இலங்கை தேர்தல்களுக்கு மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி கட்டுரைகளை YouTube தணிக்கை செய்கிறது

V. Gnana
14 July 2020

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆங்கில பக்கத்தில் பிரசுரமாகும் சர்வதேச கட்டுரைகளின் ஒரு தேர்வை தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சி முன்னோக்கில் பயிற்றுவிக்க அதன் தமிழ் மொழி பக்கம் தசாப்தங்களாக போராடி வருகிறது.

சமீபத்திய வாரங்களில், YouTube வழியாக உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) தமிழ் மொழி முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட கட்டுரைகளின் பல podcasts களை YouTube தணிக்கை செய்துள்ளது. தமிழ் WSWS முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர்கள் இந்த தணிக்கை செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உடனடியாக தமது எதிர்ப்பை காட்டினர். பல நாட்கள் தாமதத்திற்குப் பின்னர் ஒவ்வொரு ஒளிப்பதிவும் மீண்டும் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தணிக்கை செய்த பின்னர் ஒவ்வொரு ஒளிப்பதிவையும் மீண்டும் இடுகையிட YouTube எடுத்த முடிவானது, தமிழ் WSWS ஆனது YouTube இன் சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது, என்றாலும், இந்த தணிக்கை தொடர்கின்றது.

Tamil podcast

தமிழ் மொழி WSWS கட்டுரைகளின் podcasts களை வெளியிடும் YouTube ஒலியலைவரிசைக்கு பின்வரும் செய்தியை YouTube பலமுறை அனுப்பியுள்ளது:

“உங்களுக்கு தெரிந்தபடி, எமது சமூக வழிகாட்டுதல்கள், YouTube இல் எந்த உள்ளடக்கத்தை அனுமதிக்கிறோம், எதனை அனுமதிக்கவில்லை என்பதை விபரிக்கிறது. உங்கள் ஒளிப்பதிவு மதிப்பாய்வுக்காக எங்களுக்கு கொடியிடப்பட்டுள்ளது. மதிப்பாய்வு செய்தபின், இது எங்கள் வழிகாட்டுதல்களை மீறுவதாக நாங்கள் தீர்மானித்தோம், அதை YouTube இலிருந்து அகற்றியுள்ளோம்.”

தணிக்கை செய்யப்பட்ட podcasts கள், இப்பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின் ஆபத்துகள், பொலிஸ் வன்முறை அத்தோடு அமெரிக்காவில் அல்லது இலங்கையில் இராணுவ ஆட்சி அதிகரிப்பது குறித்து எச்சரித்துள்ளன. பெயரிடப்படாத பயனர்களால் கொடியிடப்பட்ட பின்னர் பல நாட்களுக்கு இந்த கட்டுரைகளின் தமிழ் பதிப்புகளை YouTube தடுத்துள்ளது:

*June 16: கொடுங்கோன்மை ஆட்சியாளரான ட்ரம்ப் சதித்திட்டத்தை முடுக்கிவிடுவார்

*June 17: பொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை

*June 22: பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்

*June 25: யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன

*July 2: சோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன

*July 13: ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடு

இந்த கட்டுரைகளை தணிக்கை செய்வதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து எந்த வகையிலும் குறைத்துமதிப்பிட்டு விடக்கூடாது என உழைக்கும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஊடகங்கள் வழியாக தமிழில் WSWS அறிக்கைகளையும் தகவல்களையும் பின்பற்றுகிறார்கள். இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் தொழிலாளர்களை அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களான போர், கொரோனா தொற்றுநோய் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சி, சர்வதேச நிதி மூலதனத்தின் நோக்கங்கள் பற்றி சரியான கணத்தில் எச்சரிப்பதை தடுப்பதுதான் YouTube இன் தணிக்கை நோக்கமாக உள்ளது.

இலங்கையின் மதிப்பிழந்த அரசியல் ஸ்தாபகம், மோசமடைந்துவரும் கோவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் ஒரு தேர்தலை ஏற்பாடு செய்து வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு வதந்திகள், இராணுவ ஆட்சியை சுமத்தும் உயர் அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சிக்கு எதிரான சமூக கோபம் ஆகியவை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்க்ஷ இராணுவ அதிகாரிகளை உயர் அரச பதவிகளில் நியமித்துள்ளார். மேலும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, அவர்கள் மீது சட்டரீதியாக வழக்குத் தொடரமுடியாது எனக் கோருகிறார்.

இலங்கை இராணுவத்திலும் அரசாங்கத்திலும் உள்ள சக்திகள், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் அதேவேளையில், இலங்கை ஆளும் வர்க்கம் வகுப்புவாத அரசியலை பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பிற தொழிலாளர்களை பிரிக்க முயற்சிக்கிறது. கொழும்பில் அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்களால் தமிழர் விரோத பாகுபாடு காட்டப்பட்ட கோபத்தின் மத்தியில் வெடித்த 1983-2009 இலங்கை உள்நாட்டுப் போர், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முடிவுக்கு வந்தது.

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், எண்ணில் அடங்கா போலிவாக்குறுதிகளின் அடிப்படையில் 3 ஜனாதிபதி தேர்தல்களும் 2 பாராளுமன்ற தேர்தல்களும் 1 வட மாகாணசபை தேர்தல்களும் நடந்து முடிந்த பின்னரும் போருக்கு மூலகாரணமான எந்தவொரு அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.

மகிந்த இராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசியல் எதிர்ப்பாளர்களை கடத்துவதிலும், சித்திரவதை செய்வதிலும், காணாமல் ஆக்குவதிலும் இழிபெயரெடுத்த கோட்டாபாய இராஜபக்ஷ, ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் செய்த முதலாவது நடவடிக்கை, மூன்று குழந்தைகள் உட்பட எட்டு தமிழ் பொதுமக்களைக் கொன்றதாக கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரட்நாயக்கா என்ற முன்னாள் இராணுவ போர்க்குற்றவாளியை விடுதலை செய்ததாகும்.

மேலும், இத்தகைய காட்டுமிராண்டித்தனங்கள் இலங்கை, இந்தியாவுக்கு மட்டும் தனித்துவமானவை அல்ல. இவை உலகின் செல்வந்த மற்றும் சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்கா உள்ளடங்கலாக உலகெங்கிலும் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன என உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியாக விளக்கி வந்துகொண்டிருக்கிறது.

இலங்கையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஜோர்ஜ் ஃபுளொய்ட்டைக் கொன்றது மற்றும் அமெரிக்க இராணுவத்தை எதிர்ப்புக்காட்டும் மக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக நிறுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதை தொடர்ந்து, இலங்கை அதிகாரிகள், ஃபுளொய்ட் கொலைக்கு எதிரான போராட்டங்களை மிருகத்தனமாக முறியடித்தனர்.

அமெரிக்காவில் ஜோர்ஜ் புளோய்ட்டின் பொலிஸ் படுகொலைக்கும், இலங்கை பளையில் 24 வயது தமிழ் இளைஞரான திரவியம் இராமலிங்கத்தை இராணுவம் சுட்டுக்கொன்றதற்கும், இந்தியாவில் தமிழ்நாட்டில் தந்தையையும் மகனுமான ஜெயராஜ், அவரது மகனான பென்னிக்ஸை காவல் நிலையத்தில் பூட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்து கொன்றதற்கும் பின்னால் சர்வதேச ரீதியாக அபிவிருத்தியடைந்து வரும் பொலிஸ் அரசு சர்வாதிகார அபாயத்தை சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே அம்பலப்படுத்திக் காட்டியிருந்தது.

பின்னர், இலங்கையின் இராணுவ, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் வேட்பாளர்களை பலமுறை அச்சுறுத்தியுள்ளனர். வடக்கு இலங்கையானது உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கு பின்னரும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று சட்டவிரோதமாக அவர்களின் தகவல்களைக் கோரி மிரட்டியதுடன், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் ஒரு அச்சுறுத்தல் செய்தியை அனுப்பி தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த அபாயகரமான சூழ்நிலைகளில், தமிழ் WSWS podcast களை தணிக்கை செய்வதற்கான YouTube இன் ஜனநாயக விரோத முடிவின் ஆபத்தான தாக்கங்கள் உண்மையில் வெளிப்படையாக தெரிகின்றன.

முன்னாள் காலனித்துவ நாடுகளில், சமூக ஊடகங்களை பெருமளவில் தணிக்கை செய்யும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இணைய நிறுவனங்களை நியாயப்படுத்த நியூ யோர்க் டைம்ஸ் 2018 இல் அளித்த முற்றிலும் மோசடியான வாதங்களை அவை அம்பலப்படுத்துகின்றன. இந்த நாடுகளில், வலைத் தள கருத்துச் சுதந்திரம் வகுப்புவாத வன்முறைக்கு வழிவகுக்கிறது என்று அது கூறியது. முகநூல், இலங்கையை பெரிதும் இலக்காகக் கொண்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதியது, "எந்தவொரு உள்ளடக்கம் பயனர்களை தளத்தில் நீண்ட நேரம் வைத்திருக்கிறது — அது பலவீனமான அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சாத்தியப்பாடான நடைமுறையை கொண்டுள்ளன."

அந்த நேரத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கும்பல் வன்முறையின் போது முகநூல், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை மூடுவதை நியாயப்படுத்த இலங்கை அரசாங்கம் பயன்படுத்திய சுய தேவைக்கான வாதங்களை டைம்ஸ் வெறுமனே எதிரொலித்தது. இந்த தணிக்கை, வன்முறையை தடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. ஆனால் இலங்கை காவல்துறை மற்றும் இராணுவப் பிரிவுகள் இதற்கு உடந்தையாக இருந்தன என்ற பரவலான தகவல்களை மூடிமறைப்பதாகும். ஓய்வுபெற்ற மற்றும் பதவியிலுள்ள இலங்கை பாதுகாப்புப் படையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களின் போக்குவரத்துக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அரசாங்க அமைச்சர்கள் கூட ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த அடிப்படையில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வெளியீடுகளின் மீதான தணிக்கை பிற்போக்குத்தனமானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது. இலங்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும், அனைத்து தேசிய மற்றும் இன எல்லைகளிலும், அனைத்து இன வன்முறைகளையும் எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒன்றிணைக்க, பாதுகாக்க பல தசாப்தங்களாக போராடிய கறைபடியாத வரலாற்றை இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிச சமத்துவக் கட்சி கொண்டுள்ளது. வாஷிங்டன் மற்றும் அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்களுடன் கூடிச் செயற்படும் இலங்கையின் ஆளும் வர்க்கமும் அரசும் தான் வகுப்புவாத வன்முறையை தூண்டுகின்றன.

இன்று, இலங்கையில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரையிலான பிற்போக்குத்தனமான அரசாங்கங்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பெரிதும் ஆயுதமேந்திய கலகப் பிரிவு பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகளை அணிதிரட்ட முயற்சிக்கையில், இணைய தணிக்கை என்பது சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மீது பொலிஸ்-அரசு ஆட்சியைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் பாதுகாக்க இலங்கையில் பல பத்திரிகைகளும், செய்தி ஊடகங்களும் இராணுவ மிரட்டல் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன.

இராணுவ மிரட்டல்களையும், YouTube தடைகளையும் வெற்றிகரமாக தாண்டி சோசலிச முன்னோக்கை உழைக்கும் மக்களுக்கு கொண்டுசெல்ல முன்வருமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

இணைய தணிக்கையும், இராணுவ சர்வாதிகார ஆட்சியும் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அதன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளவும், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்க்கவும் பாதுகாக்கவும் முன்வருமாறு அழைப்புவிடுக்கிறது.

எமது கட்டுரைகளின் ஒலி வடிவை இங்கே கேட்கலாம்.  

உங்கள் கண்டன கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கும் அதே வேளை, பிரதிகளை தேர்தல் திணைக்களத்தின் தலைவருக்கும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அனுப்பி வையுங்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

மின்னஞ்சல்: secdefence@defence.lk தொலைநகல்: +94 11 2541529

தேர்தல் ஆணையாளர்

மின்னஞ்சல்: chairman@elections.gov.lk

தொலைநகல்: +94 11 2868426

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

தொலைநகல்: +94 11 2869239

ஆசிரியர் இந்த கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

சோ... வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன

[9 July 2020]

இலங்கை குறித்த உலக சோசலிச வலைத் தள பதிவினை முகநூல் அகற்றியது

[14 November 2018]