ஐரோப்பாவில் COVID-19 இன் "அபாயகரமான" மீளெழுச்சி குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

By Alex Lantier
24 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமையன்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக், ஐரோப்பா COVID-19 இன் பேரழிவுகரமான மீளெழுச்சியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார்.

WHO இன் கூற்றுப்படி, ஐரோப்பாவானது 228,000 COVID-19 இறப்புகளையும் ஐந்து மில்லியன் பேர்கள் நோய்ப் பாதிப்பிற்கும் உள்ளானார்கள், பெரும்பாலும் மார்ச் மாதத்தில் இந்த அலை உச்சத்தைத் தொட்டது. இருப்பினும், விஞ்ஞானிகள் எச்சரித்தபடி, பொது முடக்க அடைப்பு நீக்கத்தை முன்கூட்டியே முடிவிற்கு கொண்டுவருவது வைரஸின் வெடிக்கும் மீளெழுச்சியை உருவாக்குகிறது. மாட்ரிட் மற்றும் தெற்கு பிரான்ஸ் முழுவதிலுமுள்ள மருத்துவமனைக் கூடங்கள் நிரப்பத் தொடங்கியும், இறப்பு விகிதங்கள் அதிகரித்த போதும், ஐரோப்பிய அரசாங்கங்கள் தொடர்ந்து சமூக இடைவெளிக் கொள்கையைத் தளர்த்துவதோடு, வைரஸைப் பரப்பும் பள்ளிக்கு மீண்டும் செல்லுதல் மற்றும் வேலைக்கு மீண்டும் செல்லுதல் கொள்கைகளையும் சுமத்துகின்றன.

கோபன்ஹேகனில் நடந்த WHO பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய க்ளூக் கூறினார்: “மார்ச் மாதத்தில் ஐரோப்பாவில் தொற்றுநோய் முதன்முதலில் உச்சம் அடைந்தபோது இருந்ததைவிட வாராந்திர நோயாளிகள் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளன. கடந்த வாரம், பிராந்தியத்தின் வாராந்திர எண்ணிக்கை 300,000 நோயாளிகளை தாண்டியது. ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த இரண்டு வாரங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அவற்றில், ஏழு நாடுகள் ஒரே காலகட்டத்தில் புதிதாகப் பதிவான தொற்றிற்குள்ளான நோயாளிகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.”

இந்த "பிராந்தியம் முழுவதும் பரவும் அபாயகரமான விகிதங்கள்" என்று க்ளூக் இதை அழைத்தார். நேற்றைய புள்ளிவிவரங்கள் ஒரு தெளிவான சித்திரத்தை அளித்தன: ஸ்பெயினில் 11,291 புதிய நோயாளிகள் மற்றும் 162 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; பிரான்ஸ், 10,593 நோயாளிகள் மற்றும் 50 இறப்புகள் —இவை இரண்டும் இந்த வசந்த காலத்தில் மிகப்பெரிய தினசரி தொற்றுநோயை விட அதிகமாக உள்ளன— பிரிட்டன், 3,395 நோயாளிகள் மற்றும் 21 இறப்புகள். செக் குடியரசு புதன்கிழமை 2,136 புதிய நோயாளிகளைக் கொண்டுள்ளது, இந்த எண்ணிக்கை முதல் முறையாக 2,000 ஐத் தாண்டியது. ஜேர்மனி (2,021), இத்தாலி (1,585), நெதர்லாந்து (1,753), ருமேனியா (1,679), பெல்ஜியம் (1,153) ஆகிய நாடுகளில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் சமூக இடைவெளியை பொறுப்பற்ற முறையில் நீக்குவது பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. "வசந்த காலத்திலும், கோடையின் முற்பகுதியிலும், கடுமையான பொது முடக்க அடைப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாங்கள் காண முடிந்தது. எங்கள் முயற்சிகள், எங்கள் தியாகங்கள் பலனளித்தன. ஜூன் மாதத்தில் நோயாளிகள் எண்ணிக்கை எல்லா நேரத்திலும் குறைந்த அளவை எட்டின. எவ்வாறாயினும், செப்டம்பர் நோயாளிகளின் அளவு நம் அனைவருக்கும் விழித்தெழும் அழைப்பாக இருக்க வேண்டும், "என்று க்ளூக் கூறினார்," நீங்கள் வைரஸிலிருந்து அழுத்தத்தை உயர்த்தினால், இயற்கையாகவே இந்த அதிகரிப்பை நீங்கள் காணப்போகிறீர்கள்."

COVID-19 இறப்புகள் பல வார கால தாமதத்துடன் நோயாளிகளின் அதிகரிப்பைத் தொடர்ந்து வருகின்றன, மேலும் ஸ்பெயினில் ஏற்கனவே இறப்புகள் அதிகரித்து வருவதால், ஐரோப்பா முழுவதும் இறப்பு மொத்தங்களின் வெடிப்பதற்கு முன்புள்ள ஒரு கால அளவு குறித்ததாக இது இருக்கிறது.

வைரஸ் பாதிப்புக்குள்ளான பின்னர் தொழிலாளர்கள் சுயமாக தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்ட நாட்களைக் குறைப்பதற்கான அழைப்புகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்தனர். பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறிகளைக் காட்ட 14 நாட்கள் வரை ஆகும், பிரெஞ்சு அதிகாரிகள் தனிமைப்படுத்தல்களை ஏழு நாட்களாகவும், பிரிட்டிஷ் அதிகாரிகள் 10 ஆகவும் மட்டுமே குறைத்துள்ளனர். ஸ்பெயின் தனிமைப்படுத்தலை ஏழு அல்லது 10 நாட்களாக குறைக்கலாம். தொற்று நோயாளிகள் சாதாரண நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதையும், இறுதியாக நோய்வாய்ப்படுவதற்கு முன்பு வைரஸ் பரவுவதையும் இது உறுதி செய்யும்.

"மிகப்பெரிய தனிநபர் மற்றும் சமூக தாக்கத்தை அறிந்துகொள்ள தனிமைப்படுத்தலின் கால நீளத்தில் சிறிதளவு குறைப்பு கூட ஏற்படுத்தமுடியும் ... பிராந்தியத்தின் நாடுகளை தங்கள் நிபுணர்களுடன் விஞ்ஞான ரீதியான செயல்முறைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறேன்," என்று க்ளூக் கூறினார்.

WHO இன் அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட், WHO பரிந்துரைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கால நீளத்தை மாற்றவில்லை என்று கூறினார், இது பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் முன்மொழிவுகளுக்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை என்பதைக் குறிக்கிறது: “எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பரிந்துரை 14 நாட்கள் அகவளர்ச்சிக் காலம் (incubation period) மற்றும் நோய் பரவுதல் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. விஞ்ஞானம் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில் மட்டுமே மாற்றத்தை நாங்கள் மறு ஆய்வு செய்ய முடியும்.”

COVID-19 இன் ஒரு பெரும் மீளெழுச்சியைத் தடுக்க "உடனடி மற்றும் உறுதியான" நடவடிக்கை தேவை என்று க்ளூக் கூறினார். "பாரபட்சம் மற்றும் தவறான தகவல்கள் மேலோங்கி இருக்கும் போதெல்லாம் இந்த வைரஸ் இரக்கமற்றது" என்று எச்சரித்தார், "பெரும் தொற்றுநோய் இங்கிருந்து எங்கு செல்கிறது என்பது நம் கையில் உள்ளது. நாங்கள் இதற்கு முன்னர் அதை எதிர்த்துப் போராடினோம், அதை மீண்டும் எதிர்த்துப் போராட முடியும்.”

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு பகுத்தறிவானதும், விஞ்ஞான அடிப்படையிலான கொள்கையை பின்பற்றுவதற்கான முக்கிய தடையாக இருப்பது ஐரோப்பாவின் அரசாங்கங்கள் மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் நனவான விரோதப் போக்காகும். கடந்த மாதம் மேலும் பொது முடக்க அடைப்புகளை நிராகரித்த பிரெஞ்சு ஜனாதிபதி மற்றும் முதலீட்டு வங்கியாளர் இமானுவேல் மக்ரோனின் நிலைப்பாடுகளை அனைவரும் எதிரொலிக்கின்றனர், "நாங்கள் முழு நாட்டையும் தடுக்க முடியாது" என்று Paris Match இடம் கூறினார்.

இத்தாலிய வாகன, எஃகு மற்றும் இயந்திர கருவி நிறுவனங்களில் ஆர்ப்பாட்ட வேலைநிறுத்தங்களின் ஒரு அலை ஐரோப்பா முழுவதும் பரவி ஏற்படுத்தியதால் இத்தாலியின் மருத்துவ அமைப்புமுறை பெப்ருவரி மற்றும் மார்ச் தொடக்கத்தில் COVID-19 தொற்று நோயின் தாக்கத்தின் கீழ் சரிந்த பின்னர் தான் இந்த வசந்த காலத்தில் பொது முடக்க அடைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த வசந்த காலத்தில் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அதிகாரிகளின் கவனம், பெரும் செல்வந்தர்களுக்கு ஒரு பெரிய செல்வத்தை பரிமாற்ற செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருந்தன. யூரோப் பகுதியானது வங்கிகளுக்கு 1.25 டிரில்லியன் யூரோக்களை “பண விநியோக முறை” (quantitative easing - QE) மூலம் கையளித்தது மற்றும் 500 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய யூனியன் (EU) பெருநிறுவன பிணையெடுப்பை ஏற்றுக்கொண்டது, லண்டன் 635 பில்லியன் பவுண்டுகளை “பண விநியோக முறை” (quantitative easing - QE) மூலம் கையளித்தது, குறைந்தபட்சம் 110 பில்லியன் பவுண்டுகளை பெருநிறுவன பிணையெடுப்புகளிலும் ஏற்றுக்கொண்டது. பின்னர், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தினர், இதனால் அவர்களின் பெற்றோர்கள் வங்கிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட பெரும் மூலதனத்தின் தொகையை மீண்டும் கொண்டுவர இலாபங்களை உற்பத்திசெய்வதற்காக வேலைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

இந்த பிணையெடுப்புக்கள் தொழிற்சங்கங்களின் உற்சாகமான ஆதரவைக் கொண்டுள்ளன. ஜேர்மனிய தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) மற்றும் பிரான்சின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பை வெளிப்படையாக ஒப்புதலளித்து பேர்லினுக்கும் பாரிசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்திய ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் குற்றகரமான பெரும் தொற்றுநோய் விடையிறுப்பில் உடந்தையாக உள்ளன, அவைகளை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீடு மட்டுமே பெரும் தொற்றுநோய் அதிகரிப்பைத் தடுக்கவும், புதுப்பிக்கப்பட்ட, பேரழிவு தரும் உயிர் இழப்பைகளை தவிர்க்கவும் தேவையான பொது முடக்க அடைப்புக் கொள்கைகளை விதிக்கவும் முடியும். ஆனால், தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் அவர்களின் அரசியல் கூட்டாளிகளிடமிருந்தும் சுயாதீனமாக அணிதிரட்டி ஒழுங்கமைக்க வேண்டும். அவைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைகளுக்கு உடந்தையாக உள்ளன.

தற்போது தொற்றுநோயின் ஐரோப்பிய மையமாக இருக்கும் ஸ்பெயினில், சுகாதார அதிகாரிகள் அவசரமாக பொது முடக்க அடைப்புகளை கோருகின்றனர். மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாட்ரிட்டில், டாக்டர் மிகுவல் சான்செஸ் ஏபிசியிடம், அவசர நோயாளர் அறைகள் மீண்டும் நிலைகுலையும் விளிம்பில் உள்ளன என்று கூறினார். COVID-19 சோதனைகளில் 24.4 சதவிகிதம் நேர் (positive) அறிகுகளாக மீண்டும் வருவதால், டாக்டர் சீசர் கார்பல்லோ டெலிமாட்ரிட் பத்திரிகையிடம் கூறினார்: "இது ஏற்கனவே தாமதமாகிவிட்டது ... சுற்றுப்புறங்களை பொது முடக்க அடைப்பு செய்வதற்கு இது போதாது, நாங்கள் மாட்ரிட் அனைத்தையும் பொது முடக்க அடைப்பிற்குள் வைக்க வேண்டும்."

அரசு ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் 56.8 சதவிகித ஸ்பானியர்கள் அரசின் பதிலிறுப்பை நம்பவில்லை, 58.3 சதவிகிதத்தினர் "அதிக கோரிக்கையாக" தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை விரும்புகிறார்கள்.

எவ்வாறாயினும், பிராந்திய அதிகாரிகள் மட்டும் இப்போது கொள்கையை வகுத்துள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாட்ரிட்டின் வலதுசாரி பிராந்திய பிரதமர் இஸபெல் ஆயுசோ மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் "தேர்ந்தெடுக்கப்பட்ட பொது முடக்க அடைப்புகளைக்" கூட மறுத்துவிட்டார். COVID-19 உடன் "நடைமுறையில் அனைத்து குழந்தைகளும், ஒரு வழி அல்லது வேறு வழியில் பாதிக்கப்படுவார்கள்" என்று தான் நம்புவதாகக் கூறிய ஆயுசோ, அதற்கு மாறாக "எங்கள் குடியேறியவர்களின் வாழ்க்கை முறைகளினால்" வைரஸ் பரவுவதாக குற்றம்சாட்டி, பாசிச உணர்வுகளுக்கு அழைப்புவிடுத்தார்.

பிரான்சில், மார்சைய் மற்றும் போர்தோ பிராந்தியங்களிலுள்ள மருத்துவமனைகள் கடுமையான COVID-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரோன் நேற்று WHO இன் எச்சரிக்கைகள் செய்தபோதிலும் பிரான்ஸ் தனது விஞ்ஞானமுறையற்ற ஏழு நாள் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கையை பேணும் என்று அறிவித்தார். பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் "முழுமையான பொது முடக்க அடைப்புக் கொள்கை" இருக்காது என்றும், பிரான்ஸ் "வைரஸுடன் வாழ வேண்டும்" என்றும் அவரது அரசாங்கம் விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த வசந்தகால பொது முடக்க அடைப்பு தொடங்கியவுடன் முக்கிய நகரங்களுக்கு இராணுவப் படைகளை முடுக்கிவிட்ட பிரெஞ்சு அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் கோபத்தால் பீதியடைந்து, வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி தயாரிப்பு செய்துவருகிறது. பாரிஸுக்கு அருகிலுள்ள செயிண்ட் டெனிஸிலுள்ள டெலாஃபோன்டைன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் மத்தியாஸ் வர்கன் கூறுகையில், “உள்துறை அமைச்சகம் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதை நான் கவனித்தேன். என்ன நடக்கிறது என்பதை சுகாதார அமைச்சகம் இனி கட்டுப்படுத்தாது, ஆனால் காவல்துறை தலைமை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள்.”

IFOP கருத்துக் கணிப்பாளர் Frédérc Dabi என்பவர் LeMonde இடம் கூறினார், "பொது கருத்து களைத்துப் போய் கவலைப்படுகிறது... இந்த வெடிக்கும் மற்றும் கணிக்க முடியாத சூழலில், அரசாங்கம் அழுத்தக் குக்கர் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறது."

பெரும் தொற்றுநோய்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னோக்கி செல்லும் வழி ஐரோப்பாவிற்கும் அதற்கு அப்பாலும் பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் சுயாதீன பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதாகும். இந்த குழுக்கள் பள்ளிக்கு மீண்டும் செல்லும் கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான அத்தியாவசியமற்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மேலும் ஏற்புடைய அல்லது போதுமான நிலைமைகளின் கீழ் வீட்டில் தங்குவதற்கான உரிமைக்காகவும் ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக பெரும் தொற்றுநோய்க்கு பேரழிவு தரும் விடையுறுத்தலுக்கு மூல காரணமான முதலாளித்துவ சமூக ஒழுங்கை ஒழிப்பதற்கும் மற்றும் சமூகத்தை சோசலிச மறுசீரமைப்பதற்கும் ஒரு அரசியல் போராட்டம் இதற்கு தேவைப்படுகிறது.