ஜேர்மன் அரசு உளவுத்துறை முகமை வலதுசாரி தீவிரவாதிகளின் விபரங்களை அழிக்கிறது

By Christoph Vandreier
18 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் உறுப்பினர்கள் குறித்து சேகரிக்கப்பட்டிருந்த தரவுகளை அழிப்பதென்ற சாக்சோனி மாநில உளவுத்துறை முகமையின் முடிவு, சாக்சோனியில் மட்டுமல்ல நாடெங்கிலும் ஜேர்மனியின் இரகசிய சேவைகளுக்கும், தேசிய அரசுக்கும் மற்றும் அதிவலது தீவிரவாத வட்டாரங்களுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.

தற்போது சாக்சோனி மாநில சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் AfD உறுப்பினர்கள் மீது சேகரிக்கப்பட்ட எல்லா விபரங்களையும் அழிக்குமாறு, சாக்சோனி உள்துறை அமைச்சகம், உத்தியோகபூர்வமாக அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் என்றறியப்படும் அதன் உளவுத்துறை சேவைக்கு அறிவுறுத்தி இருந்ததாக கடந்த புதன்கிழமை தகவல்கள் வெளியாயின. அந்த முகமையின் தலைவர் Gordian Meyer-Plath அழிப்பதற்கான அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்தபோது, அவர் உடனடியாக கடந்த செவ்வாயன்று டிர்க்-மார்டின் கிறிஸ்தியானைக் (Dirk-Martin Christian) கொண்டு பிரதியீடு செய்யப்பட்டார்.

உள்துறை அமைச்சக இரகசிய சேவையின் தொழில்நுட்ப மேற்பார்வை பிரிவுக்கு முன்னர் தலைமை கொடுத்து வந்த கிறிஸ்தியான், AfD தரவுகளை அழிக்க உத்தரவிட்டுள்ளார். அகதிகளுக்கு எதிராக இனவாத பிரச்சாரங்களை நடத்தி, இடதுசாரிகளையும் மற்றும் அதன் அரசியலை எதிர்க்கும் அனைவரையும் அச்சுறுத்துகின்ற ட்ரேஸ்டன் நகரின் (Dresden) அதிவலது தீவிரவாத பெஹிடா இயக்கத்தைக் கண்காணிப்பதிலிருந்தும் உளவுத்துறை முகமையை அவர் 2019 இறுதியில் தடுத்திருந்தார்.

Wahlabend Sachsen 2019: Martin Dulig (SPD), Ministerpräsident Michael Kretschmer (CDU), Jörg Urban (AfD), by: Sandro Halank, Wikimedia Commons, CC BY-SA 4.0

அதிவலது மார்சியா மாணவர் சகோதரத்துவ அமைப்பின் ஒரு நீண்டகால உறுப்பினரான Meyer-Plath, 10 பேரைப் படுகொலை செய்த நவ-நாஜி பயங்கரவாத குழுவான தேசிய சோசலிச தலைமறைவு இயக்கத்தின் ஓர் ஆதரவாளரான Carsten Szczepanski உடனான தொடர்புகளுக்குப் பொறுப்பான முன்னாள் தலைமறைவு அதிகாரியாவார். அரசு இரகசிய சேவையின் தலைவராக இருந்த Meyer-Plath இடதுசாரிகளையும் பாசிசவாத-எதிர்ப்பாளர்களையும் இலக்கில் வைப்பதில் ஒருமுனைப்பட்டிருந்தார், அதேவேளையில் அவர் அதிவலது பயங்கரவாத வலையமைப்புகள் மற்றும் AfD க்கு பாதுகாப்பு மறைப்பையும் வழங்கி வந்தார். இத்தகைய ஒரு நபர் நாடாளுமன்றத்தின் AfD உறுப்பினர்கள் மீதான தரவுகளை அழிக்க விரும்பாததற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது உள்துறை அமைச்சகத்திற்கும் AfD க்கும் இடையே எந்தளவுக்கு கூட்டுறவு நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) உள்துறை அமைச்சர் Roland Wöller உம் மற்றும் கிறிஸ்தியானும் வியாழக்கிழமை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இதை தெளிவுபடுத்தினார்கள். கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் உறுதிப்படுத்திய Wöller, AfD இன் தரவுகள் அழிக்கப்பட்டதைப் பாதுகாத்தார். அந்த தரவுகள் "சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததால்" அது அவசியப்பட்டது என்றவர் வாதிட்டார்.

Wöller பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள், தகவல் வழங்கியவர்களின் அறிக்கைகள் மற்றும்/அல்லது ஏனைய உளவுத்துறை தகவல்களைக் குறித்து குறிப்பிடவில்லை. இந்த தரவுகள் பிரத்தியேகமாக பொதுவெளியில் பெறக்கூடிய ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை என்றும், AfD சம்பந்தப்பட்ட தரவுகள் அவர்களின் அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் மீது போதிய ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அந்த தகவல்களை சேமித்து வைப்பது "சட்ட விரோதமானது" என்றும் கிறிஸ்தியான் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், Wöller தகவல்படி, உளவுத்துறை முகமையின் பல ஆண்டு கால வேலையின் போக்கில், சாக்சோனியில் தனிப்பட்ட AfD உறுப்பினர்கள் பின்தொடர்ந்த அதிவலது தீவிரவாத நோக்கங்களை அந்த முகமையால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாகிறது.

இந்த அர்த்தமற்ற வாதம் தரவுகளை அழிப்பதை நியாயப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. சாக்சோனி மாநில நாடாளுமன்றத்தின் AfD கன்னை மீதான ஒரு மேலோட்டமான பார்வை கூட, அந்த குழுவின் பெரும்பான்மையினர் அதிவலது தீவிரவாதிகள் என்பதைத் தெளிவுபடுத்தும்.

2014 இல் இருந்து மாநில நாடாளுமன்றத்தின் AfD கன்னைக்குத் தலைமை வகித்தவரும் 2018 இல் இருந்து அதன் மாநில அமைப்புக்குத் தலைமை வகித்தவருமான Jörg Urban பகிரங்கமாகவே அதிவலது கண்ணோட்டங்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். அவர் "ஒரே விதமான மக்களுக்கு" அழைப்பு விடுப்பதுடன், “வெள்ளையின ஐரோப்பிய கலாச்சாரத்தை" பெருமைப்படுத்தி, “பாலியல் பலாத்காரவாதிகளின் கரங்களிலும்" மற்றும் "வரவேற்பு கலாச்சாரத்தின் (2015 இல் புலம்பெயர்ந்தவர்களை ஜேர்மனி ஏற்றுகொண்டதைக் குறித்த குறிப்பு) கொலைகார அணிகளிடமும் நமது இளம்பெண்களை" பலவந்தப்படுத்தும் "நற்சிந்தனைவாத பிரதிநிதிகளை" அவர் குற்றஞ்சாட்டுகிறார். மீண்டும் ஏப்ரல் 2019 இல், ட்ரேஸ்டன் நீதிமன்றம் ஒன்று, இதுபோன்ற கருத்துக்களின் அடிப்படையில், Urban ஐ "நவ-நாஜி" என்று அழைக்கலாமென தீர்ப்பளித்தது.

AfD இன் தேசியவாத "அணிக்கு" அவர் ஆதரவளிப்பதில் Urban எந்த மூடிமறைப்பும் வைக்கவில்லை, அந்த "அணிக்கு" சமீபத்தில் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் "சுதந்திரமான ஜனநாயக, அரசியலமைப்பு ஒழுங்கை எதிர்க்கும் அதிவலது தீவிரவாத முயற்சிகளின் தீர்க்கமான அறிகுறிகளை" எடுத்துக்காட்டுவதாக சான்று வழங்கியது. 2019 இல் Kyffhäuser இல் நடத்தப்பட்ட அந்த "அணியின்" ஒரு கூட்டத்திற்கு அனுப்பிய அவரின் ஒரு வாழ்த்துரையில், Urban அங்கே வந்திருந்தவர்களை "மிதவாத சிந்தனையாளர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மைகளை எதிர்கொண்டு தப்பியோடும், சாக்சோனியின் இரகசிய சேவையின் புதிய தலைவர் கிறிஸ்தியான் வியாழக்கிழமை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவிக்கையில், AfD உறுப்பினர்களில் யாரும் இதுவரையில் அந்த "அணியின்" உறுப்பினராக இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என்று அறிவித்தார். “நாம் அவசர அவசரமாக முடிவுகளை எடுத்தால், பின்னர் பொதுமக்களிடையே மற்றும் அடைக்கப்பட்ட மக்களிடையே சென்று, அதை நம்மால் நிரூபிக்க முடியாதபோது, நாம் ஜனநாயகத்திற்கு அதிகமாக பாதிப்பேற்படுத்துவோம்,” என்று கிறிஸ்தியான் தெரிவித்தார்.

மற்ற கூட்டாட்சி மாநிலங்களுக்கு முரண்பாடாக ஏன் சாக்சோனி மாநிலம் மட்டும் AfD நிர்வாகங்கள் மீதான ஆதாரங்களைச் சேகரிக்க மறுக்கிறது என்று கேட்கப்பட்ட போது, கிறிஸ்தியான் விவரித்தார்: “மற்ற எல்லா கூட்டாட்சி மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி அரசுகளைப் போலவே அதே சட்ட அடித்தளம் தான் நாமும் கொண்டுள்ளோம் என்றாலும், நம்மிடையே வேறு வேறு விதமான தனிநபர்கள் இருக்கிறார்கள். பிராண்டன்பேர்க் அல்லது சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலங்களில் இருந்து வந்தவருக்கு நிகராக சாக்சோனியிலிருந்து வந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை என்னால் நிறுத்த முடியாது. அவர்களுக்குப் பின்னால் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள்,” என்றார்.

கிறிஸ்தியான் தயாராகவே வலதுசாரி தீவிரவாத கலகக்காரர்களையும், “அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும்" பாதுகாக்கின்ற அதேவேளையில், அவரின் முகமையோ பல ஆண்டுகளாக இடதுசாரி மற்றும் பாசிச-விரோத குழுக்களை ஆக்ரோஷமாக பின்தொடர்ந்து வருகிறது.

சான்றாக, அதன் 2018 அறிக்கையில், அந்த மாநில இரகசிய சேவை நான்கு இடதுசாரி இசைக் குழுக்களை —Dr. Ulrich Undeutsch, East German Beauties, Endstation Chaos மற்றும் One Step Ahead— “இடதுசாரி தீவிரவாத" குழுக்களாக ஆக கண்டித்தது. அதன் வாதத்தை நியாயப்படுத்த, பாடலின் வரிகள் உள்ளடக்கத்திற்குப் புறம்பாக எடுக்கப்பட்டதுடன், ஒருதலைபட்சமாக பொருள்விளங்கப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு ட்ரேஸ்டன் நிர்வாக நீதிமன்றம் இரகசிய சேவையால் அந்த இசைக்குழுக்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதும் கண்காணிக்கப்படுவதும் சட்டவிரோதமானதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

கெம்னிட்ஸில் நடந்த அதிவலது கலகங்களுக்குப் பின்னர் 70,000 பேர் கலந்து கொண்டிருந்த நாஜி-எதிர்ப்பு இசைக் கச்சேரியை ஒழுங்கமைத்தவர்கள் மீது, முன்னதாக சாக்சோனி இரகசிய சேவை, இடதுசாரி தீவிரவாதிகளுக்கு ஓர் அரங்கம் வழங்கி இருந்ததாகவும், “அவர்களின் தீவிரவாத சித்தாந்தம் தீவிரவாத கொள்கையில்லாதவர்கள்" மீது மேலாளுமை செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது. இரகசிய சேவை, இதற்கு ஆதாரமாக, அங்கே கலந்து கொண்டவர்களிடம் இருந்து "எச்சரிக்கை, பாசிச-எதிர்ப்பாளர்களே எச்சரிக்கை" என்ற கூச்சல்களை — அதாவது, பாசிச-எதிர்ப்பாளர்கள் சுதாகரிப்புடன் இருக்குமாறு வந்த அழைப்புகளைக் குறிப்பிட்டது.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் Wöller வலதுசாரி தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சில வெற்றுரைகளை வழங்கிய அதேவேளையில், அவர் தலைமையின் கீழ் உள்ள அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் அதிவலது தீவிரவாதிகளைப் பாதுகாப்பதையும் மற்றும் இடதுசாரிகளைக் குற்றவாளிகளாக்குவதையும் தொடரும் என்பதை நிறைவாக தெளிவுபடுத்தினார்.

“எந்தவித தீவிரவாதத்தையும்" “மிகப்பெரும் ஆபத்தாக" விவரித்த கிறிஸ்தியான், வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் வெறும் ஒரு கவனிப்பு புள்ளிதான் என்று வலியுறுத்தினார். "ஒட்டுமொத்தமாக அரசியல் தீவிரவாதத்தை நிறுத்துவதே" தனது பணியாக அவர் கருதினார். வலதுசாரி தீவிரவாதிகளுடன் உத்தியோகபூர்வ கூட்டுறவை தொடர்வதையும் அதிகரிப்பதையும் நியாயப்படுத்த இதுபோன்ற வார்த்தைகள் சமீபத்திய ஆண்டுகளில் பொதுவான வழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்த அரசியல் போக்கிற்கு வெறுமனே CDU இல் இருந்து மட்டுமல்ல, மாறாக அம்மாநிலத்தில் அதன் இரண்டு கூட்டணி பங்காளிகளான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சியிடமிருந்தும் (Greens) ஆதரவு உள்ளது. Wöller இன் மழுப்பல்களைப் பாதுகாத்த சாக்சோனி மாநில நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சி அணியின் தலைவர் Valentin Lippmann அறிவிக்கையில், “ஒருவர் அரசியலமைப்புக்கு எதிரான எதிரிகளை அரசியலமைப்புக்கு புறம்பான நடைமுறைகளைப் பயன்படுத்தி எதிர்க்கக் கூடாது,” என்றார். கிறிஸ்தியானின் விடையிறுப்பையும் அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதையும் Lippmannமுழுமனதாக பாராட்டினார்.

AfD இன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாகத்தில் வலதுசாரி தீவிரவாதம் இருப்பதை இரகசிய சேவையால் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற Wöller மற்றும் கிறிஸ்தியானின் அர்த்தமற்ற வாதத்தை இடது கட்சியும் ஆதரிக்கிறது. பாசிச-எதிர்ப்பு கொள்கைக்கான இடது கட்சியின் செய்தி தொடர்பாளர் Kerstin Köditz ஐ பொறுத்த மட்டில், அம்மாநில உளவுத்துறை முகமை "AfD இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தரவுகளை அது ஏன் சேகரிக்க வேண்டும் என்பதை உள்துறை அமைச்சகத்திற்கு நியாயப்படுத்துவதில் மிகவும் முட்டாள்தனமாக" இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆகவே தான், அந்த அமைச்சகம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சேகரித்து வைக்கப்பட்ட தரவுகள் சட்டவிரோதமானவை என்பதுடன் அவை அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது,” என்று Köditz தெரிவித்தார்.

அந்த அமைச்சகமும் அந்த ஆணையமும் "முட்டாள்தனமாக" நடந்து கொள்ளவில்லை மற்றும் அரசியல் பற்றுகோளுடன் நடந்து கொள்ளவில்லை என்ற வாதத்திற்குக் கூடுதலாக, ஜேர்மன் ஊடகங்கள், சாக்சோனியில் என்ன நடந்ததோ அது அப்பிராந்திய விடயம் என்ற அர்த்தமற்ற கருத்தையும் பரப்பி விட்டு வருகின்றன.

உண்மையில் அந்நாடு முழுவதிலும் கட்சிகளும் அரசாங்கங்களும் அரசு எந்திரத்துடன் அதிவலது வலையமைப்புகள் எவ்வளவு நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன என்பதற்கு சாக்சோனி சமீபத்திய, மிகவும் தெளிவான எடுத்துக்காட்டு மட்டுந்தான். சாக்சோனியில் நடந்ததைப் போன்ற அதே நிகழ்வுகள் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்திலும் (Bundesverfassungsschutz - BfV), மற்றும் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் கரங்களிலும் நடந்துள்ளன. சமீபத்திய செய்திகளின்படி, AfD மற்றும் அதன் "அணியை", அத்துடன் AfD இன் நவ-பாசிசவாத இளைஞர் அமைப்பான "இளைஞர் மாற்றீடு" அமைப்பையும் 2019 க்கான உளவுத்துறை முகமையின் ஆண்டு அறிக்கையில் உள்ளடக்குவதை சீகோவர் எதிர்த்தார்.

ஆனால் இத்தகைய அமைப்புகள் அதன் அறிக்கையில் இணைக்கப்பட வேண்டுமென BfV வலியுறுத்தியது — ஏனென்றால் அந்த கட்சிக்கு எதிராக அது நடவடிக்கை எடுக்க விரும்பியது என்பதற்காக அல்ல, மாறாக அந்த அறிக்கை "அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் எதிர்ப்பைச்" சந்திக்கும் என்ற அச்சத்தால் ஆகும் என்று ஜேர்மன் செய்தி நிறுவனம் அறிவித்த உள்அலுவலக பரிவர்த்தனை கடிதங்கள் குறிப்பிட்டிருந்தன. அந்த இரகசிய சேவை அறிக்கையின் வெளியீடு காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.

AfD அல்லது அதன் தனிப்பட்ட அணிகள் உண்மையில் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தால், அதுதான் முதல்முறையாக அக்கட்சி வலதுசாரி தீவிரவாத அத்தியாயத்தில் இடம் பெறுவதாக இருந்திருக்கும். பல்வேறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட Combat18 போன்ற அதிவலது பயங்கரவாத அமைப்புகள் கூட இரகசிய சேவையின் கடந்த வருடாந்தர அறிக்கையில் இடம் பெறவில்லை.

அதற்கு பதிலாக இரகசிய சேவையோ அதிவலதை எதிர்ப்பவர்கள் அனைவரையும் குற்றமயமானவர்களாக ஆக்குகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP), முதல்முறையாக இடதுசாரி தீவிரவாத அமைப்பாகவும் கண்காணிப்புக்குரிய அமைப்பாகவும் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டது. அந்த அறிக்கையில் அது பெயரிடப்பட்டிருப்பது குறித்து அக்கட்சி சட்டபூர்வமாக புகார் அளித்ததும், கூட்டாட்சி அரசாங்கம் "ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமூகத்திற்காக போராடுவது" ஜேர்மன் அரசியலமைப்பிற்குப் பொருந்தாது என்று வாதிட்டு, SGP மீதான உளவுபார்ப்பைப் பாதுகாத்தது.

உள்நாட்டு உளவுத்துறைச் சேவையும் தீவிர வலதுசாரி காட்சியுடன் அதன் நெருக்கமான உறவுகளும், அரசின் இராணுவவாதம், பொலிஸ்-அரசு கட்டமைப்பின் அதன் கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையை எதிர்ப்பவர்கள் எவராயினும் அவர்களை மிரட்டுவதற்காக அதனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறிப்பாக சாக்சோனியில் அம்மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வலதுசாரி தீவிரவாத கட்டமைப்புகளை மூடிமறைப்பதில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

கட்டுரையாள் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Former head of German Secret Service publishes fascist manifesto
[7 December 2019]

Stop the right-wing conspiracy! Defend the SGP against the Verfassungsschutz secret service!
[26 July 2019]