வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தின் மீது தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிக்கிறது

16 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வரும் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்கி வருகையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக பேரழிவு தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அங்கே தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன.

திங்கட்கிழமை, நிர்வாகத்துறை தொழிலாளர்கள், பராமரிப்பு மற்றும் ஏனைய சேவை தொழிலாளர்கள் என அண்மித்து 4,000 பேர் இலினோய் பல்கலைக்கழக வளாகங்களில் இருந்தும், சிகாகோ, பியோரியா மற்றும் சாம்பியன் நகர்புறங்களின் மருத்துவ மையங்களில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர். இலினோய் பல்கலைக்கழக தொழிலாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக ஒரு புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பணியாளர்களுக்கும், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கும் போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் மற்றும் வேலை பளுவைக் குறைக்கவும் போதுமான பணியாளர்களைப் பணியமர்த்துமாறு கோருவதற்காக ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க அங்கீகரித்து சர்வதேச சேவைத்துறை பணியாளர்கள் சங்கத்தில் (SEIU) ஒருமனதாக வாக்களித்தனர். ஒரு மணி நேரத்திற்கு 15 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் உணவுதுறை, கட்டிடத்துறை மற்றும் ஏனைய சேவை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை கூலியை அதிகரிக்குமாறும் இந்த தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.

சனிக்கிழமை சிகாகோவின் இலினோய் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து வெளிநடப்பு செய்த 800 செவிலியர்களும் இந்த சேவைத்துறை தொழிலாளர்களுடன் இணைந்தனர். நாட்டின் மிகப்பெரிய நகர்புற மருத்துவ மையங்களில் ஒன்றான அந்த மருத்துவமனை செவிலியர்கள் கடுமையான பணியாளர் பற்றாக்குறைக்கு எதிராக போராடி வருகின்றனர். பணியாளர் பற்றாக்குறையானது இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களின் பணியை இன்னும் அதிகளவில் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதாக ஆக்கியுள்ளது. இலினோயின் கூக் உள்ளாட்சியில் அமைந்துள்ள மருத்துவமனையில் குறைந்தபட்சம் இரண்டு செவிலியர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர், அங்கே 5,100 க்கும் அதிகமானவர்கள் அந்த உயிராபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலினோயில் இந்த வெளிநடப்புகள், அன் ஆர்பரின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வாரமாக அண்மித்து 2,000 பட்டதாரி விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் நடக்கின்றன. பட்டதாரி மாணவர்களுக்கான அந்த தொழிலாளர்கள், கடந்த மாதயிறுதியில் 45,000 மாணவர்கள் வகுப்புகளைத் தொடங்கிய அந்த வளாகத்தில் தொலைதூர கல்வியை மட்டுமே தொடர கோரி வருகின்றனர்.

செப்டம்பர் 11, 2020 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களின் மறியல் (படம்: WSWS)

கடந்த வாரம் பட்டதாரி பணியாளர்கள் அமைப்பின் (GEO) உறுப்பினர்கள், அவர்களின் கோரிக்கையை நிராகரித்து பல்கலைக்கழகம் வழங்கிய பரிந்துரையை நிராகரித்ததுடன், வாரயிறுதி வாக்கில் அந்த வேலைநிறுத்தக்காரர்கள் அவர்களின் வேலைநிறுத்தத்தை நீடிக்கவும் வாக்களித்தனர். அவர்கள் கட்டுமானத்துறை தொழிலாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உணவுவிடுதி தொழிலாளர்களின் ஆதரவையும் வென்றனர், அத்துடன் அத்துடன் பொறுப்பற்ற முறையில் தங்குமிடங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழக உறுப்பினர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.

இவ்விரு விடயங்களிலுமே, தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளனர். இலினோயில், அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள பில்லியனர் ஆளுநர் ஜே. பி. பிரிட்ஜ்கர் சிகாகோவில் UI மருத்துவமனையின் வேலைநிறுத்தத்தை முறிக்கும் முயற்சிகளை ஆதரித்து வருகிறார். மிச்சிகனில், ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான வாரியம் (Board of Regents) அந்த வேலைநிறுத்தத்தை முறியடிக்க தடை உத்தரவைக் கோருகிறது.

Axios நடத்திய கணக்கெடுப்பின்படி வளாகங்களில் நோய்தொற்று எண்ணிக்கை 50,000 க்கு அதிகமாக சென்று கொண்டிருக்கையில், நாடெங்கிலும் உயிராபத்தாக கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் லோவா பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த புதன்கிழமை கூட்டாக ஒரு வேலைநிறுத்தம் தொடங்க ஏற்பாடு செய்து வருகின்றனர், அதேவேளையில் சான் டியோகோ மாநில பல்கலைக்கழகம் (SDSU), சான் டியோகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம், கோர்னெல் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளிகளை மீண்டும் திறந்ததால் ஏற்கனவே மிசோரி, தெற்கு கரோலினா, லோவா, மிசிசிபி மற்றும் ஆக்லஹாமாவில் கடந்த மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர், தெற்கு கரோலினாவின் கொலம்பியாவில் 28 வயதான சிறப்புக் கல்வி ஆசிரியர் Demetria “Demi” Bannister உம் இதில் உள்ளடங்குவார்.

நியூ யோர்க் நகரில், புரூக்ளினின் அரசு பள்ளி 139 இன் ஆசிரியர்கள் திங்கட்கிழமை காலை கட்டிடத்திற்குள் நுழைய மறுத்தத நிலையில், அமெரிக்காவில் அந்த மிகப் பெரிய பள்ளிக்கல்வி மாவட்டத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, மன்ஹாட்டனில் முர்ரே பெர்ங்ட்ராம் உயர்நிலை பள்ளியில் கல்வியாளர்கள் வெளிநடப்பு செய்தனர். ஐக்கிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு (UFT) மற்றும் ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர் பில் டு பிளாசியோவுக்கு இடையே பள்ளியை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை மீதான அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தி, அரசு பள்ளி 139 இன் ஆசிரியர்கள் அவர்களின் 100 ஆண்டு கால கட்டிடத்தைச் சுத்தப்படுத்த போதுமான சுத்திகரிப்பு சாதனங்களோ காற்றோட்டமோ இல்லை என்றும், போதுமான வெப்பநிலைமானி வினியோகிக்கப்படவில்லை என்றும் குறை கூறியதுடன், அம்மாநிலத்தின் 1.1 மில்லியன் மாணவர்களும் தொலைதூரத்தில் இருந்து மட்டுமே கல்வி கற்பதைக் கோரினர்.

தொழில்துறை தொழிலாளர்கள் மத்தியிலும் எதிர்ப்பு பரவி வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு, இண்டியானா ஹம்மாண்ட்டில் லீர் பெருநிறுவனத்தின் வாகன ஆசனங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள், அவர்களின் ஆலையில் கோவிட் 19 நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அறிந்ததும் உற்பத்தியை நிறுத்தி, பல மணி நேரம் வேலைக்குச் செல்ல மறுத்தனர். அந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அதன் அருகிலுள்ள சிகாகோ உற்பத்தி ஆலையின் வேலைகளையும் நிறுத்த நிர்பந்தித்த அந்த வேலை முடக்கமானது, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தை (UAW) மீறி நடத்தப்பட்டது, அதன் நிர்வாகிகள் நிர்வாகத்தைப் பாதுகாத்தனர்.

வாகனத்துறை தொழிலாளர்கள் டெட்ராய்ட், டொலிடொ மற்றும் சிகாகோவின் பியன் கிறைஸ்லர் மற்றும் ஃபோர்ட் ஆலைகளிலும், அத்துடன் இண்டியானாவின் ஃபாரிசியா உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலையிலும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அவர்களின் சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களை அமைத்துள்ளனர். நியூ யோர்க் நகரம், டெட்ராய்ட், ஃபுளோரிடா மற்றும் டெக்சாஸில் ஆசிரியர்களும் இதே போல குழுக்களை உருவாக்கி உள்ளனர்.

பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை செயல்படுத்தவும் மற்றும் ஏப்ரல் மாதயிறுதியில் போராடி வந்த தொழிலாளர்களை நோய்தொற்று ஏற்பட்ட ஆலைகளுக்கு திரும்புமாறு நிர்பந்திக்கவும் ட்ரம்ப் உத்தரவுகள் பிறப்பித்த மாமிசம் பதப்படுத்தும் தொழில்துறை, கோவிட் 19 பரவலுக்கும் தொழிலாளர் எதிர்ப்புக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக நிற்கிறது.

குறைந்தபட்சம் 18,000 தொழிலாளர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு, குறைந்தபட்சம் 203 பேர் உயிரிழந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்துறை (OSHO) இந்த தொழில்துறைக்கு எதிராக கடந்த வாரம் அதன் முதல் இரண்டு எடுத்துக்காட்டுக்களை வெளியிட்டது. அந்த அமைப்பு கொலாராடோ கிரீலே ஆலையில் நடந்த விதிமீறல்களுக்காக 52 பில்லியன் டாலர் பன்னாட்டு நிறுவனம் JBS க்கு 15,615 டாலர் அபராதமும், வடக்கு டகோடாவின் சியோக்ஸ் ஃபால்ஸ் ஆலையின் விதிமீறல்களுக்காக Smithfield Foods நிறுவனத்திற்கு 13,494 டாலர் அபராதமும் விதித்தது. இது, அவ்விரு ஆலைகளிலும் தங்கள் உயிரையிழந்த 12 தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2,425 டாலர் தொகையாகும், அங்கே மேலும் 1,500 நபர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

கலிபோர்னியா மற்றும் ஒரேகனில், பாதுகாப்பான வேலையிட நிலைமைகள் கோரி பல வேலைநிறுத்தங்கள் செய்துள்ள புலம்பெயர்ந்த வேளாண்துறை தொழிலாளர்கள் இந்த தொற்றுநோய் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியின் காட்டுத்தீயிலிருந்து எழும் மூச்சுமுட்டும் நச்சு காற்றுக்கு மத்தியிலும் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் பாப் வூட்வார்ட்டின் கடந்த வார வெளியீடுகள் எடுத்துக்காட்டியவாறு, ஜனாதிபதி ட்ரம்புக்கு ஏறக்குறைய ஜனவரி 2020 இன் ஆரம்பத்திலேயே கொரொனா வைரஸின் முன்னொருபோதும் இல்லாத அபாயங்கள் குறித்து தெரிந்திருந்த நிலையில், அவர் வேண்டுமென்ற "பீதியை" தடுக்க அமெரிக்க மக்களிடம் பொய்யுரைத்திருந்தார். ஜனநாயகக் கட்சியினருக்கும் ஊடகங்களுக்கும் கூட தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களும் பங்குச் சந்தையின் விற்றுத்தள்ளலையும் மற்றும் தங்களின் உயிர்களைக் காப்பாற்ற தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சியையும் தடுக்கும் நோக்கில் அந்த முயற்சியில் கூட்டு சதிகாரர்களாக இருந்தனர்.

மிச்சிகன், ஓஹியோ, இண்டியானா மற்றும் விண்ட்சர், ஒண்டாரியோவில் பியட் கிறைஸ்லர் தொழிலாளர்களின் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலை மார்ச் இறுதியில் தொழில்துறைகளையும் பள்ளிகளையும் மூட நிர்பந்தித்ததுடன், மாநில அரசாங்கங்கள் பகுதியாக சமூக அடைப்புகளை உத்தரவிட நிர்பந்தித்த நிலையில், அவை உள்ளடங்கலாக தொழிலாள வர்க்க நடவடிக்கைகள் மட்டுந்தான் நோயைக் கட்டுபடுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன. இது உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்ட அலையின் பாகமாக இருந்தது.

இரண்டு முதலாளித்துவ கட்சிகளின் அண்மித்து ஒருமனதான ஆதரவுடன் CARES சட்டம் நிறைவேற்றப்பட்டு, வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஏனைய பிரதான பெருநிறுவனங்களுக்கு 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான பணம் கையளிக்கப்பட்ட உடனேயே, அவ்விரு கட்சிகளும் மலை போல் குவிந்துள்ள பெருநிறுவன மற்றும் அரசு கடன்களுக்குப் பணம் செலுத்துவதற்கு அவசியமான இலாபங்களை உருவாக்க உடனடியாக தொழிலாளர்களை மந்தை போல் ஆலைகளுக்கும் ஏனைய வேலையிடங்களுக்கும் திரும்ப அனுப்பும் பிரச்சாரத்தைத் தொடங்கின. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்வதற்கான அழுத்தத்தை அதிகரிக்க வாரத்திற்கு 600 டாலர் மத்திய அரசு வேலைவாய்ப்பின்மை உதவித்தொகையை ஜூலை மாத இறுதியில் காலாவதியாக விட்டனர்.

இந்த வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தில் தொழிற்சங்கங்கள் பங்காளிகளாக சேவையாற்றி உள்ளன. மார்ச் மாதம் டெட்ராய்ட் வாகன உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததும், UAW தொழிற்சங்கம் மே மாத மத்தியில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதை முடுக்கி விட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டது. மார்ச் மாதம் நியூ யோர்க் நகரில் நோய்தொற்றுக்கள் ஏற்பட்டதை மூடிமறைத்த ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் இப்போது நாடெங்கிலும் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒத்துழைத்து வருகிறது.

ஒரு மிகப்பெரிய பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆரம்ப இயக்கத்தால் பீதியுற்றுள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாசிசவாத வன்முறையை தூண்டிவிட்டு வருகிறார். முதலாளித்துவ எதிர்ப்புணர்வு அதிகரித்திருப்பதால் பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் கூட குறைவாக ஒன்றும் பீதியுற்றிருக்கவில்லை, அவர்கள் அனைத்திற்கும் மேலாக அமெரிக்க முதலாளித்துவத்தின் முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கம் தாங்கிக் கொள்ளுமாறு செய்யும் ஆளும் வர்க்கத்தின் அடிப்படை கொள்கையைத் தொழிலாள வர்க்க எதிர்ப்பு அச்சுறுத்துவதில் இருந்து தடுக்க அக்கறை கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் "உள்நாட்டு போர் தேர்தல்" என்ற அதன் அறிக்கையில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு எழுதியதைப் போல, “தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளினது போராட்டங்கள் சுயாதீனமான ஆலை பாதுகாப்புக் குழுக்கள், வேலையிடம் மற்றும் அண்டை பகுதிகளில் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட வேண்டும். பள்ளிக்கு மீண்டும் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்திற்கு எதிரான ஆசிரியர்களின் போராட்டம் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ஆலைகளில் நிலவும் கொடூர நிலைமைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம், சமூக சீரழிவுக்கு எதிராக வேலைவாய்ப்பற்றோரின் போராட்டம், பொலிஸ் வன்முறைக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் என இவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.

"ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது? முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான் இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும். பணக்காரர்களுக்குப் பிணையெடுப்பு வழங்கவும் இராணுவவாதம் மற்றும் போருக்கு நிதி வழங்கவும் ஒதுக்கப்பட்ட பாரியளவிலான சமூக ஆதாரவளங்களைத் திருப்பி விடுவது அவசியமாகும். செல்வந்த தட்டுக்களின் செல்வ வளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்க மிகப் பிரமாண்டமான பெருநிறுவனங்களும் வங்கிகளும் பொதுத்துறை அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும்.”

சோசலிச சமத்துவக் கட்சியை இந்த போராட்டத்தின் புரட்சிகர தலைமையாக கட்டமைப்பதே முன்னிருக்கும் பிரதான பணியாகும். இந்த போராட்டத்தில் இணைய எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறோம்.

Jerry White