இந்தியா: சென்னை துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; இலங்கை வங்கி தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

25 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: தமிழ்நாடு மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சுமார் 50 செவிலியர்கள் புதன் அன்று நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்பவும் மற்றும் உணவு மற்றும் தங்குமிடங்களை மேம்படுத்தவும் கோரி பணிபுரியும் வளாகத்தில் இரண்டு மணிநேரங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அங்கே கோவிட்-19 சமயத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர் அதனால் அவர்களுக்கு அதிகமான பணிச்சுமையாக இருப்பதாக செவிலியர்கள் கூறினார்கள். தொற்று பரவும் நேரத்தில் செவிலியர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் ஆனால் உணவு மற்றும் தங்குமிடம் தரமற்றவைகளாக இருந்தன என்று வருத்தத்தைத் தெரிவித்தனர்.

ஹைதராபாத் இளநிலை மருத்துவர்கள் பணியிடங்களை மேம்படுத்து கோருகின்றனர்

தெலுங்கான மாநிலத்தின் ஹைதராபாத்திலிருக்கும் ஓஸ்மானிய பொது மருத்துவமனையில் பொது அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் செப்டம்பர் 6 அன்று சிறந்த பணியிட வசதிகளை மேம்படுத்தக் கோரி காலவரையற்ற தடைகளை ஏற்படுத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவைச் சிகிச்சை வார்டுகள், அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய வார்டுகள் மற்றும் தேர்ந்தேடுக்கப்படும் சேர்க்கைகளுக்கான வார்டுகள் ஆகியவற்றுக்கு இந்தத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளில் வெளிநோயாளிகளை சேர்ப்பதற்கு, ஆக்சிஜன் இணைப்புகள், ஓட்ட அளவை கணக்கிடும் மீட்டர் கருவிகள், மானிட்டர்கள், உயிர் பாதுகாப்புக் கருவிகள் மற்றும் அடிப்படை அவசர மருந்துகள் ஆகியவற்றை தேர்ந்தேடுக்கப்பட்ட வார்டுகளுக்கு அனுப்பும்படி மருத்துவர்கள் கோரினர். அவர்களுடைய கோரிக்கைகள் செப்டம்பர் 19 க்குள் நிறைவேற்றப்படும் என்று மருத்துவமனை மேலதிகாரி எழுத்துபூர்வமான உறுதியளித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 12 அன்று அவர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

சென்னை குப்பை அள்ளும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 3,000 க்கும் அதிமான குப்பை அள்ளும் தொழிலாளர்கள் செப்டம்பர் 7 அன்று ஊதிய உயர்வு கோரி ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். 2017 அரசாங்க ஆணை தீர்மானிக்கப்பட்டதன்படி குறைந்தளவான 379 ரூபாயிலிருந்து 624.50 ($US8.5) ஆக அவர்களுடைய தினகூலியை உயர்த்தவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினார்கள். இந்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3,500 டன் குப்பைகளை அள்ளுகிறார்கள்.

கோவிட்-19 பாதிப்பாலும் மற்றும் சொத்துவரி வருவாய் குறைந்ததாலும் நகர கார்ப்பரேசன் நிதி குறைவாக இருக்கிறது என்றும் அவர்களால் மேலதிகமாக ஒரு நாளைக்கு 12 ரூபாய் கொடுக்க முடியும் என்று நகர நிர்வாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை கவர்ந்திருக்கும் மாநகராட்சி செங்கொடி தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை முடித்துகொள்ள சம்மதித்தது.

ஒடிசாவுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலத்திட்டங்களைக் கோருகின்றனர்

ஒடிசா மாநிலத்திலுள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் திரும்பிய சுமார் 60 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலுவையிலுள்ள நலத்திட்டங்களை கேட்டு செப்டம்பர் 9 அன்று கோஸ்டிமலிகாபூர் உள்ளூர் நிர்வாக அலுவலகங்களுக்கு வெளியே உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிறப்பு உணவு திட்டத்தின்படி மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவுகளையும் மற்றும் இரண்டு மாதங்கள் விவசாயிகளுக்கான நிதி உதவித் தொகுப்பினையும் குடும்ப அட்டைதாரர்கள் பெறவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் திரும்பிய பிறகு தனிமைப்படுத்திக்கொண்ட 14 நாட்கள் முடிந்த ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளருக்கும் அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்கப்பட்ட ஒரு 2,000 ரூபாய் ஊக்கத்தொகையை பெறவில்லை என்று அவர்கள் மேலும் கூறினார்கள். ஊடகத்தின் குறிப்பின்படி, திரும்பிய சுமார் 17,000 பேரில் 6,680 பேர் மட்டுமே மாவட்டத்தில் ஊக்கத்தொகையின் பலனை பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூரில் செப்டம்பர் 10 அன்று அமைப்புசாராத் துறையின் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் செலுத்தப்படாமல் நிலுவையிலிருக்கும் 11 மாத ஓய்வூதியங்களை வ.ங்\வழங்கக் கோரி தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடூபட்டார்கள். மாவட்டத்தில் அமைப்புசாரா துறை மற்றும் உடலுழைப்பாளர்கள் நலவாரியங்களின் சுமார் 5,000 தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 1,000 ரூபாய் ($US13.6 ஓய்வூதியத்தைப் வழங்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

ஓய்வூதியத்தை வழக்கமான முறையில் வழங்கவேண்டும் என்று கோரியதுடன் மேலும் ஆவணங்களில் வயது மாறுபட்டிருப்பதாக 1500 தகுதியுள்ளவர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் வைத்திருப்பதாக புகார் கூறினார்கள்.

உத்திரப் பிரதேச துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைந்த தொழிலாளருக்காக வேலைநிறுத்தப் போராட்டம்

உத்திரப் பிரதேசத்திலுள்ள ஆக்ரா நகரத்தில் செப்டம்பர் 9 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தமும் ஆக்ரா நகராட்சி அலுவலகத்தில் பதாகைகள் ஏந்தியும் போராட்டம் நடத்தினர். குபேர்பூர் குப்பை சேகரிக்கும் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நகராட்சி குப்பை அள்ளும் வண்டி மோதியதில் இறந்த குப்பையில் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளி மரணமடைந்ததற்காக அவர்கள் போராட்டத்தை நடத்தினார்கள்.

நகராட்சி ஆணையர்களுக்கு எதிராகவும் மற்றும் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கும்வரை அவர்களுடைய போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறினார்கள்.

மகாராஷ்டிராவில் கோவிட்-19 தொற்று பரவும்போது வாகனத் தாயரிப்பு தொழிலாளர்கள் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோ லிமிட்டேட் ஆலையின் தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்று பரவும் நிலையில் பாரத் போர்ஜ் ஆலையில் மீண்டும் வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட சக தொழிலாளர்களை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தை விஷ்வகல்யாண் தொழிலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது, “மரண பள்ளத்தாக்கில்” வேலை செய்வதற்கு பாரத் போர்ஜ் நிர்வாகம் அவர்களுடைய தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் செயலை வாகனத் தயாரிப்புத் தொழிலாளர்கள் கண்டனம் செய்தார்கள்.

ஆட்டோ, பவர், ஆயில் மற்றும் எரிவாயு, கட்டுமானம் மற்றும் சுரங்கம், ரயில் இயந்திரங்கள், கப்பல் மற்றும் விமானங்கள் தயாரிப்புகளுக்கு உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் பாரத் போர்ஜ் நிறுவனம் பூனேவை சார்ந்து இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.

பங்களாதேஷ் பீடித் தொழிலாளர்கள் வரி அதிகரிப்புக்கு எதிராக மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர்

டாக்காவின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு வெளியே பீடித் தொழிலாளர்கள் (கையால் சுற்றித் தயாரிக்கும் சிகரெட்) மற்றும் தயாரிப்பாளர்கள் ஞாயிறன்று நாட்டின் 2020-21 தேசிய வரவு செலவு அறிக்கையில் ஒரு பீடிக் கட்டுக்கும் 4 சதவீதம் வரி அதிகரிப்பு சுமத்தியிருப்பதை அரசாங்கம் திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டார்கள்.

இந்த வரி அதிகரிப்பினால் போட்டிதிறன் இழந்த பீடித் தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு வழிவகுப்பதுடன் ஆயிரக்கணக்கானவர்களின் வேலைகள் பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

இதே கோரிக்கையை முன்வைத்து பங்களாதேஷ் பீடி தொழிளார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகஸ்ட் 25 மற்றும் யூன் மாதத்தில் இரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். 400,000 மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் 70 சதவீதம்பேர் உள்ளனர். இந்த தொழிலில் மிக மோசமாக சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 50 டக்கா ($US0.59) மட்டுமே வழங்கப்படுகிறது.

இலங்கையில் தகுதியுள்ள வளர்ச்சி திட்ட அதிகாரிகள் நிரந்தர வேலைகள் கோருகிறார்கள்

திங்கள் அன்று ஏற்கனவே பயிற்சிகளை முடித்துகொண்ட வளர்ச்சி திட்ட அதிகாரிகள் குழுவொன்று அவர்களுடைய தாமதமாக செயல்படுத்தும் நியமனங்களை விரைவுபடுத்தக் கோரி கொழும்பு பொது நிர்வாக அமைச்சகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். நடப்பு மற்றும் முந்தைய அரசாங்கம் அவர்களுடைய கோரிக்கைகளை தொடர்ச்சியாக நிராகரிப்பதை தொழிலாளர்கள் கண்டனம் செய்திருப்பதுடன் புதன் கிழமையன்று ஒரு நாடு தழுவிய ஒரு நடவடிக்கைக்கு ஆர்ப்பாட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

ஏற்கனவே பயிற்சிகளை முடித்துகொண்ட 14,450 வளர்ச்சி திட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்று தொழிலாளர்கள் கோரினர். 42 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய பிரசவகால விடுப்பு விடுமுறையை மற்ற அரசு ஊழியர்களுக்கு ஏற்ப 84 நாட்களாக அதிகரித்து வழங்கவேண்டும் என்று அவர்கள் மேலும் கோரிக்கை வைத்தார்கள்.

இலங்கை வங்கி ஊழியர்கள் ஒப்பந்தங்கள் தொடர்பாக ஐந்து நாள் போராட்டம் நடத்தினர்

இலங்கையின் இரண்டு பிரதான அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றான இலங்கை வங்கியின் ஊழியர்கள் செப்டம்பர் 7 தொடக்கம் 11 வரை கொழும்பில் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களுடைய ஒப்பந்த அடிப்படையிலான பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக குறைக்கவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். இலங்கை முழுவதிலுமுள்ள கிளைகளில் பல்வேறு நிலைகளிலுள்ள ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

இலங்கை வங்கியின் ஊழியர்கள் பல வருடங்களாக இந்த கோரிக்கைக்காக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் ஏனெனில் அரசாங்கமோ அல்லது வேறு எந்த ஆணையமோ அவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்கவில்லை.