அமெரிக்க ஆளும் வர்க்கம் கொடிய இறப்புக்களுக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோருகிறது

15 July 2020

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவில் ஒரேநாளில் அதிரடியாக புதிய கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 71,787 என பதிவாகியது. ஞாயிறன்று, ஃபுளோரிடாவில் எந்த மாநிலத்தைக் காட்டிலும் அதிகமாக ஒருநாளில் 15,300 புதிய நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 46 மாநிலங்களிலும் பதிவாகும் தினசரி கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது, மேலும் அதேபோல தினசரி இறப்பு எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருகிறது, கடந்த வாரம் நாளொன்றுக்கு அண்ணளவாக 1,000 இறப்புக்கள் வரை நிகழ்ந்துள்ளன.

இந்த பேரழிவு ட்ரம்ப் நிர்வாகம் வழிநடத்திய பிரச்சாரங்களின் விளைவாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது, என்றாலும் நோய்தொற்றை கட்டுப்படுத்த எந்தவித தீவிரமான முயற்சியும் மேற்கொள்ளாமலேயே தொழிற்சாலைகளுக்கும் பணியிடங்களுக்கும் மீண்டும் வேலைக்குத் திரும்பும்படி தொழிலாளர்களை வலியுறுத்தியதற்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஆதரவளித்தது.

கோவிட்-19 நோய்தொற்று வெடித்து பரவி வரும் நிலைமைகளின் கீழ், இலையுதிர்காலத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இந்த உந்துதலானது, பெருநிறுவன இலாபங்களுக்காக உயிர்களைத் தியாகம் செய்ய முனைவதான வர்க்கப் போராட்டத்தின் ஒரு நனவுள்ள, இருகட்சி கொள்கையின் முக்கிய கூறாகவுள்ளது.

ஜூன் 10, 2020 அன்று நியூ ஜேர்சி நகரிலுள்ள பிராட்போர்ட் பள்ளிக்கு முன்னால் ஒரு தந்தை தனது குழந்தை முகக்கவசம் அணிய உதவுகிறார் (AP Photo/Seth Wenig, File)

அமெரிக்க ஆளும் வர்க்கம் மனித வாழ்க்கையை அலட்சியமாக பார்க்கிறது. இது, படுகொலைக்கு வழிவகுக்கும் தனது மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொள்கையை செயல்படுத்த எண்ணற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிர்களைத் தியாகம் செய்வதற்கு தயாராகிவிட்டது, அதாவது பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை மொத்தமாக அனுப்பினால் தான், அவர்களது பெற்றோர்கள் பாதுகாப்பாற்ற தொழிற்சாலைகளில் வேலை செய்து பெருநிறுவன இலாபங்களை பெருக்க முடியும் என்பதே இதன் தேவையாகும்.

இந்த சூழலில், ஜனநாயகக் கட்சிக்காகவும் மற்றும் அக்கட்சியுடன் கூட்டுசேர்ந்துள்ள நிதிய தன்னலக்குழுக்களின் பிரிவுகளுக்காகவும் குரல் கொடுக்கும் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை, “பள்ளிகளை மீண்டும் திறப்பது ஒரு மிகப்பெரிய முயற்சியாக இருக்கும். என்றாலும் இது செய்யப்பட வேண்டும்” என்ற தலைப்பில் சென்ற வார இறுதியில் பிரசுரித்த அதன் ஆசிரியர் தலையங்கத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அழுத்தம் கொடுத்து வரும் டொனால்ட் ட்ரம்புடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது.

மார்ச் மாதம், டைம்ஸ் பத்திரிகையின் முன்னணி கட்டுரையாளரான தோமஸ் ஃபிரைட்மன் (Thomas Friedman), “சிகிச்சை நோயை காட்டிலும் மோசமாக இருந்துவிடக் கூடாது” என்று பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை நியாயப்படுத்த ட்ரம்ப் பயன்படுத்திய கூற்றை சுட்டிக்காட்டினார். தற்போது இந்த செய்தியிதழ், ஆளும் உயரடுக்கின் வர்க்கப் போர் கொள்கைகளுக்கு சட்டபூர்வ தன்மையை வழங்குவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்த தலையங்கம், “இலையுதிர்காலத்தில் அமெரிக்க குழந்தைகளுக்காக பொதுப் பள்ளிகளை மீண்டும் திறப்பது அவசியம்… ஏனென்றால், அவர்களுக்கு உணவு மற்றும் நட்பு, புத்தகங்கள் மற்றும் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்கள், மேலும் குடும்பத்தை விட்டு விலகியிருக்கும் இந்த நேரத்தை செலவிட ஒரு பாதுகாப்பான இடம் ஆகியவை தேவை” என்று தொடங்குகிறது.

இது ஏமாற்று வாதமாகும். குழந்தைகள், நோய்தொற்றுக்கு தனது பெற்றோர், தாத்தா பாட்டி அல்லது ஆசிரியரை இழக்கும் அதிர்ச்சியுடன் ஒப்பிடும்போது, “குடும்பத்திலிருந்து விலகியிருக்கும் நேரம்” என்பது அவ்வளவு முக்கியமா? குழந்தைகளுக்கு என்ன தேவை என்பது பற்றி டைம்ஸ் பத்திரிகை கவலைப்படவில்லை. மாறாக, இது வோல் ஸ்ட்ரீட்டுக்கு என்ன தேவை என்பது பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட்டுக்கு குழந்தைகள் பள்ளிகளில் இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களது பெற்றோரை ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) மற்றும் எலோன் மஸ்க் (Elon Musk) போன்றவர்களுக்கு அடிமைப்படுத்தலாம் என்பதாகும்.

செய்தியிதழ் இதுபற்றி, “பெற்றோர்களைப் பொறுத்தவரை பொதுப் பள்ளிகளும் தேவை. தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு அவர்களுக்கு உதவி தேவை, அதேநேரத்தில் அவர்களுக்கு வேலையும் தேவை” என்று குறிப்பிடுகிறது. மேலும், “ஆலோசனை நிறுவனமான McKinsey, 27 மில்லியன் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அவர்கள் முழுநேர வேலைக்குத் திரும்பும் வகையில் பள்ளிகளை உள்ளடக்கிய குழந்தை பராமரிப்பு வசதி தேவைப்படுகிறது என்று மதிப்பிட்டுள்ளது” எனவும் இது குறிப்பிடுகிறது.

நோய்தொற்றிலிருந்து “பாதுகாப்பான” புகலிடத்தை குழந்தைகளுக்கு பள்ளிகள் வழங்கும் என்பதானது, அமெரிக்காவில் உள்ள பாழடைந்து போன, குறைவான நிதி பெற்ற மற்றும் பொதுவாக மோசமான நிலையிலுள்ள பள்ளிகளைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கும் கல்வியாளர்களுக்கும் அவை பாதுகாப்பானவை என்ற கூற்று ஒரு குற்றகரமான பொய்யாகும்.

அரசாங்க பொறுப்புடைமை அலுவலகம் (Government Accountability Office) கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கை, 41 சதவிகித பள்ளி மாவட்டங்களில் குறைந்தபட்சம் பாதி பள்ளிகளில் வெப்பமூட்டுதல், காற்றோட்டம் மற்றும் காற்றுப் பதனாக்க (air conditioning) முறைகளை புதுப்பிக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்று கண்டறிந்தது. மேலும் பசுமை பள்ளிகளுக்கான மையத்தின் (Center for Green Schools) 2016 ஆம் ஆண்டு அறிக்கை, நாட்டில் 15,000 பள்ளிகளில் மாணவர்களும் ஊழியர்களும் சுவாசிக்க தகுதியில்லாத வகையில் உட்புற காற்றின் தரம் குறைவாக உள்ளது என்று கண்டறிந்தது.

கொரொனா வைரஸ் நோய்தொற்று காற்றின் வழி பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ள, மற்றும் அண்ணளவாக மூன்றில் ஒரு பகுதி கல்வியாளர்கள் வைரஸ் தொற்றால் இறக்கக்கூடிய அதிகளவு அபாயம் நிலவுகின்ற நிலைமைகளின் கீழ், பரந்தளவில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டம் பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் உயிர் வாழ்விற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஜூன் 26 அன்று, 61 வயதான கிம்பர்லி சாவேஸ் லோபஸ் பைர்ட் (Kimberley Chavez Lopez Byrd) என்பவர், கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பிருந்த இரண்டு மற்ற அரிஸோனா ஆசிரியர்களுடன் கோடைக்கால பள்ளியில் ஒரு அறையை பகிர்ந்து கொண்டபோது அவருக்கும் நோய்தொற்று ஏற்பட்டு பின்னர் இறந்து போனார்.

வெள்ளியன்று ஊடகங்களுக்கு கசிந்த ஒரு உள் ஆவணத்தில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மையங்கள் (Centers for Disease Control and Prevention-CDC), மழலையர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முழுமையாக மீண்டும் திறப்பதானது கொரொனா வைரஸ் பரவுவதற்கான “அதிகபட்ச ஆபத்தை” உருவாக்கும் என்று எச்சரித்திருந்தது.

குழந்தைகள் வகுப்பறைகளில் இல்லாதபோது அவர்களுக்கு ஏற்படும் தீங்கு பற்றி புலம்புவதான ட்ரம்ப் மற்றும் அவரது தீவிர வலதுசாரி கோடீஸ்வர கல்விச் செயலாளரான பெட்ஸி டிவோஸ் (Betsy DeVos) ஆகியோரின் பாசாங்குத்தனமான அறிக்கைகளை அப்படியே டைம்ஸ் பத்திரிகை எதிரொலிக்கிறது. அவர்கள் விளையாடுகிறார்கள் என்பது யாருக்கு புரிகிறது? டைம்ஸ் பத்திரிகை மற்றும் ஏனைய பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவுடன், ஆட்சிக்கு வரும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் அடுத்தடுத்த நிர்வாகங்கள், பொதுக் கல்வியை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், நிதியளிப்பைக் குறைப்பது, பள்ளிகளை மூடுவது, ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது மற்றும் தனியார் இலாப நோக்க பள்ளிகளை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளையே மேற்கொண்டன.

டைம்ஸ் பத்திரிகை, “அதிக பணத்தையும் மற்றும் அதிக இடத்தையும்,” பெறுவதற்காக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதன் திட்டத்தை மையப்படுத்தி, “பள்ளிகளுக்கு பணம் திரட்டும் வகையில் ட்ரம்ப் வேலை செய்ய முடியும்” என்று பரிந்துரைக்கிறது. “Fox News Sunday” நிகழ்ச்சியில் “பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லையானால்… அவர்களால் நிதி திரட்ட முடியாது” என்று டிவோஸ் ஞாயிறன்று குறிப்பிட்டது, இந்த திட்டத்தின் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டியது. அதற்கு பதிலாக, தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு பள்ளி பற்றுச்சீட்டுகளுக்கு கூட்டாட்சி நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகளவிலான இடத்தைப் பெற, “உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளின்” “மறுபயன்பாட்டிற்கும்” மற்றும் “திறந்தவெளியில்” அல்லது “சுவர்கள் இல்லாத கூடாரங்களின் கீழ்” மற்றும் “பள்ளிகளை சுற்றியுள்ள தெருக்களை மூடி, அங்கு வகுப்புக்களை நடத்தவும்” செய்தியிதழ் முன்மொழிகிறது. இத்தகைய பிற்போக்குத்தனமான முட்டாள்தனம் மூச்சடைக்கிறது. டைம்ஸ் பத்திரிகை பேசுவது உண்மையான கல்வியுடன் எந்தவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, பெருநிறுவன இலாப நலன்களுக்காக குழந்தைகளின் உயிர்களை பலியிடும் வகையில் அவர்களை பள்ளிகளுக்குள் தள்ளும் ஒரு “சுமாரான திட்டமாகவே” இது உள்ளது.

உலகெங்கிலுமாக, முதலாளித்துவ வர்க்கத்தை தொழிலாள வர்க்கத்திலிருந்து பிரிப்பதான சமரசத்திற்கு இடமில்லாத நலன்களை நோய்தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ சொத்து மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீதான நேரடி தாக்குதலைத் தவிர்த்து நோய்தொற்று குறித்து மனிதாபிமான மிக்க மற்றும் பகுத்தறிவு மிக்க தீர்வுக்கான சாத்தியம் எதுவுமில்லை.

ஆளும் வர்க்கத்தின் படுகொலைக் கொள்கைகளுக்கு பதிலிறுக்கும் வகையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு உருவாகி வருகிறது. பெற்றோர்களும், கல்வியாளர்களும் பாதுகாப்பற்ற வகையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்ட #14daysNoNewCases என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது. பிரிட்டன் முதல் தென்னாபிரிக்கா வரையிலுமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து முகநூல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. “பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக டெக்சாஸ் ஆசிரியர்கள்” என்ற குழு அண்ணளவாக 6,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கடந்த வார இறுதியில், இல்லினாயில், ஜோலியட்டில் வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்கள், இல்லினாய் செவிலியர் சங்கம் (Illinois Nurses Association-INA) பேச்சுவார்த்தை நடத்தி பேரம் பேசிய ஒப்பந்தத்தை நிராகரித்தனர். மத்தியமேற்கு பகுதியெங்கிலுமுள்ள வாகனத் தொழிலாளர்கள், நிர்வாகத்தையும் மற்றும் முற்றிலும் ஊழல் நிறைந்த யுனைடெட் வாகனத் தொழிலாளர்கள் (United Auto Workers-UAW) தொழிற்சங்கத்தையும் மீறி தொழிற்சாலைகளில் சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை அமைத்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடந்துள்ளன.

அமெரிக்காவில், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு (American Federation of Teachers-AFT) மற்றும் தேசிய கல்வி சங்கம் (National Education Association-NEA) ஆகிய அமைப்புக்கள் உட்பட, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தொழிற்சங்கங்கள், ஜோ பைடனை தேர்ந்தெடுப்பது அனைத்து விவகாரங்களையும் தீர்க்கும் என்று கூறி, சிறிய தந்திரோபாய வேறுபாடுகளை மட்டும் வெளிப்படுத்தி, பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சாரத்திற்கு தாம் உடன்படுவதை சமிக்ஞை செய்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, NEA மற்றும் AFT மற்றும் அவர்களது மாநில மற்றும் உள்ளூர் துணை அமைப்புக்களுடனான உறவை முறித்துக் கொள்ளும்படியும், மேலும் பள்ளிகள் பாதுகாப்பற்ற வகையில் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக அணிதிரட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் அருகாமை பகுதிகளில் சுயாதீனமான சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை அமைக்கவும் கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இத்தகைய குழுக்கள் கல்வியாளர்களை பரந்த தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைக்க போராட வேண்டும்.

பாதுகாப்பற்ற வகையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை மற்றும் பள்ளிகளை மீண்டும் கட்டமைக்க ஒரு அழிவுகர திட்டத்தை கோருவதை தடுப்பதற்கும், மற்றும் அனைவருக்கும் உயர் தரமான, பாதுகாப்பான மற்றும் சமமான கல்வியை வழங்க தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கும் என ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் தேசியளவிலான வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் வேலை செய்ய மறுத்ததற்காக எந்தவொரு ஆசிரியருக்கோ அல்லது பள்ளிக்கோ அபராதம் விதிக்கப்படக்கூடாது. மேலும், நோய்தொற்று தொடரும் காலம் வரை அவர்களுக்கு வருமான இழப்பும் இருக்கக்கூடாது.

கல்வியாளர்களின் தேசியளவிலான வேலைநிறுத்தமானது, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், வாகனத் தொழிலாளர்கள், தளவாடத் தொழிலாளர்கள், சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தனியார் இலாப பலிபீடத்தில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்யும்படி நிர்பந்திக்கப்படும் அனைவரும் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளின் ஆதரவைப் பெறும்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் பொலிஸ் படுகொலையை தொடர்ந்து உலகளவில் எதிர்ப்பு அலைகள் எழுந்தது போல, அமெரிக்காவில் தேசியளவில் அபிவிருத்தி காணும் இந்த வேலைநிறுத்தம் உலகம் முழுவதுமாக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டுள்ளது போல, நோய்தொற்று பொது சுகாதார நெருக்கடி மட்டுமல்ல. இது பரந்த பரிமாணங்களில் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தூண்டியுள்ளது. பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொற்றுநோய்க்கு தனது மூலோபாய பதிலிறுப்பை உருவாக்கிய ஆளும் வர்க்கம், அப்போதிருந்து தொழிலாளர்கள் மீது இடைவிடாமல் தாக்குதல் நடத்தியே வந்துள்ளது. இந்நிலையில், தொழிலாள வர்க்கமும் சமமான உறுதியுடனும் இரக்கமற்ற தன்மையுடனும் இதற்கு பதிலிறுக்க வேண்டும். உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர்களை அச்சுறுத்தும் முதலாளித்துவ அமைப்பின் சோசலிச மாற்றத்திற்காக அது போராட வேண்டும்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

Trump’s back-to-work diktat threatens teachers’ lives
[9 July 2020]

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்!

[22 May 2020]

Evan Blake