தென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்
By Arun Kumar
11 July 2020
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.
தமிழ்நாட்டிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC ) இல் உள்ள ஒரு அனல் மின்நிலையத்தில் ஜூலை 1 ம் தேதி ஏற்பட்ட வெடிப்பினால் இதுவரை 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், இது இந்த நிறுவனத்தில் இரண்டு மாதங்களில் ஏற்பட்ட இரண்டாவது பயங்கர வெடிப்பாகும்.
இந்த சமீபத்திய துயரமான உயிர் இழப்பு வெறுமனே ஒரு விபத்து அல்ல, ஆனால் நடக்கக் காத்திருந்த ஒரு தொழில்துறை பேரழிவே. இது மே 7 அன்று நடந்த முந்தைய வெடிப்பின்போது எட்டு தொழிலாளர்கள் இறந்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய நிர்வாகத்தின் குற்றவியல் மறுப்பின் விளைவாகும். முந்தைய விபத்துக்களைப் போலவே, இந்த மாதம் ஏற்பட்ட வெடிப்பு மேலும் அடிக்கோடிட்டு காட்டுவது என்னவென்றால் முதலாளித்துவ உற்பத்தி முறை மிகவும் அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தி, எவ்வாறு தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு மேலாக இலாப நலன்களை முன்வைக்கிறது என்பதைத்தான்.
ஜூலை 1 ம் தேதி, NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள் - இராமநாதன், நாகராஜ், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், அருண்குமார் மற்றும் பத்மநாபன் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஒரு இளைய பொறியாளர் மற்றும் இரண்டு மேற்பார்வையாளர்கள் உட்பட 17 ஊழியர்கள் மோசமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 17 பேரில் ஏழு பேர் காயங்களுக்கு பலியானார்கள், காயப்பட்டவர்கள் அனைவரும் முதலில் நெய்வேலியில் NLC நடத்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அங்கிருந்து தமிழ் நாடு மாநில தலைநகரான சென்னையில் உள்ள தனியார் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
NLC, அதிக இலாபம் ஈட்டும் மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும், இது பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுக்கிறது மற்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நெய்வேலியில் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட நான்கு திறந்த வெட்டு சுரங்கங்கள் உள்ளன, இதில் இராஜஸ்தான் மாநிலத்தின் பார்சிங்சரில் உள்ள திறந்த வெட்டு நடவடிக்கையும் அடங்கும். NLC, நெய்வேலியில் நான்கு அனல் மின் நிலையங்களையும், பார்சிங்கரில் ஒரு நிலையத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறது.
மோசமான COVID-19 தொற்றுநோய் இருந்தபோதிலும், பொருளாதாரத்தை மீண்டும் திறக்க மோடி அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி, பணிகளை மீண்டும் தொடங்க நிர்வாகம் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகளின் விளைவாக இந்த துயர மரணங்கள் ஏற்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி தேசிய அரசாங்கம் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், ஆலையில் கட்டாய பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ளாமல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யாமல் மீண்டும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் NLC செயல்படத் தொடங்கியது. இவ்வாறாக தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நிலையும் “பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது” குறித்த இந்திய அரசாங்கத்தின் உறுதியும்தான் தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு வழிவகுத்தது.
Hotindiareport.com இன் கூற்றுப்படி, ஜூலை 1 வெடிப்பு TPS II இன் யூனிட் V இல் நடந்தது, அங்கே காலாவதியான ஒரு கொதிகலன் ஜூன் 30 ஆம் தேதி மூடப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் பொறியியல் ஊழியர்கள் “அந்த கொதிகலனில் தீ ஏற்பட்டபோது அந்த அலகுக்கு புத்துயிர் அளிக்க முயன்றனர்” அது மறுநாள் காலை 10 மணிக்கு “வெடிப்பில் முடிந்தது”.
மே 7 வெடிப்பு தொடர்பாக WSWS அறிக்கை முன்னர் குறிப்பிட்டது போல, அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிப்பதில் NLC ஒரு மோசமான பதிவைக் கொண்டுள்ளது.
அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்கும் ஒரு பதிவை NLC கொண்டுள்ளது. Downtoearth.org ஆல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு பெரிய விபத்துக்கள் மற்றும் ஒரு சிறிய விபத்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது, இது நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் இயங்கும் பழைய அலகுகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள கடுமையான விஷயங்களை அம்பலப்படுத்தியது.
ஒரு அனல்மின் நிலையத்தின் திறமையான மற்றும் பாதுகாப்பான இயக்க வாழ்க்கைக் காலம் சுமார் 25 ஆண்டுகள் என கருதப்படுகிறது, ஆனால் NLC இல் புதிய அலகுகளை மாற்றுவதில் நீடித்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆலைகள் 2011 மற்றும் 2015 க்கு இடையில் ஓய்வு பெற திட்டமிடப்பட்ட அலகுகளுடன் இயங்குகின்றன. அவற்றில் சில அலகுகள் 57 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இந்த மாதம் நடந்த வெடிப்பு குறித்த Newsclick.in இன் அறிக்கையில் NLC நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கருத்துகள் உள்ளடங்கி இருந்தன.
பேரழிவு குறித்து பரவலான கோபத்தை தணிக்கும் முயற்சியில், நிர்வாகம் ஒரு மூத்த அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் இந்தியாவின் நிலக்கரி அமைச்சகம் ஒரு உயர் மட்ட விசாரணை மற்றும் உள் விசாரணையை தொடங்கியது. கொல்லப்பட்ட தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 3 மில்லியன் ரூபாய் (40,000 அமெரிக்க டாலர்) மற்றும் காயமடைந்தவர்களுக்கு 500,000 ரூபாய் (,$ 6,770) வழங்கப்படும் என ஒரு NLC அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். இறந்தவரின் குடும்பத்தின் தகுதியான ஒரு உறுப்பினருக்கும் நிரந்தரமான வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
கூடுதலாக, கொல்லப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி 300,000 ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார், அதோடு முறையே கடுமையான மற்றும் லேசான காயங்களுக்கு ஆளானவர்களுக்கு 100,000 ரூபாய் ($ 1,330) மற்றும் 50,000 ரூபாய் ($ 665) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்துறை மந்திரி அமித் ஷா கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் “சாத்தியமான அனைத்து உதவிகளும்” வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஷா மற்றும் பழனிசாமியின் முதலைக் கண்ணீர்கள் மேலும் NLC மற்றும் மாநில அரசு வழங்கிய அற்பமான இழப்பீட்டுத் தொகுப்புகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வளர்ந்து வரும் கோபத்தை தணிப்பதற்கும் மீண்டும் மீண்டும் நிகழும் தொழில்துறை விபத்துக்களுக்கு நிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பை மூடி மறைப்பதற்குமான ஒரு முயற்சியாகும்.
NLC இல் இயங்கும் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இந்திய தொழிற்சங்கங்கள் மையம் (சி.ஐ.டி.யு) மற்றும் தொழிலாளர் முற்போக்கு முன்னணி (எல்பிஎஃப்) ஆகியவை முறையே - இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் அதன் கூட்டாளியும் பிரதான மாநில எதிர்க் கட்சியுமான திராவிட முன்னேற்ற கழகத்துடன் (திமுக) இணைக்கப்பட்டுள்ளன. NLC ஆலைகளில் கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கடுமையாக வலியறுத்திக் கோர இந்த அமைப்புகள் மறுத்ததனால் இந்த துயர சம்பவத்திற்கு உடந்தையாக உள்ளன.
கடைசியாக ஏற்பட்ட வெடிப்பு இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் அதனுடன் இணைந்த கட்சிகளையும் NLC ஆலைகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஒரு சில "விமர்சனங்கள்" செய்ய கட்டாயப்படுத்திய அதே வேளையில், இந்த வாய்வீச்சு வெறும் சூடான காற்றுத்தான்.
ஸ்ராலினிச சி.ஐ.டி.யு உடன் இணைந்த NLC பொதுத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி. அமிர்தலிங்கம் ஊடகத்திடம் கூறினார்: “சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஷிப்டிலும் கொதிகலன்களை சுத்தம் செய்வது வழக்கம். இப்போது, தொழிலாளர்கள் குறைந்து வருவதால், தினசரி பராமரிப்பு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளைத் தனியார்மயமாக்குவதும் அதன் விளைவாக முறையற்ற பராமரிப்புப் பணிகளும் தொடர்ச்சியான விபத்துக்களுக்கு வழிவகுத்தன.”
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்: “விபத்துக்கு வழிவகுக்கும் கொதிகலன்களை முறையாக பராமரிப்பதில் தனியார் ஒப்பந்தக்காரர்கள் தவறிவிட்டனர். பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறை குறித்த விவரங்களுக்கு ஒரு உயர்மட்டக் குழு உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
அமிர்தலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணனின் கருத்துக்கள் போலியானவை மற்றும் இழிந்தவை. இந்த தொழிற்சங்க அலுவலர்களும் அவர்கள் தலைமை தாங்கும் அமைப்புகளும் காலாவதியான மற்றும் அபாயகரமான ஆலைகளின் இயக்கத்தை நிறுத்தும்படி மற்றும் அடிப்படையான பாதுகாப்பு தரங்கள் மற்றும் நவீன நடைமுறைகளை பின்பற்றும்படி கோரி வேலைநிறுத்தங்கள் அல்லது பிற தொழில்துறை நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் அணிதிரட்டப்படுவதை தடுத்துள்ளனர்.
Follow the WSWS