ஜேர்மன் பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரிகளின் முற்றுகை

By Christoph Vandreier
4 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் கூட்டாட்சி நாடாளுமன்றக் கட்டடத்தின் படிகளில் 1918 க்கு முன்னரான ஜேர்மன் பேரரசின் கொடியை அசைத்த நவ-நாஜிக்களின் படங்கள் உலகம் முழுவதும் வேகமாக பரவி, நியாயமான சீற்றத்தை உருவாக்குகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து சனிக்கிழமையன்று ஜேர்மன் தலைநகர் பேர்லினில் சுமார் 30,000 வலதுசாரி தீவிரவாதிகள், யூத-விரோதவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அணிதிரட்டப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுகள் இருந்தன.

அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தம்மை ஆர்ப்பாட்டங்களிலிருந்து பகிரங்கமாக தூர விலக்கிக்காட்ட ஊடகங்களில் முயன்றனர். "ஜேர்மன் பேரரசின் கொடிகள் மற்றும் ஜேர்மன் பாராளுமன்றத்தின் முன் வலதுசாரி தீவிரவாதிகள் முழக்கமிடுவது நமது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்கள்" என்று ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகவாதி- SPD) அறிவித்தார். "வன்முறையைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு வெளிப்படையான வலதுசாரி தீவிரவாத சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளின் இருக்கையை தாக்க முனைவது நம் அனைவரையும் பாதிக்கிறது என பாராளுமன்ற தலைவர் வொல்ஃப்காங் ஷொய்பிள (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், CDU) தெரிவித்தார்.

இத்தகைய அறிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. கைசரின் பேரரசு மற்றும் நாஜி அடையாளங்களின் கொடிகளை அசைத்த வலதுசாரி தீவிரவாதிகள் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படவில்லை, ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் ஜேர்மனியில் ஆபத்தான அரசியல் நிகழ்வுகளை அம்பலப்படுத்துவதுடன் அவை மக்கள் எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்றே கவலைப்படுகின்றனர். இந்த கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்தில் வலதுசாரி தீவிரவாதிகளுடன் ஒத்துழைத்து வருகின்றன. முக்கியமான பாராளுமன்றக் குழுக்களுக்குத் தலைமை தாங்க ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டின் (AfD) பிரதிநிதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாட்களில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்கள் அதைப் பாராட்டின. வலதுசாரி தீவிரவாதிகளை அணிதிரட்டுவதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் அவர்களின் பொறுப்பற்ற கொள்கைக்கு பெருகிவரும் எதிர்ப்பை அவர்கள் இதன் மூலம் அச்சுறுத்தவும், ஒடுக்கவும் விரும்புகிறார்கள்.

பேர்லின் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தை தடைசெய்த பின்னர், பங்கேற்பாளர்கள் சமூக விலகல் மற்றும் முகமூடிகளை அணிவது தொடர்பான விதிமுறைகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல அறிக்கைகள் வெளியிடப்பட்டதன் அடிப்படையில், வலதுசாரி ஸ்பிரிங்கர் பதிப்பகம் ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியது. அதன் Bild செய்தித்தாள் ஒரு கட்டுரையை வெளியிட்டு, பொது சுகாதார விதிமுறைகள் "எங்கள் மிக உயர்ந்த அடிப்படை உரிமைகள் மீது ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்" என்று வலியுறுத்தியது.

பாராளுமன்றத்தில் இடது கட்சியின் தலைவரான டீட்மார் பார்ட்ஸ் ஆகஸ்ட் 1 ம் தேதி பேர்லினில் நடந்த முதல் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், பங்கேற்பாளர்களுடன் சமரசம் செய்வது அவசியம் என்று அறிவித்தார். "அவர்களுக்கு முத்திரை குத்துவதும், அவர்களை தவிர்ப்பதும் யாருக்கும் உதவாது" என்று அவர் Deutschlandfunk ஊடகத்திற்கு கூறினார். "வலதுசாரி தீவிரவாதிகளில் உண்மையில் சில முட்டாள்கள் உள்ளனர், ஆனால் அதிருப்தியினால் பங்கேற்ற பலரும் உள்ளனர்." என்றார்.

தீவிர வலதுசாரி அணிவகுப்பினை இந்த வகையில் மூடிமறைப்பது ஏற்கனவே இஸ்லாமிய விரோத பெகிடா ஆர்ப்பாட்டங்களில் காணப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளாலும் "கவலைகொண்ட குடிமக்கள்" என்று வர்ணிக்கப்பட்டனர். அவர்களுடன் நாம் உரையாடலில் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தில், ஆர்ப்பாட்டங்களை குறைமதிப்பு செய்வது அவர்களின் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளை அரசியல் பாதையில் ஏற்றுக்கொள்ளத்தக்க பகுதியாக மாற்றுவதற்கும் அகதிகளுக்கான பரந்த ஐக்கியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் உதவியது.

கொரோனா வைரஸ் ஆர்ப்பாட்டங்களின் தீவிர வலதுசாரி தன்மை குறித்தும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. NPD முதல் அடையாள இயக்கம் மற்றும் AfD வரை தீவிர வலதுசாரி மற்றும் நவ-நாஜி அமைப்புகளின் பரந்த பிரிவினர் அவற்றை ஏற்பாடு செய்தன. AfD இன் பாசிச பியோர்ன் ஹொக்க (Björn Hökke), அதேபோல் வலதுசாரி தீவிரவாதியும் மற்றும் மோசமான யூத எதிர்ப்புவாதியுமான ஜூர்கன் எல்செஸர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜேர்மன் ஏகாதிபத்திய மற்றும் இராணுவக் கொடிகளுடன், நாஜி அடையாளங்களும் காணக்கூடியதாக இருந்தன.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பெரும் பிரிவுகளின் ஆதரவோடு, வலதுசாரி தீவிரவாதிகள் அரச எந்திரத்தின் ஆதரவிலும் தங்கியிருக்கலாம். முந்தைய ஆர்ப்பாட்டம் பொது சுகாதார நடவடிக்கைகளை முறையாக மீறுவதைக் கண்ட போதிலும், முகமூடிகளை அணிவதையும் சமூக விலகலை பராமரிப்பதையும் எதிர்க்கும் பல அறிக்கைகள் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் பரப்பப்பட்டிருந்தாலும், ஆர்ப்பாட்டம் நடாத்துவதை அனுமதித்து பேர்லினின் நிர்வாக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு முடிவை வெளியிட்டது.

முன்னதாக, ஜேர்மனியின் கூட்டாட்சி உள்நாட்டு உளவுத்துறையின் தலைவரான தோமஸ் ஹால்டென்வாங், ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான மக்கள் “அடிப்படைச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்படுவார்கள்” என்று அறிவித்தார். இத்தகைய ஆர்ப்பாட்டங்களின் தலைமையைக் கைப்பற்ற வலதுசாரி தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகள், "குறிப்பாக பயனுள்ளதாக இல்லை" என்று நிரூபிக்கப்பட்டன என்றார். ஹால்டென்வாங்கின் முன்னோடியான, ஹான்ஸ்-ஜோர்க் மாஸன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கெம்னிட்ஸ் நகரில் நடந்த வலதுசாரி தீவிரவாத ஆர்ப்பாட்டங்கள் குறித்து இதேபோலவே பேசினார். புலனாய்வு அமைப்பு வலதுசாரி தீவிரவாதிகளின் பங்கை திட்டமிட்டு குறைத்து மதிப்பிடுகையில், அவர்களை எதிர்க்கத் துணிந்தவர்களை "இடதுசாரி தீவிரவாதிகள்" என்று அவதூறு செய்கிறது.

இறுதியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடத்தை தங்கள் பிரச்சாரத்திற்கு பின்னணியாகப் பயன்படுத்த காவல்துறையினரால் அழைக்கப்பட்டிருந்தனர். ஜேர்மனி முழுவதிலுமிருந்து வலதுசாரி தீவிரவாதிகள், பல நாட்களாக பேர்லினில் தமது முற்றுகையிடும் திட்டங்களை அறிவித்திருந்தபோதிலும், தலைநகரில் 3,000 காவல்துறையினர் மட்டுமே அணிதிரட்டப்பட்டிருந்தனர். ஹம்பேர்க் நகரில் ஜி-20 க்கு எதிராக இடதுசாரி எதிர்ப்பாளர்களுடன் இந்த பிரச்சினை கையாளப்பட்டபோது, 10 மடங்கு அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டனர். பேர்லின் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை நேரடியாக பாராளுமன்ற கட்டிடத்தின் முன் இருந்தபோதிலும் 3 போலிஸார் மட்டுமே அங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாராளுமன்ற கட்டிடத்தின் முன் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், மூன்று போலிஸ் அதிகாரிகள் மேடையில் இருந்து எதிர்ப்பாளர்களிடம் அருகிலுள்ள பேரணியில் உரையாற்றினர். Süddeutsche Zeitung பத்திரிகையின் படி, மூனிச் நகரில் இருந்து ஓய்வுபெற்ற போலீஸ் ஆணையாளரும், அகுஸ்பேர்க்கில் இருந்து ஒரு குற்றவியல் புலனாய்வாளரும், ஃபிராங்கோனியாவைச் சேர்ந்த ஒரு பிரிவுத் தலைவரும், பொலிஸ் அதிகாரிகளாக ஆர்ப்பாட்டத்திற்கு தங்கள் ஆதரவை அறிவித்திருந்தனர்.

பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிப்பதற்காக சனிக்கிழமையன்று சமூகத்தின் பாசிச குப்பைகள் அணிதிரட்டப்பட்டன. தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஏற்கனவே பின்வாங்கப்பட்டுள்ளன அல்லது முற்றிலுமாக கைவிட்டுள்ளன. பள்ளிகளும் பணியிடங்களும் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் திறக்கப்படுகின்றன, இது தொற்றுநோய்களின் கூர்மையான உயர்வுக்கு வழிவகுக்கிறது. வங்கிகள் மற்றும் பெருவணிகங்களின் இலாபங்களை ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பில் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த கொள்கை ஜேர்மனிய மக்களில் பெரும்பான்மையினரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. வெள்ளிக்கிழமை ZDF நடத்திய கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 79 சதவீதம் பேர் பொது நிகழ்வுகள் குறித்து கடுமையான விதிமுறைகளை விரும்புவதாகக் காட்டியது. இதனை மத்திய அரசு சிலநாட்களுக்கு முன்னர் நிராகரித்தது. பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக பள்ளிகளில் நடவடிக்கைக் குழுக்கள் நிறுவப்பட்டு வருகின்றன, மேலும் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

பாரிய பணிநீக்கங்களுக்கான திட்டங்களும் பரவலான எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. வாகனத் தொழில், சில்லறை விற்பனை மற்றும் விமான நிறுவனங்களில் இலட்சக்கணக்கான வேலைகள் அழிக்கப்பட உள்ளன. பதட்டங்கள் ஏற்கனவே கொதிநிலையை அடைந்துள்ளன.

பெருவணிகத்தின் நலன்களுக்காக பின்பற்றப்படும் இரக்கமற்ற கொள்கை மக்களின் மிக அடிப்படையான தேவைகளுடனும் முற்றிலும் பொருந்தாது. இதனால்தான், முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில், ஆளும் உயரடுக்கு சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியின் வடிவங்களை இன்னும் வெளிப்படையாக நம்பியுள்ளது. சனிக்கிழமை போன்ற ஆர்ப்பாட்டங்கள் வெகுஜன ஆதரவை பெறுவதில்லை, மாறாக அவை அரசியல் ஸ்தாபகத்தினதும் மற்றும் அரச எந்திரத்தின் விளைவாகும். எவ்வாறிருப்பினும், இது அவற்றை குறைந்த ஆபத்தானவையாக மாற்றவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில், பாதுகாப்புப் படைகளில் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. பாசிச சித்தாந்தம் மீண்டும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் பேரரசின் கொடிகளை அசைப்பதில் இப்போது கோபப்படுவதாகக் கூறும் ஸ்ரைன்மையர் இதில் பெரிதும் ஈடுபட்டவராவார். AfD பாராளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளுக்கு எதிரான "சமரசம் செய்யமுடியாத சுவர்களை" அகற்றுவது அவசியம் என்று அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் AfD யின் இரு நாடாளுமன்றக் குழுத் தலைவர்களையும் தனது இருப்பிடமான Bellevue மாளிகைக்கு பேச அழைத்தார்.

இதற்கு அடுத்தடுத்த மாதங்களில், CDU மற்றும் SPD ஆகியவை மக்களின் முதுகின் பின்னால் வரையப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பெரும் கூட்டணியை உருவாக்க சதி செய்தன. இதன் விளைவாக AfD யை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக முடிசூட்டவும், கூட்டணியால் அதன் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்தவும் முடிந்தது. அகதிகள் தடுப்பு மையங்களின் வலையமைப்பை உருவாக்குதல், சமூக சமத்துவமின்மையின் பாரிய அதிகரிப்பு மற்றும் இராணுவத்தை மீளாயுதப்படுத்துவதற்கும் இது பொருந்தும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த நிகழ்வுகளை துரிதப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் கீழ் வர்க்க உறவுகளின் உண்மையான நிலை அம்பலப்படுத்தப்படுகிறது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்கு ட்ரம்ப் பாசிசக் குழுக்களை இன்னும் வெளிப்படையாக நம்பியுள்ள அமெரிக்காவைப் போலவே, ஆளும் உயரடுக்கு அதன் எதிரிகள் அனைவரையும் பிற்போக்கு தீவிர வலதுசாரி சக்திகளால் அச்சுறுத்த விரும்புகிறது.

ஆகவே தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தால் மட்டுமே நிறுத்த முடியும். இது, வலதுசாரி தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து ஸ்தாபகக் கட்சிகளுக்கும், தீவிர வலதுசாரிகளையும் பாராட்டி அவற்றை பலப்படுத்தும் பெரும் கூட்டணிக்கும் எதிரானதாகும். இது பாசிசம், தேசியவாதம் மற்றும் போரின் மூலவேர்களுக்கு எதிராகவும் முதலாளித்துவ இலாப அமைப்புக்கு எதிராகவும் இயக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (SGP, Socialist Equality Party) போராடும் முன்னோக்கு இதுதான்.