புரூசெல்ஸில் மேர்க்கெல்: உயிர்களை விட இலாபங்களுக்கும், ஐரோப்பிய வல்லரசு அரசியலுக்கும் முக்கியத்துவம்

By Johannes Stern
16 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஜேர்மன் ஏற்றுக்கொள்வதைக் குறிக்க கடந்த புதன்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய உரை வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்த பின்னர் இதுவே அவரின் முதல் வெளிநாட்டு பிரசன்னமாக இருந்தது. அக்கண்டத்தில் புதிய கோவிட்-19 வெடிப்புகள், 1930 களுக்குப் பிந்தைய ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் பிரதான பொருளாதார சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் என்பவற்றின் பின்னணியில் மேர்க்கெல் உரையாற்றினார்.

“ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றிலேயே மிகப்பெரிய சோதனையின் பின்புலத்தில் இன்று நான் வந்துள்ளேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்,” என்றார். இந்த உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் "ஐரோப்பிய மக்கள் கடுமையாக இரக்கமின்றி பாதிக்கப்பட்டு" இருப்பதாக தெரிவித்த அவர், “ஐரோப்பாவில் மட்டுமே நூறாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அவர் தொடர்ந்து கூறினார்: “நமது பொருளாதாரம் ஐரோப்பா முழுவதிலும் தொடர்ந்தும் கடுமையாகவும் உலுக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர்.” “அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களது குடும்பங்களின் உடல்நலம் குறித்த கவலைகளுக்கு" மேலாக, பல குடிமக்கள் "அவர்களின் பொருளாதார உயிர்வாழ்வு குறித்தே கவலை கொண்டுள்ளனர்,” என்றார்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கல் புதன்கிழமை ஜூலை 8, 2020 புரூசெல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்உரையாற்றுகிறார். சுழற்சி முறையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பதவியைச் சமீபத்தில் ஏற்றுள்ள ஜேர்மனி, இந்த ஆழ்ந்த நெருக்கடி காலக்கட்டம் நெடுகிலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த 27 நாடுகள் அணிக்குத் தலைமை வகித்து, கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார சேதாரங்களைக் குறைக்க முயல வேண்டியிருக்கும். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Olivier Matthys)

நிச்சயமாக, இந்த அழிவுக்கு ஆளும் வர்க்கம் தான் முழு பொறுப்பு என்ற உண்மையை மேர்க்கெல் மறைத்தார். ஜனவரி மற்றும் பெப்ரவரியில் தொற்றுநோய் பரவிய போது, அவர் மக்களின் உடல்நலன் குறித்து கவலைப்படவில்லை, மாறாக பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதன் மீது கவலைக் கொண்டிருந்தார். எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களும் எந்தவித தயக்கமுமின்றி அவற்றின் பொருளாதார மற்றும் பொதுவாழ்வை நடத்துவதற்காக நோய் அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டின.

முதலில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் அந்த தொற்றுநோயின் கொடூர விளைவுகள் வெளிப்பட்டு, பெரிதும் மக்களின் கோபம் அதிகரிக்க தொடங்கிய போதுதான், அந்த அரசாங்கங்கள் வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டன. பின்னர் வரலாற்றிலேயே மிக அதிகளவில் செல்வவளத்தை அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு மறுபங்கீடு செய்வதை ஒழுங்கமைக்க பொதுமுடக்கம் பயன்படுத்தப்பட்டது. மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள், ட்ரில்லியன் கணக்கிலான தொகை கொரோனா வைரஸ் "மீட்பு பொதிகள்" என்ற வடிவில் வங்கிகளுக்கும், மிகப்பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கும் பரிமாறப்பட்டன.

அதேநேரத்தில், ஸ்தாபக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பாரிய இலாபங்களை உறிஞ்சுவதற்காக சாத்தியமானளவுக்கு வேகமாக பொருளாதாரத்தை மீட்டுயிர் பெறச் செய்யும் ஓர் ஆக்ரோஷமான பிரச்சாரத்தைத் தொடங்கினர். பில்லியன் கணக்கில் அரசு பணம் பெற்ற அதே நிறுவனங்கள் இப்போது, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், நீண்டகாலமாக அவை திட்டமிட்டு வந்த பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் கூலி வெட்டுக்களை முன்நகர்த்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வருகின்றன.

மேர்க்கெல் அவரின் உரையில், “உயிர்களை விட இலாபங்களுக்கான" கொள்கை ஆக்ரோஷமாக பின்தொடரப்படும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்போது பெரிதும் கைவிடப்பட்டுள்ள நிலையில், “அத்தியாவசிய அடிப்படை உரிமைகள்" மீதான ஒரு தாக்குதலையும் உள்ளடக்கி உள்ள அந்நடவடிக்கைகளை "பெரிய விலை செலுத்தியதாக" எரிச்சலூட்டும் விதமாக அவர் விவரித்தார்.

தகவல் தெளிவாக இருந்தது: அதாவது, பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதால் நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளில் ஏற்படும் பாரிய அதிகரிப்புக்கு மத்தியிலும், அங்கே எந்த புதிய அடைப்பும் இருக்காது. முதலாளித்துவ இலாபமீட்டலை மற்றும் பங்குச் சந்தையின் செல்வக்களியாட்டத்தையும் அதிகரிக்கச் செய்வதை ஆபத்திற்குட்படுத்தக்கூடிய எதுவும் அனுமதிக்கப்படாது.

மே மாத மத்தியில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் சேர்ந்து மேர்க்கெல் முன்மொழிந்த 500 பில்லியன் யூரோ ஐரோப்பிய மறுகட்டமைப்பு நிதியை மேர்க்கெல் புகழ்ந்துரைத்தார். “சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் சமத்துவமான ஐரோப்பாவுக்கு" என்ற அவரின் போலியான வாய்ஜம்பத்திற்கு அப்பாற்பட்டு, அந்த பணம் ஒரு புதிய சுற்று சமூக தாக்குதல்களுடன் இணைக்கப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஐரோப்பாவை "இன்னும் அதிக புதிய போட்டித்தன்மை" உடையதாக ஆக்க வேண்டியுள்ளது என்றவர் பலமுறை அவர் உரையின் போக்கில் வலியுறுத்தினார்.

அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய தேசங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே அவற்றின் உலகளாவிய பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதை ஐரோப்பிய நாடாளுமன்ற அங்கத்துவ நாடுகளுக்கு அவர் நினைவூட்டினார். ஐரோப்பா "தனது தலைவிதி சம்பந்தமான ஏதோவொன்றை எம்மிடம் ஒப்படைக்கவில்லை மாறாக ஐரோப்பா ஒரு உயிரோட்டமானது, அதை புதிதாக உருவாக்கவும் மாற்றியமைக்கவும் முடியும்" என்றார்.

ஒரு "பூகோளமயப்பட்ட உலகில்,” “ஐரோப்பா நம்மிடமிருந்து நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளைப் பறித்து விடவில்லை. … ஐரோப்பாவைக் கொண்டுதான் நாம் நமது நம்பிக்கைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்க முடியும், மாறாக அது இல்லாமல் அவற்றைச் செய்ய முடியாது” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்மன் தலைமையின் கீழ் ஓர் ஒருங்கிணைந்த ஐரோப்பிய இராணுவ மற்றும் வல்லரசு கொள்கை மூலமாக மட்டுமே புரூசெல்ஸூம் பேர்லினும் உலகெங்கிலும் அவற்றின் ஏகாதிபத்திய நலன்களைத் திணிக்கக் கூடியதாக இருக்கும்.

“நெருக்கடியிலிருந்து ஐரோப்பா ஒருங்கிணைந்து பலமாக வெளி வர வேண்டும்,” என்பதே "ஜேர்மன் தலைமையின் உயர்ந்த முன்னுரிமை,” என்றவர் தெரிவித்தார்.

“குறுகிய காலத்தில் ஐரோப்பாவை ஸ்திரப்படுத்துவது அல்ல" நோக்கம் என்ற மேர்க்கெல் பின்வருமாறு வலியுறுத்தினார்: “நிகழ்கால சவால்களை தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் முகங்கொடுக்கும் ஓர் ஐரோப்பாவை நாங்கள் விரும்புகிறோம். எதிர்காலத்திற்கு பொருந்தக்கூடிய, புதிய மற்றும் நீடித்த விதத்தில் உலகில் அதன் இடத்தைத் தக்க வைக்கக்கூடிய ஓர் ஐரோப்பாவை நாங்கள் விரும்புகிறோம்,” என்றார். “இந்த வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கில் யாருக்கு ஐரோப்பா தேவை என்பதை ஒருவர் முடிவெடுப்பது" அவசியமாகும், அதாவது புவிசார்அரசியல் சூழல் "ஒரு பலமான ஐரோப்பிய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு கொள்கையின் தேவையை" அடிக்கோடிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவிலிருந்து இன்னும் அதிக சுதந்திரமாக செயல்பட ஆற்றல் கொண்ட பாரியளவில் ஆயுதமேந்திய இராணுவ கூட்டணியாக மாற்றுவதன் அவசியம் குறித்து, மேர்க்கெல் முந்தைய பேட்டிகள் மற்றும் உரைகளில் குறிப்பிட்டதைப் போலவே, இதிலும் எந்த மூடிமறைப்பும் வைக்கவில்லை. “வரைபடத்தைப் பார்த்தால் தெரியும்,” "ஐரோப்பா அதன் வெளி எல்லைகளில் பிரிட்டன் மற்றும் மேற்கு பால்கன்களால் மட்டும் சூழப்பட்டிருக்கவில்லை, மாறாக ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன், துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொரொக்கோ, ஏனைய நாடுகளாலும் அது சூழப்பட்டுள்ளது,” என்றார். ஐரோப்பா "உலகளாவிய மேலெழுச்சியின் ஒரு காலக்கட்டத்தில்" வாழ்ந்து கொண்டிருக்கிறது, "இதில் அதிகார களங்கள் மாறி வருகின்றன, அட்லாண்டிக்கிற்கு இடையிலான கடந்த நாடுகளுக்கு இடையிலான கூட்டணியில் அதன் பல அங்கத்துவ நாடுகள் ஒருங்கிணைந்திருந்தாலும் ஐரோப்பா தனித்து விடப்பட்டுள்ளது" என்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

ஐரோப்பா அதன் வெளியுறவு கொள்கை அதிகார பலத்தை, சீனாவுக்கு சமப்படுத்தக்கூடிய அளவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. “ஐரோப்பிய ஒன்றியம்-சீனா உச்சிமாநாடு செப்டம்பரில் நடக்க இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக, அதை நடத்த முடியாதுள்ளபோதும், நாங்கள் சீனாவுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையைத் தொடர விரும்புகிறோம்,” என்று மேர்க்கெல் தெரிவித்தார். “சீனா உடனான மூலோபாய உறவுகள்" “நெருக்கமான வர்த்தகக் கொள்கை உறவுகளால் குணாம்சப்படுகின்றன, ஆனால் அதேயளவுக்கு முற்றிலும் வெவ்வேறு சமூக-அரசியல் கருத்துக்களாலும், குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது குறித்த அக்கறைகளாலும் கூட குணாம்சப்படுகின்றன.”

ஜேர்மனும் ஐரோப்பிய அரசு தலைவர்களும் வெளிநாட்டு கொள்கை சம்பந்தமாக எப்போதெல்லாம் "மனித உரிமைகள்" மற்றும் "சட்டத்தின் ஆட்சி" குறித்து பேசுகிறார்களோ அப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கின்றது. ஏனெனில் இந்த வார்த்தைகள் தவிர்க்கவியலாமல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் தொடர்புபட்ட ஏகாதிபத்திய நோக்கங்களை மூடிமறைக்கின்றன. “இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பிரச்சாரங்களுக்கு எதிராக நமது ஜனநாயகங்களை நடைமுறையளவில் பாதுகாக்க" புரூசெல்ஸில் மேர்க்கெல் அழைப்புவிடுத்தார்—இவை முக்கியமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இடதுசாரி எதிர்ப்புக்கு எதிராக அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கான குறிச்சொற்களாகும்.

ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் அதன் தலைமையின் தொடக்கத்திலேயே அது கூறுவதை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. போர்முறை ட்ரோன்களைக் கொள்முதல் செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு மற்றும் சமூகத்தில் இராணுவவாதத்தை இன்னும் உறுதியாக நங்கூரமிடுவதற்காக கட்டாய இராணுவச் சேவை வடிவத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான முன்னணி ஜேர்மனி அரசியல்வாதிகளின் கோரிக்கை ஆகியவற்றால் கடந்த வாரம் குறிக்கப்பட்டது.

இடது கட்சியிலிருந்து தீவிர வலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) வரையில் அனைத்து கட்சிகளும், ஊடகங்களுடன் சேர்ந்து, தேசியவாதத்தை எரியூட்ட ஒருங்கிணைந்து நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. “இப்போது தலைமை எடுக்க ஜேர்மனி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது, வேறு வழியேதுமில்லை,” என்று Redaktionsnetzwerk Deutschland ஒரு கருத்துரையில் குறிப்பிட்டது.

ஐரோப்பாவில் ஜேர்மன் தலைமைக்கான அதிகரித்தளவில் ஆக்ரோஷமான அழைப்புகளுக்குப் பின்னால் குறிப்பாக இரண்டு அபிவிருத்திகள் உள்ளன. முதலாவது, ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேர்க்கெல் உரைக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் சார்லஸ் மிக்கெல் எச்சரிக்கையில், ஜூலை 17-18 ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, ஐரோப்பிய மறுகட்டமைப்பு நிதி மீதான கவலைகளால் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே கூர்மையான கருத்து வேறுபாடுகள் இருப்பதாக எச்சரித்தார். கடன்கள் என்றில்லாமல் திரும்ப-செலுத்தாத உதவி நிதிகளின் வடிவில் நாடுகளுக்கு குறைந்தபட்சம் கொஞ்சமாவது பணம் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கடன் வாங்க வேண்டுமென்ற முன்மொழிவு, “இன்னமும் சிக்கலாக உள்ளது, இதை ஏற்றுக் கொள்வதே கூட சில உறுப்பு நாடுகளுக்கு மிகவும் சிக்கலாக உள்ளது.”

இரண்டாவதாக, தொழிலாள வர்க்கத்தில் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களை மட்டும் அதிகரித்துவிடவில்லை, அனைத்திற்கும் மேலாக, அது முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலைமையை அம்பலப்படுத்தி உள்ளது. ஜேர்மன் மறுஐக்கியம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பாரிய பெரும்பான்மை மக்களுக்கு வழங்க அதிகளவிலான வறுமை, அதிகரித்த பொலிஸ் அரசு நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரைத் தவிர வழங்க முதலாளித்துவ வர்க்கத்தால் வேறொன்றுமில்லை. பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் வடிவில் உலகெங்கிலும் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது, இது இப்போது ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Germany’s motto for the EU Council presidency: For militarism and war
[4 July 2020]

Merkel, Macron promote EU militarism amid growing conflicts with Washington
[30 June 2020]