இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது

By Jordan Shilton and Keith Jones
15 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இமயமலையில் 3,475 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை ஒட்டிய சர்ச்சைக்குரிய பகுதிகள் தொடர்பாக இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நிலவும் நான்கு மாத கால மோதல் கடந்த இரண்டு வாரங்களாக பெரியளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் வலதுசாரி மோடி அரசாங்கத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கி வரும் ஆத்திரமூட்டும் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், சீனாவின் எழுச்சியைத் தடுக்க, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்களது இராணுவ-மூலோபாய இருப்பை அதிகரிப்பதற்கு பிரதான ஐரோப்பிய சக்திகள் கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உந்துதலாலும், ஒரு உள்ளூர்மயமாக்கப்பட்ட மோதலின் அச்சுறுத்தல் ஒரு பிராந்தியப் போரைத் தூண்டக்கூடும், பின்னர் அதுவே உலகின் பிரதான சக்திகளை போருக்குள் இழுக்கும் நிலையை உருவாக்கும்.

இந்திய எல்லைப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான ஒரு சீன சதியைப் பற்றி இந்திய இராணுவம் குற்றம் சாட்டி ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதி இரவில் “முன்கூட்டிய” நடவடிக்கை என்று அது குறிப்பிட்ட நடவடிக்கையை தொடங்கியது. பல ஆயிரம் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டு தற்போது எழுந்துள்ள மோதல் சூழலில், நாடுகளின் சர்ச்சைக்குரிய உண்மையான எல்லைப் பகுதியான, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control-LAC) அடுத்துள்ள பாங்காங் ஏரிக்கு (Pangong Lake) அருகிலுள்ள தரிசாகிப் போன மலைப்பகுதிகளில் ஒரு தொடர்ச்சியான மூலோபாய உயரங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. 134 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஏரி இந்திய கட்டுப்பாட்டிலுள்ள லடாக் பகுதியும், சீன கட்டுப்பாட்டிலுள்ள அக்சாய் சின் பிராந்தியமும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

உண்மையில், இந்தியாவின் சூழ்ச்சி, பெரிதும் ஆயுதமேந்திய இந்திய துருப்புக்களை இருநூறு மீட்டர் தொலைவுக்குள் கொண்டு வந்தது, அல்லது அவர்களது சீன சகாக்களை “நேருக்கு நேர் எதிர்கொள்ள” செய்யும் அளவிற்கு ஆத்திரமூட்டும் வகையில் பதட்டங்களை அதிகரிப்பதாக இருந்தது.

கடந்த திங்கட்கிழமை, சர்ச்சைக்குரிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே ரோந்து செல்லும் படையினர், தங்களது துப்பாக்கிகளை தன்னிச்சையாக பயன்படுத்துவதை தடை செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் முதன்முறையாக எல்லைப் பகுதியில் நேரடி குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்தன. ஒரு மோதலின் போது சீனப் படையினர் ஆகாயத்தை நோக்கி சுட்டதாக இந்தியா கூறியுள்ளது, அதே நேரத்தில் சீன ரோந்து படையினர் மீது இந்திய துருப்புக்கள் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பெய்ஜிங் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை, என்றாலும் இதன் விளைவாக இருதரப்பிலும் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன.

போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளுடன் அக்சாய் சின் எல்லைப் பகுதிக்கு 50,000 சீனத் துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு போட்டியாக விமானத் தளங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பெரியளவில் “முன்னோக்கிய” இருப்புக்களுக்கு தயார் செய்துள்ள இந்தியா, டாங்கிகள் மற்றும் கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்தி கிழக்கு லடாக்/அக்சாய் சின் பகுதிகளில் தான் புதிதாக கைப்பற்றிய உயரங்களை பலப்படுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் (S.Jaishankar) மற்றும் அவரது சக சீன பிரதிநிதி வாங் யி (Wang Yi) உம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organization) மாநாட்டின் ஒரு பகுதியாக, மாஸ்கோவில் வியாழக்கிழமை நடந்த இரண்டரை மணி நேர சந்திப்பைத் தொடர்ந்து, தங்களது இராணுவத்தினர் “விரைவாக விலகிவிடுவார்கள், சரியான இடைவெளியை பேணுவார்கள், மற்றும் பதட்டங்களை குறைப்பார்கள்” என்று உறுதியளிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

என்றாலும், மோதல் இன்னமும் கத்தி முனையில்தான் உள்ளது என்ற உண்மையை இது மாற்றாது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு எங்கு அமைந்துள்ளது என்பது தொடர்பான எல்லை நிலைப்பாடு மற்றும் போட்டி உரிமைகோரல்கள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வெற்று வார்த்தைகளடங்கிய இந்த அறிக்கை உறுதியான திட்டங்கள் எதையும் வழங்கவில்லை. எல்லையிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில், மே மாதத்தில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்களுக்கு இடையே உயிரைக் கொல்லும் நோக்கமில்லாத இரண்டு மோதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 15 அன்று இரவு கல்வான் பள்ளத்தாக்கில் வெடித்த இரத்தக்களரியான மோதல் உத்தியோகபூர்வ “மோதல் தவிர்ப்பு” காலகட்டத்தில் தான் வெடித்தது என்பதை இன்றும் நினைவுபடுத்த வேண்டும். ஜூன் மாத மோதலில், சிப்பாய்கள் இரும்புத் தடிகள், கத்திகள் மற்றும் கற்களைக் கொண்டு நேரடி தாக்குதல்களில் ஈடுபட்டனர், இதன் விளைவாக 20 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், அறியப்படாத எண்ணிக்கையில் சீன இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

ஜூன் மோதலுக்குப் பின்னர் சில துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன, என்றாலும் இரு தரப்பினரும் நெருக்கடியைத் தணிக்க மற்றைய தரப்பு தான் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தும் நிலையில், சமீபத்திய வாரங்களில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிடையில், எல்லையை ஒட்டி சர்ச்சைக்குரிய பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த ஒரு மாத கால எல்லைப் போருக்குப் பின்னர் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான இராணுவ மோதலுக்கான சாத்தியப்பாடு உச்சமடைந்திருப்பதாக கடந்த மாதத்தின் பிற்பகுதியில் ஜெய்சங்கர் அறிவித்தார்.

எந்தவொரு எண்ணிக்கையிலான உள்ளூர்மயமாக்கப்பட்ட மோதல்களும், உள்நோக்கம் கொண்டதோ அல்லது வேறுவிதமானதோ, எதுவானாலும் ஒரு முழுமையான போராக எளிதில் வெடிக்கக்கூடும். ஒரு அச்சுறுத்தும் முன்னேற்றமாக, சீன இராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உள்ளூர் தளபதிகளுக்கு பரந்த பரப்பெல்லை வழங்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த இந்திய இராணுவ அதிகாரி இந்த வார தொடக்கத்தில் டைம்ஸ்ஆப்இந்தியாவுக்கு தெரிவித்தார். மேலும், “உயரத்தில் உள்ள நமது படையினர் பெரிதும் ஆயுதமேந்தி, முழுமையான தயார் நிலையில் உள்ளனர்” என்று பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனாவுடனான தனது எல்லையில் இந்தியா மேற்கொள்ளும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு காரணிகளால் தூண்டப்படுகின்றன. முதலாவதாக, பிரதமர் நரேந்திர மோடியும் அவரது நெருக்கடி நிறைந்த பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கமும், உத்தியோகபூர்வ அரசியலை தீவிரமாக வலதிற்கு திருப்பவும், போரைத் தூண்டும் இந்திய தேசியவாதத்தைத் தூண்டவும் பெய்ஜிங் உடனான பதட்டங்களை பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், வாஷிங்டனுடன் இந்தியா எப்போதும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதை மக்கள் எதிர்ப்பதை முறியடிக்கவும், இந்திய இராணுவ வலிமையை மேலும் பெரியளவில் கட்டியெழுப்புவதை நியாயப்படுத்தவும், மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை அரசாங்கம் அழிவுகரமாக கையாண்டதன் விளைவாக தூண்டப்பட்ட பேரழிவு தரும் சுகாதாரம் மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இரண்டாவதாக, சீனாவுடன் மோதுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கும் முழு ஆதரவை தாம் அனுபவிக்கிறோம் என்பதை மோடியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி உட்பட ஒட்டுமொத்த இந்திய ஆளும் உயரடுக்கினரும் அறிவார்கள், தற்போதைய நெருக்கடியில் பெய்ஜிங்கிற்கு எதிராக போதுமான ஆக்ரோசத்தை காட்டவில்லை என்று பிஜேபி அரசாங்கத்தை பல முறை அவதூறாக காங்கிரஸ் கட்சி பேசியது. மே மாதத்தில் எல்லை மோதல் வெடித்த உடனேயே, வாஷிங்டன் வெளிப்படையாக தெரியும் வகையில் தன்னை மோதலில் நுழைத்துக் கொண்டதுடன், சீனாவை ஆக்கிரமிப்பாளராக கண்டனம் செய்தது, மேலும் அதை நேரடியாக அமெரிக்காவால் தூண்டப்பட்ட தென் சீனக் கடல் விவகாரத்துடன் இணைத்தது.

இது, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக பெரியளவில் சக்திவாய்ந்த சீனாவுக்கு எதிரான ஒரு அரணாக இந்தியாவை மாற்ற அதனுடன் நெருங்கிய இராணுவ மூலோபாய உறவுகளை வளர்க்க நோக்கம் கொண்டு, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களால் இரண்டு தசாப்தங்களாக பின்பற்றப்படும் இருகட்சி கொள்கையின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், தற்போது உலகின் இரண்டாவது பெரிய மற்றும் சில நடவடிக்கைகளால் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள சீனாவுக்கும் இடையிலான சரிசெய்யமுடியாத இந்த மோதல் பற்றி அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ ஜூலை பிற்பகுதியில் ஒரு உரையில் சுருக்கமாக கூறியதில், சீனாவுடனான “ஈடுபாடு” என்ற ஐந்து தசாப்த கால அமெரிக்க கொள்கையை நிராகரித்தார். சீனாவிற்கு எதிரான இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான அழுத்தங்கள் தொடர்புபட்ட விரிவான மூலோபாயத்தை பொம்பியோ அப்போது வெளிப்படுத்தியமை, பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதில் அமெரிக்கா தற்போது உறுதியாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. (பார்க்கவும்: “அமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது”).

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை இன்னும் வெடிக்கும் நிலையில் உள்ளது, ஏனென்றால் இது பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் ஆக்ரோஷமான இராஜதந்திர-இராணுவத் தாக்குதலுடன் மேலும் சிக்கவைக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 5,100 மீட்டர் (அதாவது 17,000 அடி) உயரத்திற்கு மேலான சில சிகரங்கள் உட்பட, சர்ச்சைக்குரிய பிராந்தியங்களின் தொலைநிலை மற்றும் அநேகமாக வசிக்கமுடியாத தன்மை ஒருபுறம் இருந்தாலும், அவை அதிகரித்து வரும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா உடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான பெய்ஜிங்கின் பரந்த ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சியின் (Belt and Road Initiative) முக்கிய திட்டமான, 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China Pakistan Economic Coridor), சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு அருகிலும், இந்தியாவால் உரிமை கோரப்பட்ட சீனா மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அக்சாய் சின் பகுதி சீனாவின் திபெத்திற்கும் ஜின்ஜியாங் வீகர் தன்னாட்சி பிராந்தியங்களுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பை மட்டுமே வழங்குகிறது, இந்த வீகர் பகுதியில் தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் பெய்ஜிங் ஆட்சியை பலவீனப்படுத்த இப்பகுதியின் இன ரீதியான குறைபாடுகளை சுரண்டுவதற்கு முயன்று வந்துள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீங்கு விளைவிக்கும் பங்கு, இந்தியா-சீனா எல்லையில் ஒரு போர் வெடிக்குமானால், அது பூகோளரீதியான பரிமாணங்களை எடுக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” (“Pivot to Asia”) என்ற கொள்கையில் தொடங்கி, பெரும் சக்திவாய்ந்த “மூலோபாய போட்டியின்” புதிய சகாப்தம் பற்றி பென்டகன் 2018 இல் அறிவித்ததன் மூலம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அமெரிக்க மூலோபாயத்தின் முக்கிய நோக்கம் என்பது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவது உள்ளது.

சீனாவை நோக்கிய அமெரிக்காவின் மேலும் அதிகமான தீவிரமான நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, சீனாவிற்கு சவாலாக இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ பாணி கூட்டணியை உருவாக்க முன்னணி அமெரிக்க அதிகாரிகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர். அத்தகைய கூட்டணியின் அடிப்படையில் –இந்தியா, மற்றும் வாஷிங்டனின் இரண்டு முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டணி நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, நான்கு நாடுகளுடன் அமெரிக்கா தலைமையிலான மூலோபாய பேச்சுவார்த்தை 2017 இல் புதுப்பிக்கப்பட்டது– அதற்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். அக்டோபரில் இந்தியா இந்த நான்கு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளது, இக்கூட்டத்தில் அதன் அங்கத்தவர்களிடையே இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும், தென் கொரியா அல்லது நியூசிலாந்து போன்ற கூடுதல் அங்கத்துவ நாடுகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை. ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி வசதிகளை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் பதவிக்காலம் நிறைவுபெறவுள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே இந்த வாரம் ஆரம்பத்தில் 2 பில்லியன் டாலருக்கு மேலான மானியங்கள் பற்றி அறிவித்தார். வியாழக்கிழமை ஒரு கூட்டத்தில், அபேயும் மோடியும் இருதரப்பு தளவாடங்கள் மற்றும் இராணுவ தளங்கள்-பகிர்வு ஒப்பந்தம் பற்றி அறிவித்தனர், இது இந்திய துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரிக்க போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் பராமரிப்பு மற்றும் மறு விநியோகத்திற்கு வழமையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே 2016 இல் எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடக்க முத்தரப்பு உரையாடலை நடத்தின, இது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட வருடாந்திர கூட்டமாகும். ரீயூனியன் மற்றும் மடகாஸ்கரில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தளங்களை அணுகுவதை பாதுகாப்பதில் இந்தியா குறிப்பாக ஆர்வமாக உள்ளது, இது ஜிபூட்டியிலும் மற்றும் அறிவிக்கப்படாத வகையிலானது என்று பென்டகன் கூறும் பாகிஸ்தானின் குவடாரிலும் சமீபத்தில் நிறுவப்பட்ட தளத்தின் மூலம் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை இருப்பை எதிர்த்துப் போராடுவதற்கு இது உதவும் என்று நம்புகிறது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி வியாழக்கிழமை ஐந்து ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்தார், இது 36 போர் விமானங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட 7.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் முதல் கட்ட விநியோகமாகும். மேலும், மோடியின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” பிரச்சாரத்தின் கட்டமைப்பிற்குள் தொழில்துறை மற்றும் தளவாட ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக பார்லி தனது இந்திய சக பிரதிநிதியான ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தன்னை விலக்கி வைக்காதிருக்கும்படியாக, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை பிராந்தியம் முழுவதிலும் மூலோபாய மற்றும் இராணுவ ரீதியாக ஈடுபடுத்த வகை செய்யும் இந்திய-பசிபிக்கிற்கான ஒரு புதிய மூலோபாயக் கோட்பாட்டை ஜேர்மனியின் அமைச்சரவை கடந்த மாதம் இறுதியில் நிறைவேற்றியது. இராணுவவாதத்தையும் மற்றும் ஏகாதிபத்திய “உலகளவில் சக்திவாய்ந்த” வெளியுறவுக் கொள்கையையும் புதுப்பிப்பதற்கான ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் திட்டமிட்ட உந்துதலை பாதுகாப்பதில், பேர்லினின் பாத்திரம் “பாதுகாப்பு கொள்கை மன்றங்களில் பங்கேற்பது, பிராந்தியத்தின் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பது, கூட்டு வெளியேற்றங்களுக்கு திட்டமிடுவது, தொடர்பு அதிகாரிகளை அனுப்புவது, மேலும் பல்வேறு வகையான கடற்படை இருப்புக்கு வழிசெய்வது ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்” என்று 80 பக்க ஆவணம் அறிவிக்கிறது.

ஆவண வெளியீடு பற்றி அறிவிக்கும் ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சரான ஹெய்கோ மாஸ், “இமய மலையும் மலாக்காவின் நீரிணைகளும் வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் வரவிருக்கும் தசாப்தங்களில் நமது செழிப்பும் புவிசார் அரசியல் செல்வாக்கும் இந்திய-பசிபிக் நாடுகளுடன் நாம் எந்தளவிற்கு ஒத்துழைக்கிறோம் என்பதைப் பொறுத்தது” என்று வலியுறுத்தி இந்த திட்டத்திற்கு பின்னால் உள்ள கொள்ளையடிக்கும் நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பரபரப்பான போட்டிக்குரிய இந்தியப் பெருங்கடல், உலக கடல் வர்த்தகத்தில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது என்பதுடன், சீனா அதன் எண்ணெய் இறக்குமதிக்கும் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தின் பெரும்பகுதிக்கும் இதை நம்பியுள்ளது, மேலும் இது உலகின் மிக கொந்தளிப்பான ஒளிரும் புள்ளிகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. தொற்றுநோயால் தூண்டப்பட்ட பூகோளரீதியான பொருளாதார நெருக்கடியால் பெரிதும் அதிகரிக்கப்பட்டுள்ள பெரும் சக்தி போட்டிகள், பிராந்தியத்தின் உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்தை முன்வைக்கின்றன.

இந்தியா, சீனா, பிராந்தியமெங்கிலும் மற்றும் சர்வதே அளவிலும் உள்ள உழைக்கும் மக்கள், இந்திய-பசிபிக் பகுதியில் அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான போரில் தொடர்புபட்ட எந்தவொரு சக்தியிடமும் முறையிடுவதன் மூலம் போரின் பெருகிவரும் ஆபத்தை தடுக்க முடியாது. இது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவர்களது இந்திய முதலாளித்துவ சிற்றரசர்களின் ஆக்கிரமிப்புக்கான இலக்காக இருக்கின்றபோதிலும், சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் பில்லியனர்களின் தன்னலக்குழுவின் பரந்த செல்வத்திற்கான பாதுகாவலராக திகழும் பெய்ஜிங்கின் ஸ்ராலினிச ஆட்சி அதற்கான முற்போக்கான பதில் எதையும் கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு சீனா தமது பகிரப்பட்ட எல்லையில் பிற்போக்குத்தனமான தேசியவாத முறையீடுகளுடன் பதிலளித்துள்ளது, மேலும் புது தில்லியுடன் ஒரு இராணுவ மோதல் வெடித்தால், சீனாவின் உயர்ந்த வகை ஆயுதப் படைகளைக் கொண்டு இந்திய இராணுவத்தை அழிக்க உறுதிபூண்டுள்ளது.

பேரழிவை விளைவிக்கும் இராணுவ மோதலை நோக்கிய ஏகாதிபத்திய மற்றும் பெரும் வல்லரசுகளின் வெறித்தனமான உந்துதலை தடுத்து நிறுத்த, பூகோளரீதியான தொழிலாள வர்க்கத் தலைமையிலான, ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த இயக்கம், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதன் மூலமான முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே போராட முடியும் என்ற விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

மேலதிகவாசிப்புக்களுக்கு:

இந்தியா-சீனா எல்லை மோதலும் உலக புவிசார் அரசியலின் தீப்பற்றக்கூடிய நிலையும்

[18 June 2020]

இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்

[17 June 2020]