அமெரிக்க துருப்புக்கள் திருப்பி அழைக்கப்படுதலும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவும்

By Peter Schwarz
7 August 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 36,000 படையினரில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா திருப்பி அழைக்க விரும்புகிறது. இதை புதன்கிழமை வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் அறிவித்தார். ஜேர்மனி இராணுவத்திற்கு போதுமான அளவு செலவழிக்காததால் இந்த வழியில் "தண்டிப்பேன்" என்று பலமுறை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியதிலிருந்து இந்த திருப்பி அழைத்தல் எதிர்பார்க்கப்பட்டதே.

எஸ்பர் அறிவித்த எண்ணிக்கை ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகமாக இருந்தது. 9,500 படையினர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவது பற்றி பேசப்பட்ட நிலையில், இப்போது 11,900 பேர் செல்கின்றனர். சுமார் 5,600 பேர் ஐரோப்பாவின் பிற இடங்களுக்கு மாற்றப்பட உள்ளனர், மேலும் 6,400 பேர் மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுகிறார்கள். ஸ்ருட்கார்ட் நகரப்பகுதியில் உள்ள கட்டளை மையங்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கப் படைகளின் ஐரோப்பிய உயர் கட்டளையகம் பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தலைமையகத்திற்கும், ஆபிரிக்கா நடவடிக்கைகளுக்கான கட்டளையகம் முன்னர் வெளியிடப்படாத இடத்திற்கு மாற்றப்படவும் உள்ளது. போர் விமானங்களின் படைப்பிரிவு ஐபில் பகுதியிலுள்ள ஸ்பாங்க்டாஹெலெமில் இருந்து இத்தாலிக்கு மாற்றப்படும் மற்றும் பவேரியா மாநிலத்தில் உள்ள வில்செக்கிலிருந்து சக்கரங்கள் பொருத்திய டாங்கி படைப்பிரிவு அமெரிக்காவிற்கு மாற்றப்படும்.

President Trump visits US troops in Germany, December 2018 (Official White House Photo by Shealah Craighead)

வியாழக்கிழமை டுவிட்டரில் திரும்பப் பெறுவதை ட்ரம்ப் மீண்டும் நியாயப்படுத்தியபோது, "நேட்டோவிற்கான ஜேர்மனியர்களின் 2 சதவிகித பங்களிப்புடன்” அவர்கள் பின்னே உள்ளனர் என எஸ்பர் பாதுகாப்பு கொள்கை காரணங்களை மேற்கோள் காட்டினார். துருப்புக்களின் இடமாற்றம், குற்றங்களை தடுத்து நிறுத்துவதை அதிகரித்து, நட்பு நாடுகளை பலப்படுத்தி, நட்பு நாடுகளுக்கு உறுதியளிக்க உதவுகிறது என்று அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவு ஒரு கீழ்மட்டத்தை எட்டியுள்ளது. பல பதட்டங்களும் மோதல்களும் முன்னாள் "பங்காளிகளை" பிரிக்கின்றன. இம்மோதல்கள் Nordstream 2 எரிவாயு குழாய் திட்டத்தை பூர்த்தியடையவிடாது முடிந்தவரை அமெரிக்கா தடுத்து நிறுத்துவதிலிருந்து ஆரம்பித்து அதிகரித்துவரும் வர்த்தக மோதல்கள், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சீனா மீதான அணுகுமுறை வரை பெயரிட்டு குறிப்பிடக்கூடியவையாக இருந்தாலும் ஆனால் மிக முக்கியமானவையாகும்.

ஜேர்மன்-அமெரிக்க பதட்டங்கள் புதியவை அல்ல. 2003 இல் ஈராக் போர் மற்றும் 2011 ல் நடந்த லிபிய போர் குறித்து ஏற்கனவே வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இப்போது அவை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணப்படாத தீவிரத்தின் நிலையை எட்டியுள்ளன. இரண்டு ஏகாதிபத்திய உலகப் போர்களில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்ட இரண்டு சக்திகளும் ஒருவருக்கொருவர் அதிகரித்துவரும் பகமையுடன் எதிர்நோக்குகின்றன.

இப்போது வரை, இரு தரப்பினரும் நேட்டோ கூட்டணியால் பயனடைந்தனர். ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்கள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்கப் போர்களுக்கான மத்திய மூலோபாய மையமாக செயல்பட்டன. துருப்புக்களும் ஆயுதங்களும் ஜேர்மனி ஊடாக கொண்டுசெல்லப்பட்டு, நடவடிக்கைகள் இயக்கப்பட்டு மற்றும் கொலைகார ஆளில்லா ட்ரோன் விமானங்கள் அங்கிருந்து கட்டுப்படுத்தப்பட்டன. இதைத் தடுக்க எந்த ஜேர்மனிய அரசாங்கமும் இதுவரை தடை விதிக்கவில்லை அல்லது அதற்கு முயற்சிக்கவும் இல்லை.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ நகர்வுகளில் ஜேர்மனியும் அமெரிக்காவும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. ரஷ்யாவுடனான கிழக்கு ஐரோப்பிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ பிரிவுகளுக்கு ஜேர்மனி மிகமுக்கியமான தங்கும் பகுதியாக இருந்தது. ஜேர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு திருப்பி அழைக்கப்பட்ட பிரிவுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுழற்சிமுறையில் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தயாராக இருப்பதால் ஜேர்மனியில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறுவது இதை மாற்றாது என்று எஸ்பர் கூறுகிறார்.

ஆனால் வல்லுநர்கள் இதை சந்தேகிக்கிறார்கள். ஜேர்மனிய முன்னாள் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியல் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD), Tagesspiegel பத்திரிகையில் ஒரு கட்டுரையில், ஜேர்மன் பொருளாதார நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் ஹேதர் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) வெளியுறவுக் கொள்கை நிபுணர் நோர்பேர்ட் ரோட்ஜென் உடன் சேர்ந்து பின்வருமாறு எழுதுகிறார்: “வாஷிங்டனின் முடிவு அட்லாண்டிக் இடையிலான கூட்டுக்கிடையில் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையையும், மேற்கு நாடுகளின் ஒத்திசைவையும் அதன் உலகளாவிய அரசியல் செயல்திறனையும் மீண்டும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சர்வாதிகார ஆட்சிகளும் தாராளவாத எதிர்ப்பாளர்களும் இதை மகிழ்ச்சியுடன் கவனிப்பார்கள்”.

நேட்டோவில் வாக்கெடுப்பிற்கு விடாமல் எஸ்பரும் ட்ரம்பும் ஒருதலைப்பட்சமாக அறிவித்த திருப்பி அழைக்கும் திட்டங்கள் குறித்து அமெரிக்காவிலும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து கணிசமான விமர்சனங்கள் உள்ளன. உதாரணமாக, ட்ரம்பின் உள்நாட்டு எதிராளியான குடியரசுக் கட்சியின் செனட்டர் மிட் ரோம்னி, அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியிலிருந்து திருப்பி அழைப்பது “ரஷ்யாவிற்கு ஒரு பரிசாக இருக்கும்” என்று அறிவித்தார்.

பல ஜேர்மன் வர்ணனையாளர்கள் திருப்பி அழைக்கும் திட்டம் அதிக செலவுகள் காரணமாக, காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனால் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரை நிறுத்திவைக்கப்படும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், அதிகரித்து வரும் அட்லாண்டிக்கு இடையிலான பதட்டங்களை மாற்ற இது எதுவும் செய்யாது.

ஜேர்மனியில், இடது கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் குறிப்பாக சில சமூக ஜனநாயகவாதிகள் அறிவிக்கப்பட்ட துருப்புக்களை திருப்பி அழைப்பதை வரவேற்றுள்ளனர். இடது கட்சியின் நிறுவனரும் மற்றும் நீண்டகால தலைவரான கிரிகோர் கீஸி ட்விட்டரில் கருத்துத் தெரிவிக்கையில், “அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுதல்: என்னால் போதுமான தண்டனையை பெறமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் இது மட்டும்தான் #டரம்ப் எனக்கு தரக்கூடிய தண்டனை என்றால் தந்துவிடட்டும்.

கீஸி ஒரு இரக்கமற்ற இழிந்தவர் என்பதை ட்வீட் வலியுறுத்துகிறது. கீஸி இராணுவவாதத்தை ஆதரிக்கிறார் என்பதை விக்கிலீக்ஸ் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்தியிருந்தது. இது வெளியிடப்பட்ட ஒரு இராஜதந்திர தகவலில், அப்போதைய அமெரிக்க தூதர் பிலிப் மர்பி, இடது கட்சி அரசியல்வாதி பேர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்தார். நேட்டோவைப் பற்றிய இடது கட்சியின் அணுகுமுறை குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை என்று கீஸி அவருக்கு “சமூகமாகவும், அருமையான மனநிலையிலும்” உறுதியளித்திருந்தார் என மர்பி வாஷிங்டனுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.

இப்போது அறிவிக்கப்பட்ட அமெரிக்க துருப்புக்கள் திருப்பி அழைப்பது இராணுவ ஆயுதக்குறைப்பிற்கு ஒரு பங்களிப்பு என்று கீசி பாசாங்கு செய்கிறார். உண்மையில், இது அமெரிக்க தரப்பிலிருந்தும் ஐரோப்பிய மற்றும் ஜேர்மனிய தரப்பிலிருந்தும் இராணுவ விரிவாக்கத்தின் நோக்கத்திற்கு உதவுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் ஏற்கனவே தொடங்கியிருந்த பசிபிக் பகுதிக்கு தனது இராணுவ செல்வாக்கை மாற்றியதன் ஒரு பகுதியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவின் எழுச்சியை ஏற்கத் தயாராக இல்லை மற்றும் அணுசக்தி கொண்ட நாட்டிற்கு எதிராக ஒரு இராணுவத் தாக்குதலைத் தயாரிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் மற்றும் போர்த்தயாரிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், ஒரு பகுதியளவு திரும்பப் பெறுவதன் மூலம், ரஷ்யாவுடனான மோதலுக்கு தங்கள் சொந்த பங்களிப்பை அதிகரிக்கவும், சீனாவுடனான மோதலில் அமெரிக்காவின் பின்னால் நிற்கவும் ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது. இரு விடயங்களிலும், அதற்கு குறிப்பாக ஜேர்மனியுடன் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. இவை இப்போது மிகவும் ஆழமாக உள்ளதுடன், அவை நேட்டோவின் உடைவுக்கு வழிவகுக்கலாம்.

ரஷ்யாவிற்கு எதிராக பேர்லின் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் லித்துவேனியாவில் நேட்டோ போர்க்குழுவை வழிநடத்துகின்றபோதிலும், பேர்லினின் பார்வையில் ஜேர்மனியின் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க அவசியமான பால்டிக் கடல் வழியாக ரஷ்ய இயற்கை எரிவாயுவை நேரடியாக ஜேர்மனிக்கு கொண்டு செல்லும் நோர்ட்ஸ்ட்ரீம் குழாய் அமைப்பதை தொடருகின்றது. மேலும், 12 பில்லியன் யூரோக்கள் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறுத்தப்பட்டால் இத்தொகையும் இழக்கப்பட்டுவிடும்.

உத்தியோகபூர்வ ஐரோப்பிய மற்றும் ஜேர்மன் பத்திரிகைகளில் சீனா ஒரு "மூலோபாய போட்டியாளர்" என்று பெருகிய முறையில் குறிப்பிடப்பட்டாலும், பேர்லின் இதுவரை வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்டவை போன்ற சீனாவிற்கு எதிரான வர்த்தக யுத்த நடவடிக்கைகளை நிராகரித்தது. ஏனெனில் ஜேர்மன் பொருளாதாரத்திற்கு ஒரு விற்பனை சந்தையாக சீனாவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் மிக முக்கியமான துறையான ஜேர்மன் வாகனத் தொழில் அதன் இலாபத்தில் 35 முதல் 50 சதவிகிதம் வரை அங்கிருந்து பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க திருப்பி அழைக்கும் திட்டங்கள், ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் உள்ள ஆளும் வர்க்கத்திற்கு அவர்களின் மறுஆயுதமயமாக்கும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காகவும் உதவுகின்றன. ஜேர்மன் செய்தித்தாள்கள் நேட்டோவிற்கான பங்களிப்பை இப்போது இறுதியாக நிறைவேற்ற வேண்டும் மற்றும் இராணுவ செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கோரும் வர்ணனைகளில் நிரம்பியுள்ளன. ஜேர்மனி சமீபத்தில் தனது இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரித்துள்ளது மற்றும் பல பில்லியன் மதிப்புள்ள ஆயுதமயமாக்கும் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது என்றாலும், தற்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.38 சதவீதம் மட்டுமே.

உண்மையில், இது முக்கியமாக வாஷிங்டனின் செல்வாக்கு இல்லாமல் மற்றும் அதற்கு எதிராகவும் அதன் சொந்த ஏகாதிபத்திய நலன்களைக் முன்கொண்டுவருவதற்கு அமெரிக்காவிலிருந்து இராணுவ ரீதியாக சுயாதீனமடைவது பற்றியதாகும்.

சுவிஸ் வங்கிகளின் கண்ணோட்டத்தில் இழிந்த வெளிப்படையுடன் உலக அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் Neue Zürcher Zeitung பத்திரிகை (NZZ) எழுதுகின்றது, “முதல் பார்வையில், ட்ரம்ப் ஜேர்மன் நாட்டை தண்டித்திருக்கலாம். ஆனால் உண்மையில், துருப்புக்கள் திருப்பி அழைப்பது ஒரு வாய்ப்பைத் திறக்கிறது: ஜேர்மனியில் குறிப்பிட்டகாலமாக ஓரளவு சமாதானவாத, ஓரளவு அமெரிக்க எதிர்ப்பு பெரும்பான்மை கருத்துக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக பேசிய அந்த யதார்த்த அரசியல் அரசியல்வாதிகள் அனைவரும் இப்போது ஒரு சாத்தியமான மாற்றத்தினை எடுக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளனர்.

ஜேர்மனி முடிவு செய்ய வேண்டும், NZZ கோருகிறது. “இது ஒரு ‘அமைதியான தேசம்’ என்ற ஆறுதலான உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறதா? இதுவரை, இது மற்றவர்கள் அமைதியை உறுதி செய்துள்ளார்கள் என்றே அர்த்தப்படுகின்றது. அல்லது நாடு அதன் கடந்த காலத்திலிருந்து பரவியிருக்கும் நிழலின் கீழ் இருந்து வெளியேறி, தனதும் அதனது ஐரோப்பிய பங்காளிகளுக்கும் அமைதியை பாதுகாக்குமா?” என எழுதுகின்றது.

முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான காப்ரியல், இப்போது Deutsche Bank இன் மேற்பார்வைக் குழுவில் அமர்ந்திருப்பவரும் Atlantik-Brücke என்ற சிந்தனைக் குழுவிற்குத் தலைமை தாங்கும் இவர் உடனடியாக இந்த அழைப்புக்கு இணங்கினார். ஒரு நீண்ட NZZ நேர்காணலில், ஜேர்மனி "உலக போலீஸ்காரர்" பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். “ஐரோப்பாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை சூழலில் அமெரிக்காவை பிரதியீடு செய்வது யார்? இந்த மூலோபாய பாத்திரத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள்?" என்பதே இப்போது மிக முக்கியமான கேள்வி என காப்ரியல் கூறினார்.

ஜேர்மனி அவ்வாறு செய்ய விரும்பவில்லை அல்லது செய்யமுடியாது என்ற NZZ இன் ஆட்சேபனைக்கு பதிலளிக்கும் வகையில், காப்ரியல் பின்வருமாறு பதிலளித்தார். “இந்த முக்கியமான மூலோபாய கேள்விகளைப் பற்றி அரசியல்வாதிகள் பகிரங்கமாக பேச இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் இருப்பதைக் காட்டிலும் மக்களின் விருப்பமின்மை காரணமாகவே இது இவ்வாறு உள்ளது. "இந்த கேள்விகளை முன்வைப்பதற்கான எங்கள் மக்களின் விருப்பத்தையும் திறனையும் ஜேர்மனி குறைத்து மதிப்பிடுகின்றது" என்று தான் நம்புவதாக கூறினார்.

உண்மையில், ஜேர்மனிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் போரையும் இராணுவவாதத்தையும் நிராகரிக்கின்றனர். இரண்டு உலகப் போர்களின் கொடூரங்களும் அவற்றினால் அவர்களுக்கு செய்யப்பட்ட பாரிய குற்றங்களும் மறக்கப்படவில்லை. ஜேர்மன் இராணுவவாதம் திரும்புவதற்கான அழைப்பு ஆளும் வர்க்கத்திலிருந்து மட்டுமே வருகிறது. முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி, வளர்ந்து வரும் சர்வதேச பதட்டங்கள் மற்றும் கடுமையான வர்க்க விரோதங்களை எதிர்கொண்டுள்ள இது, அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்க போர் மற்றும் சர்வாதிகார வழிமுறைகளுக்குத் திரும்புகிறது.

இதன் விளைவாக, பல ஆண்டுகளாக நாஜிக்களின் குற்றங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வலதுசாரி பயங்கரவாத வலையமைப்புகள் அரச எந்திரத்தால் மூடிமறைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) ஊக்குவிக்கப்பட்டு, இராணுவம் மறுஆயுதமயமாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்து கட்சிகளும் இதை ஆதரிக்கின்றன. ஒரு காலத்தில் அமைதிவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த பசுமைவாதிகள் முன்னணி போர் கட்சியாக மாறிவிட்டனர். இடது கட்சி கூட இராணுவத்தை பற்றி தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நாடாளுமன்ற பிரிவுத் தலைவர் டீட்மார் பார்ட்ஸ் 2017 ஆம் ஆண்டில் தனது கட்சிக்கு படையினரை வாக்களிக்குமாறு இராணுவ சங்கத்தில் (Bundeswehr Association) பிரச்சாரம் செய்தார்.

எவ்வாறாயினும், போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான பரந்த எதிர்ப்பிற்கு ஒரு முன்னோக்கும் மற்றும் ஒரு மூலோபாயமும் தேவையாக உள்ளது. இது அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் போர்ப்பிரசாரத்தை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் தேவை. அது போருக்கு எதிரான போராட்டத்தை அதற்கு மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistischen Gleichheitspartei) ஆகியவற்றின் முன்னோக்கு ஆகும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

Germany’s “voluntary military service”: Government recruits for army deployments at home and abroad
[28 July 2020]

ஜேர்மனி: பிராங்பேர்ட்டில் “கலவரம்”மும் காவல்துறையில் வலதுசாரி வலையமைப்பும்
[22 July 2020]

ஜேர்மனி: "உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு