத்தை ஆரம்பித்தபோது, "நாங்கள் இன்று வணிகரீதியான நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை தொடங்கவில்லை, ஆனால் பல தசாப்தங்களாக முடக்கத்திலிருந்த நிலக்கரி துறையை அதிலிருந்து வெளியே கொண்டு வருகிறோம்" என்று மோடி கூறியதாக The Print வலைத் தளம் அறிவித்தது.

நிலக்கரி இந்தியாவின் தினசரி உற்பத்தி சுமார் 2 மில்லியன் டன் நிலக்கரி, இது நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியா ஆண்டுதோறும் 250 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது

மோடி அரசாங்கத்தின் துரிதப்படுத்தப்பட்ட தனியார்மயமாக்கல் உந்துதலில் இருந்து லாபம் பெற கார்ப்பரேட் ஆட்டக்காரகள் ஒருவருக்கொருவர் போட்டியாக உற்சாக வெள்ளத்தில் இறங்கியுள்ளனர் என்று பிசினஸ் டுடே தெரிவித்துள்ளது. "நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பொருளாதார நிவாரணப் பொதியின் நான்காவது பகுதியின் (அது மே நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது) முக்கிய பயனாளிகள் அதானி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழு, வேதாந்தா மற்றும் கல்யாணி போன்ற வணிகக் குழுக்களாக இருக்கும், டாடா பவர், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஜி.வி.கே, ஹிண்டல்கோ மற்றும் ஜி.எம்.ஆர். "அதானி குழுமம், நிலக்கரி, தாதுக்கள், பாதுகாப்பு, மின் விநியோகம் மற்றும் விமான நிலையங்கள் போன்ற துறைகளில் வரும் புதிய வாய்ப்புகளைத் எடுத்துக் கொள்ள முடியும், அதே நேரத்தில் வேதாந்தா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டல்கோ நிலக்கரி மற்றும் தாதுக்கள் சுரங்க திட்டங்களில் பணம் சம்பாதிக்க முடியும்.. ”

1991 முதல் 2008 வரை, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை வலதுசாரி தேசிய அரசாங்கங்களை ஆதரித்தன, அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை, தனியார்மயமாக்கல், கட்டுப்பாடு நீக்கம் மற்றும் பிற "சந்தை சார்பு" கொள்கைகளை நடைமுறைப்படுத்தின, அதே நேரத்தில் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்தன. மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை ஆட்சி செய்தன, அப்போது அந்த மாநிலங்களில் இதேபோல் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை அமுல்படுத்தின.

தனியார்மயமாக்கலின் எதிர்ப்பாளராக காங்கிரஸை முன்நிறுத்தும் முயற்சியில், ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திர சேகர் துபே கூறுகையில், “நிலக்கரி தொழிலாளர்கள் தனியார் உரிமையாளர்களின் கீழ் நிலக்கரி சுரங்களில் நிறைய கஷ்டங்களை அனுபவித்த காலத்தை நினைவில் கொள்ளுங்கள், எழுபதுகளின் ஆரம்பத்தில் இந்திரா காந்தி அரசாங்கம் நிலக்கரி துறையை தேசியமயமாக்கியது அவர்களை துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத் தான்." டெலிகிராப் இந்தியா துபேயை மேற்கோள் காட்டி, "அரை நூற்றாண்டுக்குப் பிறகு எங்கள் தொழிலாளர்களை அதே நிலைக்குத் திரும்ப அனுமதிக்க முடியாது."

பெருவணிக காங்கிரஸ் கட்சியை “குறைவான தீமை” என்று ஊக்குவிப்பதற்கான ஸ்ராலினிஸ்டுகளின் ஒருபோதும் முடிவில்லாத முயற்சிகளுக்கு ஏற்ப, சி.ஐ.டியு .உடன் இணைந்த அகில இந்திய நிலக்கரி தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் இராமானந்தன், துபேயின் கருத்துக்களைப் பாராட்டினார். "அது உண்மை," என்று அவர் கூறினார். "இது மறுபடியும் தொடங்கிய இடத்தில் போய் நிற்பது போன்றது.

இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், நிலக்கரித் தொகுதிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல் நடவடிக்கைகள் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலக்கரி – தொகுதி ஒதுக்கீட்டை 2014 இல் உச்சநீதிமன்றம், அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டி ஏலம் இல்லாமை காரணமாக இரத்து செய்த பின்னர்தான், மோடி அரசு 2015 ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை கொண்டு வந்தது. அது இந்த நிலக்கரித் தொகுதிகளை ஏலங்கள் மூலமாக மீண்டும் தனியார் துறைகளுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.

ஸ்ராலினிஸ்டுகள் பிற்போக்குத்தனமான தேசியவாத வழிகளில் தனியார்மயமாக்கலுக்கு தொழிலாளர்களின் உண்மையான எதிர்ப்பை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கடந்த மாதம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திய போதிலும் மோடி அரசாங்கம் தனது தனியார்மயமாக்கல் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றது என்று வேலைநிறுத்தம் குறித்த சி.ஐ.டி.யுவின் அறிக்கை, புலம்பிய அதேவேளை பிரதமரின் தேசியவாத வாய்வீச்சுகளை தழுவியது. "இந்த முக்கிய பொதுத் துறையை தேசிய நலனுக்காகவும், இந்தத் துறையில் நமது தேசத்தின் சுய-சார்பை பாதுகாக்கவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களின் ஒற்றுமையை நீட்டிக்கும்படி அந்தந்த மாநில பிரிவுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடிப்பதற்கு முந்திய மாதங்களில், தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் மோடி அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு வளர்ந்து வந்தது. இது ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தில் வெளிப்படுத்தப்பட்டது, அது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை எதிர்த்தது மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களிலும் இது வெளிப்படுத்தப்பட்டது. மோடி அரசாங்கம் அதன் அழிவுகரமான மோசமாக தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் முடக்கத்தை ஆர்ப்பாட்டங்கள், குறிப்பாக CAA க்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க பயன்படுத்தியது. நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மீண்டும் வெடிக்கிறது என்பதைக் குறிக்கிறது.

வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு "தேசிய ஒற்றுமை" என்ற பெயரில் ஸ்ராலினிஸ்டுகள் மோடி அரசாங்கத்துடன் அணிவகுத்து நின்றனர். அதே நேரத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், அடிப்படைத் தேவைகளை வழங்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் போதாமை குறித்து மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தனர். கடந்த மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பதட்டங்கள் அதிகரித்தபோது, ஸ்ராலினிஸ்டுகள் மீண்டும் மோடி அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டு, “தேசிய நலன்களை” அதாவது இந்திய உயரடுக்கின் பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் நலன்களை பாதுகாக்க அழைப்பு விடுத்தனர்.

மூன்று நாள் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், ஊழல் நிறைந்த முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியில் மேலும் வெளிப்படையாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவில், கொரோனா வைரஸுக்கு எதிராக தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரி, யுனைடெட் ஆட்டோ வொர்க்கர்ஸ் (UAW) தொழிற்சங்கத்திலிருந்து சுயாதீனமாக வாகனத் தொழிலாளர்கள் தங்களது சொந்த சாமானிய பாதுகாப்புக் குழுக்களை அமைத்துள்ளனர்.

வேலைகள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு உண்மையான போராட்டத்திற்கும் தேவைப்படுவது கார்ப்பரேடிஸ்ட் (நிறுவனங்களுடன் ஒன்றாக கலந்து நிற்கும்) தொழிற்சங்கங்களிலிருந்து ஒரு முழுமையான முறிவை செய்து சாமானிய சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். மற்றும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் பிரிவுகள் பக்கம் திரும்ப வேண்டும். இத்தகைய போராட்டம் ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களுக்காக இல்லாமல், பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமுதாயத்தை மறுசீரமைப்பதற்கான ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே முன்னேற முடியும்.