சீனாவுக்கு எதிராக அணிவகுக்குமாறு ஐரோப்பா மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது

By Peter Symonds
29 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் ஒரு முக்கிய உரையில், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோ, சீனாவுடனான ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான மோதலுக்கு தனது பங்கிற்கு கணிசமான தூண்டுதலளித்தார். சீனாவுக்கு எதிராக வளர்ந்து வரும் ஆதாரமற்ற கண்டனங்கள் மற்றும் பொய்களின் பட்டியலை மேற்கோள் காட்டியதன் பின்னர், அமெரிக்கா பனிப்போர் கட்டுப்படுத்துதல் கொள்கைக்கு (Containment of Cold War policy) மீண்டும் திரும்பவில்லை என்று அவர் அறிவித்ததானது, அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை அழிப்பதற்கு நோக்கம் கொண்ட மிகத் தீவிரமான மூலோபாயம் வகுக்கப்பட்டுள்ளதை சமிக்ஞை செய்கிறது.

“கம்யூனிஸ்ட் சீனாவும் சுதந்திர உலகமும்” என்று தலைப்பிடப்பட்ட இந்த உரையானது, வாஷிங்டனின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்துடன் அமெரிக்க கூட்டணி நாடுகளும் மற்றும் அதன் மூலோபாய பங்காளிகளும் முற்றிலும் தம்மை ஒருங்கிணைக்குமாறு அதிகரித்தளவில் அவற்றிற்கு அழுத்தம் கொடுக்க தெளிவாக நோக்கம் கொண்டிருந்தது. மேலும் பொம்பியோ, “அமெரிக்கா செய்ததை அப்படியே பின்பற்ற ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும்” அழைப்பு விடுத்ததோடு, “சாதாரணமாக எங்களுடன் நிற்பதற்கு கூட திறமையும் துணிச்சலும் இல்லாதவர்கள்” என்று அவர்களை கண்டனம் செய்தார்.

இந்த செய்தி குறிப்பாக ஐரோப்பாவில் விடுக்கப்பட்டதானது, வாஷிங்டன் அதன் கொள்கையிலிருந்து எந்தவொரு விலகலையும் பொறுத்துக்கொள்ளாது என்பதையே குறிக்கிறது. ஜேர்மனியை வெறுமனே மூடிமறைத்து விமர்சனம் செய்து, பொம்பியோ இவ்வாறு அறிவித்தார்: “உண்மையில், நமக்கென்றும் ஒரு நேட்டோ கூட்டணி உள்ளது, என்றாலும் ஹாங்காங்கைப் பொறுத்தவரை கூட்டணி அதற்கு சாதகமாக இல்லை. ஏனென்றால் சீன சந்தையை தாம் அணுகுவதை பெய்ஜிங் கட்டுப்படுத்துமோ என்று இக்கூட்டணி அஞ்சுகிறது. இது வரலாற்றுத் தோல்விக்கு வழிவகுக்கும் ஒரு வகையான பயம் என்பதால், அதை எங்களால் மீண்டும் செய்ய முடியாது.”

பொம்பியோ, “சுதந்திர உலகம்” மற்றும் “கம்யூனிஸ்ட் சீனா” என்று கூறி பனிப்போர் முழக்கத்தை முன்வைத்தார். இது எப்போதுமே அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான ஒரு இழிவான சாக்குப்போக்காக இருந்தது. ஆனால் இன்று யதார்த்தத்துடன் அதற்கு எந்தவித தொடர்பும் இல்லை. பொலிஸ் கொலைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு நசுக்க கூட்டாட்சி முகவர்களை அனுப்பி, ட்ரம்ப் நிர்வாகம் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சட்ட விதிமுறைகளையும் சீர்குலைத்து கொண்டிருக்கையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பொம்பியோ கூறுகிறார். மேலும், முதலாளித்துவம் மீள்புனருத்தானம் செய்யப்பட்டு நான்கு தசாப்தங்கள் கடந்த பின்னரும், சீனாவை “கம்யூனிஸ்ட்” என்று வர்ணிப்பது அபத்தமாக உள்ளது.

கோவிட்-19 நோய்தொற்றால் எரியூட்டப்பட்ட உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி, புவிசார் அரசியல் பதட்டங்களை மோசமாக்குவதுடன், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் விரக்தியை அதிகப்படுத்துகிறது. ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சீனாவை அடிபணியச் செய்யும் அமெரிக்க உந்துதலுக்குப் பின்னால் ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் அணிசேரும்படி கோருகிறது. எவ்வாறாயினும், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்கு எந்தவித அச்சுறுத்தலையும் அவர்களும் முன்வைக்காதிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தனது ஐரோப்பிய “கூட்டணி நாடுகளுக்கும்” எதிராக வர்த்தகப் போர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

பலவீனப்பட்ட ஐரோப்பிய நாடுகளை வாஷிங்டனின் வழிக்குள் உந்தித்தள்ளுவதற்கான அமெரிக்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பொம்பியோவின் சமீத்திய உரை உள்ளது என்ற நிலையில், அது தோல்வியடையுமானால், ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுபடுத்தவும் முறிக்கவும் அது முனையும். இது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையேயான ஆழ்ந்த பிளவுகளை வெளிப்படுத்திய பெப்ரவரியில் நடைபெற்ற வருடாந்திர மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) அவரது தலையீட்டின் பின்னரும், மற்றும் கடந்த மாதம் ஜூன் 19 இல் கோபன்ஹெகன் ஜனநாயக உச்சிமாநாட்டிலும் (Copenhagen Democracy Summit) மற்றும் ஜூன் 25 இல் ஜேர்மன் மார்ஷல் திட்ட புரூஸ்ஸெல்ஸ் மன்றத்திலும் (German Marshall Fund’s Brussels Forum) “ஐரோப்பாவும் சீனாவின் சவாலும்” என்ற தலைப்பில் இரண்டு உரைகள் நிகழ்த்தப்பட்டதன் பின்னரும் நிகழ்கிறது.

சமீபத்திய இரண்டு உரைகளும், சீனாவுக்கு எதிராக ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த ஆதரவைப் பெறவும், மற்றும் ஐரோப்பிய சக்திகள் இன்னும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தவும் நோக்கம் கொண்டிருந்தன. இரண்டு மாநாடுகளுமே தீவிர வாஷிங்டன் சார்பு பிரமுகர்களால் தலைமை வகிக்கப்பட்டது, முதல் நிகழ்ச்சிக்கு டென்மார்க் பிரதமரும் நேட்டோ பொதுச் செயலருமான Anders Fogh Rasmussen உம், மற்றும் இரண்டாவது நிகழ்ச்சிக்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகைக்கான ஜேர்மன் நிருபர் Bojan Pancevski உம் தலைமை தாங்கினர்.

சீனாவிற்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதில் தான் “வெற்றிகள்” உள்ளன என்று பொம்பியோ குறிப்பிட்டார். இதில், சில ஐரோப்பிய தலைவர்களுக்கு தனிச்சிறப்பு வழங்கும் சீனாவுக்கான புதிய உள் பாராளுமன்ற கூட்டணியும், மற்றும் ஹாங்காங்கில் பெய்ஜிங் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது, மேலும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளில் சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய் (Huawei) ஓரங்கட்டப்படுவது குறித்த பிரிட்டனின் கண்டனங்களும் அடங்கும்.

ஹாங்காங், தீபெத் மற்றும் சின்ஜியாங் ஆகிய நாடுகளில் “மனித உரிமைகள்” குறித்து “ஜனநாயகத்தை பாதுகாப்பது” பற்றியும், மற்றும் சீனாவை தடைசெய்வது பற்றியும் வாய்ச்சவடால் பேசும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் உள்ளவர்களும் கூட, ஐரோப்பாவை பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு திரும்பச் செய்வது மற்றும் தீவிர வலதுசாரியையும் மற்றும் வெளிப்படையாக பாசிச கட்சிகளையும் வளர்த்தெடுப்பது என்ற வகையில், தங்களது அமெரிக்க சகாக்களைப் போலவே பாசாங்குத்தனமானவர்களாவர்.

அதே நேரத்தில், அமெரிக்கா தான் எதிர்க்கும் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் ஆப்பு வைப்பதற்கு நோக்கம் கொண்டுள்ளது. கடந்த மாத இரண்டு உரைகளும், பேர்லின் தனது இராணுவ வரவு செலவுத் திட்டத்தை போதுமான அளவிற்கு அதிகரிக்கத் தவறியது மற்றும் ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை அது நம்பியிருப்பது குறித்து ஜேர்மனியிலிருந்து 10,000 அமெரிக்க துருப்புக்களை மீளப்பெறுவதற்கான அமெரிக்க நடவடிக்கையை அடுத்து நிகழ்த்தப்பட்டன. இந்த முடிவு, வெறுமனே ஜேர்மனியை கண்டிப்பதற்காக மட்டுமல்ல, மாறாக சீன மக்கள் இராணுவத்தை எதிர்ப்பதற்கு நாங்கள் சரியான முறையில் முன்நிற்கிறோமா என்பதை உறுதிப்படுத்த” ஆசியாவை நோக்கிய அமெரிக்க இராணுவ முன்னெடுப்பின் பாரிய மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் எடுக்கப்பட்டது என்று பொம்பியோ கூறினார்.

உலகெங்கிலுமுள்ள நாடுகளைப் போல ஐரோப்பாவிலும் உள்ள பிளவுகள், ஒருபுறம் அமெரிக்கா மீதான நீண்டகால மூலோபாய சார்புநிலையினால், மறுபுறம் சீனாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் மீது வளர்ந்து வரும் நம்பகத்தன்மையினால் உருவாகின்றன. ஜேர்மனி சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டை பெரிதும் சார்ந்துள்ளது. மறுபுறம், அனைத்திற்கும் மேலாக உலகளாவிய நிறுவனங்களுக்கான மிகப்பெரிய மலிவான தொழிலாளர் தளமாக சீனா மாற்றப்பட்டதன் விளைவாக, சீனா விரைவான பொருளாதார வளர்ச்சியடைந்து வருவதானது, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் தங்களது சொந்த பொருளாதார போட்டித்திறனும் மற்றும் நவகாலனித்துவ நாடுகளில் தமது பங்குகளும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவது குறித்து அமெரிக்காவைப் போல ஐரோப்பிய சக்திகளும் கவலையடைந்துள்ளன.

Brookings Institution ஐ சேர்ந்த அமெரிக்க சிந்தனைக் குழாமின் பகுப்பாய்வாளரான தோமஸ் ரைட் (Thomas Wright), “சீனாவைப் பற்றிய தனது கருத்தை ஐரோப்பா மாற்றுகிறது,” என்ற தலைப்பில் இந்த மாதம் வெளியிட்ட ஒரு கட்டுரை, அமெரிக்காவின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஐரோப்பா ஆதரவளிப்பதன் பின்னணியில் பொருளாதார போட்டி இருந்ததே தவிர ஜனநாயகம் குறித்த எந்தவித கவலையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

ரைட், “சீனாவின் மீது ஐரோப்பா அதிகரித்தளவில் அவநம்பிக்கை கொள்வதற்கான முதன்மை உந்துதலாக பொருளாதாரம் உள்ளது,” என்று குறிப்பிட்டு அதன் பின்னர், பெய்ஜிங்கின் “சீனாவின் 2025 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது” (“Made in China 2025) என்பதை ஒரு குறிப்பிட்ட காரணியாக துல்லியமாகக் குறிப்பிட்டார். 5G தொலைத்தொடர்பு, மேம்பட்ட மனித இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உயர் தொழில்நுட்ப பொருட்களின் முன்னணி உற்பத்தியாளராக சீனாவை மாற்றுவதற்கான இந்த திட்டத்தின் நோக்கமானது, இந்த அதிக இலாபகரமான தொழில்பிரிவுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதிக்கத்திற்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில், சீனாவில் பெரும் இலாபமீட்டுவதற்கான ஐரோப்பிய பெருநிறுவனங்களின் அபிலாஷைகள், சீன அரசாங்கம் தனது பொருளாதாரத்தின் புதிய துறைகளை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறக்கத் தவறியதால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் நிச்சயமாக ஒரு காரணியாக இருந்தாலும், இந்த விடயத்தில், ரைட் குறிப்பிட்டபடி, வாஷிங்டனின் இடைவிடாத அழுத்தம் ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள கட்டாயப்படுத்துவதில் சிறிய பங்கைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஹூவாய் சாதனங்களில் அமெரிக்க மென்பொருட்களின் பயன்பாட்டிற்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த தடையின் விளைவாக, நாட்டின் 5G தொலைத்தொடர்பு வலையமைப்பிலிருந்து ஹூவாயை நீக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்த சமீபத்திய முடிவை சிறிய நடவடிக்கையாக கருத முடியாது.

பொம்பியோவின் கடந்த வார உரை, உலகம் எங்கிலுமான வாஷிங்டனின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் முக்கிய விரிவாக்கத்திற்கு பரிந்துரைக்கிறது. “இந்த சவாலை அமெரிக்காவால் மட்டும் எதிர்கொள்ள முடியாது,” என்று அவர் அறிவித்ததோடு, சீனாவை எதிர்கொள்ள ஐ.நா., நேட்டோ, ஜி7 மற்றும் ஜி20 நாடுகள் ஆகியவற்றின் “ஒருங்கிணைந்த பொருளாதார, இராஜதந்திர, மற்றும் இராணுவ சக்திகளை” அச்சுறுத்தும் வகையில் அழைப்பு விடுத்தார். உள்நாட்டிலேயே ஒரு கடும் நெருக்கடியை எதிர்கொள்கையில், சமூக பதட்டங்களை வெளிப்புற எதிரிக்கு எதிராக திசைதிருப்ப ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக இருப்பதுடன், ஐரோப்பிய சக்திகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான எதையும் செய்யத்தவறாது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

[25 July 2020]

UK set to ban Huawei from 5G network
[8 July 2020]

Imperialist conflicts dominate Munich Security Conference
[18 February 2019]