சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவு தீவிரப்படுத்தப்படுகிறது

10 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.

தென் சீனக் கடலில் சனிக்கிழமை தொடங்கி, நாள் முழுவதும் போர்விமானங்களைப் பறக்கவிட்டமை உள்ளடங்கலாக "உயர்மட்ட" போர் பயிற்சிகளை நடத்திய இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் தாக்கும் படைகளின் பிரசன்னம், இன்றைய தேதியில் சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரப்படுத்தப்பட்டு வரும் போர் தயாரிப்புகளுக்கான மிகவும் அப்பட்டமான வெளிப்பாடாக உள்ளது. அந்த மூலோபாய கடல்பகுதிகளில் சீனா கடற்படை ஒத்திகைகள் நடக்கும் அதேநேரத்தில் இவ்விரு போர்க்கப்பல்களின் நடவடிக்கைகளும் சரியாக பொருந்தி வருகின்றன என்ற உண்மை, அவை மொத்தத்தையும் மிகவும் ஆத்திரமூட்டும் அபாயகரமானதாக ஆக்குகிறது.

உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய், அமெரிக்காவை மையப்படுத்தி, உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடியையும், முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் அனைத்தையும் வேகமாக கிளறிவிட்டுள்ளதால், இது புவிசார் அரசியல் பதட்டங்கள் இன்னும் கூடுதல் வேகத்துடன் அதிகரித்து செல்கின்றன. வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பொறுப்பற்ற முனைவுக்கு தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் எதிர்ப்புடன் சேர்ந்து, உள்நாட்டில் ஓர் ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் சமூக பதட்டங்களை ஒரு வெளி எதிரியை நோக்கி திருப்பி விட முயன்று வருகிறது.

ஜனநாயகக் கட்சி மற்றும் ஊடக ஸ்தாபகங்களால் ஆதரிக்கப்பட்டுள்ள ட்ரம்ப், பொய்கள் மற்றும் தவறான செய்திகளின் அடிப்படையில் இடைவிடாது ஒரு சீன-விரோத பிரச்சாரத்தின் மூலமாக போர்க் காய்ச்சல் சூழலை முடுக்கி விட முயன்று வருகிறார். ஒரு துணுக்கு ஆதாரமும் இல்லாமல், உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கும் மற்றும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க மரண எண்ணிக்கைக்கும் சீனா மீது பழிசுமத்தி வருகிறார்கள். வெள்ளை மாளிகையின் குற்றகரமான அலட்சியம் மற்றும் அசட்டைத்தனம் மூலமாக, அமெரிக்காவில் இந்த உயிரிழப்புகளுக்கு வெள்ளை மாளிகையே நேரடியாக பொறுப்பாகும்.

(இடதுபுறம்) ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் ஏவுகணை தாங்கிய சிறியரக போர்க்கப்பல் HMAS Parramatta (FFH 154) அமெரிக்க கடற்படையின் நிலத்திலும் நீரிலும் செல்லும் தாக்கும் கப்பல் USS அமெரிக்கா (LHA 6), Ticonderoga ரக ஏவுகணை தாங்கிய விரைவுப் போர்க்கப்பல் USS Bunker Hill (CG 52) மற்றும் Arleigh-Burke ரக ஏவுகணை தாங்கிய நடுத்தர அழிப்பு போர்க்கப்பல் USS Barry (DDG 52) ஆகியவற்றுடன் சேர்ந்து பயணிக்கிறது. (படம்: Mass Communication Specialist 3rd Class Nicholas Huynh)

சீன-விரோத பிரச்சாரம் எல்லா பக்கங்களிலும் நடந்து வருகிறது. ஹாங்காங்கில் "மனித உரிமைகள்" துஷ்பிரயோகம் மீதும் மற்றும் சீன மாகாணமான ஜின்ஜியாங்கில் முஸ்லீம் வீய்கர் (Uyghur) சிறுபான்மையினருக்கு எதிராகவும் அமெரிக்கா பெய்ஜிங் மீதான அதன் கண்டனங்களை அதிகரித்துள்ளது.

இந்த விவகாரங்களில் ஏற்கனவே தண்டிக்கும் விதமான தடையாணைகள் திணிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பொலிஸ் படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக நசுக்குவதற்காக, அமெரிக்க அரசியலமைப்பையே மீறி, இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் முன்நகர்வு ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அப்பட்டமான பாசாங்குத்தனத்தை எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கில் அதன் குற்றகரமான போர்களைப் போலவே, சீனாவுக்கு எதிராக பொருளாதார போர்முறை மற்றும் பாரியளவில் இராணுவக் கட்டமைப்பை பின்தொடர்வதற்காக, மீண்டுமொருமுறை, வாஷிங்டன் "மனித உரிமைகள்" என்பதைச் சுரண்ட முயல்கிறது.

அமெரிக்க போர் முனைவுக்கான மூலகாரணம் கோவிட்-19 தொற்றுநோய் கிடையாது. மாறாக நீண்டகால நிகழ்வுபோக்கை தீவிரப்படுத்தும் ஒரு காரணியாக அது உள்ளது. இந்தோ-பசிபிக்கிலும் மற்றும் உலகம் முழுவதிலும் சீன செல்வாக்கிற்கு குழிபறிப்பதற்காக, பசிபிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான பங்காண்மை (Trans Pacific Partnership - TPP) மூலமாக சீனாவைத் தனிமைப்படுத்துவதற்காக மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தைக் கட்டமைத்து மறுசீரமைப்பு செய்வதற்காக ஓர் ஆக்ரோஷமான இராஜாங்க தாக்குதல் உள்ளடங்கலாக, 2011 இல் ஒபாமா நிர்வாகம் சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" அறிவித்தது. தென் சீனக் கடல் மற்றும் கொரிய தீபகற்பம் உட்பட அபாயகரமான பிராந்திய வெடிப்பு புள்ளிகளை ஒபாமா பொறுப்பின்றி எரியூட்டினார்.

ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான அந்த போர் முனைவைத் தீவிரப்படுத்தி உள்ளது. ட்ரம்ப் TPP ஐ கைதுறந்த நிலையில், அவர் நடைமுறையளவில் எல்லா சீனப் பண்டங்கள் மீதும் தண்டிக்கும் விதமான பல்வேறு இறக்குமதி வரிகளை விதித்தும், அவற்றில் பல இன்னமும் நடைமுறையில் உள்ள நிலையில், அவர் சீனாவுக்கு எதிராக முழு அளவிலான பொருளாதார போரைத் தொடங்கினார். அவர் அதிக அமெரிக்க ஏற்றுமதிகளையும் மற்றும் சீனாவில் அதிக முதலீடுகளையும் மட்டும் கோரவில்லை, மாறாக உயர்தொழில்நுட்ப தொழில்துறைகளில் அமெரிக்காவுக்கு அந்நாடு அடிபணிய வேண்டுமெனக் கோரினார். ட்ரம்பின் பொருளாதார தேசியவாதமும், வினியோகச் சங்கிலி, அதுவும் குறிப்பாக இராணுவத்திற்கு முக்கியமானவை, அமெரிக்காவை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்ற அவரின் வலியுறுத்தலும் போருக்கான பொருளாதார தயாரிப்பு என்பதற்கு குறைவின்றி உள்ளது.

அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக மற்றும் சீன உளவுபார்ப்பைத் தடுப்பதற்காக என்ற சாக்குபோக்கில், வாஷிங்டன் சீன தொலைதொடர்பு பெருநிறுவனம் ஹூவாயை இலக்கில் வைத்துள்ளது. ஹூவாய் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாமென பிரிட்டன் போன்ற கூட்டாளிகளுக்கு அழுத்தமளித்துள்ள அது, முக்கிய உட்பொருட்களை ஹூவாய்க்கு வினியோகிக்கும் நிறுவனங்கள் மீதும் தடையாணைகளை விதிக்க அச்சுறுத்தி உள்ளது. சீன உளவுபார்ப்பு மற்றும் இணையவழி ஊடுருவல் குறித்து அமெரிக்கா ஆதாரமின்றி குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்ற அதேவேளையில், NSA போன்ற அதன் சொந்த உளவுத்துறை முகமைகளோ, இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியவாறு, அதன் சொந்த குடிமக்கள் உட்பட உலக மக்கள் மீது ஒரு தொழில்துறை அளவுக்கு உளவுபார்க்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவிலுள்ள சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கடுமையான நுழைவு கட்டுப்பாடுகளை விதித்து அவர்களையும் இலக்கில் வைத்துள்ளது. கோவிட்-19 காரணமாக இணையவழி கல்லூரி வகுப்புகளில் மட்டுமே பதிவு செய்திருந்தால் அந்த ஆயிரக் கணக்கான மாணவர்களையும் வெளியேற்ற இப்போது அது அச்சுறுத்துகிறது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன ஊடகங்கள் மீதும் வெள்ளை மாளிகை அதன் கட்டுப்பாடுகளை விரிவாக்கி வருகிறது, கடந்த மாதம் கூடுதலாக நான்கு அமைப்புகள் மீது "வெளிநாட்டு திட்டங்கள்" என்பதாக முத்திரை குத்தப்பட்டது.

போருக்கான இராணுவத் தயாரிப்புகளும் வேகமாக நடந்து வருகின்றன. அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக்கில் மீளநிலைநிறுத்துவதற்கு ஒபாமா 2020 ஐ இலக்காக நிர்ணயித்திருந்தார். ட்ரம்பின் கீழ், 2018 இல் பென்டகன் அறிவிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அல்ல, வல்லரசு போட்டியே அதன் தலையாய முன்னுரிமை என்று அறிவித்ததுடன், ரஷ்யாவும் சீனாவும் அதன் முக்கிய போட்டியாளர்களாக அடையாளம் காட்டப்பட்டது. சீனா மீதான ஒருங்குவிப்பானது, சீனாவின் அசாதாரண பொருளாதார விரிவாக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை தொடர்வதற்குப் பிரதான அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அமெரிக்க மூலோபாய வட்டாரங்களில் பார்க்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது.

இராணுவ மோதலுக்கான தயாரிப்பில், இந்தோ-பசிபிக் எங்கிலும், குறிப்பாக ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய "நாற்கரம்" (Quad) என்றழைக்கப்படும் இராணுவக் கூட்டணிகள் மற்றும் மூலோபாய பங்காண்மைகளை அமெரிக்கா பலப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் சீன-விரோத பிரச்சாரத்தின் அடாவடித்தனமான தன்மை, சமீபத்தில் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் சீனாவுடனான இராணுவ மோதலில் இந்தியாவை அது ஊக்குவித்ததில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான அந்த அபாயகரமான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டில், ட்ரம்பின் தலைமை தளபதி மார்க் மீடொவ்ஸ் தங்குதடையின்றி அவரின் திங்கட்கிழமை கருத்துக்களில் இந்தியாவின் பக்கம் தரப்பெடுத்தார். “அந்த பிரதேசத்தில் ஆகட்டும் அல்லது இங்கே ஆகட்டும், சீனாவோ அல்லது வேறு யாரோ மிகவும் பலமாக மேலாதிக்க சக்தியாக அதிகாரம் செலுத்துவதை நாங்கள் விலகி இருந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்,” என்றவர் அறிவித்தார்.

ஒட்டுமொத்த உலகையும் உள்ளீர்த்து விரைவிலேயே ஒரு பேரழிவுகரமான மோதலாக தீவிரமடையக் கூடிய சீனாவுக்கு எதிரான அமெரிக்க போருக்கான எல்லா தயாரிப்புகளும் முன்னேறிய கட்டத்தில் உள்ளன. தென் சீனக் கடலில் ஆகட்டும் அல்லது சீனாவுடனான இந்திய எல்லைகளில் ஆகட்டும், எந்த வெடிப்பு புள்ளியிலாவது தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ நடத்தப்படும் ஒரு சம்பவம், உள்நாட்டில் முற்றுகையின் கீழ் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு போர்வெறி அறிவிப்புக்கான காரணத்தை வழங்கும்.

உலகப் போரை நோக்கி தங்குதடையின்றி மூழ்குவதை நிறுத்தத் தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். 2016 இல், “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற தலைப்பில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஓர் அறிக்கை வெளியிட்டு, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஓர் ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்குமாறு அழைப்பு விடுத்தது. அந்த அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட அபாயங்கள் கடந்த நான்காண்டுகளில் மிகவும் துல்லியமாக உருவெடுத்துள்ளன, அவ்விதத்தில் அதுபோன்றவொரு இயக்கத்தை அவசரமாக கட்டமைப்பதற்கான அவசியமும் எழுந்துள்ளது.

போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அரசியல் அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை கோட்பாடுகளை அந்த அறிக்கை விவரித்தது:

• போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மிகப்பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், தனக்குப் பின்னால் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் அணிதிரட்டி நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

• இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராடுவதில் இதை விட போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.

• ஆகவே இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் மற்றும் குழப்பத்திற்கு இடமின்றியும் சுயாதீனமானதாகவும் மற்றும் அவற்றுக்கு குரோதமானதாகவும் இருக்க வேண்டும்.

• அனைத்துக்கும் மேலாய், இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்.

மனிதகுலத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்த பணியை நோக்கித் தான் இன்று தொழிலாளர்களும் இளைஞர்களும் திரும்ப வேண்டும்.

Peter Symonds