தொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது

By Benjamin Mateus
24 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

ஜூலை 16 அன்று, ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த ஒரு நினைவுகூரல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது, கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியானவர்களுக்கும், அத்துடன் நோய்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு உதவிய சுகாதாரப் பணியாளர்களுக்கும், அரோவா லோபஸ் (Aroa Lopez) என்ற செவிலியர் வழங்கிய குறிப்பிடத்தக்க மற்றும் உணர்ச்சிமிக்க உரை, தேசிய அதிகாரிகளின் பதிலிறுப்பில் காணப்படாத மனித நேயத்தை கொண்டிருந்தது.

அவர், “நாங்கள் இதற்கு எங்களது அனைத்தையும் கொடுத்துள்ளோம். இந்த சமயத்தில் நாங்கள் சோர்வின் விளிம்பு வரை பணியாற்றியுள்ளோம். நாங்கள் ஏன் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தோம் என்பதை முன்பை காட்டிலும் இந்த மாதிரியான ஒரு சூழலில் மக்களை பாதுகாப்பதும் உயிர்களை காப்பாற்றுவதும் எவ்வளவு முக்கியம் என்று மீண்டும் ஒருமுறை நாங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளோம். கடைசி நேரத்தில் தங்களது குழந்தைகளின் குரல்களை தொலைபேசியில் கேட்டுக் கொண்டே தனியாக இறந்துபோன வயோதிபர்களின் விடைபெறுதல் பற்றி தெரிவிக்கும் தூதுவர்களாக நாங்கள் இருந்திருக்கிறோம். நாங்கள் அவர்களுக்காக காணொளி அழைப்புக்களை செய்து கொடுத்திருக்கிறோம், நாங்கள் அவர்களது கரங்களை பற்றி ஆறுதல் கூறியிருக்கிறோம், அதிலும் ‘என்னை தனியாக இறப்பதற்கு விட்டுவிடாதீர்கள்’ என்று எவராவது கூறியபோது நாங்கள் கண்ணீரோடு போராட வேண்டியிருந்தது. இந்நிலையில், ஒவ்வொருவரது உடல்நலத்தையும் பாதுகாக்க வேண்டுமென்று அதிகாரிகளிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மேலும், எங்களது உடல்நலத்தை பாதுகாப்பதற்கும் மற்றும் எங்களது தொழில்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்துவதற்கும் மேலாக நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு சிறந்த அஞ்சலி செலுத்தப்படவில்லை என்பதை நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

பொது சுகாதார அதிகாரிகள் தங்களது தலைவர்களை தீர்க்கமாக செயல்படவும் ஒத்துழைக்கவும் வேண்டி கேட்கும் நிலையில், நோய்தொற்று கட்டுப்பாட்டை மீறி பரவிக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 இன் தினசரி நோய்தொற்றுக்களுக்கான ஏழு நாள் உலகளாவிய சராசரி 226,864 ஆக உள்ளது என்பதுடன், புதிய தினசரி நோய்தொற்றுக்கள் தொடர்ந்து 200,000 க்கு கூடுதலாக இருந்து வருகிறது. மேலும், ஏழு நாள் தினசரி இறப்பு விகிதம் மே 26 அன்று 4,112 என இருந்தது ஜூலை 20 அன்று 5,111 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உலகளாவிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 14.8 மில்லியனை கடந்துள்ளது, மேலும் ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து நாட்களில் அடுத்தடுத்து ஒரு மில்லியன் நோய்தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் கூட்டு எண்ணிக்கை உலகளவிலான நோய்தொற்றுக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக இருப்பதாக சமீபத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய சுகாதார நெருக்கடியுடன் போராடும் முன்னணி பாதுகாப்பாளர்களாகவுள்ள சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களும் இந்த நோய்தொற்றின் பெரும் பாரத்தை சுமக்கவேண்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் Dr. Tedros Adhanom Ghebreyesus, வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “சுகாதார ஊழியர்களில் பலர் மன அழுத்தம் மிகுந்த சூழலில் பல மாதங்கள் வரை பணிபுரிந்ததன் பின்னர் தற்போது உடல் மற்றும் உளவியல் ரீதியான சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்” என்று குறிப்பிட்டார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 2020 இல் நோய்தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் போர்த்துகீசிய சுகாதார ஊழியர்கள் ஒரு மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் 75 சதவிகிதத்தினரது கவலையின் நிலையின் மட்டம் “உயர்வாக” அல்லது “மிக உயர்வாக” இருப்பதாக கருதப்பட்டது, மேலும் 14.6 சதவிகிதத்தினரோ மிதமான அளவிலிருந்து கடுமையானளவு மன அழுத்தத்தை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில், பல சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளுக்கு நியாயமான ஊதியமும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமென கோருகின்றனர்.

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாட்ரிட்டில் ஜூலை 16 அன்று நடந்த நினைவுகூரல் நிகழ்வு (Credit: Sergio Perez)

உலகளவிலான ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளில் 1.4 மில்லியனுக்கு மேலாக அல்லது சுமார் 10 சதவிகித அளவிற்கு சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதன் சுருக்கமான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அமெரிக்காவில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தரவின் படி, ஜூலை 5 அன்று, 92,572 சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதுடன், 507 பேர் அதற்கு பலியாகியுள்ளனர்.

சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களிடையே இது தொடர்பான நிகழ்வுகளை கண்காணித்து வரும் சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), பின்வரும் நாடுகளில் சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்களிடையே கோவிட்-19 பாதிப்பால் அதிகபட்ச இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டது: அதாவது, அமெரிக்காவில் 507, ரஷ்யாவில் 545, பிரேசிலில் 351, மெக்சிக்கோவில் 248, இத்தாலியில் 188, எகிப்தில் 111, ஈரானில் 91, ஈக்வடோரில் 82 மற்றும் ஸ்பெயினில் 63 என்ற எண்ணிக்கைகளில் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

இங்கிலாந்தின் தரவு, பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோவிட்-19 இறப்பு விகிதங்களைக் காட்டிலும் சுகாதாரப் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருப்பவர்கள் மத்தியில் ஏற்பட்ட இறப்பு விகிதங்கள் அதிகமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், கோவிட்-19 இன் காரணமாக அதிக இறப்பு விகிதங்களைக் கொண்ட ஏனைய தொழிலாளர்களில் வாடகைவாகன ஓட்டுநர்கள், தனியார்வாகன ஓட்டுநர்கள், பேருந்து மற்றும் சொகுசுவாகன ஓட்டுநர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அடங்குவர்.

சர்வதேச மன்னிப்பு சபை ஜூலை 13 அன்று வெளியிட்ட அறிக்கையின் படி, கோவிட்-19 நோய்தொற்றின் காரணமாக 79 நாடுகளில் 3,000 க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது, என்றாலும் இந்த எண்ணிக்கை பரந்தளவில் குறைத்து மதிப்பிடப்பட்டது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கிடையில், சீனா, ஹாங்காங், இந்தியா, எகிப்து, மலேசியா, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, பிரேசில், நிகரகுவா, ஹோண்டுராஸ், மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் பலரும் தங்களது பாதுகாப்பு அல்லது நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து தங்களது அதிகாரிகள் மற்றும் தொழில்வழங்குனர்களிடம் தங்களது கவலைகளை எழுப்பியபோது அவர்கள் கொடுத்த பழிவாங்கலை எதிர்கொண்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டதுடன், வன்முறை மிக்க தாக்குதலுக்கும் ஆளாகினர்.

எவ்வாறாயினும், சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள், தங்களது தொழில்வழங்குனர்கள், மாநில அதிகாரிகள் மற்றும் அவர்களது சமூகங்களின் பின்தங்கிய அடுக்கினரிடமிருந்து ஆபத்துக்களை எதிர்கொண்ட நிலையில் கூட, சிறந்த பணியிட நிலைமைகளை உருவாக்கக் கோரியும், உலகளவில் காலங்காலமாக தொடர்ந்து பற்றாக்குறையுடனிருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) விநியோகிக்கக் கோரியும், மேலும் நோயாளிகளைப் பராமரிக்க போதுமான உபகரணங்களை விநியோகிக்கவும், பணியாளர்களை நியமிக்கவும் கோரி சர்வதேச அளவில் துணிவுடன் குரலெழுப்பி, ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்தி வருகின்றனர்.

30 மில்லியன் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் 12 ஏனைய மருத்துவ மற்றும் உலகளவிலான மனித நேய அமைப்புக்கள், மே மாதம் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் அவர்கள், “பல அல்லது அனைத்து பதிலளிப்பவர்களும் துன்புறுத்தல், களங்கப்படுதல் மற்றும் சரீர ரீதியான வன்முறையை அனுபவித்து வருகின்றனர். சில பாதுகாப்புப் பணியாளர்களும் மற்றும் அவர்கள் கவனித்து வந்த பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர். நோய்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் பற்றி குறைந்தது 208 அறிக்கைகள் வெளிவந்துள்ளன என்பதுடன், ஒவ்வொரு நாளும் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் பற்றிய புதிய தகவல்களை அவை கொண்டிருந்தன” என்று குறிப்பிட்டிருந்தனர். அரசாங்கங்களின் செயலின்மையின் தற்போதைய எழுச்சியும் மற்றும் ஆபத்தான தன்மையும், சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை மேலும் அதிகரிக்கும், அத்துடன் உலகெங்கிலுமான சமூகங்களை அழிக்கும் நிலைமைகளையும் உருவாக்கும்.

ஜூலை 13 அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய அறிக்கையில், மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலரும் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளருமான மார்க் லோகாக் (Mark Lowcock), நோய்தொற்றால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலிறுக்காமல் தொழில்மயமான நாடுகள் செயலற்று இருப்பதானது, வைரஸின் தாக்கத்தை காட்டிலும் மிருகத்தனமான மற்றும் அழிவுகரமான தொடர்ச்சியான துயரங்களுக்கு இட்டுச்செல்லும். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, பலவீனமான மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பட்டினிக்கும் நோய்க்கும் முகம் கொடுக்கும் என்பதால், அவற்றின் நிலைமைகள் மிக கொடூரமாக இருக்கும். “வைரஸ் சாதாரணமாக பரவி வருவதால், பல தசாப்தங்கள் கண்ட அபிவிருத்தி பயனற்றுப் போகும்” என்று அவர் கூறினார்.

“உலகளாவியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான வழங்கப்படும் ஊக்குவிப்பு நிதி தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக, அதாவது வெறும் 90 பில்லியன் டாலர் தொகையைக் கொண்டு, உலகின் ஏழ்மையான 700 மில்லியன் மக்களை மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது” என்பதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அதாவது, ஒருசில ஒட்டுண்ணிகளை வளப்படுத்த பொது பணத்திலிருந்து பாய்ச்சப்படும் டிரில்லியன்களில் ஒரு சதவிகிதத்தைக் கொண்டு கூட உலகின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தினரின் பஞ்சத்தைப் போக்கலாம் மற்றும் நோயைத் தடுக்கலாம். தன்னலக்குழுக்களின் ஊதுகுழலாக இயங்கும் தேசிய ஊடகங்கள், ரஷ்ய மற்றும் சீன சூழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கோ, அல்லது இந்த மிகுந்த கவலைகளை பற்றி கவனம்செலுத்துவதை காட்டிலும் மற்றொரு இனவாத கட்டுக்கதைகளை பரப்புவதற்கோ தான் விரும்புகின்றன.

உலக சுகாதார அமைப்பின் செய்தியாளர் கூட்டத்தில், லோகாக், செயலற்ற தன்மை உலகளாவிய பேரழிவை உருவாக்கும் சாத்தியத்தை கொண்டது என்பதால், ஜி20 நிதி அமைச்சர்கள் இந்த விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்று தான் நம்பியதாக தெரிவித்தார். அவர், 10.3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட அவர்களது திட்டம் 63 பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும் என்பதையும், நிவாரணங்களை கொண்டு சேர்ப்பதற்கான உலகளாவிய போக்குவரத்து செலவுகளையும் ஈடுகட்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், “1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உலகளாவிய வறுமை முதல்கட்டமாக அதிகரிப்பதற்கான ஆபத்துக்களை நோய்தொற்று கொண்டுள்ளது, அதாவது குறைந்தது 70 முதல் 100 மில்லியன் மக்கள் கடும் வறுமை நிலைக்குள் தள்ளப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் நூற்றி முப்பது மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பிற்குள் தள்ளப்படலாம் என்ற நிலையில், மொத்தம் 265 மில்லியன் பேர் வறுமையை எதிர்கொள்வர், அதாவது பட்டினிக்கு முகங்கொடுப்போர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதாகும்” என்றும் கூறினார்.

உலகளவில் தற்போது 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கற்றல் இழப்புக்களை உருவாக்கக்கூடிய கல்வித்துறையில் தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு குறித்து அவர் கூடுதல் விபரங்களை தெரிவித்தார். பதின்மவயது மகப்பேறு போன்ற விவகாரங்கள் மூலம் இளம் பெண்களை மிகக் கடுமையான பாதிப்புள்ளாக்கும் தனிநபர்கள் வருமான குறைவு மற்றும் சமூக சீர்குலைவுகள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். நோய்தொற்றானது ஸ்திரமற்ற தன்மையையும், மற்றும் உள்ளூர், பிராந்திய மற்றும் தேசியளவிலான மோதல்களை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது, இது அகதிகள் நெருக்கடி மற்றும் உணவு பாதுகாப்பின்மை ஆகியவற்றை மேலும் மோசமாக்கும்.

ஒரு வரலாற்று தூண்டுதல் நிகழ்வான இந்த நோய்தொற்று, காலாவதியாகிப்போன தேசிய-அரசு அமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளது மட்டுமல்லாது தீவிரப்பபடுத்தியும் உள்ளது. அவசர உதவி மற்றும் நிவாரணத்திற்கான தேவையை எதிர்கொள்ளும் பில்லியன் கணக்கான மக்களின் துன்பங்கள் குறித்து முற்றிலும் அலட்சியமாக இருப்பதையே இது நிரூபிக்கிறது. மேலும், சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் பற்றி முற்றிலும் அக்கறையற்று இருப்பதானது, அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் உலகின் ஒவ்வொரு நபர்களினதும் நிதிய தன்னலக்குழுக்களினதும் கவலைகளை பிரிக்கும் ஆழமான இடைவெளியையும் இது எடுத்துக்காட்டுகிறது.

ஐ.நா. பொதுச் செயலரான அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres), “நோய்தொற்று, ஊடுகதிர் சோதனையைப் போல, நாம் கட்டியெழுப்பியுள்ள சமூகங்களின் பலவீனமான எலும்புக்கூட்டில் உள்ள எலும்பு முறிவுகளை வெளிப்படுத்திக் காண்பித்துள்ளது. இலவச சந்தைகள் அனைவருக்கும் சுகாதார சேவையை வழங்க முடியும் என்ற பொய்… மற்றும் நாம் அனைவரும் ஒரே படகில் தான் இருக்கிறோம் என்ற கட்டுக்கதை போன்ற எங்கும் நிலவும் தவறுகளையும் பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. ஏனென்றால், நாம் அனைவரும் ஒரே கடலில் தான் மிதந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், நம்மில் சிலர் நல்ல படகுகளில் இருக்கிறார்கள், ஏனையோர் மிதக்கும் குப்பைகளில் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது” என்பதை கவனித்துக் கூறினார்.