கண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்

By our reporters
27 July 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

கண்டி தேசிய மருத்துவமனையில் சுமார் 300 செவிலியர்கள் இந்த மாதம் 13 அன்று, கொவிட்-19 தொற்றுநோயின் மத்தியில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அரசாங்கம் கொடுப்பதாக கூறிய சிறப்பு மேலதிக நேர ஊதியத்தை வழங்கத் தவறியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வுநாள் வேலைக்கான கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

பல தசாப்தங்களாக நிதி வெட்டுக்கள் மூலம் சீரழிக்கப்பட்ட மருத்துவமனை உள்கட்டமைப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவுகளையும் எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள சுகாதாரத ஊழியர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை கொரோனா தொற்றுநோய் மேலும் மோசமாக்கி வருகிறது. முறையான தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் ஆகவும் பற்றாக்குறையாக இருப்பதானது தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

கண்டியில் நடந்த தாதிமார் போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றமை, தொழிற்சங்கங்களின் காலைவாறிவிடும் நடவிடக்கைகளையும் கடந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்க அவர்களுக்கு உடனடி அவசியம் ஏற்பட்டிருப்பதை நிரூபித்தன.

கண்டியில் தாதிமாரின் போரட்டம்

"உழைப்புச் சுரண்டலை நிறுத்து”, "ஆட்சியாளர்களே, கௌரவிப்பது என்பது எங்கள் கொடுப்பனவுகளை குறைப்பதா?" “ஆட்சியாளர்களே, ஆபத்தையும் அலட்சியப்படுத்தி செய்த சேவைக்கு உரிய கொடுப்பனவை உடனடியாக கொடு" போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். அன்றைய தினம் காலை 7 மணி முதல் 10 மணி வரை செவிலியர்கள் மருத்துவமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் மேலும் ஒரு மணி நேரம் அமைதியாக போராட்டம் நடத்தினர்.

கொவிட்-19 தொற்று நோய் பரவிய போது, மார்ச் முதல் மே 11 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு சுற்றறிக்கைகள் மூலம் செவிலியர்களுக்கு சேவைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த கட்டளைகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், சுகாதார மற்றும் தேசிய மறுத்துவ அமைச்சின் செயலாளராக, உயர்மட்ட இராணுவ அதிகாரியான வைத்தியர் எஸ்.எச். முனசிங்க பதவியேற்ற பின்னர், அவரது கட்டளையின் கீழேயே அந்த கொடுப்பனவுகள் வெட்டப்பட்டதாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தாதிமார் உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) தெரிவித்தனர்.

சராசரி தினசரி தாதிமார் சேவை நேரம் 6 மணி நேரம் ஆகும். அந்த சேவை முறைகள் வாரத்தில் 36 மணிநேரம் வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. முழு வாரமும் வேலை செய்தால், அது 42 மணிநேரம் ஆகும். அதில் 6 மணிநேரம் மேலதிக நேரமாகும்.

தொற்றுநோயை எதிர்கொண்டு வெளியிடப்பட்ட 30/2020 இலக்க சுற்றறிக்கை படி, செவிலியர்களின் அன்றாட வேலை நேரம் 24 மணி நேரமாக ஆக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்கள் மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை கூறிய போதிலும், செவிலியர்கள் உட்பட ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையே இந்த நிலைமை ஏற்படுவதற்கு காரணம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

கண்டியில் தாதிமாரின் ஊர்வலம்

உலக சோசலிச வலைத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு செவிலியர், தாம் தொற்றுநோய் பரவலில் இருந்து உயிர்களைக் காப்பாற்றியதாகவும், ஆரம்பத்தில் இருந்தே நோய் பரவுவதைத் தடுப்பதற்கு முதலிடம் கொடுத்து செயற்பட்டதாகவும் கூறினார். ஆனால், தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் வேலை பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “எங்களுக்கு ஒரு சுற்றறிக்கையில் 24 மணிநேர சேவை ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் வேலைமுறை 10 மணி நேரம் ஆனது. மீதமுள்ள 14 மணிநேரங்கள் கூடுதல் நேர சேவைகளாக மாற்றப்பட்டன. நிர்வாக ஊழியர்கள் 3 ஆக பிரிக்கப்பட்டனர். அதன்படி, மேலதிக நேரம், விடுமுறை, கொடுப்பனவுகள் போன்றவை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவற்றை வெட்டுகிறார்கள். உங்களுக்கு 50,000 கிடைக்க வேண்டுமென்றால் 30,000 மட்டுமே கிடைக்கும்.”

கோபத்துடன் பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு செவிலியர்: "எங்களுக்கும் குழந்தைகள் உள்ளனர், இந்த கொடிய நோய்க்கு மத்தியில் நாங்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்கிறோம். எங்களிடம் தரப்படுத்தப்பட்ட சுகாதார உபகரணங்கள் இல்லை. அவை கோரப்பட்டாலும் கிடைக்கவில்லை. மக்களை நினைத்தே வேலை செய்கிறோம். கூப்பிடும் போதெல்லாம் நாங்கள் வர வேண்டும். 24 மணி நேரம் வேலை. எந்த நேரத்திலும் அழைப்பார்கள். இறுதியில் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவுகள் எதுவும் இல்லை. இதுதான் மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்படும் கௌரவமா? நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.”

ஊழியர்கள் பற்றாகுறையாலேயே தாம் மேலதிக நேரம் வேலை செய்வதாக அவர் மேலும் விளக்கினார். "மேலதிக நேர வேலை எங்களது தொழில் நிலைமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் கடினமாக்கியுள்ளது. சம்பளம் போதாது. எங்கள் குழந்தைகளின் கல்வி உட்பட வாழ்க்கைச் செலவு காரணமாக நாங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நித்திறைகொள்வதற்காகவே வீட்டிற்கு செல்கிறோம், பின்னர் மீண்டும் எழுந்து வேலைக்கு வர வேண்டும். சுற்றறிக்கைகளை வழங்குவதன் மூலம் கொடுப்பனவுகளை குறைப்பது நியாயமற்றது."

தென்மாகாண சபையின் கீழ் உள்ள பலபிட்டிய, வலஸ்முல்ல, எல்பிட்டிய, திஸ்ஸமஹராம ஆகிய இடங்களில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் சுகாதார உதவி ஊழியர்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேலதிக நேர ஊதியம் கொடுக்கப்படாததற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் ஏற்கனவே தொற்றுநோய் தொடர்பான கடமைகளில் இருந்து விலக முடிவு செய்து வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கோரி தொழிலாளர்கள் பலமுறை ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் வளர்ந்து வரும் எதிர்ப்பின் மத்தியில், ராஜபக்ஷ தனது இராணுவமயமாக்கலை முடுக்கிவிட்டார். தாதிமாருக்கான கொடுப்பனவுகள் இப்போது இராணுவ அதிகாரிகளின் கட்டளையின் கீழேயே குறைக்கப்படுகின்றன.

ஜூன் 2 அன்று ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், பாரதூரமான அதிகாரங்களைக் கொண்ட, ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள, இராணுவத் தலைமையிலான செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்குகிறார்.

இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற இராஜபக்ஷ முயல்கிறார்.

தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் முதல் இந்தியாவில் நரேந்திர மோடி மற்றும் இலங்கையில் இராஜபக்ஷ வரை உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் கவலைகள், மக்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவது பற்றியது அல்ல. மாறாக வங்கியாளர்கள் மற்றும் கூட்டுத்தாபன உரிமையாளர்களின் இலாபங்களைப் பாதுகாப்பது பற்றியதே ஆகும்.

கொவிட்-19 வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவில், ஒரு சில பில்லியனர்களுக்கு கொட்டிக் கொடுக்கப்பட்ட நிதியுதவி 7.1 டிரில்லியன் டாலர் ஆகும். இலங்கை மத்திய வங்கியும், பெரும் வணிகர்களுக்கு 150 பில்லியன் ரூபா நிதியை இந்த மாதம் 1 ஆம் திகதி முதல் 4 சதவீத குறைந்த வட்டிக்கு, கோடாபய இராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விநியோகித்துள்ளது.

சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிலாள வர்க்க வெகுஜனங்களையும், குறைந்தபட்ச சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்கள் கூட இல்லாமல், ஆபத்தான நிலைமையில் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கும் கொடூர கொள்கையின் விளைவாக, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், தொற்றுக்கு உள்ளாகி வருகின்ற மற்றும் மரணித்துக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் இந்தளவு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச செவிலியர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளவில் 600 இற்கும் மேற்பட்ட தாதிமார் இந்த வைரஸால் இறந்துள்ளதுடன், 450,000 இற்கும் மேற்பட்ட அனைத்து பிரிவுகளிலுமான சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸிம்பாப்வே, பிரேசில் மற்றும் அமெரிக்க மாநிலமான இல்லினாய்ஸில் உள்ள செவிலியர்கள் அதிக பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊதிய அதிகரிப்பும் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிரான்சில் செவிலித் தொழிலாளர்கள் மற்றொரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

முதலாளித்துவ முறைமையின் ஆழமடைந்து வரும் நெருக்கடியை எதிர்கொண்டு, உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்கள் நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கும் முதலாளித்துவ கருவியாக மாறியுள்ளன.

இலங்கையில் செவிலியர்கள் மத்தியில் செயற்பட்டு வரும் சமன் ரத்னபிரிய தலைமையிலான அரச தாதிமார் சங்கம், முருத்தெட்டுவே ஆனந்த என்ற பிக்குவின் அரச சேவை மற்றும் ஐக்கிய தாதிமார் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான அனைத்து இலங்கை தாதிமார் சங்கம் உள்ளிட்ட அனைத்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த இராணுவமயமாக்கத்துக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை நிராயுதபாணியாக்க செயற்படுகின்றன.

எமது நிருபர்களுடன் உரையாடிய ஒரு தொழிலாளி, ரத்னபிரிய தொழிற்சங்கங்கள் கூட்டுச் சேர்வதைக் கூட எதிர்த்ததாகத் தெரிவித்தார். போராட்டத்திலிருந்து விலகி இருக்குமாறு அவர் தனது உறுப்பினரிடம் கூறிய போதிலும், அவரது உத்தரவுகளை மீறி அனைத்து செவிலியர்களும் போராட்டத்தில் இணைந்தபோது, ரத்னப்பிரிய போராட்டத்தில் முன்வந்து நின்றுகொள்ள முயன்றதாக அந்த தொழிலாளி விளக்கினார். மேற்சொன்ன தொழிற்சங்கங்களில் இருந்து விலகுவதற்கும் உறுப்பினர் கட்டணத்தை நிறுத்துவதற்கும் சில செவிலியர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக பேராதனை மற்றும் கம்பொல வைத்தியசாலைகளின் தாதிமார் குறிப்பிட்டனர்.

தொழிற்சங்கத் தலைமையின் கருங்காலி வேலையை கடுமையாக விமர்சித்த ஒரு தாதி செயற்பாட்டாளர், “தொழிற்சங்கங்களில் பதவிகளை எடுத்தவர்கள் குழந்தைகள் போன்று இருக்கின்றனர். எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். தொழிற்சங்கங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது,” எனத் தெரிவித்தார்.

தங்கள் போராட்டத்தை பலம்வாய்ந்த முறையில் முன்னெடுக்க, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்வைத்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முழு சுகாதார ஊழியர்களுடனும் ஏனைய தொழிலாள வர்க்கத்துடனும் இணைந்து செயல்படுவது சம்பந்தமாக, இந்த தொழிலாளர்கள் WSWS நிருபர்களுடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.