பயணிகளை முகமூடி அணியச் சொன்ன பிரெஞ்சு பஸ் சாரதி மூளை இறந்து கிடந்தார்

By Will Morrow
9 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தெற்கு பிரெஞ்சு நகரமான பயோனில் பஸ்ஸில் ஏறிய ஒரு பயணிகள் குழுவிற்கு, முகமூடி அணிய வேண்டும் அல்லது பஸ்ஸிலிருந்து இறங்கவேண்டும் என உத்தரவிட்ட ஒரு பஸ் சாரதி மிருகத்தனமான தாக்குதலில் மூளை இறந்து கிடந்தார்.

பொலிஸ் தகவல்களின்படி, 59 வயதான சாரதி பிலிப் மொங்கியோ, ஒரு நிறுத்தத்தின் போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளால் தாக்கப்பட்டார். பஸ்ஸில் ஏற முயற்சிக்கும் ஒரு பயணியிடம் அவர் கொரோனா வைரஸ் முகமூடியை அணியாமல் ஏற அனுமதிக்க மாட்டேன் என கூறியிருந்தார், இது பொதுப் போக்குவரத்து தொடர்பான சட்டப்படி தேவைப்படுகிறது. அதே நிறுத்தத்தில் அவர் பஸ்ஸில் இருந்த மற்ற மூன்று பயணிகளிடம் முகமூடி அணியாவிட்டால் அவர்கள் இறங்க வேண்டும் என கூறியிருந்தார்.

தாக்குதலுக்குப் பின்னர், மொங்கியோ மயக்கமடைந்து ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர்காப்பு கருவியின் உதவியில் வைக்கப்பட்டார், ஆனால் பின்னர் மூளை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் மூன்று வயது மகள்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, 34 வயது நபர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் நான்கு ஆண்கள் திங்களன்று கைது செய்யப்பட்டனர், அவர்களில் ஒரு பதின்மவயதுடையவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். தன்னார்வ கொலை முயற்சிக்கு இரண்டு நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று அரசு வழக்கறிஞர் நேற்று அறிவித்தார்.

திங்களன்று, மொங்கியோ பணிபுரிந்த குரோனோப்புளுஸ் (Chronoplus) இன் பஸ் சாரதிகள், மொங்கியோவின் இறுதிச் சேவை முடியும் வரை தாங்கள் வேலைநிறுத்தத்தில் இருப்பதாக அறிவித்தனர். பிரான்சின் தென்மேற்கு அட்லாண்டிக் கடற்கரையில் கடல்பக்க உல்லாசப் போக்கிடமான பயோன், ஆங்லே மற்றும் பியாரிட்ஸ் ஆகிய இடங்களினூடாக குரோனோப்புளுஸ் சேவையில் ஈடுபடுகிறது. மூன்று பகுதிகளிலும் வழித்தடங்கள் நேற்று நிறுத்தப்பட்டன. சாரதிகள் அதிக பாதுகாப்பு கோருகின்றனர்.

பஸ் தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை மாலை குரோனோப்புளுஸ் நிர்வாகத்தை சந்தித்தன, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் சாரதிகளை வேலைக்குத் திருப்புவதற்கும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முயல்கின்றன.

நேற்று மக்ரோன் நிர்வாகத்தின் போக்குவரத்து அமைச்சர் Jean-Baptiste Djebbari, பயோனுக்குச் சென்று சாரதிகளுடன் பேசினார், சோகமான சம்பவத்தில் அரசாங்கத்தின் வருத்தத்தை இழிந்த முறையில் அறிவித்தார்.

இந்த முதலை கண்ணீர் மூலம், தொற்றுநோய் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைகளே நேரடியாக காரணம் என்பதை யாரும் மறக்கப்போவதில்லை.

தொற்றுநோயின் ஆரம்பத்தில், வைரஸ் பிரான்ஸை அடைய வாய்ப்பில்லை என்று மக்களிடம் பொய்களைக் கூறிக்கொண்டு, பெரிய அளவிலான சோதனைகளை நடத்த அரசாங்கம் மறுத்துவிட்டது. சோதனைக்கு உரிய எந்த உள்கட்டமைப்பையும் அவர்கள் அமைக்காததால், சோதனை தேவையில்லை என்று அவர்கள் வலியுறுத்தினார். தங்கள் உள்ளூர் மருத்துவரிடம் வைரஸ் அறிகுறிகளை தெரியப்படுத்தியவர்கள், வீட்டிற்குச் சென்று சுயமாக தனிமைப்படுத்தலில் ஈடுபடவேண்டும் என்று கூறப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் சுகாதார செலவினங்களைக் குறைப்பதற்காக அரசாங்கங்கள் தங்களது முகமூடிகளின் இருப்புக்களை அழித்துவிட்டன என்ற உண்மையை மறைக்க முயற்சிப்பதன் பாகமாக முகமூடிகள் அணிவது தேவையற்றது என அரசாங்கம் கூறியுள்ளது. அரசாங்க செய்தித் தொடர்பாளர் Sibeth Ndiaye, “உங்களுக்கு தெரியுமா? முகமூடியை எவ்வாறு பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை” என மார்ச் 20 அன்று அவமதிப்புடன் அறிவித்தார்.

மே 11 அன்று, பொதுமக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டடதை முடிவுக்கு கொண்டுவந்து, பொது போக்குவரத்தை மறுதொடக்கம் செய்தல் மற்றும் பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பது ஆகியவை இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முதலாளிகளின் பொருளாதார கோரிக்கைகளாலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தன.

தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்ததோ அவையெல்லாம் முடக்கம் நீக்கப்பட்ட உடனேயே முடிவுக்கு வந்துள்ளன. ஜூன் 24 அன்று, தொழிலாளர் மந்திரி Muriel Pénicaud முதலாளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டார், இனி ஒவ்வொரு ஊழியருக்கும் நான்கு சதுர மீட்டர் பரப்பளவு ஒதுக்கீடு தேவையில்லை. இது ஒரு மீட்டர் இடைவெளியை பரிந்துரைக்கும், கீழ்ப்படியவோ பின்பற்றவோ சட்டப்படி தேவையில்லாத “வழிகாட்டி” மூலம் மாற்றப்பட்டுள்ளது, இதைக் கூட பராமரிக்க முடியாவிட்டால் முகமூடியை அணிய வேண்டுமென்ற நிபந்தனையுடன்.

அதே நேரத்தில், பள்ளிகள், உணவகங்கள் மற்றும் காப்பி, மதுபான அருந்தகங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த பஸ் சாரதிகள் அல்லது பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் எந்தவொரு பட்டியலையும் தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பராமரிக்கவில்லை. ஆனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பாரிஸ் பகுதி பொதுப் போக்குவரத்து வலையமைப்பு (RATP) இந்த பிராந்தியத்தில் மட்டும் நான்கு இறப்புகளை உறுதிப்படுத்தியது. மே 12 அன்று, RATP இன் தலைவர் Catherine Gouillouard ஒன்பது RATP ஊழியர்கள் கொரோனா வைரஸிலிருந்து இறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். பஸ் சாரதிகள் தங்களுக்கு முகமூடிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஒரு ஷிப்டுக்கு ஒரு ஜோடி கையுறைகள் மட்டுமே கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

ஜூன் 30 முதல் ஜூலை 3 வரை, பாரிஸின் 15 வது மாவட்டத்தில் அமைந்துள்ள Javel இல் உள்ள பட்டறைகளில் RATP பராமரிப்பு தொழிலாளர்களிடையே மூன்று கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன. இந்த தளத்தில் 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிலைமைக்கான முக்கிய பொறுப்பு தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) மற்றும் பிற தொழிற்சங்கங்களிடமே உள்ளது. பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் இல்லாததால் தொழிலாளர்களின் கோபத்தை அடக்குவதற்கு அவர்கள் அனைவரும் தொழிற்பட்டுள்ளனர்.