அதிகரித்து வரும் நெருக்கடியை முகங்கொடுக்கையில் அமெரிக்கா சீனாவை கடுமையாக தாக்குகின்றது

21 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம் சீனாவுக்கு எதிரான அமெரிக்கபோர் முனைவில் மிகப்பெரிய அதிகரிப்பை குறித்தது. உள்நாட்டில் ஓர் ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியையும், அவரின் மோசமடைந்து வரும் தேர்தல் வெற்றிக்கான வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் ஒருதொடர் வெடிப்பார்ந்த பிரச்சினைகளில் சீனாவை ஆக்ரோஷமாக எதிர்கொண்டு வருகிறார்.

ஓர் அச்சுறுத்தும் அறிகுறியாக, இவ்வாரம் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தென் சீனக் கடலில் நடைமுறையளவில் சீனாவின் எல்லா உரிமைகோரல்களையும் "சட்டவிரோதமானவை" என்று உத்தியோகபூர்வமாக முத்திரை குத்தியதுடன், அப்பிராந்தியத்தின் சிறிய நாடுகளை அது "மிரட்டி வருவதாகவும்" மற்றும் "சர்வதேச விதி அடிப்படையிலான நடைமுறைகளை" அது மதிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். தென் சீனக் கடலில் சீனாவில் உரிமைகோரல்களை எதிர்க்கும் பிராந்திய நாடுகளின் உரிமைக்கோரல்களுடன் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பக்கசார்பெடுப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் சம்பந்தப்பட்டுள்ள பாசாங்குத்தனம் மலைப்பூட்டுகிறது. சீனாவைக் கண்டிக்க பொம்பியோ கையிலெடுத்த அதே சட்டத்திற்கு, அதாவது, கடல் சட்டத்தின் மீதான ஐ.நா. தீர்மானத்திற்கு கட்டுப்பட அமெரிக்கா மறுக்கிறது. இந்த விதிமுறை அடிப்படையிலான நடைமுறை என்றழைக்கபடுவதில் வாஷிங்டன் தான் மற்றவர்களுக்கு விதிகளைத் தீர்மானிக்கிறது, அதேவேளையில் சர்வதேச சட்டத்தை அதன் விருப்பத்திற்கேற்ப மீறுகிறது. சட்டவிரோத படையெடுப்புகள், இராணுவத் தலையீடுகள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் உட்பட அமெரிக்க ஏகாதிபத்திய அடாவடித்தனத்தின் முன்வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நீண்டுசெல்கின்றது.

பெய்ஜிங் எதை அதன் "முக்கிய நலன்" என்று அறிவித்துள்ளதோ, அதாவது அங்கே சமரசத்திற்கு இடமே இல்லை என்று அறிவித்துள்ள தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ பலத்தை வியத்தகு முறையில் தீவிரப்படுத்துவதற்கு பொம்பியோவின் அறிக்கை களம் அமைக்கிறது. இம்மாத ஆரம்பத்தில், தென் சீனாவில் உள்ள முக்கிய சீன இராணுவத் தளத்திற்கு அருகே ஆத்திரமூட்டக்கூடிய விதத்தில் இந்த மூலோபாய கடற்பகுதிகளில், அமெரிக்க கடற்படை, இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் தாக்கும் குழுக்களை உள்ளடக்கிய "உயர் நிலை" போர் பயிற்சிகளை நடத்தியது. இவ்வாரம், பொம்பியோவின் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதைப் போல, ஓர் அமெரிக்க நடுத்தர போர்க்கப்பல் தென் சீனக் கடலில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள தீவுக்குன்றுகளுக்கு நெருக்கத்தில் "கடற்போக்குவரத்து சுதந்திரம்" என்றழைக்கப்படும் மற்றொரு நடவடிக்கையை நடத்தியது.

ட்ரம்ப் செவ்வாய்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில், சீன பிராந்தியத்துடன் முன்னுரிமை மிக்க வர்த்தக பரிமாற்றங்களை நிறுத்துவது மற்றும் அதிமுக்கிய தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிகளுக்கு தடைவிதிப்பது உட்பட ஹாங்காங் நோக்கி பல தண்டிக்கும் விதமான நடவடிக்கைகளை அறிவித்ததன் மூலமாக, சீனாவை நோக்கிய அவரின் போர்நாடும் நிலைப்பாட்டை மீள எடுத்துக்காட்டினார். அவர் ஹாங்காங் சுயாட்சி சட்டத்திலிருந்து விலகுவதாகவும் கையெழுத்திட்டார். இது ஹாங்காங் மீது புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தைத் திணிப்பதில் சம்பந்தப்பட்ட சீன அதிகாரிகளுக்குத் தடைவிதிப்பதற்கு வழி வகுக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில், சீனாவின் மேற்கத்திய மாகாணமான ஜின்ஜியாங் மற்றும் திபெத்திற்கு உள்ளேயும் உள்ள முஸ்லீம் வீகர் இன மக்கள் மீது மனித உரிமை துஷ்பிரயோகங்கள் நடப்பதாக கூறி அதில் சம்பந்தப்பட்ட சீன அதிகாரிகள் மீதும் தடையாணைகள் பிறப்பித்துள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) குறிப்பாக தொழிலாள வர்க்கம் மீது பரந்த பொலிஸ் அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்ற அதேவேளையில், அமெரிக்காவோ ஹாங்காங், ஜின்ஜியாங் அல்லது திபெத் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக சிறிதும் அக்கறை கொண்டதில்லை. மாறாக, வழக்கமான அதன் நடைமுறையில் நன்கு நிரூபிக்கப்பட்டவாறு, வாஷிங்டன் மேற்கொண்டும் அதன் சொந்த சூறையாடும் நலன்களுக்காக —இங்கே இந்த விடயத்தில், அது அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு தலையாய அச்சுறுத்தலாக கருதும் போட்டியாளரைப் பலவீனப்படுத்தவும் மற்றும் துண்டாடவும்— "மனித உரிமைகள்" பிரச்சினையைச் சுரண்டி வருகிறது.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ட்ரம்ப் இப்போது அவர் கையிருப்பில் உள்ள முற்றும் முழுமையான பொய்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் துதிபாடல்களைப் பலமாக வலியுறுத்தி, சீனா மீது ஒரு கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். சீனா அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை "திருடி வருவதாகவும்", “நமது தொழிற்சாலைகளைச் சூறையாடி வருவதாகவும்" மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தைச் "சீரழித்து வருவதாகவும்" அவர் சீனாவைக் குற்றஞ்சாட்டினார். கோவிட்-19 தொற்றுநோயால் அண்மித்து 140,000 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அந்நோயை அவர் நிர்வாகம் கையாண்ட முறையிலுள்ள அவரின் சொந்த குற்றகரமான அலட்சியத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, ட்ரம்ப் ஒரேயொரு சிறிய ஆதாரமும் காட்டாமல், சீனா "அந்த வைரஸ் மூடிமறைத்து, உலகின் மீது அதை கட்டவிழ்த்து விட்டது" என்று மீண்டுமொருமுறை குற்றஞ்சாட்டினார்.

ட்ரம்பின் சுற்றி வளைத்தல்களும் அதேநேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கருத்துக்களும், இன்றைய நிலையில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடெனுக்கு எதிராக பெயரளவுக்கு திரும்பி இருந்தன. ஆனால் ட்ரம்பும் சரி பைடெனும் சரி சீனா சம்பந்தமாக "பலவீனமாக" இருப்பதாக ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்கையில், அமெரிக்கா ஆக்ரோஷமாக பெய்ஜிங்கை இலக்கில் வைத்து வருவதில் இருகட்சிகளது ஒத்த தன்மையை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவின் நலன்களுக்கு சீனாவை அடிபணிய வைப்பதை நோக்கமாக கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" ட்ரம்ப் தொடர்ந்து முன்னெடுத்து தீவிரப்படுத்தி உள்ளார். இவ்வாரம் பைனான்சியல் டைம்ஸ் கருத்துரையாளர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “வாஷிங்டனில் இருப்பது, பீதியூட்டும் அளவிற்கு மிகக் குறைந்த விவாதத்துடன் சீனாவுக்கு எதிராக பகிரங்கமான மோதலுக்குள் இறங்கும் ஒரு தேசத்தில் இருப்பதாக உணர முடிகிறது.”

ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் நடைமுறையளவில் சீனாவுக்கு எதிரான் தாக்குதலை அதிகரித்து வருகிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 மில்லியன் உறுப்பினர்கள், அத்துடன் அவர்கள் குடும்பத்தினருக்கு எதிராக முன்னொருபோதும் இல்லாத ஒரு பயணத் தடையை விதிக்க வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாரம் குறிப்பிட்டது. இந்த அசாதாரண நடவடிக்கை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் அரசியல் எந்திரத்தின் மீதும் நடைமுறையளவில் தடை விதிப்பதாக இருக்கும். முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவதற்கு தடைவிதிக்க இனவாத அடிப்படையில் முன்னர் பயன்படுத்தப்பட்ட சட்டமசோதா, சீனாவுக்கு எதிராக அப்பட்டமான அரசியல் நகர்வைத் திணிக்க சாதகமாக்கிக் கொள்ளப்படலாம்.

சீனா பதிலடி கொடுக்க தூண்டிவிடுவதைக் கணக்கிட்டு இத்தகைய தீவிர நடவடிக்கைகளில் தஞ்சமடைவது, வாஷிங்டனின் ஆழ்ந்த நெருக்கடிக்கும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல மாறாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திலுமுள்ள விரக்தியின் ஓர் அளவீடாகும். மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் மூர்க்கமான ஒரு கால் நூற்றாண்டு இராணுவ ஆக்கிரமிப்புகள் மூலமாகவும் கூட அதன் மேலாதிக்கத்தை மீளப்பலப்படுத்த தவறியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் ஓர் அணுஆயுதமேந்திய சக்தியுன் உலகையே சுற்றி வளைக்கக்கூடிய ஒரு போரை நோக்கி கண்மூடித்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கோவிட்-19 தொற்றுநோய் முதலாளித்துவத்தின் அடியிலுள்ள முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தி உள்ளது. உலகளவில் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சிக்கு இடையே, உள்நாட்டில் அதிகரித்து வரும் சமூக பதட்டங்களை ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக பொறுப்பின்றி திருப்பிடுவதில் ஈடுபட்டிருக்கும் அரசாங்கம் ட்ரம்ப் நிர்வாகம் மட்டுமல்ல.

கவலை கொண்ட விமர்சகர்கள் ஒரு புதிய பனிப்போர் குறித்து எச்சரிக்கின்ற அதேவேளையில், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான எதிர்விரோதத்தின் மறுவடிவமாக இருக்காது. அதன் வரலாற்று வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், வளர்ந்து வரும் ஒரு பொருளாதார சக்தியின் உயிர்வாழ்வே அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை அச்சுறுத்துகின்ற நிலையில் அதனுடன் "சமாதான சகவாழ்வை" சகித்துக் கொள்ளாது.

இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் ஒவ்வொரு முகப்பிலும் அமெரிக்கா ஆக்ரோஷமாக பெய்ஜிங்கிற்கு குழிபறித்து சவால்விடுக்க முயல்கின்ற நிலையில், அதன் பாகத்திற்கு, பெய்ஜிங்கிடம் இதற்கு எந்த முற்போக்கான பதிலும் இல்லை. அந்நாட்டின் மிகப்பெரும் செல்வந்த முதலாளித்துவ உயரடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் வலுவற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, வெடிப்பதற்கான மணித்துளிகள் ஓடிக் கொண்டிருக்கும் அதன் சொந்த சமூக வெடிகுண்டு மேல் அமர்ந்து கொண்டு, மனிதகுலத்தை பேரழிவுக்கு மட்டுமே கொண்டு செல்லும் ஓர் அபாயகரமான ஆயுத போட்டியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அதேவேளையில் வாஷிங்டனை சமாதானப்படுத்தவும் பிரயோஜனமற்ற முயற்சிகளை செய்து வருகிறது. அது போர் முனைவை நிறுத்துவதற்குத் தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு அழைப்புவிடவும் முற்றிலும் இயலாததாக உள்ளது.

உலகப் போரை நோக்கி தீவிரமாக சாய்ந்து வரும் இந்த போக்கு, ஐயத்திற்கிடமின்றி உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து எதிர்ப்பைத் தூண்டும். ஆனால் அந்த எதிர்ப்பானது, முதலாளித்துவ அமைப்புமுறையை மாற்றியமைப்பதையும் மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் உலகம் காலங்கடந்து பிளவுப்பட்டு இருப்பதை இல்லாதொழிப்பதையும் நோக்கி திருப்பிவிடப்பட்ட, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்துடன் பிணைக்கப்பட வேண்டும். இந்த முன்னோக்கிற்காக தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடுகிறது.

Peter Symonds