இலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது

By our reporters
5 August 2020

சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்று மாணவர் அமைப்பினதும் (IYSSE) அங்கத்தவர்கள மற்றும் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத தேர்தலுக்காக, ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தினை யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வடக்கில், யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தன. சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இணைந்து காரைநகரில் ஊரிக் கிராமத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியிருந்தன.

சோசக, தலைநகர் கொழும்பு, பெருந்தோட்ட பிரதேசமான நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணத்திலுமாக 43 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

பாதுகாப்புப் படைகள் வேட்பாளர்களை அச்சுறுத்துவதாலும் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தேர்தல் பிரச்சாரத்தினை கண்காணிப்பதினாலும் வடக்கின் தேர்தல் களமானது, பதட்டம் நிறைந்த்தாக காணப்படுகின்றது. கட்சிகள் தேர்தல் ஆணையாளர்களிடம் முறையிடும் மட்டத்துக்கு இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரித்திருந்தன. சோ.ச.க.வை இலக்கு வைத்த இராணுவம், பேட்பாளர் குழுத் தலைவர் உட்பட கட்சியின் வேட்பாளர்களது வீடுகளுக்கு புலனாய்வு உத்தியோகத்தர்களை அனுப்பி, அவர்களினதும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரதும் தனிப்பட்ட விபரங்களைப் பெறுவதற்கும் அவர்களைப் போட்டோ எடுப்பதற்கும் முயன்றுள்ளார்கள்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்களுக்குப் பின்னரும் கூட, தீவின் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சியாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன. கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட முழு அடைப்பை பாதுகாப்பு படைகள் பற்றிப் பிடித்துக் கொண்டு, அதன் யுத்தகால தேடுதல் நடவடிக்கைகள், தன்னிச்சையான கைதுகள், தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை வடக்கில் புதுப்பித்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டசின் கணக்கான கட்சிகள் போட்டியிடுகின்றன. 19 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உட்பட 33 கட்சிகள் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. ஏகாதிபத்திய சார்பு கொள்கைகள் உழைக்கும் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து போனதால், தமிழ் தேசியவாத கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுகின்றன. அவைகளுள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அடங்கும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவரது நிர்வாகத்தினை இராணுவ மயப்படுத்துவதற்கு இந்தக் கட்சிகள் மௌனமாக ஆதரிக்கின்ற அதேவைளை, மறுபக்கம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக, கொழும்பில் உள்ள தமது சிங்கள சமதரப்பினரைப் போலவே, தமிழ் வகுப்பு வாத்தினைக் கிளறிவிடுவதற்கு இராணுவ ஒடுக்கு முறைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

தமிழ் உயரடுக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஏற்பாடான அரசியல் தீர்வுக்காக பேரம் பேசும் சக்தியாக இருப்பதற்கு அதிக தமிழ் கூட்டமைப்பு அதிக ஆசணங்களைக் கோருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரியாக தமிழ் கூட்டமைப்பு சித்தரித்து, எதிர்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. தற்போது, தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுமாக இருந்தால் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக உத்தரவாதமளித்துள்ளது.

போரை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெறக் கோரி, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடிய வரலாறு சோ.ச.க.வுக்கு மட்டுமே உள்ளது. அதன் கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் காரணமாக இராணுவம் கட்சியின் வேட்பாளர்களை குறிவைத்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயைக் காரணம் காட்டி, கூட்டத்திற்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த பொலிஸ் அனுமதி வழங்குவதை நிராகரித்ததன் மூலம், ஊர்காவற்துறை பொலிசார் கட்சியின் உரிமைகளையும் தேர்தல் சட்டத்தையும் அப்பட்டமாக மீறி ஊரியில் நடக்கவிருந்த சோ.ச.க. கூட்டத்தைத் தடுப்பதில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகலாம் என்ற அக்கறையினால், சோ.ச.க. யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறையில் திட்டமிடப்பட்ட கூட்டங்களை ரத்து செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஊரியில் ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்தது. 300இற்கும் மேற்பட்டோர் பேஸ்புக் வழியாக சர்வதேச அளவில் நேரலையாக இந்த கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர், 800க்கும் மேற்பட்டோர் பின்னர் கூட்டத்தைப் பார்த்திருந்தார்கள்.

"போர், சமூக பேரழிவு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுங்கள்" என்ற சோ.ச.க. தேர்தல் விஞ்ஞாபனத்தின் நூற்றுக்கணக்கான பிரதிகளை பிரச்சாரகர்கள் விநியோகித்திருந்தனர். அத்துடன், இராணுவ அச்சுறுத்தலில் இருந்து அதன் உறுப்பினர்களைப் பாதுகாக்க சோ.ச.க. வெளியிட்ட அறிக்கையும் விநியோகிக்கப்பட்டது: “இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது கை வைக்காதே! யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் வேட்பாளர்களை இராணுவம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு சோ.ச.க. கோருகிறது.” கலந்துரையாடலுக்குப் பின்னர், வடக்கில் சோ.ச.க. உறுப்பினர்கள் மீதான இராணுவத் துன்புறுத்தலை நிறுத்தக் கோரி 60 க்கும் மேற்பட்டோர் மனுவில் கையெழுத்திட்டனர்.

ஊரி ஒரு ஒடுக்கப்பட்ட ஏழை மீன்பிடி கிராமமாகும். இது காரைநகர்-யாழ்ப்பாண பிரதான வீதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மீன்வர்களுக்கு நிரந்தர வருமானமோ அல்லது நிரந்தர சந்தை வாய்ப்புகளோ இல்லை. பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நிரந்தர தொழில் இன்றி உள்ளனர்.

ஊரி கிராமத்தில் ஓலைக் குடிசையில் வாழும் ஒரு குடும்பம்

குடி நீர் பற்றாக்குறை என்பது ஊரி மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினை ஆகும். 500 லிட்டர் குடிநீருக்கு 300 ரூபாய் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டும். கிணறுகளிலிருந்து மாசடைந்த உப்பு நீரை மக்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் பொது கிணற்றுக்கு ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

உள்ளூர் பாடசாலை ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருப்பதால் சிறுவர்கள் ஏனைய வகுப்புகளுக்கு 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். காலையில் மாணவருக்கு ஒரே ஒரு பஸ் சேவை மட்டுமே உள்ளது, மாலை சேவை நிச்சயம் இல்லை. போக்குவரத்து வசதிக்கு மக்கள் சேதமடைந்த கரடுமுறடு பாதை வழியாக இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

ஊரியில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோ.ச.க. உறுப்பினரும் வேட்பாளருமான எம். முருகானந்தன், 1948 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் முதலாளித்துவத்தின் தொழிலாள வர்க்க-விரோத கொள்கையை சுட்டிக்காட்டினார். "முதலாவது ஐ.தே.க. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆதரவுடன் ஒரு மில்லியன் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை அபகரிப்பதாகும். தோட்டத் தொழிலாளர்களிடையே ஒரு சக்தி வாய்ந்த தொழிலாள வர்க்கக் கட்சியாக வளர்ச்சி கண்ட, அப்போது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட லங்கா சமசமாஜக் கட்சியே, இந்த பாரபட்சங்களுக்கு எதிராக போராடியது, பின்னர் அது முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து அனைத்துலகவாத வேலைத் திட்டத்தை காட்டிக்கொடுத்துவிட்டது,” என்று அவர் கூறினார்

இந்த தேர்தலில் கட்சி ஏன் போட்டியிடுகிறது என்பதை சோ.ச.க. உறுப்பினர் வி. கமலதாசன் விளக்கினார். "பல்வேறு அரசியல் கட்சிகளால் அல்லது அரசாங்க சார்பு ஊடகங்கள் பிரச்சாரம் செய்யப்படுவது போல், இந்தத் தேர்தல், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கோ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கோ, அல்லது ஏகாதிபத்திய சக்திகளின் புதிய காலனித்துவ நோக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கோ அல்லது தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு காரணமானவர்களைத் தண்டிப்பதற்கோ நடத்தப்படுவது அல்ல, என்பதை நான் எச்சரிக்கின்றேன்” என்று அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தார்: “மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்புகள் நடைபெறுகின்றன. உழைக்கும் மக்களை தேசியம், இனம், மதம் ஆகியவற்றில் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் இடம்பெறுவதோடு பாசிச இயக்கங்கள் வீதிக்கு இறக்கப்படுகின்றன. மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சிக்காக இன, மத, மொழி, நிறம் மற்றும் பாலின வேறுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.”

யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்களை தலைமை வகிக்கும் சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பி. திருஞானசம்பந்தர் பிரதான உரை நிகழ்த்தினார். "இந்த தேர்தல் முக்கியமான உலகளாவிய நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது. கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. அண்டை நாடான இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆளும் உயரடுக்கினர் மக்களை மீண்டும் வேலைக்குத் தள்ளி மரண ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். உலக முதலாளித்துவ அமைப்பு மனிதகுலத்தைப் பாதுகாக்க இலாயக்கற்றது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.”

இலங்கைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளைப் பற்றி குறிப்பிடுகையில், “இந்தத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க செயல்படுகின்றன. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கான சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐ.தே.க., ஜே.வி.பி மற்றும் பிற சுயாதீன குழுக்களும் இனவாதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

“வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் தமிழ் தேசியவாதத்தை ஊக்குவித்து வருகின்றன. அவர்களுக்கு இடையே தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. ஏகாதிபத்திய ஆதரவுடன் கொழும்பு ஆளும் வர்க்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்வதே அவர்களின் நோக்கம் ஆகும்.”

பிரச்சாரத்தின் போது பலர் சோ.ச.க. உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.

எஸ். ராணி, 60, ஒரு விதவை ஆவார். அவர் மீன் விற்பனை செய்கின்றார். “எனது வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் மீன்பிடித்த பிறகு, மீண்டும் மீன்களை வாங்கவும் விற்கவும் பொன்னலை கடற்கரைக்குச் செல்கிறேன். எனது மூத்த மகன் பல ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ செல் தாக்குதலின் போது இறந்தார். அதற்காக எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. நான் இந்த குடிசையில் வசிக்கிறேன். அரசாங்கம் எனக்கு வீட்டுத் திட்டத்தை வழங்கவில்லை. நான் தனிமையில் இருப்பதால் வீடு கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள். மின்சாரம் இல்லை. வாழ்க்கை போத்தல் விளக்கில் ஓடுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வருகின்றன, பின்னர் காண முடியாது.”

பரிமலம், 65, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பேசினார். “ஒவ்வொரு நாளும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் சம்பள உயர்வுக்காக போராடுகிறார்கள். அவற்றை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி டிவியில் பார்க்கிறேன். அது மிகவும் பரிதாபகரமானது. தொழிற்சங்கங்களும் உதவவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இதேபோன்ற நிலைமை தான் வடக்கிலும் உள்ளது.”

சோ.ச.க. முன்னெடுக்கும் பாதுகாப்பு பிரச்சாரத்தை ஆதரித்த ஒரு பெண் கூறியதாவது: “உங்கள் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இராணுவ அச்சுறுத்தலையும் நான் கண்டிக்கிறேன். அவர்களைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். ஆனால் இந்த மனுவில் நான் கையெழுத்திட மாட்டேன். ஏனென்றால் எனக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும். வேட்பாளரான உங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், நாங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்? நான் கையெழுத்திட்டால், இராணுவம் என் வீட்டிற்கு வந்து என்னை தண்டிக்கும்.”

55 வயதான இ. ஈஸ்வரி கூறியதாவது: “1987 இல், இந்திய இராணுவம் இங்கு இறங்கிய போது, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினரான எனது கணவர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். என் குழந்தைகள் இருவரும் சிறியவர்கள். அவர்களை வளர்க்க நான் கடுமையாக உழைத்தேன். யாரும் எனக்கு உதவவில்லை. போரினால் பல உயிர்கள் அநியாயமாக அழிக்கப்பட்டனவே தவிர வேறொன்றும் பிரயோசனம் இல்லை.”

அனலைதீவில் இருந்து இடம்பெயர்ந்து ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் குடியமர்ந்துள்ள உதையகாந்தன் அனுஷ இவர் மூண்றுபிள்ளைகளின் தாயார் ஆவார். “1985 இல் எங்கள் தந்நை குமுதினிப்படகில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். அன்றையகாலத்தில் எங்கள் அம்மா நாங்கள் குடும்பத்தில் ஐந்துபேரும் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, எத்தனை நாட்கள் பசி பட்டினியுடன் வாழ்ந்தோம்,” என அவர் நினைவு கூர்ந்தார். நிலைமை தொடர்ந்து அவ்வாறே உள்ளது. அண்மையில் அனலைதீவில் சில இளைஞர்கள் கடற்படையினரை தாக்கினர் என கூறப்படும் சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு தேடுதல் நடத்தப்படுகின்றது. வீடு வீடாக இடம்பற்ற விசரனைகள் மிரட்டல்கள் அச்சுறுத்தல்களை தொடர்ந்து எங்கள் பிள்ளைகள் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு இருக்க முடியாமலும் தொழில் செய்ய முடியாமலும் இங்கு வந்துள்ளோம். கொரோன தாக்கத்தை தொடர்ந்து எங்கள் கடல் உணவுகள் விலை பாதியாக குறைந்ததுடன் நாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்கள் விலை உயர்ந்து காணப்படுகின்றது. நாங்கள பிள்ளைகளை எப்படி வளர்க்கப் போகின்றோம் என்பதை நினைக்கும் போது கடந்த காலத்தில் எங்கள் அம்மா அனுபவித்த துன்பங்கள் போன்று, எனது தொண்டை அடைக்கின்றது”.

முத்துலிங்கம் இராமகிருஷ்ணன், “கடந்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து இப்போது ராஜபக்ஷவுக்கும் ஆதரவளிப்பதாக கூறுவது ஏன்?” எனக் கேட்டார். “இவர்கள் எங்களுக்கு எதுவும் செய்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் அதிகாரங்களை எங்கள் மீது தினிக்கவே முயல்கின்றனர். இந்த அரசாங்கத்தினால் எங்களுக்கு எதையும் கொடுக்க முடியாது. எங்கள் வாழ்க்கை வருமானத்துக்குள் முடிந்துவிடப்பட்ட நசுக்கப்படுகின்றது. நாங்கள் வருமானமற்றவர்களாக, எங்கள் பிள்ளைகளை வளர்க்க முடியாதவர்களாக இருக்கிறோம். எங்கள் கடலுணவுகள் சரி அரைவாசிக்கு மேல் விலை குறைக்கப்பட்டு கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனால் விலைவாசி அதிகரித்துள்ளது. இது இந்த ஆளும் தரப்புக்கள் எங்கள் மீது சுமத்துகின்ற மிகப் பெரிய சுமையாகும்.” உங்கள் வேலைத்திட்டம் மட்டுமே உலக நிலைமைகளை எங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றது எனக் குறிப்பிட்ட அவர், தன்னால் முடிந்த நிதி உதவியையும் வழங்கினார்.