வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் சமூக இடைவெளிக்கான தேவைகளை பிரெஞ்சு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Will Morrow
14 August 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் தொடக்கத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு மக்ரோன் அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சமூக இடைவெளி தேவைகளை இல்லாதொழிக்கிறது.

இந்த ஆவணம் பகிரங்கமாக தெரியாமல் ஜூலை 9 இல் தயாரிக்கப்பட்டு, எந்தவித பொது அறிவிப்பும் இல்லாமல், ஜூலை 20 அன்று கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகள் வார இறுதியில் முதல் முறையாக இந்த ஆவணத்தை மேற்கோள் காட்டின.

இந்த புதிய வழிகாட்டுதல்கள், “வகுப்பறைகள், பட்டறைகள், நூலகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தங்கும் விடுதிகள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில், சரீர ரீதியாக இடைவெளிக்கு சாத்தியமில்லாத அல்லது அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு திரும்பச் செய்வதற்கு பொருந்தாத இடங்களில் சரீர ரீதியான இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமில்லை” என்று தெரிவிக்கிறது. பல ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளது போல, வகுப்பறைகளில் பொதுவாக 35 மாணவர்கள் வரை இருப்பதால், வகுப்பிற்கு அனைத்து மாணவர்களும் வருகையில் “சரீர ரீதியாக சமூக இடைவெளிக்கு சாத்தியமில்லை” என்றால் இடைவெளிக்கான விதி நீக்கப்படும் என்பது எந்த இடத்திற்கும் பொருந்தாது.

11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க முடியாவிட்டால் அவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்வது அவசியமாகும். மேலும், மாணவர்களிடமிருந்து “ஒரு மீட்டருக்கும் குறைவான தொலைவில்” ஆசிரியர்கள் இருக்க நேரிட்டால் மட்டும் அவர்களும் முகக்கவசம் அணிந்துகொள்வது அவசியமாகும். உமிழ்நீர் திவலைகள் (aerosolized particles) வழியாக காற்றில் ஒரு மீட்டருக்கு மேலான தொலைவில் கூட வைரஸ் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களுக்கு இது முற்றிலும் முரண்படுகிறது. புதிய வழிகாட்டுதல்கள், இளம் குழந்தைகளுக்கான பகல் நேர காப்பகங்களின் ஆசிரியர்களுக்கும் சேர்த்து விதிவிலக்களிக்கின்றன, அதாவது எந்த நிபந்தனைகளின் படியும் அவர்கள் இனிமேல் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

பொதுவாக ஒரே பள்ளியில் உள்ள மாணவர்களிடையே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும், வகுப்புகள் அல்லது வெவ்வேறு நிலைகளுக்கு இடையில் மாணவர்களைக் கலப்பதில் இருந்த கூடுதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. பள்ளிகள் “முடிந்தவரை பெரியளவில் மாணவர்களை ஒன்றாக அமரச் செய்வதையும் மற்றும் பாதைகளில் அவர்கள் கூடுவதையும் மட்டுப்படுத்தும் வகையில் நாளாந்த அட்டவணையையும் செயல்பாடுகளையும் ஒழுங்கமைக்கும்” என்று வழிகாட்டுதல்கள் வெறுமனே தெரிவிக்கிறது. மேலும், மாணவர்களிடையே சரீர ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்த கூடுதல் பொது போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கிறது.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டங்களைப் பற்றிய இந்த பகுப்பாய்வானது, மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கையின் மோசடியான மற்றும் அடிப்படையான ஆட்கொலை தன்மையை தெளிவுபடுத்துகிறது. செப்டம்பர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் வைரஸின் தொடர்ச்சியான எழுச்சி இன்னும் தீவிரப்படும் என்பதை நன்கறிந்தே அரசாங்கம் இந்த கொள்கையைப் பின்பற்றுகிறது. மாணவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்; பின்னர் அவர்களிடமிருந்து அவர்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு வைரஸ் தொற்றிக்கொள்ளும்; மேலும் இந்த கொள்கைகளால் இன்னும் பலர் இறக்க நேரிடும்.

இந்த வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களில் ஆசிரியர்கள் மத்தியில் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் “சிகப்பு பேனாக்கள்” முகநூல் குழுவில் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். “இது வெட்கக்கேடானது,” என்றும், “வெளிப் பகுதிகளில் கூட சுகாதார நடவடிக்கைகளை சரியாக பேணுவதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் இங்கே, வகுப்பறையில் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை… இதுவொரு வெட்கக்கேடான விடயமே… இவர்கள் கொலைபாதகர்கள்” என்றும் ஜோன்-போல் (Jean-Paul) குறிப்பிட்டிருந்தார்.

“சாத்தியமில்லாதபோது சமூக இடைவெளி இனிமேல் கட்டாயமானதாக இருக்காது. இடைவெளிக்கு சாத்தியமில்லை என்ற நிலையில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் நோயை பரப்பிக் கொள்ளலாமா என்பதை தெளிவுபடுத்திக் கொள்வோம்,” என்று ஈசா கருத்து தெரிவித்தார். “மேலும் பெரியவர்களுக்கும் அவர்கள் நோய்தொற்றை பரப்புவார்கள்” என்று மரி அதற்கு பதிலிறுத்தார்.

“பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், கொத்துகொத்தாக ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள், அதிலும் முதலில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கபடுவர் என்பது வெளிப்படையானது,” என்று மினா கூறினார். மேலும், “எங்களது பள்ளியில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தும், ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைப்பிடித்தும் கூட ஜூன் மாதம் ஒருவருக்கு நோய்தொற்று இருந்தது. பல உள்ளூர் பள்ளிகளின் மூடல்களையோ மற்றும் பொது வேலைநிறுத்தங்களையோ இனிமேல் எவரும் எதிர்பார்க்க வேண்டியதில்லை” என்றும் கூறினார்.

மக்ரோன் நிர்வாகம், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வைரஸ் நோய்தொற்றின் மறுஎழுச்சி நிகழும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, அதற்கும் பள்ளிகளில் சமூக இடைவெளி நடவடிக்கைகளை தளர்த்துவதற்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாட்டை விளக்க அது எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

உலக அளவில் கொரொனோ வைரஸ் நோய்தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை, 700,000 இறப்புக்கள் உட்பட, 20 மில்லியனை கடந்துள்ளது. ஐரோப்பாவில், வசந்த காலத்தில் இருந்து பூட்டுதல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட நாடுகளில் இந்த வாரம் இறுதியில் நோய்தொற்று பரவலின் மறுஎழுச்சி நிகழ்ந்தது பற்றி உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்பெயினில் ஜூன் மாதத்தில் நோய்தொற்று பரவலின் நாளாந்த சராசரி வீதம் 132 என இருந்தது பின்னர் அதிகரிக்கத் தொடங்கி இந்த மாதம் முதல் 10 நாட்களில் 1,500 க்கு மேலாக அதிகரித்துள்ளது.

பிரான்சில், மூன்று நாட்களில் 4,500 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 383 ஆக இருந்தது ஞாயிற்றுக்கிழமை 396 ஆக அதிகரித்திருந்தது. பாரிஸைச் சுற்றியுள்ள Ile-de-France பிராந்தியத்தில் உள்ள பிராந்திய சுகாதார சேவையின் இயக்குநர் ஜெனரல் நிக்கோலா பெஜூ (Nicolas Peju), அந்த பிராந்தியத்தில் நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 100 ஆக இருந்தது, பின்னர் அதிகரித்து சமீபத்திய நாட்களில் 500 ஐ தாண்டிவிட்டது” என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும் அவர் “நாங்கள் தொற்றுநோயின் மறுஎழுச்சியின் தொடக்கத்தில் இருக்கிறோம்,” என்றும் கூறினார்.

பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொள்கையானது விஞ்ஞானபூர்வ பரிசீலனைகளால் அல்லாமல், பிரெஞ்சு பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் அப்பட்டமான நிதியியல் பேராசையினால் ஊக்குவிக்கப்படுகிறது. பெற்றோர்களை சுதந்திரமாக வேலைக்கு திரும்பச் செய்யவதற்கும், அதன்மூலம் பெருநிறுவன இலாபங்களை பெருக்குவதற்கும் என அனைத்து மாணவர்களும் வகுப்பறைகளுக்கு முழுமையாக திரும்புவதற்கான எந்தவொரு கட்டுப்பாடும் முடிவுக்குக் கொண்டுவரப்படும். அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தினால், பிரிட்டனில், ஜேர்மனியில், மேலும் அதற்கு அப்பாலும், மற்றும் சர்வதேச அளவிலுமாக மேற்கொள்ளப்படும் பள்ளிகளின் மறுதிறப்புக்கள் அதே நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பிரெஞ்சு பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் (Jean Castex), பிரான்சில் மார்ச் மாதத்தைப் போல, பொது கட்டுப்பாடுகள் எதுவும் இனிமேல் இருக்காது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் “வைரஸ் பரவுவதை நிச்சயமாகத் தடுக்கிறது, என்றாலும் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால் அதுவொரு பேரழிவாகும்” என்று கடந்த மாதம் காஸ்டெக்ஸ் அறிவித்தார்.

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், பெருநிறுவன இலாபங்களின் நோக்கத்தில் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான இறப்புக்கள் என்பது முக்கியமாக கருதப்படாது.

இந்த படுகொலைக் கொள்கையை அமல்படுத்த தொழிற்சங்கங்கள் உடனான தனது நெருங்கிய ஒத்துழைப்பை அரசாங்கம் நம்பியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைத் தடுக்க தாங்கள் எதையும் செய்யப் போவதில்லை என்பதை முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் அனைத்தும் தெளிவுபடுத்தியுள்ளன. சமீபத்திய பள்ளி வழிகாட்டுதல்களுக்கு பதிலிறுக்கும் விதமாக SUD தொழிற்சங்கம் திங்களன்று, இது “சுகாதார நிலைமையின் பரிணாமம் தொடர்பாக மிகுந்த விழிப்புணர்வைக் காண்பிக்கும்” என்றும், “பணியாளர்கள் தங்களது பணியிடத்தில் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்யும்படி அழைப்பு விடுக்கிறது” என்றும் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பள்ளி வழிகாட்டுதல்கள் “குழந்தைகள் இடையேயான கொரொனா வைரஸின் தாக்கம் மற்றும் பரவல் பற்றிய தரவுகள் மீள்உறுதிசெய்யப்படுவதை” குறிப்பிட்டு சமூக இடைவெளிக்கான தேவைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை நியாயப்படுத்துகின்றன. இதுவொரு படுமோசமான பொய். புள்ளிவிபரங்களின் அடிப்படையில், வைரஸால் இறப்பதற்கான வாய்ப்புக்கள் வயோதிகர்களை காட்டிலும் இளைஞர்களுக்கு குறைவு என்றாலும், அவர்களால் வைரஸ் குறைந்த அளவில்தான் பரப்பப்படுகிறது என்பதற்கு விஞ்ஞானபூர்வ ஒருமித்த கருத்து எதுவுமில்லை. சில ஆய்வுகள் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள் மிகத் தீவிரமான நோய் பரப்பாளர்களாக உள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. மேலும், இளையோர் மீதான வைரஸின் நீண்டகால தாக்கம் பற்றியும் இன்னமும் எதுவும் புரிபடவில்லை.

தென் கொரியாவின் ஒரு சமீபத்திய ஆய்வு, நோய் பாதிப்புள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கிட்டத்தட்ட 60,000 பேரை பரிசோதனைக்குட்படுத்தியும், அவர்களது தொடர்புத் தடமறிந்தும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி, 10 முதல் 19 வயது வரையிலான நோயாளிகளுடன் வாழ்ந்தவர்களில், 18.6 சதவிகிதத்தினர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கண்டறிந்தனர், இது அனைத்து வயதினரில் உயர்ந்தபட்ச நோய் பரவும் வீதமாகும்.

JAMA Pediatrics இதழில் பிரசுரமான ஜூலை 30 ஆராய்ச்சி கடிதமானது, வைரஸ் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகி ஒரு வாரத்திற்குள் இலேசான மற்றும் மிதமான கோவிட்-19 நோயறிகுறிகளைக் கொண்டிருந்த 145 நோயாளிகளின் பரிசோதனை முடிவுகளை மதிப்பாய்வு செய்தது. ஐந்து முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளது மேல் சுவாசக் குழாயில் பெரியவர்களைப் போல அதே மட்டங்களில் வைரஸ் நியூக்ளிக் அமிலம் வெளிப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். என்றாலும், 5 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளது சுவாசப் பாதையில் முதியவர்களை காட்டிலும் 10 முதல் 100 மடங்கிற்கு மேலாக SARS-CoV-2 வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது. குழந்தை மருத்துவ ஆய்வுகள், “அதிகபட்ச நியூக்ளிக் அமில அளவுகளுக்கும் நோய்தொற்று வைரஸை அபிவிருத்தி செய்யும் திறனுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக அறிக்கை செய்துள்ளன” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கைக்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சியை மக்ரோன் அரசாங்கத்துடன் தீவிரமாக ஒத்துப்போகும் தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் கைகளில் விட்டுவிட முடியாது. எனவே, முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு சுயாதீனமான அமைப்பு மற்றும் அரசியல் ரீதியான தாக்குதலை தொடுப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக, ஆசிரியர்களும் அதற்கு ஈடாக அனைத்து பள்ளிகளிலும் மற்றும் பணியிடங்களிலும் தங்களது சொந்த சுயாதீன சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை (rank-and-file safety committees) ஸ்தாபிக்க வேண்டும். தொற்றுநோய்க்கு பாதுகாப்பான மற்றும் பகுத்தறிவு ரீதியான பதிலை உருவாக்குவது என்பது, ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான அரசியல் போராட்டமாகும் என்பதுடன், தனியார் இலாப நோக்கத்தை காட்டிலும் சமூக தேவையை அடிப்படையாகக் கொண்ட சோசலிச கொள்கைகளாகும்.