நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பினால் COVID-19 பாதிப்புகள் இந்தியாவுக்கு உலகளவில் மூன்றாவது இடத்தை அளிக்கிறது

By Wasantha Rupasinghe
10 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இரத்தக்களரியான எல்லை மோதலின் போது சீனாவை குறிவைத்து போர் வெறி அறிக்கைகளை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கோவிட்-19 தொற்றுநோய் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

COVID-19 பாதிப்புகளின் கட்டற்ற எழுச்சியானது மோடி அரசாங்கத்தின் அழிவுகரமான “சமூக நோயெதிர்ப்பு சக்தி” (“herd immunity”) கொள்கையின் நேரடி விளைவாகும், இது உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைக்கு மேலாக இந்திய முதலாளிகளின் ஒரு சிறிய அடுக்கின் இலாப நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரு தடுப்பூசி கண்டு பிடிப்பது தொடர்ந்து கடினமானதாக இருந்தால், பிப்ரவரி 2021 க்குள் இந்தியா ஒரு நாளைக்கு 287,000 புதிய COVID-19 பாதிப்புகளை பதிவுசெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

இதுபோன்ற ஒரு அழிவுகரமான நிலைமையை நோக்கி இந்தியா செல்கிறது என்பதைத்தான் அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுகிறது. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற மையங்கள், பல்லாயிரக்கணக்கான வறிய தொழிலாளர்கள் சரியான துப்புரவு இல்லாமல் சிறிய வீடுகளில் நெரிசலில் சிக்கி வாழ்வது, இவைதான் வைரஸ் பரவுவதற்கு மிகவும் உகந்த இடமாக உள்ளது. பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் பொது சுகாதார அமைப்பு ஒரு பாழான நிலையில் உள்ளது, இந்தியாவின் அரசாங்கங்கள் நீண்டகாலமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.5 சதவிகிதம் அல்லது அதற்கு குறைவாக சுகாதார பராமரிப்புக்காக ஒதுக்கி வந்துள்ளன.

ஜூலை 8, 2020 புதன்கிழமை, இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தும் மையத்தில் மருத்துவர் ஒருவர் கோவிட் -19 நோயாளியுடன் பேசுகிறார். (AP Photo/Rajanish Kakade)

ஞாயிற்றுக்கிழமை, இந்தியா ரஷ்யாவை விஞ்சி, கோவிட் -19 பாதிப்புகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பின்னால் மட்டுமே உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மொத்த COVID-19 பாதிப்புகள் 742,417 ஆக உயர்ந்தன. முந்தைய 24 மணி நேரத்தில் 20,642 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ந்து ஐந்தாவது நாளாக COVID-19 பாதிப்புகள் 20,000 க்கும் அதிகமாயின.

இந்தியா தனது முதல் 100,000 பாதிப்புகளைப் பதிவு செய்ய 109 நாட்கள் ஆனது, ஆனால் அடுத்த 49 நாட்களில் நோய்த்தொற்றுகள் ஏழு மடங்கு அதிகரித்தன. 700,000 க்கும் அதிகமான பாதிப்புகளில், 264,000 க்கும் அதிகமானவை தீவிரமானவை என்று கருதப்படுகின்றன. ஜூன் 8 அல்லது ஒரு மாதத்திற்கு முன்பு, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இந்தியா பதிவு செய்த மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 257,000 க்கும் குறைவாகவே இருந்தது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் COVID-19 நோயால் 20,642 பேர் இறந்துள்ளனர். இந்தியாவின் இறப்பு விகிதம் மற்ற நாடுகளை விட “குறைவு” என்று மோடி மற்றும் அவரது பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் பெருமை பேசுகிறது. சாதாரண காலங்களில் கூட ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் ஏற்படும் இறப்புகளைக் கணக்கிடுவதில் இந்தியா இழிபுகழ் பெற்றது.

சமீபத்திய வாரங்களில், பல ஊடக அறிக்கைகள், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் வெளியிட்ட முரண்பாடான இறப்பு புள்ளிவிவரங்களை சிறப்பாக எடுத்துக்காட்டின. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் இறப்பு விவரக்கணக்கு குழுக்களின் உறுப்பினர்களுடன் பேசிய IndiaSpend ஜூலை 1 ம் தேதி அறிக்கை வெளியிட்டது; “அவர்கள் முன்னே வந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையோ, அவற்றில் COVID-19 இறப்புகளாக எத்தனை பேருக்கு சான்றிதழ் வழங்கினார்கள் என்பது பற்றிய விவரங்களையோ பகிர்ந்து கொள்ள யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.” இது உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் அறிக்கையை விட உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்று உறுதியாகக் கூறுகிறது.

மேலும், கோவிட் -19 நோயாளிகளின் வெள்ளத்தால் பல மருத்துவமனைகள் மூழ்கியுள்ளன, குறிப்பாக இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில், மற்ற கடுமையான சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் சிகிச்சையை அணுக முடியாமல் போனதாக ஏராளமான தகவல்கள் உள்ளன.

இந்தியாவின் நிதி மையமான மும்பையின் தாயகமான மகாராஷ்டிரா தொடர்ந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருந்து வருகிறது. இது இப்போது 217,121 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புக்களை கொண்டுள்ளது, இது சீனாவில் பதிவான மொத்த பாதிப்புக்களின் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கிற்கும் அதிகமாகும், அங்கேதான் கொரோனா வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது.

புதன்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 9,250 ஆகும். மும்பை நீண்ட காலத்திற்கு முன்பே படுக்கைகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், COVID-19 நோயாளிகளின் படுக்கைகளை மருத்துவமனை படுக்கை காத்திருப்பு பட்டியலில் வைக்கத் தொடங்கியது.

இந்த மோசமான நிலைமை இருந்தபோதிலும், மகாராஷ்டிராவின் சிவசேனா தலைமையிலான, காங்கிரஸ் கட்சி ஆதரவுடைய மாநில அரசாங்கம் விடுதி சேவைகளை வழங்கும் ஹோட்டல்களையும் பிற நிறுவனங்களையும் இயங்க அனுமதித்தது, மேலும் “ஆபத்தான புள்ளி” கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவை நேற்றைய நிலவரப்படி 33 சதவீத திறனில் மீண்டும் செயல்படத் தொடங்கின.

செவ்வாயன்று, இந்தியாவின் தேசிய தலைநகர் பிராந்தியமான (NCT), டெல்லியில் COVID-19 பாதிப்புகள் 100,000 ஐ தாண்டின. புதன்கிழமை நிலவரப்படி, நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முறையே 102,831 மற்றும் 3,165 ஆக இருந்தது. கடந்த திங்கட்கிழமை வரையில் (NCT) தனது 20 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மீது வெறும் 620,368 சோதனைகள்தான் நடத்தியது.

தொற்றுநோயைக் கையாள்வதில் கடுமையான விமர்சனங்களுக்கும் கோபத்திற்கும் பதிலளித்த தில்லி மாநில அரசு, தொற்று வெப்பநிலைகளை அடையாளம் காண 4 மில்லியன் வீடுகளில் 10 நாள் கணக்கெடுப்பைத் தொடங்கியது. இருப்பினும், ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக, கணக்கெடுப்பை நடத்தும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அரசாங்கம் மறுத்ததோடு, பாதிக்கப்பட்ட COVID-19 நபர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சரியான நெறிமுறை தொடர்பாக அதிகாரிகளிடையே குழப்பம் நிலவியது, கணக்கெடுப்பு தோல்வி அடைந்தது.

இந்தியாவின் பல தென் மாநிலங்களில் பாதிப்புகள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன, அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டன. கேரள அரசாங்கம், 2021 ஜூலை வரையிலும் மாநிலத்தின் COVID-19 “பாதுகாப்பு வழிகாட்டுதல்களை” ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்தது. பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் அல்லது முகத்தை மூடிக்கொள்ளல் மற்றும் சமூக இடைவெளிகளை பராமரித்தல் ஆகியவற்றை கட்டாயப்படுத்தியுள்ளது, மேலும் விதிகளை மீறும் எவருக்கும் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முதன்முதலில் தளர்த்தப்பட்ட மே 3 முதல் கேரளாவில் நோய் தொற்றுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் சென்னையில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு தமிழக அதிகாரிகள் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இவை இப்போது கைவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் தொழில்துறை பணியிடங்கள் 100 சதவிகித திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக ஒரு நாளைக்கு 4,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் வந்துள்ளன. மேலும் 118,594 பாதிப்புகள் மற்றும் 1,636 இறப்புகளுடன் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகி உள்ளது. ஐந்து தென் மாநிலங்கள் - தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா - இப்போது மொத்தமாக இந்தியாவின் கோவிட் -19 பாதிப்புகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைப் பகிர்ந்து கொள்கின்றன, இது ஜூன் தொடக்கத்தில் அவர்களின் 17.5 சதவீத பங்கிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இந்த ஐந்து மாநிலங்களுக்குள் நிகழும் மொத்த பாதிப்புகளின் பங்கு நாடு முழுவதும் மொத்தமாக அதிகமாக வெடித்தபோதும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளபடி, மோடியின் மோசமாக தயார் செய்யப்பட்ட 10 வார ஊரடங்கு ஒரு சுகாதார மற்றும் சமூக பேரழிவாகும். மிகப்பரந்தளவில் சோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதலின் ஒரு விரிவான அமைப்பைச் செயல்படுத்தவும், நாள்பட்ட நிதியுதவி இல்லாத சுகாதாரப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தவும் மோடி அரசாங்கம் நேரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த மற்றும் / அல்லது அனைத்து வருமானத்தையும் இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டது. ஊரடங்கு முறையாக மே இறுதி வரை நீடித்திருந்தாலும், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் மீண்டும் இலாபத்தை ஈட்டத் தொடங்குவதற்காக ஏப்ரல் பிற்பகுதியில் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியது.

முடக்க காலத்தில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் நெரிசலான முகாம்களுக்கு தள்ளப்பட்ட சுமார் 10 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பின்னர் COVID-19 க்கு சோதனை செய்யப்படாமல் தங்கள் கிராமங்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். இதன் விளைவாக கிராமப்புறங்களில் மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார வசதிகள் கிட்டத்தட்ட இல்லாத நிலையில் நோய்த்தொற்றுகள் கூர்மையாக அதிகரித்தன.

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சுமார் 14.5 மில்லியன் மக்கள் தொகை உள்ளது, அங்கே கடந்த இரண்டு வாரங்களில் 2,600 புதிய பாதிப்புகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. ஜூலை 6 ம் தேதி ThePrint வலைத் தளம் அறிக்கை வெளியிட்டது; "நகரம் அதன் இறப்பு விகிதத்தை (6 சதவிகிதம்) கட்டுப்படுத்த போராடி வருகிறது, தொடர்பு தடமறிதலில் நிர்வாகம் தவறுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கூட மருத்துவமனை படுக்கைகள் போதிய எண்ணிக்கையில் அங்கு மோடி அரசாங்கத்தின் முன்கூட்டிய பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவது பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் மத்தியில் ஏராளமான நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்தது.

மோடி அரசாங்கம் முன்கூட்டி பொருளாதாரத்தை மீண்டும் திறந்ததனால் பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் மத்தியில் ஏராளமான நோய்தொற்றுகளுக்கு வழிவகுத்தது. ஜூலை 7 ம் தேதி இந்தியா டுடே படி, மத்திய இரயில்வே மற்றும் மேற்கு இரயில்வேயின் 872 ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு இதுவரை செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் 86 பேர் இறந்துள்ளனர். ஜூன் மாத இறுதியில், மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா ஆலையின் வாலுஜில் கோவிட்-19 தொற்று இருப்பதாக சோதனை செய்யப்பட்ட இரண்டு பஜாஜ் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, ஆலையில் 250 தொழிலாளர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் பேரழிவு தரும் சூழ்நிலை இருந்தபோதிலும், இந்தியா "உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா ஒரு சிறந்த நிலையில் உள்ளது" என்று மோடி தொடர்ந்து அவலமகிழ்வு அடைகிறார். "2வது முடக்க தளர்வு” (“Unlock-Two,”) என்று குறிப்பிடப்படும் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதாக அறிவிக்கும் தனது சமீபத்திய உரையில், ஜூன் 30 அன்று மோடி, "சரியான நேரத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டது ... அது இலட்சக்கணக்கான [நூறாயிரக்கணக்கான] உயிர்களைக் காப்பாற்றியது" என்று கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஊரடங்கு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் தொற்றுநோய் இப்போது மிக வேகமாக பரவுகிறது என்பதைப் பற்றி மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்கு பதிலாக, "தனிப்பட்ட மற்றும் சமூக நடத்தைகளில் அலட்சியம் அதிகரிப்பதற்காக" மக்களைக் குறை கூற அவர் முயன்றார், இது "கவலைக்கு ஒரு காரணம்." என்றார்.

மோடி அந்தளவுக்கு சொல்வதைத் தவிர்த்திருந்தாலும், தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி பல்லாயிரக்கணக்கான வறிய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மத்தியில் ஒரு பயங்கரமான இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்துகிறது என்பதை இந்திய ஆளும் உயரடுக்கு நன்கு அறியும். தனது கொள்கைகளின் பேரழிவு விளைவுகளை மறைமுகமாக ஏற்றுக்கொண்ட மோடி, தனது அரசாங்கம் மூன்று மாதங்களாக 800 மில்லியன் மக்களுக்கு "இலவச ரேஷன்" அளித்து வருவதாகவும், அது நவம்பர் வரை தொடரும் என்றும் கூறினார். இந்த "இலவச ரேஷன்" என்பது பஞ்சகால நிவாரணத்தைத் தவிர வேறில்லை. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பின் கீழ் தானிய ரேஷன்கள் (கோதுமை அல்லது அரிசி) வழங்க தகுதியுள்ள சுமார் 144.5 மில்லியன் மக்களுக்கு மே மாதத்திற்கான உரிமை கிடைக்கவில்லை என்று தி வயர் ஜூன் 4 அன்று வெளிப்படுத்தியது. ஜூன் 3 ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.