இலங்கை ஜனாதிபதி, தேர்தலுக்குப் பின்னர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறார்

By the Socialist Equality Party (Sri Lanka)
26 August 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றதை அடுத்து, சர்வாதிகார ஆட்சிக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதன் மூலம், தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கத் தயாராக வேண்டும் என்று தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஆகஸ்ட் 12 அன்று, ஜனாதிபதி ஒரு அரசாங்கத்தை அமைத்தார். அதில் அவரும் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த இராஜபக்ஷவும் அதிகாரத்தின் பல முக்கிய நெம்புகோல்களை தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். கோடாபய இராஜபக்ஷ, ஜனாதிபதி அமைச்சுப் பொறுப்புக்களைக் கொண்டிருப்பதை தடுக்கும் அரசியலமைப்பு விதிகளை நேரடியாக மீறி, தன்னை பாதுகாப்பு அமைச்சராக நியமித்துக்கொண்டார். அவர் ஆயுதப்படைகளின் தளபதியாகவும் உள்ளார். அவரது சகோதரர் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருப்பதோடு மேலும் இரண்டு அமைச்சர் பதவிகளையும் கொண்டுள்ளார்.

கோட்டாபய இராஜபக்ஷ, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்ததோடு, முன்னர் சிவில் விவகாரங்களாகக் கருதப்பட்ட பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சும் இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அட்மிரல் மற்றும் அமெரிக்க சார்பு சிந்தனைக் குழுவான பாத்ஃபைண்டர் நிறுவனத்தின் இயக்குநரான ஜெயநாத் கொலம்பகே, வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சிப்பாயாக சேவையாற்றிய இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட, 2009 மே மாதம் முடிவடைந்த இரத்தக்களரி உள்நாட்டுப் போரின்போது அவருடன் ஒத்துழைத்த, இப்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை, பிரதான அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு செயலாளர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கைகள், அவரது ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு ஒரு ஆதரவு அடித்தளமாக இராணுவத்தை பலப்படுத்துவதாகும்.

இராஜபக்ஷ, விரைவாக அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்ய முயல்கிறார். தேர்தலின் போது, அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஜனாதிபதியின் சில அதிகாரங்களை மட்டுப்படுத்திய 19 வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய அழைப்பு விடுத்தது. கடந்த வாரம் அமைச்சரவை அதை புதிய 20வது திருத்தத்தால் பதிலீடு செய்ய ஒப்புதல் அளித்தது.

எவ்வாறாயினும், இராஜபக்ஷ இன்னும் தூரம் செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை புதிய பாராளுமன்றத்திற்கு அவர் அளித்த கொள்கை அறிக்கையில், “அதன்பிறகு [19 ஆவது திருத்தத்தை ஒழித்த பின்னர்], நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இதில், ஒரு நாடு, அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற கருத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்,” என பிரகடனம் செய்தார்.

அவர் உத்தேச "புதிய அரசியலமைப்பின்" உள்ளடக்கத்தை விளக்கவில்லை என்றாலும், அது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பரந்தளவில் அதிகரிக்கும். "ஒரு நாடு, ஒரு சட்டம்" பற்றிய அவரது குறிப்பு, தீவின் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எந்தவொரு சலுகைகளையும் வழங்குவதை எதிர்ப்பதற்கான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் அதன் சிங்கள மேலாதிக்க பங்காளிகளின் பேரினவாத கோஷம் ஆகும். இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் பலவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பிற்போக்கு பிரச்சாரம் ஆகும்.

முழு கொழும்பு ஸ்தாபகத்தினதும் மோசமான நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு, இராஜபக்ஷ அரசாங்கம் ஈவிரக்கமற்ற வர்க்கப் போருக்குத் தயாராகி வருகிறது.

கோவிட்-19 வைரஸை "வென்றுவிட்டதாக" ஜனாதிபதி போலியாக கூறிக்கொண்டாலும், அது ஏனைய எல்லா நாடுகளையும் போலவே, பொருளாதாரத்திலும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி, உழைக்கும் மக்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன், மேலும் அரசியல் மற்றும் சமூக பதட்டங்களை அதிகப்படுத்தியுள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 1.3 சதவீதமாக சுருங்க உள்ளதுடன் அது 18 ஆண்டுகளில் மிக மோசமான இயக்கப்பாடாகும். பிரமாண்டமான வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக, 2024 வரை அரசாங்கம் சராசரியாக ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க வேண்டும். நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதமாகவும் 2021 இல் 8.3 சதவீதமாகவும் பாதிக்கும் என்று திறைசேரி மதிப்பிட்டுள்ள போதிலும், அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த எண்ணிக்கையை 5 முதல் 4.5 சதவீதமாகக் குறைப்பதற்காக சிக்கன திட்டங்களை வகுத்து வருகிறது.

பெருவணிகர்கள், அரசாங்கத்தின் ஆதரவோடு, கடந்த மூன்று மாதங்களாக வேலைச்சுமையை அதிகரித்து வருகின்ற அதேவேளை, ஏற்கனவே பாரிய வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை முன்னெடுத்துள்ளனர். உற்பத்தித் துறையில் மட்டும் 400,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொரோனா வைரஸின் ஆபத்துக்கு உள்ளாக்கும் வகையில், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. கிராமப்புற ஏழைகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முந்தைய “தேசிய ஐக்கிய” அரசாங்கத்தின் கடுமையான சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக, 2018 இல் தொடங்கிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் இராஜபக்ஷ கடந்த நவம்பரில் ஜனாதிபதி பதவியை வென்றார்.

இந்த மாத பொதுத் தேர்தலிலும் அதே அடிப்படையிலேயே ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வெற்றி பெற்றது. வாக்களிக்க பதிவுசெய்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வாக்களிக்க செல்லவில்லை, அல்லது அவர்களின் வாக்குச் சீட்டுக்களை செல்லுபடியற்றதாக்கினர். அனைத்து ஸ்தாபகக் கட்சிகள் மீதும் எந்தளவுக்கு பரவலான வெறுப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இப்போது தேர்தல்கள் முடிந்து, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்திற்கு உறுதியான பெரும்பான்மை இருப்பதால், அதன் போலியான தேர்தல் வாக்குறுதிகள் விரைவாக கைவிடப்பட்டு, தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு களம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பொதுத் தேர்தலுக்கு முன்பே, இராஜபக்ஷவுக்கும் அவரது சிறுபான்மை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு எழுந்தது. பெப்ரவரியில் அவரது ஆட்சியால் பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 20,000 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பெப்ரவரியில் 200,000 ஆசிரியர்களும் மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். பெருந்தோட்ட மற்றும் சுகாதார ஊழியர்கள் மத்தியில் ஏராளமான போராட்டங்கள் வெடித்தன.

ஆகஸ்ட் 5 தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், 10,000 தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு துறைமுகத்தில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தேர்தல் நடந்து இரண்டு நாட்களின் பின்னர், கொழும்பு துறைமுக நகரத்தின் தொழிலாளர்கள், தொற்று நோயை காரணம் காட்டி சம்பள வெட்டுக்களை முன்னெடுப்பதற்கு எதிராக மூன்று நாள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். இந்த போராட்டங்கள், தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக அனைத்தும் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பேரினவாத குழுக்களுக்கும் முன்னெடுக்கும் இனவாத பிரச்சாரத்தை மீறி தொழிலாளர்களை ஒன்றிணைத்தன.

வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியானது 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரத்திற்குப் பின்னர் முதலாளித்துவ ஆட்சி தங்கியிருந்த நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆகியவற்றின் சிதைவையும் மற்றும் பிளவையும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த இரண்டும் பிளவடைந்து மிச்ச சொச்ச அமைப்புகளாக மட்டுமே உள்ளன. ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் ஐ.தே.க.வில் இருந்து பிரிந்து அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் மிகவும் ஸ்திரமற்ற அமைப்புகளாகவே உள்ளன.

முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் மற்றும் சமூக நிலைமைகள் அல்லது உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களால்களுக்கும் அளித்த ஆதரவு காரணமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) மற்றும் போலி இடது குழுக்களும் ஆழமாக அதிருப்திக்கு உள்ளாகியுள்ளன.

வாஷிங்டன் தனது உலகளாவிய ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல் என்று கருதும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கான அமெரிக்க உந்துதலால் அரசியல் ஸ்தாபகத்தின் நெருக்கடி அதிகரித்து வருகிறது. பிராந்தியமெங்கும் உள்ள அரசாங்கங்கள் சீனாவுக்கு எதிராக தன்னுடன் அணிதிரள்வதை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா அச்சுறுத்தல் மற்றும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. பெய்ஜிங்கிற்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்பட்டதால், அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில், 2015 இல் மஹிந்த இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதன் மூலம், இலங்கை ஏற்கனவே புவி-அரசியல் சூறாவளிக்குள் இழுக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் வர்க்கப் போராட்டத்தை பற்றிய பீதியில், முதலாளித்துவ கட்சிகள் பெருகிய முறையில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துகின்றன. ஐ.தே.க., ஐ.ம.ச., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லீம் கட்சிகள் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும், ஏப்ரல் மாதம் பிரதமர் மகிந்த இராஜபக்ஷ அழைத்த அனைத்துக் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டன. அவர்கள் அனைவரும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக என்று கூறப்பட்ட ஜனாதிபதியின் தொழிலாள வர்க்க-விரோத கொள்கைகளை ஆதரிப்பதாக உறுதியளித்தனர்.

இதன் உச்சமாக, கடந்த வெள்ளிக்கிழமை, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இராஜபக்ஷ ஆட்சியின் ஜனநாயக விரோத செயல்திட்டத்துக்கு தங்கள் ஆதரவைக் காட்டி, ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற அனுமதித்தன.

கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் பாதையில், பல்வேறு போலி-இடது குழுக்களும் வலதிற்கு மாறிவிட்டன. நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.) பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐ.தே.க. உடன் அணிதிரண்டதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்குப் பேர்போன இந்த வலதுசாரிக் கட்சியின் நீண்டகால சரித்திரத்தை இழிந்த முறையில் பூசிமெழுகியது.

"வேறுபாடுகள் இருந்தபோதிலும்" தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) ஏப்ரல் மாதம் இரண்டு முறை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியது. தேர்தலுக்குப் பின்னர், மு.சோ.க. தலைவர் புபுது ஜாகொட, "நாங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் ... இடது, குட்டி முதலாளித்துவ மற்றும் வலதுசாரிக் கட்சிகளின் முற்போக்கான பிரிவுகளுடன் ... பொதுவான பிரச்சினைகளில் சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறோம்," என அறிவித்தார்.

போலி-இடது குழுக்களின் இன்றியமையாத அரசியல் பங்கு, தொழிலாள வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு பிரிவுடன் பிணைத்து வைத்திருப்பதும் மற்றும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பதும் ஆகும். தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் போலி-இடதுசாரிகளின் ஆதரவுடன் பலமுறை கலைக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் முழுமையான தாக்குதலைத் தயாரிக்கும்போது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உண்மையான ஆபத்துக்களை எதிர்கொள்வதாக சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க அது கொடூரமான பலத்தை மற்றும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளைப் பயன்படுத்த தயங்காது.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீன வர்க்க மூலோபாயத்துடன் இந்த ஆபத்துக்கு எதிராக போராட தயாராக வேண்டும்.

போலி-இடதுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட ஆளும் வர்க்கத்தின் அனைத்து கட்சிகளிடம் இருந்தும் அடிப்படையில் அரசியல் ரீதியில் முறித்துக்கொண்டு வெளியேறுவதுதான் முதல் படி ஆகும். தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல், ஊதியம் மற்றும் தொழில் வெட்டுக்கள் மற்றும் வேலைச்சுமைகளை அதிகரிப்பதை எதிர்த்துப் போராடுவதற்காக வேலைத் தளங்கள், தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது.

இந்த நடவடிக்கைக் குழுக்கள், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஏனைய தொழிலாளர்கள் பக்கம் திரும்பி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளுக்குமான போராட்டத்தில் அரசாங்கத்தின் மற்றும் பெருவணிகத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, கிராமப்புற ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட முயற்சிக்க வேண்டும்.

தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சர்வதேசவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, இந்த புரட்சிகர முன்னோக்குக்காக சோ.ச.க. மட்டுமே போராடுகிறது. நாங்கள் அனைத்து வகையான தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தை இன வேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படுத்தப் போராடுகிறோம்.

தேர்தலில் எங்களுக்கு வர்க்க உணர்வுடன் வாக்களித்தவர்கள் உட்பட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் உடனடியாக அடுத்து வரவுள்ள போராட்டங்களுக்கு தேவையான புரட்சிகர தலைமையாக இந்த கட்சியை கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.