இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன

By M. Thevarajah
8 August 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி (த.மு.கூ.) உட்பட அனைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளதும் கொடூரமான தாக்குதல்களுக்கு தோட்டத் தொழிலாளர்களை இரையாக்கப் போகின்றன என்பதை தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படுத்தியுள்ளன.

தேர்தலின் போது இ.தொ.கா. மற்றும் லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உடன் கூட்டுச் சேர்ந்திருந்தன. தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) சேர்ந்த த.மு.கூ., வலதுசாரி ஐக்கிய மக்கள் சக்தியுடன் (ஐ.ம.ச.) கூட்டுச் சேர்ந்திருந்தது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்ததாகும்.

இந்த தொழிற்சங்கங்கள் தேர்தலின் போது பிளவுபட்டுள்ள போதும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினதும் கம்பனிகளதும் தாக்குதல்களுக்கு தோட்டத் தொழிலாளர்களை அடிபணிய வைப்பது சம்பந்தமாக இந்த தொழிற்சங்கங்களுக்கு இடையே எந்த அடிப்படை வேறுபடும் கிடையாது. தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சமூக உரிமைகளை வெட்டித் தள்ளுவதற்கு அவை முழுமையாக ஒத்துழைக்கின்றன.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினதும் பெருந்தோட்ட கம்பனிகளதும் நேரடி கருவிகளாக செயல்படும் இந்த தொழிற்சங்கங்கள், எந்தவொரு தொழிலாளர் உரிமைகளையும் பாதுகாக்க ஆர்வம் காட்டவில்லை. முதலாளித்துவ அரசியல் கட்சிகளாகவும் செயல்படும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், எதாவது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் தங்கள் சமூக மற்றும் அரசியல் சலுகைகளைப் பாதுகாத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன.

இந்த தொழிற்சங்கங்கள், கடந்த ஆண்டு தோட்ட தொழிலாளர்கள் 500 ரூபாய மிகக் குறைந்த ஊதியத்தை இரட்டிப்பாக்கக் கோரி நடத்திய போராட்டத்தை காட்டிக் கொடுத்து, கம்பனிகளும் அரசாங்கமும் தீர்மானித்த 750 ரூபாய் சம்பளத்தை தொழிலாளர்கள் மீது திணிக்க ஒத்துழைத்தன. இதன் விளைவாக நாளொன்றுக்கு 20 ரூபா மட்டுமே ஊதியம் அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஒரு தொழிலாளி அனைத்து கொடுப்பனவுகளுடன் சேர்த்து 730 ரூபா பெற்றார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களை சுகாதாரப் பாதுகாப்பு இன்றி வேலை வாங்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் ஒப்புதல் அளித்ததை, இந்த தொழிற்சங்கங்கள் ஆதரித்தன. இப்போது, தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடு, தோட்ட முதலாளிகள் வேலையை வேகமாக்கி, சம்பள வெட்டுக்களையும் முன்னெடுக்கின்றனர்.

இந்த தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த தொழிற்சங்கங்கள் தோட்டக் கம்பனிகளுக்கும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் உறுதியளிக்கின்றன. "தொலை நோக்கு 2020-2025” என்ற தலைப்பிலான இ.தொ.கா.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், "தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்கள் சிறு நில உடமையாளர்களாக மாற்றப்படுவர்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 26, வீரகேசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இ.தொ.கா.வின் புதிய பொதுச் செயலாளர் ஜீவன் தொண் டமான், தொழிலாளர்கள் மீது வருமானப் பகிர்வு முறையை திணிப்பதற்கு தனது தொழிற்சங்கம் ஆதரவளிக்கும் என்று தெளிவுபடுத்தினார். "இலாபத்தை பங்கீடு செய்து தோட்டத் தொழிலாளர்களை சிறு உரிமையாளர்களாக மாற்றுவது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்," என அவர் கூறியிருந்தார். தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வருமான பங்கீடு முறையை அமல்படுத்துவது குறித்து கலந்துரையாடி வருவதால், எதிர்காலத்தில் ஊதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படமாட்டாது என்றும், 1,000 ரூபாய் ஊதிய கோரிக்கை தற்காலிகமானது என்றும், "எங்கள் பிரச்சினை" நில பிரச்சினை என்றும் அவர் கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை இதை விட வேறுபட்டதல்ல. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அதன் பங்காளியும் முன்னாள் தோட்ட உள்கட்டமைப்பு மற்றும் புதிய கிராமங்கள் அமைச்சருமான திகாம்பரம், த.மு.கூ. பொகவந்தலாவையில் நடத்திய தேர்தல் கூட்டத்தில், "தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தேயிலைத் தோட்டங்களை பிரித்து தோட்டத் தொழிலாளர்களிடம் ஒப்படைப்பதே" என்றார்.

தோட்டத் தொழிலாளர்களை "சிறிய நில உடமையாளர்களாக" மாற்றுவது என்பது தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான (1000-1500) தேயிலை செடிகளை கொண்ட நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் விநியோகித்து வேலை வாங்கும் வருமானப் பகிர்வு முறையாகும். இது ஏற்கெனவே முன்மொழியப்பட்டு இப்போது சில தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைக்கு தொழிலாளர்களை அடிபணிய வைப்பதே அவர்களது குறிக்கோளாகும்.

இதன் கீழ், தொழிலாளர்கள் தற்போது பெறும் மிகச்சிறிய நாள் சம்பள முறையையும், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் வீட்டுவசதி, வீடு பழுதுபார்த்தல் மற்றும் தற்போதுள்ள பற்றாக்குறையான சுகாதார வசதிகள் உட்பட அவர்களின் சமூக உரிமைகளை இழக்க நேரிடும்.

வீடுகளை அமைத்துக்கொள்ளவும் விவசாயம் செய்யவும் கைவிடப்பட்ட நிலங்களை பிரித்து கொடுக்க வேண்டும் என்றும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடனும் சமூக நலன்களுடன் கடைகளும் கிராமங்கழும் அமைக்கப்படும் என்றும் இ..தொ.கா. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய காலங்களில் "தோட்ட புதிய கிராமங்கள்" என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதல்ல. ஒரே சமூக சக்தியாக உழைக்கும், வாழும் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை கலைப்பதன் மூலம், தொழிலாளர்களின் சமூக சக்தியை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

சமீபத்திய மாதங்களில் வெடித்த போராட்டங்கள், தோட்டத் தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. அதே நேரம், அந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியேயும், அவர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களுக்கு பரவலான எதிர்ப்பு வளர்ந்து வருகின்ற நிலைமையிலுமே நடக்கின்றது.

தமது உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்கப்படாமல், தமது கையில் எடுக்கவேண்டும் என்றும், அதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விடுத்த அழைப்புக்கு பிரதிபலிப்பாக, ஹட்டன் எபோட்சிலி தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள், நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்ததுடன், மஸ்கெலியா கிளனூகி தோட்டத் தொழிலாளர் வழிநடத்தல் குழு ஒன்றையும் அமைத்துக்கொண்டனர். இவை தொழிலாளர்கள் முன்நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதைக் குறிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான இந்த முன்னேற்றங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் மிகவும் பீதியடைந்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் மீண்டும் தோட்டத் தொழிலாளர்களை முதலாளித்துவ அரசியல் கட்சிகளுடன் பிணைத்து அவர்களை அரசியல் ரீதியாக தடம்புரளச் செய்யவம், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார திட்டங்களுக்கு அடிபணிய வைக்கவும் முயல்கின்றன.

கோவிட் 19 தொற்றுநோய், இலங்கையில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ள நிலைமைகளின் கீழேயே பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. முதலாளித்துவ கட்சிகளுக்கிடையில் அதிகாரத்திற்கான போராட்டமும் தந்திரோபாய வேறுபாடுகளும் இருந்த போதிலும், ஜனநாயக உரிமைகளையும் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் நசுக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சியின் அவசியம் என்பதில் அவர்களுக்கிடையில் முரண்பாடு கிடையாது.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும், இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு அவசியமான அரசியலமைப்பு கட்டமைப்பை வகுப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து "நாட்டை மீட்பதில்" ஜனாதிபதி இராஜபக்சவை ஆதரிக்க தாங்கள் தயாராக இருப்பதாக ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கம் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இந்த கட்சிகளுடன் இணைந்திருக்கின்றன.

தோட்டத் தொழிற்துறை எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்ப்பது என்ற பெயரில், கம்பனிகளும் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும்ம் தங்கள் நலன்களை பாதுகாத்துக்கொள்ள கட்டவிழ்த்துவிட்டுள்ள இந்த திட்டத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஏற்பட்ட நெருக்கடி, முழு இலாப நோக்குடைய முதலாளித்துவ அமைப்பினதும் நெருக்கடியின் ஒரு பகுதியாகும். இந்த நெருக்கடி இப்போது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது.

· தொழிலாளர் ஐக்கியத்தை சிதைக்கவும் வேலையை விரைவுபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள வருமான பகிர்வு என்று அழைக்கப்படும் முறை வேண்டாம்,

· வேலையை வெட்டாதே! வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியமும் கொடு!

· மருத்துவமனைகள் உட்பட சிறந்த கல்வி வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை கொடு!

இந்த கோரிக்கைகளுக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் தமது கையில் எடுக்கவேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தோட்டங்களில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை, தங்கள் சொந்த வாக்கெடுப்பு மூலம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

இந்த கோரிக்கைகளுக்கான போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாகும். உண்மையான உழைப்பாளிகளான தொழிலாளர்களுக்கு, அவர்களது நியாயமான கோரிக்கைகள் கிடைக்காத நிலையில், தொழிலாளர்கள் தாம் வாழும் தோட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த போராட்டம், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ வங்கிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பெரிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களை, தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டு, சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கான இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள் என்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே, தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் மத்தியில், ஒரு சோசலிச முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகிறது. சோ.ச.க. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட்டது. தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் சோ.ச.க.வில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறு அழைப்பு விடுக்கின்றோம்.