துணை இராணுவ போலீசார் போர்ட்லாந்து மேயர் மற்றும் எதிர்ப்பாளர்களின் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் தாக்குகையில்

ட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்

By Barry Grey
25 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரம்ப் நிர்வாகம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய தனது அரசியலமைப்பிற்கு முரணான நகர்வுகளை முடுக்கிவிட்டு, போர்ட்லாந்து, ஒரேகனில் உள்ள பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்கார்களின் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் தாக்கி, டெட்ராய்ட், கிளீவ்லாந்து மற்றும் மில்வாக்கி ஆகிய மூன்று நகரங்களுக்கும், மேலும் நியூ மெக்ஸிகோவின் சிக்காகோ, மில்வாக்கி க்கும் கூட்டாட்சி பொலிஸை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு, சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பின் “விரைவான தாக்குதல் படையின்” உருமறைப்பு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் CS கண்ணீர்ப்புகை, சத்தமும் ஒலியும் எழுப்பும் கையெறி குண்டுகள் மற்றும் மிளகு பந்துகளை Mark O. Hatfield மத்திய நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தினர். இந்ததடவை, புலம்பெயர்ந்தோர் மீது கெஸ்டபோ மாதிரியிலான தாக்குதல்களை நடத்துவதற்கான அவர்களின் சாதாரண வேலையிலிருந்து திசைதிருப்பப்பட்ட கூட்டாட்சி காவல்துறையின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் போர்ட்லாந்து ஜனநாயகக் கட்சி மேயர் டெட் வீலர் உம் அடங்குவர்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸை கட்டவிழ்த்து விடுவதில் வீலர் வகித்த பங்கிற்காக பெருமளவில் வெறுக்கப்படும் நபராவார். இதனால் "கண்ணீர்ப்புகை டெட்" என்ற புனைபெயரைப் பெற்ற அவர் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார். ட்ரம்பின் துணை இராணுவப் படையினரின் கைகளில் பொலிஸ் அரசு ஒடுக்குமுறைகள் பல நாட்களாக தீவிரமடைந்து வரும் கோபத்தை தணிக்கும் முயற்சியில் அவர் கூட்டத்தில் இணைந்துகொண்டார். அவர் பேச முயற்சித்தபோது சுற்றிவளைத்து கூக்குரலெழுப்பப்பட்டது.

யூலை 21 போர்ட்லான்ட் இல் Mark O. Hatfield நீதிமன்றத்தின் முன்னால் ஒரு கூட்டாட்சி அதிகாரி ஆர்ப்பாட்டக்கார்களை பிமன்னே தள்ளுகின்றார். (படம்-AP Photo/Noah Berger)

ட்ரம்ப் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்திற்கு உள்ள பிற துணை இராணுவப் பிரிவுகளுடன் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) காவல்துறையினரை "வீதிகளில் ஆதிக்கம் செலுத்தவும்" என்ற அச்சுறுத்தல்களைச் சிறப்பாகச் செய்யவும், "தீவிர இடது" மற்றும் "அராஜகவாத" கூறுகள் எனக்கூறப்படுவோரின் "கும்பல் வன்முறை" என்று அவர் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடக்கவும் பயன்படுத்துகின்றார். தனது அரசியல் தளத்திற்குள் காவல்துறை, இராணுவ மற்றும் பாசிச சக்திகளை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை திணிப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் ஜனநாயக கட்சி மேயரின் தலைமையிலான போர்ட்லாந்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

சமீபத்திய நாட்களில், CBP துணை இராணுவ போலீசார், அவர்களின் பிரிவின் அடையாள சின்னம் அல்லது பெயர் குறிச்சொற்கள் இல்லாமல் பொதுவான உருமறைப்பு அணிந்து, போர்ட்லாந்தில் அமைதியான போராட்டக்காரர்களை சட்டவிரோதமாக கைதுசெய்து, அடையாளம் குறிக்கப்படாத வாகனங்களில் தூக்கி எறிந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்கின்றனர். இது ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதியாக வரக்கூடிய வேட்பாளர் ஜோ பைடன் ஆகியோரிடமிருந்து வாய்மொழி எதிர்ப்புக்களை மட்டுமே தூண்டியுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் கள்ளத்தனமான பிரதிபலிப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட ட்ரம்ப் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளார். புதன்கிழமை, அவர் அரச வழக்குத்தொடுனர் வில்லியம் பார் உடன் ஒன்றாக தோன்றி, ஜனநாயகக் கட்சி மேயர்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிகாகோ மற்றும் அல்புகெர்க்கிக்கு "நூற்றுக்கணக்கான" கூட்டாட்சி பொலிஸ் மற்றும் பிற முகவர்களை அனுப்புவதாக அறிவித்தார்.

இந்த அதிகாரிகள், பெரும்பாலும் FBI; மதுபான, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருள் பணியகம் (ATF); போதைப்பொருள் அமுலாக்க நிறுவனம் (DEA) மற்றும் அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை போன்ற நிறுவனங்களிலிருந்து வன்முறைக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான போலிக்காரணத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் உள்ளூர் அமெரிக்க வழக்குத்தொடுனரின் அலுவலகங்களின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவர்கள் தெருக்களில் நிறுத்தப்பட மாட்டார்கள்.

ட்ரம்ப் போர்ட்லாந்தின் தலைநகரை கைப்பற்றுவதை ஜனநாயகக் கட்சியினர் பொதுவாக எதிர்த்து, கூட்டாட்சி காவல்துறையை திரும்பப் பெறக் கோரி வழக்குகளைத் தாக்கல் செய்தாலும், சிகாகோ மற்றும் டெட்ராய்டுக்குள் கூட்டாட்சி காவல்துறையினர் வருவதற்கு ஒத்துழைக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மத்திய காவல்துறையின் இதே போன்ற குழுக்கள் முன்னர் மிசூரியின் கன்சாஸ் நகரத்திற்கு அனுப்பப்பட்டன.

புதன்கிழமை ட்ரம்ப்புடன் அவர் தோன்றியபோது, அரச வழக்குத்தொடுனர் பார், சிகாகோ, அல்புகெர்கி மற்றும் பிற நகரங்களுக்கு அனுப்பப்படுவது "கலவரங்கள் மற்றும் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக பாதுகாக்க நாங்கள் பயன்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தந்திரோபாய குழுக்களை விட வித்தியாசமாக இருக்கும்" என்றார். இவர் அவ்வாறு குறிப்பிடுவது போர்ட்லாந்தை ஆகும். அமெரிக்க அரசியலமைப்பின் முதல் பிரிவால் பாதுகாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்பட குற்றத்தன்மையாக்குவதன் மூலம், “நாங்கள் தொடர்ந்து கும்பல் வன்முறையை எதிர்கொள்ளப் போகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

COVID-19 தொற்றுநோயின் தாக்கத்தால் வீரியத்தால் சமூக நெருக்கடிகள் மற்றும் பரவலான வறுமை வியத்தகு முறையில் மோசமடைந்துள்ள பல நகரங்களில் குற்றங்கள் அதிகரித்து வருவது, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் பொலிஸ் கொலைக்குப் பின்னர் வெடித்த போராட்டங்களின் விளைவாகும் என்ற ட்ரம்ப்பின் கூற்றை பார் எதிரொலித்தார். "இந்த அதிகரிப்பு பொலிஸ் படைகள் மீதான தாக்குதலின் நேரடி விளைவாகும்" என்று பார் அறிவித்தார்.

ட்ரம்பின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பலாத்காரத்தால் முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட ஆக்கிரமிப்பட்டமையானது ஜூன் 1 ம் தேதி அவர் மேற்கொண்ட சதித்திட்டத்தை தொடர்ந்து வந்துள்ளது. அந்த நாளில், அவர் வெள்ளை மாளிகை Rose Garden இல் தோன்றி 1807 கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கவும், மக்கள் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு இராணுவப் படைகளை அனுப்பவும் எடுத்த முடிவு நாடு முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை வெடிக்கவைத்தது. அவர் அது பற்றி பேசியபோது, வெள்ளை மாளிகைக்கு வெளியே அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தேசிய காவல்படை துருப்புக்கள் மற்றும் பிற கூட்டாட்சி படைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

சதித்திட்டத்திற்கான ட்ரம்ப்பின் திட்டங்கள் அந்த நேரத்தில் இராணுவ உயர்மட்ட பிரிவினராலும் மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டன. அவர்கள் அத்தகைய நடவடிக்கை அரசியல் ரீதியாக தயாரிக்கப்படவில்லை என்றும், கட்டுப்படுத்த முடியாத பாரிய பின்னடைவைத் தூண்டும் என்றும் அஞ்சினர். ஆனால் உலக சோசலிச வலைத் தளம் ஜூன் 8 அன்று எச்சரித்தது போல்: “ஆபத்துகள் மிகவும் உண்மையானவை. வெள்ளை மாளிகையில் சதிகாரர்கள் தங்கள் சதித்திட்டத்தை நிறுத்தவில்லை. இராணுவம் தனது நேரத்தை ஒதுக்கி அதன் விருப்பத்தேர்வுகளை பரிசீலித்து வருகிறது. காவல்துறையினர் முற்றுமுழுதாக ஆயுதமயமாக்கபட்டுள்ளனர்".

புதன்கிழமை மாலை, வெள்ளை மாளிகை முக்கிய அமெரிக்க நகரங்களுக்கு மேலும் கூட்டாட்சி பொலிஸ் ஊடுருவலுக்கான அதன் சில திட்டங்களை வகுக்கும் சுருக்கக் குறிப்புகளை வெளியிட்டது. அடுத்த மூன்று வாரங்களில், FBI, AFT, DEA மற்றும் பிற கூட்டாட்சி பொலிஸ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் கிளீவ்லாந்து, டெட்ராய்ட் மற்றும் மில்வாக்கிக்கு அனுப்பப்படுவார்கள் என்று குறிப்புகள் விளக்கின.

டெட்ராய்ட்டில் பயன்படுத்தப்பட்டவர்களில் குறைந்தது 100 உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அதிகாரிகளும் அடங்குவர். ஜனநாயகக் கட்சியின் டெட்ராய்ட் மேயர் மைக் டுக்கன், கூட்டாட்சி காவல்துறையினரின் வருகைக்கு தான் இணக்கமானவர் என்று தெளிவுபடுத்தினார், “அமெரிக்க வழக்குத்தொடுனர் அலுவலகத்தில் கூடுதல் துப்பாக்கி வழக்குத்தொடுனர்கள் அல்லது ATF சட்டவிரோத துப்பாக்கிகளை வீதியில் இருந்து அகற்றுவதை பற்றி பேச விரும்பினால், நாங்கள் அவ்வாறான உதவிகளை ஆதரிப்போம்” என்றார்.