ஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்

By Nick Beams
23 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான PNB Paribas Asset Management தலைமை நிர்வாகி, COVID-19 தொற்றுநோயின் தாக்கம் உலகம் முழுவதும் பரவுவதால் உலகப் பொருளாதாரம் “மொத்தமாக அனைத்து மந்தநிலைகளையும்” எதிர்கொள்கிறது என்றார்.

அவரது கருத்துக்களைப் பற்றி அறிவித்த பைனான்சியல் டைம்ஸ், PNB தலைமை நிர்வாக அதிகாரி ஃப்ரெடெரிக் ஜான்பன் “தொற்றுநோயிலிருந்து ஒரு விரைவான மீட்சி வரும் என்ற கருத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்றினார்” என்று கூறி, அவர் “உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரம் அனைத்தின் நடவடிக்கைகளில் மிகமிகப் பாரிய பின்னடைவு இருக்கும்” என அவர் குறிப்பிட்டதாக எழுதியது.

V-வடிவ மீட்பு சாத்தியமில்லை என்று கூறிய ஜான்பன், மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எந்தவொரு மேல்நோக்கிய முன்னேற்றத்திற்கும் முன்னர் ஒரு நீண்ட மந்தநிலையை கணித்துள்ளார். மேலும் மார்ச் நடுப்பகுதியில் இருந்து பங்குச் சந்தைகளின் விரிவாக்கம் அதனடித்தளத்திலுள்ள உலகளாவிய பொருளாதார நிலைமைகளை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார்.

"மார்ச் மாதத்தின் குறைந்த புள்ளியிலிருந்து சில மாதங்களில் போக்கில் நாங்கள் கண்ட மிகப்பெரிய எழுச்சி சற்று வேகமானது மற்றும் உலகளவில் வைரஸ் தொற்று அதிகரிப்பதை சுட்டிக்காட்டி இரண்டாவது அலையின் அபாயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை" என்று அவர் கூறினார்.

"இரண்டாவது அலை" பற்றிய குறிப்பு தவறான பெயரால் அழைக்கப்பட்ட ஒன்றாகும். அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் முதல் அலை இன்னும் வளர்ந்து வருகிறது. மேலும், வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பொருளாதாரத்தில் அதன் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கும். மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன, அவை திரும்பி வராது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வார இறுதி செய்தியில், பல பெரிய அமெரிக்க நிறுவனங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது என்று தீர்மானித்தன. COVID-19 பாதிப்புகளின் அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிநிறுத்தங்கள் விரைவான மீட்புக்கான நம்பிக்கையை தகர்த்துவிட்டன எனக்குறிப்பிட்டது.

இதன் விளைவாக, விமான நிறுவனங்களிலிருந்து உணவகச் சங்கிலிகள் வரை வணிகங்கள் தங்கள் மூலோபாயங்களை "தற்காலிக விடுமுறைகளிலிருந்து நிரந்தர பணிநீக்கங்களாக மாற்றுகின்றன, அவற்றின் முக்கிய வணிகங்களை இடம்மாற்றுகின்றன மற்றும் உற்பத்தியை காலவரையின்றி குறைக்கின்றன."

விமானத் துறையில் பெரும் வேலை வெட்டுக்களுக்கு மத்தியில், American Airlines 25,000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும், United 36,000 ஊழியர்களைக் குறைக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது. Delta கோடைகாலத்தில் அதிகமான விமானங்களை சேர்ப்பதற்கான திட்டங்களை நிறுத்தியுள்ளதாகவும், வணிகப் பயணங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியது.

சாண்ட்விச் சங்கிலி அமெரிக்க விற்பனையில் 87 சதவிகிதம் சரிவை சந்தித்ததாகவும், 20 கடைகளை மூட திட்டமிட்டுள்ளதாகவும் Pret A Manger இன் தலைமை நிர்வாகி பனோ கிறிஸ்ட்டோ அறிவித்ததை அந்தக் கட்டுரை மேற்கோளிட்டுள்ளது. "எங்களால் ஈர்ப்பு விசையை மீறி, தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த வணிக மாதிரியைத் தொடர முடியாது" என்று அவர் கூறினார்.

ஒட்டுமொத்த சூழ்நிலையை சுருக்கமாக கட்டுரை குறிப்பிட்டது: “ஒரு மாத கால இடையூறைப்பற்றி சந்தோஷப்பட்ட நிர்வாகிகள் இப்போது பல ஆண்டுகளை பற்றி சிந்திக்கிறார்கள். அவர்களின் வேலை மற்றவர்களை மேய்ப்பதிலிருந்து மறு கண்டுபிடிப்புக்கு மாறிவிட்டது. ஒரு காலத்தில் முக்கியமாக நினைத்த அவர்களின் பாத்திரம் இப்போது ஒரு மேலதிகமானதாகிவிட்டது. வசந்த காலத்தில் அமைக்கப்பட்ட மூலோபாயங்கள் இன்று வழக்கற்றுப் போய்விட்டன”.

அதாவது, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொற்றுநோய்க்கு முன்னர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் செயல்முறைகள், இப்போது அதனால் துரிதப்படுத்தப்படுகின்றன. முழு தொழில்கள் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்கின்றன, அதில் மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்படும். மார்ச் மாதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட உதவிப்பொதிகளை அரசாங்கங்கள் திரும்பப் பெறத் தொடங்குவதால், வேலையின்மை அச்சுறுத்தலின் கீழ் குறைந்த ஊதியங்கள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நெருக்கடியின் விளைவுகள் முழு பொருளாதாரத்திலும் உள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய வீடு-நில முதலீடு 33 சதவீதம் குறைந்துள்ளதாக புளூம்பேர்க் நேற்று செய்தி வெளியிட்டார். இதுவரை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வருடத்திற்கு முந்தைய முதலீட்டை விட 45 சதவீதம் முதலீடு குறைந்து கடுமையான தாக்கத்திற்குள்ளாகிவிட்டது.

சர்வதேச சுற்றுலா உண்மையில் ஒரு அசைவற்ற நிலையில் இருக்கையில், உல்லாசவிடுதி முதலீடு ஆண்டின் முதல் பாதியில் 59 சதவீதம் சரிந்தது. சில்லறை சொத்துக்களில் முதலீடு 41 சதவீதம் குறைந்துள்ளது.

வர்த்தகத்தின் சரிவு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்களுக்கு பேரழிவு தரும் அடியை அளிக்கிறது. இது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் வர்த்தக பாதைகளின் மையத்தில் அமர்ந்திருக்கும் சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் பாரிய சுருக்கத்தில் இது மிகவும் கூர்மையாக வெளிப்படுத்தப்படுகிறது.

கடந்த வாரம் தீவின் மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய மூன்று மாதங்களை விட 41.2 சதவீதம் குறைந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான ஜப்பான், முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீத சுருக்கத்தை வருடாந்த அடிப்படையில் அறிவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான மொத்த உற்பத்தி இழப்பு 12.5 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் நிலையில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 4.9 சதவிகிதம் சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

முதல் காலாண்டில் 6.8 சதவிகிதம் சுருங்கியதை தொடர்ந்து, இரண்டாவது காலாண்டில் சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. எஃகு உற்பத்தியில் அதிகரிப்புக்கு வழிவகுத்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் கடன் வாங்கக்கூடிய தொகையை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முடிவுகளின் விளைவாக இந்த உயர்வு பெரும்பாலும் ஏற்பட்டது. இருப்பினும், சில்லறை விற்பனை 3.9 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

தேசிய புள்ளிவிவர பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் Liu Aihua, புள்ளிவிவரங்கள் "படிப்படியான மீட்சியை" காட்டியுள்ளன, ஆனால் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதால் "பெருகிவரும் வெளிப்புற அபாயங்கள் மற்றும் சவால்களை" சுட்டிக்காட்டினார்.

சில மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடிக்குப் பின்னர் சீனப் பொருளாதாரம் ஒரு பாரிய உதவிப்பொதியை கொண்டு செய்த அதே பங்கை ஆற்ற முடியாது. இப்பொதியால் அரசாங்க செலவினம் மற்றும் அதிக கடன்களை வழங்கியதன் விளைவாக, உலகம் முழுவதும் மூலப்பொருள் ஏற்றுமதி பொருளாதாரங்களுக்கு ஒரு ஊக்கத்தை அளித்தது.

ஐரோப்பாவில், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இரண்டாவது காலாண்டில் 13 சதவிகிதத்திற்கு சுருங்குவதாக கணித்துள்ளது. ஆனால் கடந்த வாரம் அதன் ஆளுனர் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து, ECB தலைவர் கிறிஸ்டின் லகார்ட் வருமானம் மற்றும் வேலைகள் இழப்பு, அத்துடன் “விதிவிலக்காக அதிகரித்த நிச்சயமற்ற தன்மை” ஆகியவை நுகர்வோரின் உணர்வு மற்றும் வணிக முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

ECB இன் நாணயக் கொள்கையை தொடர்ந்து வைத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஜூன் வரை அதன் சொத்து கொள்முதல் திட்டமான 1.35 ட்ரில்லியன் யூரோ தொடரும் என்று அறிவித்த அதேவேளையில், லகார்ட் தொற்றுநோயால் தாக்கப்பட்ட நாடுகளுக்கான மீள் எழுச்சி உதவிநிதியான 750 பில்லியன் யூரோ பற்றி உடன்பாடு காண்பதில் தாமதிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பின்னர் வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட சந்திப்பை நடத்தினர். இது ஒரு ஒப்பந்தத்தை "அடைவதற்கு நெருங்குவதற்கான" அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்பு கசப்பான கருத்துப்பரிமாற்றங்களால் சூழப்பட்டிருந்தது.

ஆரம்ப மோதல், "கஞ்சத்தனமான நான்கு" என்றழைக்கப்படும் நெதர்லாந்து ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகியவற்றுடன் இருந்தது. இவை, ஆரம்ப பிரெஞ்சு-ஜேர்மன் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 500 பில்லியன் யூரோகளிலிருந்து பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகளுக்கு மானியங்களை ஒதுக்கீடு செய்வதில் கணிசமான குறைப்பு கோரியது.

மோதல்களின் தீவிரம் ஒரு கட்டத்தில் இத்தாலிய பிரதமர் யூசெப்ப கொன்ட ஒரு உடன்படிக்கையை உருவாக்க தவறுவது, "ஐரோப்பாவின் ஒற்றை சந்தையின் அழிவுக்கு" வழிவகுக்கும் என்று கருத்துத் தெரிவிக்குமளவிற்கு இட்டுச்சென்றது. இப்போதைக்கு இப்பிளவு மறைக்கப்படலாம். ஆனால் மந்தநிலையை ஆழமடைகையில் பிளவுகள் மீண்டும் வெளிப்படுவது நிச்சயம்.