WSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

1 August 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Sundar Pichai
Chief Executive Officer
Alphabet
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043

திரு. சுந்தர் பிச்சை அவர்களுக்கு,

"வலைத் தளங்கள் மற்றும் சந்தை சக்தி, பகுதி 6: அமசன், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் கூகிள் ஆகியவற்றின் ஆதிக்கத்தை ஆராய்வது" குறித்த ஜூலை 29, புதன்கிழமை விசாரணையில், நீதித்துறை மீதான காங்கிரஸ் குழுவின் முன் நீங்கள் வழங்கிய சாட்சியத்திற்கு பதிலளிக்கும் விதமாக நான் இதை எழுதுகிறேன்.

கூகிளின் வலைத் தள நிரல்நெறிமுறைகள் (online algorithms) பழமைவாத அரசியல் கருத்துக்களை பிரத்தியேகமாக தணிக்கை செய்கின்றன என்று காங்கிரஸ் அங்கத்தவரான கிரேக் ஸ்ரீவ் (புளோரிடாவின் குடியரசுக் கட்சி) கூறியதற்கு பதிலளித்த நீங்கள் பின்வருவனவற்றைக் கூறினீர்கள்: “நாங்கள் பாதை முழுவதும் புகார்களைப் பெறுகிறோம். எடுத்துக்காட்டாக, கூகிள் தேடல் முடிவுகளில் தங்கள் தளம் காணப்படவில்லை என்று உலக சோசலிச வலைத் தளம் இந்த ஆண்டு ஜனவரியில் புகார் கூறியது. எனவே, நாங்கள் புகார்களைப் பெறுகிறோம், நாங்கள் அதைப் பார்க்கிறோம், ஆனால் நாங்கள் எங்கள் வேலையை ஒரு பக்கசார்பற்ற முறையில் அணுகுவோம். இது நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் நீண்டகால ஊக்கமாகும்.

நீங்கள் இதுபற்றிய மேலதிக விவரங்களுக்குச் செல்லவில்லை என்றாலும், நீங்கள் குறிப்பிடுவது ஜனவரி 20 ஆம் தேதி உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை பற்றியதாகும். இதன் தலையங்கம் “கூகிள், நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்திற்கான தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தள உள்ளடக்கத்தை அடக்குகிறது” என்பதாகும். WSWS இன் குற்றச்சாட்டு உங்கள் நிறுவனத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தால் ஜனவரி 20 திகதி வெளியிடப்பட்ட கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் இதழால் மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்ட “1619 திட்டம்” என்று அழைக்கப்படும் அமெரிக்க வரலாற்றை இனவாதரீதியில் பொய்மைப்படுத்துவது பற்றிய தனது கட்டுரைகளை கூகிள் தனது தேடல் முடிவுகளில் ஒடுக்குவதாக குறிப்பிட்டது.

1619 திட்டத்தில் WSWS ஆல் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ மற்றும் மூல தொடர் கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பகுப்பாய்வுகள் உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களால் படிக்கப்பட்டு வருவதாகவும், சமூக ஊடகங்களில் இருந்து இந்த உள்ளடக்கத்திற்கான பின்னிணைப்புகள் பெருகி வருவதாகவும் நாங்கள் சுட்டிக்காட்டினோம். மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அட்லாண்டிக், நேஷனல் ரிவியூ மற்றும் டெய்லி சிக்னல் போன்ற முக்கிய வலைத் தள வெளியீடுகளில் இக்கட்டுரைகள் தொடர்பான பின்னூட்ட தொடுவைகள் இருந்தன. எவ்வாறாயினும், “1619 திட்டம்” பற்றிய தேடல்களில், இந்த உள்ளடக்கம் கூகிள் தேடல் தடங்களின் முடிபுகளில் ஆழமாக பின்தள்ளப்படுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்திலிருந்து கூகிள் தணிக்கை செய்த முதல் அறிக்கை இதுவல்ல. ஆகஸ்ட் 25, 2017 அன்று, அல்பாபெட் மற்றும் கூகிளில் உள்ள நீங்களும், லாரன்ஸ் பேஜ், சேர்ஜி பிரின் மற்றும் எரிக் ஷ்மித் நிர்வாகத் தலைமைக்கு ஒரு பகிரங்க கடிதத்தை அனுப்பினேன். அதில் கூகிள் தேடலில் உலக சோசலிச வலைத் தளத்தை கறுப்புபட்டியலில் இடுவதை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன்.

அந்த நேரத்திலிருந்து, உலக சோசலிச வலைத் தளம் இணைய தணிக்கை விரிவாக்கம் பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இதில் சமூக ஊடக தளங்களில் முற்போக்கான மற்றும் சோசலிச கருத்துக்களை அடக்குதல் மற்றும் "போலி செய்திகளை" எதிர்த்து போராடல் மற்றும் "வெளிநாட்டு குறுக்கீடு" என்ற ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து வலைத் தள தகவல்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கோரிக்கை அதிகரித்து வருவது உள்ளடங்கியிருந்தது.

உங்கள் காங்கிரஸின் சாட்சியத்தில், WSWS புகாரை நீங்கள் குறிப்பாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது இந்த விடயத்திற்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவத்தை கொடுத்துள்ளீர்கள் என்பதை காட்டுகின்றது. கூகிளின் முதன்மை நிறுவனமான அல்பாபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியான உங்களுக்கு புகார் குறித்து அறிவிக்கப்பட்டது. இக்கட்டுரை வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்கு பின்னரும், அது உங்கள் நினைவில் நிலைத்திருந்தது.

தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகளையும் பகுப்பாய்வுகளையும் கூகிள் ஒடுக்குகிறது என்று நாங்கள் கூறிய குற்றச்சாட்டை உங்கள் சாட்சியங்கள் மறுக்கவில்லை. விசாரணையின் சூழலில், கூகிள் “ஒரு பக்கசார்பற்ற வழியில்” செயல்படுவதற்கான உங்கள் இரகசிய குறிப்பு, உங்கள் நிறுவனத்தின் தணிக்கை நடைமுறைகளை இடதுசாரி மற்றும் வலதுசாரி இரண்டிற்கும் எதிராகப் பயன்படுத்துவதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்தும் முயற்சியாக விளக்கப்படலாம்.

மேலும், கூகிள் தணிக்கை புகார்களை பெறும்போது, நீங்கள் “அதைப் பார்ப்பதாக” கீழ் சபைக் குழுவின் சத்தியப்பிரமாணத்தில் தெரிவித்தீர்கள்.

உண்மையில் இது நிறுவனத்தின் கொள்கையாக இருந்தால், உலக சோசலிச வலைத் தளத்தின் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு, அல்பாபெட்/கூகிள் நிர்வாகத்திற்குள் விவாதிக்கப்படுவதாக அல்லது எங்கள் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக ஏன் ஒருபோதும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை?

எனவே, பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை நான் கோருகிறேன்:

- தணிக்கை பற்றிய WSWS புகார் மீதான விசாரணை எப்போது தொடங்கியது?:

- நிறுவனத்தின் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியவர் யார், அதில் கலந்துகொண்டவர் யார்?

- நிறுவனத்தின் எந்தத்துறை அல்லது துறைகள் விசாரணைக்கு உட்பட்டன?

- கூகிளின் தேடல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நிறுவன துணைத் தலைவரான பென் கோம்ஸ் விசாரணையின் ஒரு பகுதியாக பேட்டி காணப்பட்டாரா?

- இந்த விசாரணை எப்போது முடிந்தது?

- இந்த விசாரணையின் தெளிவான கண்டுபிடிப்புகள் என்ன?

உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்,

உண்மையுடன்

டேவிட் நோர்த்

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர்.