அக்டோபர் 2, 2020 இல் உலக சோசலிச வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு குறித்த அறிவிப்பு

David North
19 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை அக்டோபர் 2, 2020 இல் உலக சோசலிச வலைத் தளம் முற்றிலும் ஒரு புதிய வடிவமைப்புடன், பரந்தளவில் விரிவாக்கப்பட்ட செயல்பாடுகளுடன் புதிதாக தொடங்கப்பட உள்ளது. WSWS இல் பிரசுரிக்கப்பட்டு வரும் 20 க்கும் அதிகமான மொழிகளில் இந்த மாற்றம் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.

டேவிட் நேர்த், உலக சோசலிச வலைத் தள புதிய வடிவமைப்பு பற்றி அறிவிக்கிறார்

ஓராண்டுக்கும் மேலாக WSWS இன் எல்லா அம்சங்கள் மீதும் நடத்தப்பட்ட ஓர் ஆழ்ந்த மீளாய்வின் விளைவாக இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நீண்ட நிகழ்ச்சிப்போக்கு நெடுகிலும், சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு தத்துவார்த்த கல்வி, அரசியல் பகுப்பாய்வு, கலாச்சார அறிவொளி வழங்கி தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக ஒழுங்கமைப்பதன் மைய புள்ளியாக உலக சோசலிச வலைத் தளத்தை அபிவிருத்தி செய்வதே எங்களின் முக்கிய அக்கறையாக இருந்துள்ளது.

முதலாவதாக, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடி வெடிப்பார்ந்த விதத்தில் அபிவிருத்தி அடைந்திருப்பதும்; இரண்டாவதாக, சர்வதேச வர்க்க போராட்டம் தீவிரமடைந்திருப்பதும் என இரண்டு பலமான ஒன்றோடொன்று இணைந்த புறநிலைக் காரணிகளே WSWS ஐ புதிய வடிவத்திற்கு மாற்றுவதை உந்துகின்றன. இத்தகைய அடிப்படை நிகழ்ச்சிப்போக்குகளின் இடைத்தொடர்பையும், உலகளாவிய தொற்றுநோயால் அது தீவிரப்படுத்தப்பட்டிருப்பதையும், அளப்பரிய சவால்கள் மற்றும் பொறுப்புகளுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அங்கமான உலக சோசலிச வலைத் தளம் எதிர்கொண்டுள்ளது.

உலகளாவிய நெருக்கடியின் மிகவும் நேரடியான தாக்கமும் வர்க்க போராட்டத்தின் தீவிரப்பாடும் WSWS வாசகர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்தாண்டு இதுவரையில் பக்கங்களைப் பார்வையிட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டுகிறது. அக்டோபர் 2 இல் புதிய வடிவமைப்பு வெளியிடப்படுவதற்குள், 2020 இன் முதல் ஒன்பது மாதங்களில் பக்கங்களை பார்வையிட்டவர்களது எண்ணிக்கை 2019 இன் மொத்த எண்ணிக்கையைக் கடந்து விடக்கூடும்.

WSWS ஐ பொதுவெளியில் கிடைக்கச் செய்வதைத் தடுக்கவும் தணிக்கைச் செய்யவும் அரசாங்கங்கள் மற்றும் சமூக ஊடக பெருநிறுவனங்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு மத்தியிலும், வாசகர் எண்ணிக்கையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையில், WSWS வாசகர் எண்ணிக்கையின் ஒவ்வொரு அதிகரிப்பும் —சான்றாக, ஆகஸ்டில் WSWS இல் ஒரு கட்டுரை பதிவிடப்பட்ட போது ஒரே நாளில் 100,000 க்கும் அதிகமான தடைவை பார்க்கப்பட்டிருந்த நிலையில்— பெருநிறுவன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டதற்கு ஏறக்குறைய உடனடியாக பின்தொடர்ந்து நடந்துள்ளது.

அதன் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கின்ற அதேவேளையில், உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்க போராட்டங்களில் அதிகரித்தளவில் ஒரு மத்திய பாத்திரம் வகித்து வருகிறது. இந்த அபிவிருத்திக்கு இன்னும் பரந்தளவில் செய்தி சேகரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது என்பது மட்டுமல்ல. தன்னியல்பாக வெடிக்கும் சமூக எதிர்ப்பை வர்க்க நனவுடன் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான ஒருங்கிணைந்த புரட்சிகர போராட்டமாக மாற்ற அவசியப்படும் மார்க்சிச தத்துவார்த்த வழிகாட்டுதல் மற்றும் அரசியல் முன்னோக்கு கொண்டு அதிகரித்து வரும் பாரிய இயக்கத்திற்கு WSWS உதவ வேண்டியுள்ளது.

தொழிலாளர்கள் உலகின் எந்தப் பாகத்தில் வசித்தாலும், அவர்கள் போராட்டங்கள் எந்த சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளுக்குள் கட்டவிழ்ந்து வருகின்றனவோ அவற்றைக் குறித்த விரிவான அறிவு அவர்களுக்கு அவசியப்படுகிறது. அவர்கள் தங்களின் சொந்த நாட்டு எல்லைகளுக்கு வெளியே தொழிலாள வர்க்க இயக்கத்தைப் பின்தொடர்ந்து தொடர்புகளை உருவாக்க கூடியதாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்க போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்று அனுபவங்களில் இருந்து கிடைக்கும் மூலோபாய படிப்பினைகளை அவர்கள் பெறக்கூடியவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர மேலெழுச்சியின் ஒரு புதிய காலகட்டத்தில் இத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உலக சோசலிச வலைத் தளத்தின் புதிய வடிவமைப்பின் அறிமுகம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

புதிய உலக சோசலிச வலைத் தளத்தின் மிக முக்கிய அம்சங்களாவன:

• தொழில்துறை முன்னணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரந்தளவில் மேம்படுத்தப்பட்ட ஒரு வடிவமைப்பு, அது தற்போதைய தளத்தை விட இன்னும் அதிக வேகமாக செயல்படக்கூடியதாக இருக்கும். WSWS வாசகர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கையடக்க தொலைபேசி மூலமாகவோ அல்லது tablet மூலமாகவோ அணுகுகிறார்கள் என்ற உண்மைக்கு விடையிறுத்து, இந்த புதிய வடிவமைப்பு எல்லா தளங்களிலும் சிறந்த முறையில் பார்வையிட உதவும்.

கையடக்க தொலைபேசி அல்லது tablet மூலமாக வலைத் தளத்தில் நுழையும் வாசகர்கள், WSWS இன் உள்ளடக்கத்தை முழுமையாக உரிய வடிவத்தில் அணுக முடியும்.

• வாசகர்களால் சமீபத்திய கட்டுரைகளை மிகவும் வேகமாக அடையாளம் காண முடியும் என்பதுடன், புதிய வடிவமைப்பு தொடங்கப்படும் தேதியிலிருந்து WSWS இன் மாற்றங்களில் நாள் முழுவதும் பதிவுகள் வெளியிடப்படும் என்பதால் இது முக்கியமாக உதவிகரமாக இருக்கும். மிகவும் நவீன வசதியுடன் தலைப்புகளின் வகைப்பாடு இருக்கும் என்பதால் அன்றாட புதிய கட்டுரைகள் இருக்கும் இடத்தையும், தளத்தைப் பல்வேறு விதத்தில் பார்வையிடுவதையும் இது பெரிதும் மேம்படுத்தும்.

• பெப்ரவரி 1998 இல் உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, அது 125,000 க்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்ட ஆவணத் தொகுப்பை அபிவிருத்தி செய்துள்ளது. இந்த அசாதாரண தொகுப்பில் ஒட்டுமொத்த இருபத்தோராம் நூற்றாண்டின் பிரதான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளின் வரலாற்று விபரங்கள் மட்டுமல்ல.

அது, 1923 இல் சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பரந்த ஆவணத் தொகுப்புகளையும் உள்ளடக்கி உள்ளது. இந்த முக்கிய வரலாற்று ஆவணக் களஞ்சியம் எளிதாக அணுகும் விதத்தில் “தேர்ந்தெடுத்து ஒழுங்கமைக்கப்பட்ட பகுதிகளாக” சீரமைக்கப்பட்டுள்ளது.

WSWS இன் புதிய வடிவமைப்பு கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒரு செயல்விரைவான இடைதொடர்பை ஊக்குவித்து உதவும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமகாலத்திய சம்பவங்களில் இருந்து வரலாற்று நிகழ்வுகள் வரையில் வாசகர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த வலைத் தளத்தில் உலாவ முடியும். (சமூக சமத்துவமின்மையின் கொடிய அதிகரிப்பு, ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பு, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், எதேச்சதிகாரம் மற்றும் பாசிசவாதத்தின் அச்சுறுத்தல், காலநிலை மாற்றத்தின் தாக்கம், இன்னும் பல முக்கிய பிரச்சினைகள் என) இதே வடிவ அணுகுமுறை பிரதான மற்றும் தீர்க்கமான சமகால தலைப்புகளை விளங்கப்படுத்தவும் கையாளப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் புதிய செய்திகளினது விரிவு, அதன் தத்துவார்த்த மற்றும் வரலாற்று அடித்தளங்களின் ஆழம் என அதன் இரண்டு இன்றியமையா அம்சங்களை இந்த புதிய வடிவமைப்பு உள்ளடக்கி உள்ளது.

• அனைத்துலகக் குழுவினதும் மற்றும் அதன் பகுதிகளினதும் வேலைத்திட்டங்கள் மற்றும் பிரதான அறிக்கைகளை அணுக WSWS இல் வசதி செய்யப்பட்டிருக்கும். 1917 அக்டோபர் புரட்சியின் நிஜமான புரட்சிகர மரபியம், வரலாற்று உண்மையின் பாதுகாப்பு ஆகியவற்றைத் தாங்கி பிடித்து, அதேவேளையில் நவ-ஸ்ராலினிசத்தின் பல்வேறு வகையறாக்கள், பிற்போக்குத்தனமான தேசியவாதம், சீர்திருத்தவாதம், சந்தர்ப்பவாதம் மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடதுவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இடைவிடாது போராடி வரும் மார்க்சிசத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச இயக்கத்தை எதிர்நோக்கும் அனைவரும் நான்காம் அகிலத்தின் வேலைகளைப் பின்தொடரவும் அதன் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தை ஆய்வு செய்யவும் முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களது இடைவிடாத முயற்சிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல ஆயிரக் கணக்கான வாசகர்களின் மனமார்ந்த ஆதரவை ஒப்புக் கொள்ளாமல் புதிய வடிவமைப்பு குறித்த இந்த அறிவிப்பு முழுமை பெறாது.

அக்டோபர் 2, 2020 இல் உலக சோசலிச வலைத் தளத்தின் புதிய வடிவமைப்பின் வெளியீடு முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டி ஒரு சர்வதேச சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் வரலாற்றுரீதியிலான ஒரு முன்னேற்றத்தை வழங்கும்.