அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

By Peter Symonds
26 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முழுவதும் பொய்கள், பாசாங்குத்தனம் மற்றும் கம்யூனிச-விரோத வாய்சவடால் நிரம்பிய வியாழக்கிழமை உரை ஒன்றில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ உத்தியோகபூர்வமாக சீனாவை நோக்கிய தசாப்த கால அமெரிக்க கொள்கையை தலைகீழாக எடுத்துக்காட்டி, பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் மோதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு களம் அமைத்தார்.

இதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்த இடமே —ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் வீடு மற்றும் நூலகம்— பொம்பியோவின் சேதியை எடுத்துக்காட்டியது. நிக்சனின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் சேர்ந்து நிக்சன் தான் சீனாவுடன் ஒரு சமரசத்தை வடிவமைத்தவராவர். 1972 இல் பெய்ஜிங்கிற்கு சென்ற நிக்சன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைவர் மாவோ சேதுங்கைச் சந்தித்தார், அந்த சந்திப்பு 1979 இல் முழுமையான இராஜாங்க உறவுகளுக்கு வழிவகுத்தது.

பொம்பியோ அறிவிக்கையில், “நமக்கு ஜி ஜின்பிங் கனவுகளைக் கொண்ட சீன நூற்றாண்டு வேண்டாம், சுதந்திரமான 21 நூற்றாண்டு வேண்டுமென்றால், சீனாவுடனான கண்மூடித்தனமான உறவின் பழைய சூத்திரம்" வேறொரு மூலோபாயத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும், அதில் "இந்த புதிய சர்வாதிபத்தியத்தை சுதந்திர உலகம் வெற்றி கொண்டிருக்க வேண்டும்" என்றார். அவர் தொடர்ந்து கூறினார், “அதிக ஆக்கபூர்வமான மற்றும் சக்திவாய்ந்த வழிகளில் மாறுவதற்கு நாம் சீனாவை இணக்குவிக்க வேண்டும், ஏனென்றால் பெய்ஜிங்கின் நடவடிக்கைகள் நமது மக்களுக்கும் நமது வெற்றிகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன,” என்றார்.

அமெரிக்க போர்க்கப்பல்கள் [படம்: Flickr.com/ அமெரிக்க கடற்படை]

பொம்பியோ "கம்யூனிஸ்ட் சீனாவின்" பனிப்போர் அசுரனைத் துணைக்கிழுத்தார், அது "மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆட்சி" ஆல் ஆளப்பட்டது என்றும், “பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் ஒரு திவாலான சர்வாதிபத்திய சித்தாந்தத்தில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்" என்றும் அவர் அறிவித்தார்.

இதுபோன்ற பகட்டாரவாரப் பேச்சுக்கும் யதார்த்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை—1972 சமரசம் சீனாவின் ஒட்டுமொத்த முதலாளித்துவ மீட்சிக்கு வழி வகுத்ததுடன், உலகின் மிகப் பெரிய மலிவு உழைப்பு தளமாக அதை மாற்றியது. வாஷிங்டனின் பயம் சீனக் கம்யூனிசம் அல்ல, மாறாக வளர்ந்து வரும் சீன முதலாளித்துவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அபிலாஷைகள் மற்றும் நலன்களை அச்சுறுத்தி வருகிறது.

கம்யூனிசத்திற்கு எதிராக "சுதந்திர உலகின்" பனிப்போர் பிரச்சாரம் எப்போதுமே வியட்நாமில் நவ-காலனித்துவ போர் உட்பட ஜனநாயக-விரோத அமெரிக்க தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கான ஓர் இற்றுப்போன மூடிமறைப்பாக இருந்தது. ஆனால் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசவும் மற்றும் தனிநபர்களை எதேச்சதிகாரமாக பிடித்து இழுத்துச் செல்லவும், போர்ட்லாந்து போன்ற, அமெரிக்க நகரங்களுக்குள் ட்ரம்ப் பெடரலின் அதிரடி துருப்புகளை அனுப்பி உள்ள அதேவேளையில், ஹாங்காங்கில் "மனித உரிமைகள்" சம்பந்தமாகவும் ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம் வீகர் மக்களைக் கையாள்வது சம்பந்தமாகவும் பெய்ஜிங்கை தாக்கியதில் பொம்பியோவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பாசாங்குத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பெய்ஜிங் மீது பொம்பியோவின் கண்டனத் துதிபாடல்கள், சீனக் கொடுங்கோலாட்சி எனக்கூறப்படுவதை விட அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சியை அதிகமாக எடுத்துக் கூறுகின்றன.

கோவிட்-19 அபாயங்களைச் சீனா மூடிமறைத்தது என்ற ட்ரம்பின் பொய், அந்த தொற்றுநோய்க்கான அவர் நிர்வாகத்தின் விடையிறுப்பினது நாசகரமான மற்றும் குற்றகரமான தன்மையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப நோக்கம் கொண்டுள்ளது. அவரது நிர்வாகத்தின் விடையிறுப்பு அங்கே உள்நாட்டில் அவருக்குப் பரந்த எதிர்ப்பை உருவாக்கி வருகின்றது.

சீனா உளவுபார்க்கிறது என்றும் "அறிவுசார் சொத்து திருட்டு" சம்பந்தமாகவும் கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் உலகளாவிய உளவுத்துறையை ஒரு தொழில்துறை அளவில் புறக்கணிக்கின்றன, அதேவேளையில் அமெரிக்க உயர்-தொழில்நுட்ப மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. சீனத் தொலைத்தொடர்பு பெருநிறுவனம் ஹூவாய் பெரிதும் "ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" இல்லை, மாறாக அதன் அமெரிக்க பெருநிறுவன போட்டியாளர்களுக்கு ஆபத்தாக நிற்கிறது.

இதேபோல, அமெரிக்க உற்பத்தியை ஒப்பந்த சேவையில் வெளியில் வழங்குவது ஒரு சீன சதி அல்ல, மாறாக அது அமெரிக்க வணிகங்களின் வீழ்ச்சி அடைந்து வரும் இலாபத்தன்மையால் உந்தப்பட்டது. ட்ரம்பின் பாதுகாப்புவாத வர்த்தக போர் நடவடிக்கைகள் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக தொலைநோக்கு கொண்ட அமெரிக்க போர் தயாரிப்புகளின் பாகமாக உள்ளன.

ட்ரம்புக்கான ஆதரவு சரிந்து வரும் நிலைமைகளின் கீழ், சீன விரோத பிரச்சாரத்தை அதிகரிப்பது பகுதியாக ஜனநாயகக் கட்சியின் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் பைடெனுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ள போதினும், அது இன்னும் அதிக பரந்த புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

“நாம் இதற்குமுன்னர் ஒருபோதும் எதிர்கொண்டிராத ஒரு சிக்கலான புதிய சவாலை" சீனா முன்நிறுத்துவதால், அங்கே "கட்டுப்படுத்தி கூடி வேலைசெய்யும்" பனிப்போர் கொள்கைக்குத் திரும்புதல் இருக்காது என்று பொம்பியோ அறிவித்தார். “சுதந்திர உலகில் இருந்து USSR இல்லாதொழிக்கப்பட்டு விட்டது" என்றாலும், “கம்யூனிஸ்ட் சீனா ஏற்கனவே நமது எல்லைகளுக்குள் உள்ளது,” என்றவர் அறிவித்தார் — இது சீனா மற்றும் அமெரிக்காவின் சிக்கலான பொருளாதார இடைதொடர்பைக் குறித்த ஒரு குறிப்பாகும்.

பொம்பியோவின் கருத்துக்கள் 1950 களில் தொடக்கத்தில் கொரிய போரின் போது அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் முன்னுக்கு வந்திருந்த விவாதத்ததை நினைவூட்டுகிறது, கட்டுப்படுத்தி கூடி வேலைசெய்யும் (containment) கொள்கைக்கு மாற்றீடாக "தூக்கிவீசும்" (rollback) கொள்கை என்றிருந்தது, அதாவது போர் உட்பட கையிலிருக்கும் எல்லா வழிவகைகளினூடாகவும் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்ராலினிச ஆட்சியை மாற்றுவதற்கான ஒரு மூலோபாயம் இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன், முற்றிலுமாக உலகப் போரை அச்சுறுத்தும் ஒரு நகர்வாக, சீனாவுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பிரயோகிக்க கோரிய, கொரியாவிலிருந்த அவரது தளபதி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்த்தரின் கோரிக்கையை நிராகரித்து அவரைப் பதவியிலிருந்தும் நீக்கியிருந்தார்.

கட்டுப்படுத்தி கூடி வேலைசெய்வதை நிராகரித்ததன் மூலமாக, பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார். “நம்மால் தனியாக இந்த சவாலை முகங்கொடுக்க முடியாது,” என்றார். “அதை தெளிவாகவும் பெரும் தைரியத்துடனும் நாம் முன்நகர்த்தினால், ஐக்கிய நாடுகள் சபை, நேட்டோ, ஜி7 நாடுகள், ஜி20, நமது ஒருமித்த பொருளாதார, இராஜாங்க, இராணுவ பலம் ஆகியவை நிச்சயமாக இந்த சவாலைச் சமாளிக்க போதுமானது,” என்றார்.

வாஷிங்டனின் பாதையிலிருந்து அதன் மூலோபாய பங்காளிகளின் எந்தவொரு விலகலையும் அமெரிக்கா சகித்துக் கொள்ளாது என்பதை பொம்பியோ சுட்டிக்காட்டினார். “சீனச் சந்தையை அணுகுவதிலிருந்து பெய்ஜிங் அவர்களைத் தடுக்குமென அஞ்சுவதால், ஹாங்காங் விவகாரத்தில்" எதிர்த்து நிற்க தயங்குவதற்காக மிகவும் பகிரங்கமாகவே ஜேர்மனியை அவர் விமர்சித்தார். “இந்தவகையான தயக்கம், இது வரலாற்று தோல்விக்கு இட்டுச் செல்லும், நாம் அதை மீண்டும் செய்ய முடியாது,” என்றவர் தொடர்ந்து கூறினார்.

பெய்ஜிங்கிற்கான நிக்சனின் விஜயம் சீனாவுடனான இராஜாங்க உறவுகளுக்கு இட்டுச் சென்றது அவ்வாறிருக்கையில் ட்ரம்ப் நிர்வாகமோ அந்த உறவுகளை அழிக்கும் நிகழ்வுபோக்கில் உள்ளது. ஹோஸ்டனின் சீனத் தூதரகம் "உளவுபார்ப்புக்கும் அறிவுசார் சொத்து திருட்டுக்கும் மையமாக" இருந்தது என்ற ஆதாரமற்ற வாதத்தின் அடிப்படையில், அமெரிக்கா சமீபத்தில்தான் அதை மூடியது என்பதை பொம்பியோ பெருமை பீற்றிக் கொண்டார். இது அவரின் வலதுசாரி பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டலைக் கொண்டு வந்தது, இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய சீன அதிருப்தியாளர்களும் இருந்தனர்.

இப்போது, பெய்ஜிங்கின் சான் பிரான்சிஸ்கோ தூதரகத்தில் மறைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு சீன விஞ்ஞானியைக் கைது செய்த பின்னர், அமெரிக்க பெருநிறுவன அறிவுசார் சொத்துக்களைத் திருடுவதற்காக சீனா “ஒரு வேவுபார்ப்பு வலையமைப்பை” நடத்துவதற்காக அதன் இராஜாங்க பதவிகளைப் பயன்படுத்துவதாக நீதித்துறை குற்றஞ்சாட்டுகிறது.

அவர் பதவியேற்பதற்கு சற்று முன்னர், ட்ரம்ப் சீனாவுடனான இராஜாங்க உறவுகளின் அடித்தளத்தை —அதாவது பெய்ஜிங்கை தாய்வான் உட்பட மொத்த சட்டபூர்வ சீன அரசாங்கமாக அங்கீகரிக்கும் ஒரே-சீனக் கொள்கை என்றழைக்கப்படுவதன் மீது கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கொள்கையை விட்டொழிப்பது சீனா உடனான இராஜாங்க உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்— இந்த அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்பதுடன் இப்போது ஏனைய வழிவகைகள் மூலமாக அதை நோக்கி நகர்ந்து வருகிறார். இராஜாங்க உறவுகளைக் கடுமையாக்குவது என்பது போருக்கான பாதையில் ஒரு முன்னேறிய கட்டமாகும்.

பொம்பியோவின் உரைக்கு முன்னதாக, சீனப் பெருநிலத்தின் வாயிற்கதவு அருகில் மற்றும் ஹைனன் தீவிலுள்ள பதட்டமான சீனக் கடற்படை தளங்களுக்கு அருகில், தென்சீனக் கடலில் பென்டகன் மிகப் பெரியளவில் ஆத்திரமூட்டும் போர் பயிற்சிகளை நடத்தியது. இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் அவற்றின் தாக்கும் படைக்குழுக்களும் "அதிநவீன" போர் ஒத்திகைகளை நடத்தின, இவை ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய போர்க்கப்பல்களுடன் சேர்ந்து அண்டைப்பகுதியான பிலிப்பைன் கடலில் நடத்தப்பட்ட கூடுதல் இராணுவ பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உள்நோக்கத்தையே கொண்டுள்ள பைடென் பெய்ஜிங் மீது மென்மையாக இருப்பதாக ட்ரம்ப் மற்றும் அவரின் கைக்கூலிகளது குற்றச்சாட்டு, சீனாவுக்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" பொய்யாக்கப்படுகின்றன. ஒபாமா ஆசியா எங்கிலும் சீனாவை இராஜாங்கரீதியிலும் மற்றும் பொருளாதாரரீதியிலும் மட்டும் எதிர்க்கவில்லை, மாறாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களில் 60 சதவீதத்தை 2020 க்குள் அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்த பொறுப்பேற்று, பாரியளவில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பையும் தொடங்கி இருந்தார்.

வாஷிங்டனில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் —ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஒன்றுபோல— இந்த அபாயகரமான போர் முனைவுக்குப் பொறுப்பேற்றுள்ளனர். பெய்ஜிங்கிற்கு எதிராக போதுமானளவுக்குக் கடுமையான நிலைப்பாடு எடுக்க தவறியதற்காக ட்ரம்பை வலதிலிருந்து தாக்குவதே பைடெனின் தேர்தல் மூலோபாயத்தில் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

பொம்பியோ வெறுமனே அவரது கருத்தை மட்டும் பேசவில்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ' பிரெய்ன், FBI இயக்குனர் கிறிஸ் வேரே மற்றும் அட்டார்னி ஜெனரல் வில்லியன் பார் ஆகியோரது ஒருங்கிணைந்த தொடர்ச்சியான பல சமீபத்திய சீனவிரோத உரைகளை அவர் மேற்கோளிட்டு காட்டினார். இந்த வாரம் Fox News இல், ட்ரம்பின் பாசிசவாத முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன், அவர்களை "பிரளயத்திற்கான நான்கு திறமையான குதிரைவீரர்கள்" —ட்ரம்பின் "போர் குழு"— என்று வர்ணித்தார், "முதலில் எதிர்ப்பது பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பதவிலிருந்து கவிழ்ப்பது" என்பதே அவர்களின் நோக்கமாகும். பொம்பியோ அவரது உரையில் என்ன விவரித்தாரோ அதை பானன் மிகவும் அப்பட்டமாக தொகுத்து மட்டுமே வழங்கி உள்ளார்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்றத்தன்மையின் அளவு பின்வரும் வரிகளை நினைவூட்டுகிறது: “கடவுள் யாரை அழிக்க விரும்புகிறாரோ அவர்களை முதலில் பைத்தியமாக்குவார்.” கோவிட்-19 தொற்றுநோயால் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமடைந்து வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம், அளப்பரிய சமூகப் பதட்டங்களை வெளியிலுள்ள ஓர் எதிரிக்கு எதிராக திருப்பி விடவும் மற்றும் சாத்தியமான ஒரு போட்டியாளரை "கீழிறக்கவும்" செய்யும் பெரும்பிரயத்தன முயற்சிகளில் சீனாவை தாக்கி வருகிறது.

அமெரிக்காவிலும் உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் உலக மக்கள் ஒரு பேரழிவுகரமான பிரமாண்ட போருக்குள் மூழ்குவதை அனுமதிக்கக் கூடாது. இந்த உலகளாவிய முதலாளித்துவத்தையும் போருக்கு மூலக் காரணமான அதன் திவாலான எதிர்விரோத தேசிய அரசு அமைப்புமுறையையும் முடிவுக்குக் கொண்டு வர, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் உலகெங்கிலுமான சோசலிச சமத்துவக் கட்சியினதும் முன்னோக்காகும்.