அமெரிக்கத் தலைமையிலான “மீண்டும் வேலைக்குத் திரும்பும்” உந்துதல் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இறப்புக்களை பரவலாக்குகிறது

17 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, இலத்தீன் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை ஒரு கடுமையான மைல்கல்லை எட்டியதானது, வட அமெரிக்காவின் மொத்த இறப்பு எண்ணிக்கையை காட்டிலும் கடந்து செல்கிறது. இலத்தீன் அமெரிக்கா முழுவதிலுமாக கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பினால் 145,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்பதுடன், 3.5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகால காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பின்னர் பரந்த வறுமையும் சமத்துவமின்மையும் இப்பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன, இது ஒவ்வொரு நாட்டையும் குறிப்பாக வைரஸ் தொற்று எளிதாக பாதிக்கும் வகையில் மிகவும் நலிவுற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.

குறைந்த நிதி பெற்ற பொது சுகாதார அமைப்புக்கள் சீர்குலைந்துள்ள நிலையில், உலகளவில் அதிகளவு கோவிட்-19 நோயாளிகளை கொண்ட ஏழு நாடுகளில் நான்கு தற்போது இலத்தீன் அமெரிக்காவில் உள்ளன.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக, 1.9 மில்லியன் கோவிட்-19 நோயாளிகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெரு, சிலி மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன, மேலும் ஒவ்வொரு நாடும் 300,000 க்கு மேற்பட்ட கோவிட்-19 உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளைக் கொண்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள், பொதுவாக நோய்தொற்றுக்கான பரிசோதனைகள் முறையாக நடத்தப்படாத காரணத்தால், வைரஸ் பரவலை கடுமையாக குறைத்து மதிப்பிடுகின்றன. இத்தாலியும், அமெரிக்காவும் தற்போது ஒவ்வொரு 1,000 பேருக்கு 100 க்கு மேற்பட்டவர்களுக்கு நோய்தொற்றுக்கான பரிசோதனை செய்து வருகின்றன, அதேவேளை மெக்சிக்கோ 1,000 பேருக்கு வெறும் 5 பேரை மட்டுமே பரிசோதனை செய்கிறது, மேலும் பிரேசில் 1,000 பேருக்கு 7 பேரையும், பெரு 1,000 பேருக்கு 9 பேரையும் பரிசோதனை செய்கின்றன.

கொலம்பியாவின் பொகோட்டாவில் ஜூலை 13, 2020 திங்களன்று, கொரொனா வைரஸ் நோயாளிகள் அதிகமாகவுள்ள அண்டை நாடான சியுடாட் பொலிவரில் சிப்பாய்கள் ரோந்து செல்கின்றனர் (AP Photo/Fernando Vergara)

அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையிலும், மற்றும் நகரங்கள் தற்போது இறப்பவர்களுக்காக கல்லறை இடத்தை சீர்செய்ய உடல்களை தோண்டியெடுக்கும் நிலையிலும், இந்த பிராந்தியம் எங்கிலுமான அனைத்து அரசாங்கங்களும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் பெருநிறுவன இலாபத்திற்காக எண்ணற்ற உயிர்களை பலியிடும் வகையில், தமது பொருளாதாரங்களை மீண்டும் திறக்க துடித்துக் கொண்டிருக்கின்றன.

பிரேசிலில், ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோ இறப்பு எண்ணிக்கை குறித்து “அதனால் என்ன?,” என்று பதிலிறுத்து, அந்நாட்டில் வணிகங்கள் மீண்டும் திறக்கக்கப்பட்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். “ஆளுநர்களும் மேயர்களும் பொருளாதார மீட்சி குறித்த தனியுரிமை பற்றி பேசி மக்களை கொலைக்களத்திற்கு அனுப்பி வருகிறார்கள்,” என்று பிரேசிலிய மருத்துவ நிபுணர் ஒருவர் CNN க்கு தெரிவித்தார்.

மெக்சிக்கோவில், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வாகன உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் வாகன ஆலைகளும் மற்றும் மலிவு விலை உழைப்பிடங்களான மக்கில்லாடோராக்களும் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன, இந்நிலையில், ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடோர் (Andres Manuel Lopez Obrador) மக்களை மீண்டும் வேலைக்கு செல்லும்படி கூறி, “சுதந்திரமாக இருங்கள்,” என்றும் “வானத்தையும், சூரியனையும் மற்றும் புதிய காற்றையும் அனுபவியுங்கள்” என்றும் ஊக்கப்படுத்துகிறார். அதாவது, இந்த வாரம் மேலும் கட்டுப்பாடுகளை நீக்குவதாக இடதுசாரி லோபஸ் ஓப்ரடோர் அறிவித்து, வெளிப்படையாக போல்சொனாரோவின் கொள்கைகளை அப்படியே பிரதிபலித்தார். மேலும், சோளத்தை சாப்பிடுவதன் மூலம் வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று மெக்சிக்கோவினருக்கு அவர் முன்பே கூறியிருந்தார், அதை அவர் “ஆசீர்வதிக்கப்பட்ட பயிர்” என்று கூறுகிறார்.

நிகரகுவாவில், சாண்டினிஸ்டா டானியல் ஓர்ட்டேகா தலைமையிலான அரசாங்கம் நாட்டில் வைரஸ் தொற்று இருப்பதை கடுமையாக மறுத்துள்ளது, அதேவேளை ஹோண்டுராஸில் அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதியான ஜூவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸூக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மேலும், நாட்டின் மக்கில்லாடோராக்களை திறந்து வைத்திருக்கும்படி கட்டாயப்படுத்துவதற்காக, வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்துக்காட்ட போல்சொனாரோவைப் போல இவரும் தனது சொந்த நோயைப் பயன்படுத்தினார். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான உடைகள் மற்றும் காலணிகளை உற்பத்தி செய்வதற்காக நூற்றுக்கணக்கில் ஹோண்டுரான் தொழிலாளர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஹோண்டுரான் மருத்துவக் கல்லூரி இயக்குநரான லிஜியா ராமோஸ் (Ligia Ramos) இவ்வாறு ட்வீட் செய்தார்:

“நாம் மக்கில்லாடோராக்களை மூடவில்லையானால், நாம் மருத்துவமனைகளை மூட வேண்டியிருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒரு நண்பருக்காக, ஒரு சக ஊழியருக்காக அழுது கொண்டிருப்பது அர்த்தமற்றாகும். கடவுளின் அன்புக்காக குறிப்பாக மக்கில்லாடோராக்களை மூடுங்கள். அவர்கள் மக்கில்லாடோராக்களை தொடர்ந்து இயக்கி, மக்களின் வலியில் தொடர்ந்து பணத்தை சம்பாதிப்பார்களானால், நாங்கள் நோயை தடுக்க மாட்டோம்.”

அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சல்வடோரில், இந்த வைரஸ் தொற்று அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் மூலமாகவும் பரவியுள்ளது, அதிலும் அமெரிக்க அதிகாரிகளில் பலருக்கு நோய்தொற்று இருப்பது அறிந்தே கடத்தப்பட்டிருந்தனர்.

டிஜூவானாவிலிருந்து கேப் ஹார்ன் வரை, அமேசான் மழைக்காடுகளில் உள்ள உள்நாட்டு பழங்குடியினரிடமிருந்து மெக்சிக்கோ சிட்டி, லிமா மற்றும் ரியோ டி ஜெனிரோ போன்ற அடர்ந்த மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பெரும் நகரங்கள் வரையிலுமாக இந்த வைரஸ் வறிய பகுதிகளை நாசம் செய்து வருகிறது.

என்றாலும் வைரஸ் பரவி வரும் நிலையில் கூட, தனது சொந்த “மீண்டும் வேலைக்குத் திரும்பும்” பிரச்சாரத்திற்கு எரியூட்டுவதற்கு இலத்தீன் அமெரிக்க விநியோகச் சங்கிலிகள் மீண்டும் திறக்கப்படுவது தேவையாகவுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பாக இலத்தீன் அமெரிக்காவின் ஆளும் வர்க்கங்கள் மில்லியன் கணக்கானவர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தி வருகின்றன.

மார்ச் மாதத்தில், இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதி இந்த நோயின் பரவலான சமூக பரவலை மட்டும் வெறுமனே அனுபவிக்கத் தொடங்கியது. மெக்சிக்கோவும் ஹோண்டுராஸூம் மார்ச் 26 ஆம் திகதி வரை அவற்றின் முதல் கொரொனா வைரஸ் இறப்பின் தாக்கத்திற்குள்ளாகவில்லை, அதேவேளை பிரேசிலில் மார்ச் 19 இலும், மற்றும் சிலியில் மார்ச் 21 இலும் முதல் கொரொனா இறப்பு பதிவாகியது. பெருவில் முதல் இறப்பு ஏப்ரல் 1 அன்று பதிவானது. பெரும்பாலும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உற்பத்தி இந்த நேரத்தில் இந்த பிராந்தியம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஏப்ரல் மாதத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் இந்த பிராந்தியம் முழுவதுமாக, குறிப்பாக மெக்சிக்கோ மற்றும் பிரேசிலில் பரவலாக நடந்தன. ஏப்ரல் மத்தியில், வடக்கு மெக்சிக்கோவில் மக்கில்லாடோராக்களில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளை எதிர்த்து தொழிலாளர்கள் கண்டனம் செய்த நிலையில், ட்ரம்ப் இவ்வாறு அறிவித்தார்: “மெக்சிக்கோ ஜனாதிபதியுடன் நேற்று நான் பேசினேன். … மெக்சிக்கோ அல்லது கனடாவை தளமாகக் கொண்ட ஒரு விநியோகச் சங்கிலி எங்களது ஒரு பெரிய தயாரிப்பு மற்றும் ஒரு முக்கியமான தயாரிப்பு, அல்லது ஏன் ஒரு இராணுவ தயாரிப்புக்கு இடையூறு செய்யுமானால், அதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை, அதை மட்டும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

இதன் விளைவாக, அமெரிக்கா எங்கிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது அதேவேளை உற்பத்தியும் தொடர்ந்தது. உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது, பல டிரில்லியன் மதிப்பு கொண்ட CARES சட்ட பெருநிறுவன பிணையெடுப்பு மற்றும் மத்திய வங்கியிலிருந்து முடிவற்ற பண உட்செலுத்துதல்களுக்கு கிடைத்த வாக்குறுதி ஆகியவற்றிற்கு சந்தைகள் மீண்டும் நன்றி தெரிவித்தன.

தற்போது, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்யும் முன்முயற்சி அமெரிக்காவில் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது என்பதுடன், பரவலான நோய்தொற்று வெடிப்புக்கள் வாகன தொழிற்சாலைகள், இறைச்சி பொதியிடும் நிறுவனங்கள், பண்ணைகள் மற்றும் பண்டகசாலைகள் உட்பட, வட அமெரிக்க பணியிடங்களை மரணப் பொறிகளாக மாற்றியுள்ளன. அமெரிக்கா தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், இலத்தீன் அமெரிக்கா உற்பத்தியை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று வோல் ஸ்ட்ரீட் கோருகிறது.

கடந்த வாரம், மெக்சிகன் ஜனாதிபதி லோபஸ் ஓப்ரடோருடன் வாஷிங்டனுக்கு ட்ரம்ப் விஜயம் செய்ததன் நோக்கம், இரு நாடுகளின் வணிக நிர்வாகிகளும் சேர்ந்து இன்னுமிருக்கும் எந்தவித வேலை கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர அப்போது வலியுறுத்தினர் என்பதே. இரவு உணவுக்குப் பின்னர் அட்லாண்டிக் கவுன்சிலுடன் பேசுகையில், மெக்சிக்கோவுக்கான அமெரிக்க தூதரான கிறிஸ்தோபர் லாண்டவு (Christopher Landau), மெக்சிக்கோவில் உற்பத்தியை மேலும் விரைவுபடுத்துவது பற்றி “ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன்” என்று கூறினார். மேலும், “அவர்கள் உற்பத்தியை தொடங்காவிட்டால், அடுத்த வாரம் அமெரிக்காவில் உள்ள தங்களது தொழிற்சாலைகளை அவர்கள் மூடத் தொடங்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறினர்” என்றும் தெரிவித்தார்.

ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபியட் கிறைஸ்லர் போன்ற நிறுவனங்களில், சர்வதேச விநியோகச் சங்கிலிகள் பொலிவியன் மற்றும் சிலி சுரங்கங்கள், மத்திய அமெரிக்க மற்றும் மெக்சிக்கன் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி, மற்றும் அமெரிக்கா, ஆர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கனடாவிலுள்ள வாகன ஒருங்கிணைப்பு ஆலைகள் ஆகியவற்றை இணைக்கின்றன. இந்த நிறுவனங்கள், ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ந்து வரும் மீண்டும் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்தின் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டியுள்ளன.

மீண்டும் வேலைக்குத் திரும்பும் உந்துதல் பாதியளவு அபிவிருத்தி காண்கையிலேயே, ஃபோர்ட் நிறுவன பங்கு மதிப்பு மார்ச் 23 அன்று 4.01 டாலர் ஆக இருந்தது இன்று 6.30 டாலராக உயர்ந்துள்ளது, இது 57 சதவிகித அதிகரிப்பாகும். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன பங்கு மதிப்பு மார்ச் 18 அன்று 16.80 டாலராக இருந்தது தற்போது 25.32 டாலராக உயர்ந்துள்ளது, இது 51 சதவிகித அதிகரிப்பாகும். மேலும் ஃபியட் கிறைஸ்லர் நிறுவனத்தின் பங்கு மார்ச் 20 இல் 6.35 டாலருக்கு விறகப்பட்டது, இன்று அதன் விலை 10.23 டாலராக அதிகரித்துள்ளது, இது 61 சதவிகித அதிகரிப்பாகும்.

இதற்கிடையில், வெறும் நான்கு மாதங்களில், அவசர உணவு உதவி தேவைப்படும் இலத்தீன் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது என்று ஐ.நா. தெரிவிக்கிறது. மேலும் உலக வங்கி, இந்த ஆண்டு இலத்தீன் அமெரிக்காவில் 50 மில்லியன் மக்கள் வறுமைக்கு ஆளாவார்கள் என்ற நிலையில், மொத்த வறியவர்களின் எண்ணிக்கை அங்கு 230 மில்லியனாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.

வைரஸ் பரவலின் விளைவாக, தீவிர வறுமை 4.5 சதவிகிதத்திலிருந்து 15.5 சதவிகிதமாக மும்மடங்காக உயர்ந்து, கை கழுவுவதற்கு கூட சுத்தமான தண்ணீர் கிடைக்காத மில்லியன் கணக்கான மக்கள் உட்பட, வறுமையில் வாடுபவர்களின் மொத்த எண்ணிக்கை 96 மில்லியனாக அதிகரிக்கும்.

வைரஸ் வேகமாக பரவி வரும் பெருவின் லிமா நகரின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தொழிலாள வர்க்க அண்டை நாடுகளில், சராசரி வேலை நேரம் 80 சதவிகிதம் குறைந்துவிட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டில் பிராந்தியம் முழுவதுமாக 44 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருப்பார்கள். மேலும், விபச்சாரம் அதிகரித்து வருவதாக பரவலான தகவல்கள் உள்ளன.

என்றாலும், இங்கேயும், பெருநிறுவன அமெரிக்காவிற்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்காகவும் இன்னும் நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.

பரந்த வேலையின்மையும் நோயும் ஊதியங்கள் மீதான இத்தகைய கீழ்நோக்கிய அழுத்தத்தை உருவாக்கும் நிலையில், “எதுவானாலும், இலத்தீன் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, நாணயங்களின் மதிப்பு இருமடங்கு குறைந்து போனதாலும், மற்றும் தொழிலாளர் செலவினங்கள் குறைக்கப்பட்டதாலும் உற்பத்தியாளர்கள் ஆசியாவை நோக்கிச் செல்வதைக் காட்டிலும் இலத்தீன் அமெரிக்காவில் உற்பத்தியை விரிவுபடுத்த வழிவகுக்கும்” என்று இந்த மாதம் S&B Global நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பெருநிறுவன அமெரிக்காவின் அடிமட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதன் புவிசார் மூலோபாய போட்டியாளரான சீனாவை ஓரம்கட்டுவதற்கும் உதவும்.

பணியிட பாதுகாப்பிற்கான போராட்டத்திலும், அமெரிக்காவின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் உந்துதலுக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் ஒரு பகுதியாக பொதுவான நடவடிக்கை தேவைப்படுகிறது. இது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வா சாவா பிரச்சினையாகவுள்ளது.

எல்லாப் பகுதிகளிலும் உலகப் பொருளாதாரத்தின் தீவிர மாற்றத்திற்கான ஏக்கம் உள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் இந்த பிராந்தியத்தை புரட்டிப்போட்ட ஆர்ப்பாட்டங்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. என்றாலும், ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கு தான் தற்போது தேவைப்படுகிறது. எனவே, இலத்தீன் அமெரிக்கா முழுவதிலுமான வாசகர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (International Committee of Fourth International) இன்றே தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Eric London