COVID-19 தொற்றுநோய் குறித்து இந்திய தொழிலாளர்கள் மோடி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்

By Sasi Kumar and V. Gnana
16 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொற்றுநோயின் தீவிரத்தை பொறுத்தவரையில் 4.8 மில்லியன் கோவிட்-19 தொற்றுகளுடன் அமெரிக்காவிற்கு மட்டும் அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், அரசியல் ஸ்தாபகம் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கம் சீற்றம் எடுத்து வரும் தொற்றுநோய்க்கு மத்தியில் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்பும்படி கட்டளையிடுவதற்கு தொழிற்சங்கங்கள் உடந்தையாக இருக்கின்றன.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 95,735 தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.6 மில்லியனுக்கும் அதிகமாகும். 75,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்தியா முழுவதும் 350,000 மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மருத்துவ சங்கம், COVID-19 காரணமாக கிட்டத்தட்ட 200 மருத்துவர்கள் இறந்துவிட்டதாக மதிப்பிடுகிறது. ஆயினும், மோடி அரசாங்கம் ஊரடங்கு விதிகளை சீராக தளர்த்திக் கொண்டிருக்கிறது, மேலும் மெட்ரோ, இரயில்கள் மற்றும் சாலை பஸ் போக்குவரத்துகள் மீண்டும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இயக்கப்படுகின்றன. இதன் விளைவாக, தொற்றுநோய் பரவி, பொது மருத்துவமனைகள் அதிகமாக நிரம்பி வழிகின்றன.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை பேட்டி கண்டனர், அங்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) தலைமையிலான மாநில அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு வருகிறது. மாநிலத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் தொற்றுகள் மற்றும் COVID-19 பாதிப்பினால் 8,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

நோயிலிருந்து பாதுகாக்கும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் அற்ற நிலையில் மக்களை நடமாட அரசாங்கம் அனுமதித்திருப்பது என்பது “மக்கள் கொரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்துவதாக இருக்கிறது.

50 வயதான சிவகுமார் WSWS இடம் கூறினார்: “நான் ரயில்வே காரேஜில் (railway carriage) ஒரு நிரந்தர தொழிலாளியாக வேலை செய்கிறேன். கொரோனாவிலும் வேலைக்கு போகிறேன். எனது பணியிடத்தில் இந்தி பேசும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர், நிர்வாகம் அவர்களுக்கு முக கவசம் கூட வழங்கவில்லை ஆனால் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது.

இந்திய ஆட்சியின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையையும், நிறுவனங்களை மேலும் வளப்படுத்துவதற்கான அதன் உந்துதலையும் சிவகுமார் கண்டித்தார்: “மோடி ஏற்கனவே பெருநிறுவன கடன்களில் 600 பில்லியன் ரூபாயை [8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை] தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் இது COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வகையிலும் உதவவில்லை. 55 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக இரண்டு மாதங்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது எல்லோரும் வேலைக்கு வரவேண்டும் என்று கூறப்படுகிறது.”

மோடியின் கொள்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் உடந்தையாக செயல்படுவதையும், தெற்கு ரயில்வே மஜ்தூர் யூனியனின் (SRMU) ஊழல் நிறைந்த பங்கையும் சிவகுமார் விமர்சித்தார். அவர் கூறினார்; “SRMU தான் இங்கே முக்கிய தொழிற்சங்கம். அதன் பொதுச் செயலாளர் கண்ணையா. தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், வேலைநிறுத்தங்கள் நடக்கும், இரயில்கள் ஓடாது என்று அவர் அவ்வப்போது வாய்வீச்சு அச்சுறுத்தல்களைச் செய்வார். ஆனால் வேலைநிறுத்தங்கள் நடக்காது, ஏனென்றால் அவர் பெரும் சொத்துக்களை குவித்துள்ளார். அதனால்தான் அவர் பயப்படுகிறார்."

கோவிட்-19 தொற்று நோய் குறித்து கொலைகாரத்தனமான உத்தியோகபூர்வ கையாளுதலுக்கு எதிரான தொழிலாளர்களின் வேலைநிறுத்த முயற்சிகளை SRMU தடுப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர் கூறினார்; “தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை விரும்புகிறார்கள். ஆனால் தொழிற்சங்கம் நோட்டீஸ் கொடுத்து பின்னர் அதை திரும்ப பெற்றது. தொழிற்சங்கத்தின் பொது அறிக்கைகளில், தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தெற்கில் இரயில் சக்கரங்கள் சுழலாது என்று அச்சுறுத்துகிறது. ஆனால் இதுபோன்ற பேச்சு தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த மட்டுமே.”

ஏப்ரல்-மே ஊரடங்கின் போது 1.89 மில்லியன் நிரந்தர தொழிலாளர்கள் உட்பட சுமார் 12 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மீதமுள்ள 10 மில்லியன் பேர் "முறைசாரா துறையை" சேர்ந்தவர்கள். பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மோடி அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது, ஊரடங்கின் போது மக்கள் சிறிய இடங்களுக்குள் வாழ்ந்து "சோர்வாக" "களைப்பாக" இருப்பதாகவும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புகிறார்கள் என்றும் இழிந்த முறையில் கூறுகிறது. ஆகவே, பொதுமுடக்கத்தை ஏதோ மக்கள் விருப்பத்தின் நியாயமான வெளிப்பாடுகளின் பேரில் நீக்குவதாக பிரச்சாரங்களை மோடி அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இந்தியாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்டின் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், வங்கிகளின் நலனுக்காக AIADMK, மீண்டும் பணிக்கு திரும்பும்படி கோரும் ஒரு கொலைகாரத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது.

AIADMK அரசாங்கமும், பொதுமுடக்கத்தை தளர்த்தியதோடு, தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத பாடசாலைகள், பேருந்து, இரயில், டாக்சி, ஆட்டோ, பலபத்தாயிரக்கணக்கானோர் கூடும் சந்தைகள், கோவில்கள், உல்லாச விடுதிகள் போன்றவற்றை திறந்துவிட்டுள்ளது. சென்னையில் இருந்து சுமார் 400 பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 பாதிப்புகள் ஏழைகளுக்கு அல்ல, பணக்காரர்களுக்கு மட்டுமே என்று தமிழக மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிடுமூஞ்சித்தனமாக கடந்த ஏப்ரல் மாதம் கூறுகையில், அவர்: “கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் எங்கே? பணக்காரர்களுக்கு மட்டுமே தொற்று ஏற்படுகிறது.” “ஏழைகளைப் பார்த்தால், சுதந்திரமாகப் பேசலாம், ஆனால் பணக்காரர்களைப் பார்க்க பயமாக இருக்கிறது” என்று கூறினார். இது ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் சேவகர்கள் வேறொரு அரசியல் உலகில் வாழ்கின்றனர் என்பதை தான் எடுத்துக்காட்டுகிறது.

35 வயதான சரவணன் பாதுகாப்பு காவலராக பணியாற்றுகிறார். அவர் WSWS இடம் கூறினார்: “அவர்கள் எனக்கு ஒரு மாதத்திற்கு 7,000 ரூபாய் மட்டுமே பாதுகாப்பு பணிக்காக தருகிறார்கள். சென்னையில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பினால், உங்களுக்கு 10,000 ரூபாய் தேவை. என்னைப் போன்று மூன்று பேர் வாடகை வீடு எடுக்காமலேயே தினசரி வேலைத் தளங்களில் பணிபுரிந்துகொண்டு இரவு நேரங்களில் பூங்காக்களில் சற்று ஓய்வெடுத்து பணிபுரிகிறோம். … பாதுகாப்பாக இருக்க எங்களுக்கு முகமூடி மற்றும் சுத்திகரிப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை. சில குடியிருப்புகள் கழிப்பறை வசதிகள் கூட இல்லை. அதுபோன்ற வீடுகளில் உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க முடியாது.”

ஒரு சிறிய நகரத்திலிருந்து வரும் சரவணன், இந்திய கிராமங்கள் மற்றும் நகரங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளைப் பற்றி பேசினார்: “என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். அங்கு வேலைகள் கிடைப்பது கடினம். தொற்றுநோய்களின் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடப்பாடி கையாண்ட விதம் குறித்து நாங்கள் கோபப்படுகிறோம். நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததில் பெருமை அடைவதாக எடப்பாடி கூறுகிறார். ஆனால் கிராமங்களில் நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது. ”

50 வயதான விசாலம் வீட்டு வேலை செய்பவர். அவர் WSWS இடம் கூறினார், “இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூட நாங்கள் வேலைக்குச் சென்றோம். எனக்கு வீடுகளில் யாருமே முக கவசம் தரவில்லை. நான் நான்கு வீடுகளில் வேலைக்குச் செல்லும்போது எனக்கு தொற்று வந்திடுமோ என்று பயப்படுகிறேன்.”

அடிப்படையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் இல்லாத நிலையை அவர் எதிர்கொள்வதை விசாலம் வலியுறுத்தினார்: “நாங்கள் நான்கு பேர் ஒட்டேரியின் சேரிப்பகுதியில் ஒரு சிறிய அறையில் வசிக்கிறோம். தண்ணீர் வசதி கூட இல்லாததால் சுத்தமாக கையை வைத்துக்கொள்ள கூட முடியாத நிலையில் உள்ளோம். எங்களுடைய வீடுகளுக்கு கார்ப்பரேசன் அதிகாரிகள் எல்லாம் வந்தாலும் எங்களுடைய வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள தேவையான சுத்திகரிப்பு மருந்துகள், முகக்கவசங்கள் எதுவும் வழங்கவில்லை. அரசியல்வாதிகள் ஓட்டு வாங்கும்பொழுதுதான் வருகிறார்கள்”.

உண்மையில், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தொற்றுநோய்க்கு உத்தியோகபூர்வ பதிலிறுப்பு தொழிலாளர்களுக்கு எதிரான சதித்திட்டத்திற்கு சமமாக உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் பாப் வூட்வார்ட்டின் அண்மைய வெளிப்படுத்தல், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தொற்றுநோய் குறித்து வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்தியது தெரியவந்துள்ளது. இது, அமெரிக்காவில் 200,000 மனிதர்களின் மரணங்களுக்கு ட்ரம்ப் உடந்தையாக உள்ளார் என்பதை காட்டுகிறது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடமிருந்தும், அமெரிக்க உளவுத்துறை தகவல் வழிமுறைகளில் இருந்தும் கடுமையான எச்சரிக்கைகள் வந்த போதிலும், "அதைக் குறைத்து காட்ட" போவதாக அவர் பிப்ரவரி 7 ம் தேதி வூட்வார்ட்டிடம் கூறினார்.

பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியாவிற்கு விஜயம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுபற்றி மோடியுடனோ மற்றும் மீடியா, நிதிய உயர்தட்டுக்களுடனோ பேசியிருக்கமாட்டார் என நம்புவது அரசியல் அப்பாவித்தனமாக மட்டுமே இருக்கமுடியும்.

இருப்பினும், ட்ரம்ப், மோடி மற்றும் இந்திய அதிகாரிகளின் பரந்த அடுக்குகள் அன்றிலிருந்து இடைவிடாமல் வைரஸின் தாக்கத்தை குறைத்துக் காட்டவும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளவும், தொற்றுநோயின் கொடிய தன்மையைக் குறைத்து மதிப்பிடவும் முயன்று வருகின்றன.

45 வயதான கஜேந்திரன் ஒரு நாள் கூலி தொழிலாளி. அரசியல் ஸ்தாபகத்தின் மீது தொழிலாளர்களின் ஆழ்ந்த ஏமாற்றத்தை அவர் குறிப்பட்டார்: “மே மாதத்திலிருந்து இன்றுவரை நான் பட்ட கஸ்டங்கள் சொல்லமுடியாது. சாப்பாடு, தொண்டு நிறுவனங்களும், மற்றவர்களும் கொடுக்கும் உணவு பொட்டலத்தை வாங்கி சாப்பிடுகிறேன்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற கட்சிகளையும் எனக்குத் தெரியும். யார் வந்தாலும் எனக்கு வீடு இல்லை; நிரந்தர வேலை இல்லை; ரேசன்காட் கூட இல்லை. பெயின்ட் வேலை, சுமைதூக்கும் வேலை செய்து வருகிறேன். நான் கட்சிகளைப் பற்றி திட்டினால் திமுக, அதிமுக, போன்ற கட்சிகாரங்கள் என்னை அடிக்க வருகிறார்கள் அதனால் நான் எதையும் வெளியே சொல்லாமல் மனதில் வைத்து தவிக்கிறேன்”.

அரசியல் மாற்றத்திற்கான தொழிலாளர்களின் விருப்பத்தைப் பற்றி பேசிய கஜேந்திரன், “இப்பொழுது சோசலிசம் என்று யாரும் சொல்வதில்லை. நீங்கள் கூறும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளிடமே பிளவுகள் வந்துள்ளது. அவர்களும் சோசலிசத்தை பற்றி பேசவில்லை. அவர்கள் ஒருமுறை திமுக அடுத்தமுறை அதிமுக கட்சிகளுடன் சேர்ந்துகொள்கிறார்கள்”.

WSWS செய்தியாளர்களிடம் தனது முக கவசத்தை காட்டிய அவர், “நல்ல முகக்கவசம் கூட இல்லை, பார்த்தீர்களா? அதுவே அழுக்காய் உள்ளது. நீங்கள் கூறும் தொழிலாளர்கள் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். என் மனக்கவலையை உங்களிடம் கூறிவிட்டேன். கொரோனா ஒழிக்கப்படாத நிலையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.”

மேலதிக வாசிப்புக்கு

கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் இந்தியா இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது, ஆனாலும் "மீண்டும் திறத்தலை" தொடர்கிறது

[10 September 2020]