மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாற்பத்தெட்டு ஆண்டுகள்

By John Malvar
28 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 23, 1972 அன்று, நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்று, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் நாட்டின் மீது இராணுவச் சட்டத்தை விதித்த 1081 பிரகடனத்தை வெளியிட்டார். அதன் சர்வாதிகார அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்க்கோஸ் பிலிப்பைன்ஸின் உழைக்கும் மக்கள் மீது ஒரு மிருகத்தனமான ஒடுக்குமுறையை மேற்கொண்டார். 1986 ஆம் ஆண்டு வரை அவர் தனது இராணுவ சர்வாதிகாரத்தை ஆட்சியில் நீடிக்க பயன்படுத்தினார். பின்னர் ஒரு வெகுஜன இயக்கம் அவரை வெளியேற்றியதுடன், இராணுவத்தின் ஒரு பகுதியும் வாஷிங்டனும் அவரது ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இராணுவச் சட்டம் ஒரு ஆச்சரியத்திற்குரியதல்ல. இது விதிக்கப்பட்ட திகதி எதிர்பாராதது என்றாலும், பிலிப்பைன்ஸ் அரசியலில் உள்ள அனைவரும் 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதன் சாத்தியக்கூறுகள் குறித்து வெளிப்படையாக விவாதித்து வந்தனர். இராணுவச் சட்டத்தின் அச்சுறுத்தலைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்கள் முந்தைய இரண்டு ஆண்டுகளில் மணிலாவை மீண்டும் மீண்டும் உலுக்கியுள்ளன. ஆளும் உயரடுக்கு அதை சட்டமன்றத்தில் விவாதித்ததுடன், முக்கிய தினசரி பத்திரிகைகள் அதை ஆதரிக்கும் அல்லது கண்டிக்கும் அறிக்கைகளை வெளியிட்டன.

பிலிப்பைன்ஸில் இராணுவ சர்வாதிகாரத்திற்கான கட்டமைப்பை அமெரிக்காவால் நிறுவப்பட்டது. இது சுதந்திரத்தை வழங்குவதற்கு முன்னர், அதன் முன்னாள் காலனியின் அரசியலமைப்பு சட்டத்தில் இராணுவச் சட்டத்திற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியது. பல முந்தைய ஜனாதிபதிகள் தேர்தல்களை முடிவுக்கு கொண்டுவருதல், சட்டமன்றத்தை மூடுவது மற்றும் ஆட்கொணர்வு மனுவை நிறுத்திவைத்தல் ஊடாக இராணுவ ஆட்சியை சுமத்துவதாக அச்சுறுத்தியிருந்தனர். எவ்வாறாயினும், எதுவும் வெற்றிபெறவில்லை.

மார்க்கோஸ் சட்டத்தை பற்றி விவாதிக்கின்றார்

1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியினால் உருவாகிய, சர்வதேசரீதியான வெகுஜன எழுச்சி மற்றும் புரட்சிகர சூழ்நிலைமைகள் மார்கோஸின் இராணுவ ஆட்சியை அவரது முன்னோடிகளின் முயற்சிகளிலிருந்து வேறுபடுத்தியது. பிலிப்பைன்ஸில் நடந்த ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் உலகெங்கிலும் இதேபோன்ற நிகழ்வுகளுக்கு இணையானவையாக இருந்தன.

இதற்கான ஆளும் உயரடுக்கின் பதில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதாகும். மார்கோஸின் பிரகடனம் உலகளாவிய சர்வாதிகாரத்தின் எழுச்சியின் ஒரு பகுதியாகும். மார்கோஸிற்கு எதிரான ஆளும்உயரடுக்கினர் தங்களுக்கு வரவிருக்கும் சர்வாதிகாரத்தின் ஆட்சியின் கடிவாளத்திலிருந்து தம்மை பாதுகாக்க போராடினரே தவிர அவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடவில்லை. பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் அதிகாரத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டம் தோன்றுவதைத் தடுக்க சர்வாதிகாரம் அவசியம் என்பதே முழு ஆளும் வர்க்கத்தினதும் ஒருமித்த கருத்தாக இருந்தது.

மார்கோஸ் தனது அறிவிப்புக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்காக 1971-72ல் மணிலா முழுவதும் இராணுவத்தால் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை பயன்படுத்தினார். 1972 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 1965-66ல் பாரிய இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியை இனப்படுகொலை நசுக்கியதில் அதிகாரத்திற்கு எழுந்த இந்தோனேசிய சர்வாதிகாரி சுஹார்ட்டோவைச் சந்தித்து, இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கான தந்திரோபாயங்களைப் பற்றி விவாதித்தார்.

இராணுவச் சட்டத்தின் விவரங்களை ஏற்பாடு செய்வதற்காக மார்கோஸ் பத்து இராணுவத் தலைவர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் அடங்கிய குழுவின் வழக்கமான கூட்டங்களை கூட்டத் தொடங்கினார். இந்த சபை Rolex Twelve என்று அறியப்பட்டது. ஏனெனில் மார்கோஸ் தனது சர்வாதிகாரத்தை நிறுவிய பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு Rolex கடிகாரத்தை வழங்கினார்.

செப்டம்பர் 22 அன்று, மார்கோஸின் பாதுகாப்பு மந்திரி ஜுவான் போன்ஸ் என்றில் (Juan Ponce Enrile) தனது சொந்த மோட்டார் சைக்கிளில் தாக்குதலை நடத்தினார். 1986 ஆம் ஆண்டில் நியூ யோர்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் என்றில் அதை ஒப்புக்கொண்டதால் மட்டுமே இந்த தாக்குதல் அவரால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியவந்தது. இந்த இறுதி சாக்குப்போக்கைக் பயன்படுத்தி, மார்கோஸ், பிரகடனம் 1081 இல் கையெழுத்திட்டு செப்டம்பர் 23 காலை இராணுவச் சட்டத்தை விதித்தார். ஒரு ஏழாம் எண்ணின் பெருக்கங்களுக்கு ஒரு மூடநம்பிக்கை காரணமாக, அவர் செப்டம்பர் 21 க்கு அறிவிப்பை திகதியிட்டார். இதனால் இராணுவச் சட்டம் ஒரு வரலாற்று பொய்யாக காட்டுவதற்கான உத்தியோகபூர்வ திகதியை வழங்கினார்.

அறிவிப்பில் கையெழுத்திடப்படல்

மார்கோஸ் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி வலைப்பின்னல்கள் அனைத்தையும் மூடிவிட்டார். அவர் ஆட்கொணர்வு மனுவை நிறுத்திவைத்து, இராணுவச் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாரிய கைதுகளை மேற்கொண்டார். அவரது முதலாளித்துவ எதிரிகள் வாரங்களுக்குள் விடுவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு நாடுகடந்து சென்றனர் அல்லது சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். உயரடுக்கு எதிர்ப்பின் இரண்டு உறுப்பினர்களான ஜோஸ் டியோக்னோ மற்றும் நினோய் அக்கினோ மட்டுமே சிறையில் இருந்தனர்.

மார்கோஸுக்கான மேல்தட்டு எதிர்ப்பானது நினாய் அக்கினோவை மையமாகக் கொண்டிருந்தது. அவர் மார்கோஸை பதவியில் இருந்து நீக்கிவிட்டு தன்னை அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள அந்தக் கால வெகுஜன அமைதியின்மையை பயன்படுத்த முயன்றார். மார்கோஸின் அறிவிப்புக்கு முந்தைய வாரங்களில் அமெரிக்க தூதரகத்தின் பல சிஐஏ செயற்பாட்டாளர்களை அக்கினோ சந்தித்தார். மேலும் பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) உதவியுடன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அவர்களிடம் கூறினார். ஆனால் அவர் வெற்றி பெற்றால், இராணுவச் சட்டத்தை சுமத்துவதற்கும், துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலம் பொது மரணதண்டனைகளை நடத்துவதற்கும் அவர் விரும்பினார் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஆளும்உயரடுக்கு எதிர்ப்பின் எந்தவொரு பிரிவினரும் அங்கு இருக்கவில்லை.

இராணுவ ஆட்சியின் மிருகத்தனமான தாக்கம் பிலிப்பைன்ஸின் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டது. மார்கோஸ் வேலைநிறுத்தங்களை தடைசெய்தார் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்று ஐயுறவிற்குள்ளானவர்கள் குற்றச்சாட்டின்றி கைது செய்யப்பட்டார். உழைக்கும் மற்றும் வறிய பிலிப்பைன்ஸ் மக்களை மிகப்பாரிய அளவில் சித்திரவதை மற்றும் கொலை செய்ய இராணுவம் தொடங்கியது.

1972 மற்றும் 1977 க்கு இடையில், அறுபதாயிரம் பிலிப்பைன் மக்கள் "அரசியல் காரணங்களுக்காக" கைது செய்யப்பட்டனர். “புதைத்தல்” என்ற ஒரு புதிய சொல் பிலிப்பைன்ஸ் சொற்களஞ்சியத்தில் நுழைந்தது. இந்த மிருகத்தனமான வினைச்சொல் இராணுவம் எவ்வாறு தனிநபர்களை இல்லாதொழித்தது, சித்திரவதை செய்து கொலை செய்யும், பின்னர் அவர்களின் சடலங்களை காலியாக உள்ள இடங்களுக்குள் தூக்கி எறிந்துவிடும் அல்லது சாலையின் ஓரத்தில் போட்டுவிடும் என்பதை விவரித்தது. மார்கோஸின் பயங்கரவாத ஆட்சியின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்

பாதுகாப்பிற்காக வாகனத்தின் அடைந்துகொண்டு ஏறுபவர்களை பொலிஸார் தாக்குகின்றனர் January 26 1970

இந்த செயல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகள் எந்த விளைவுகளையும் சந்திக்கவில்லை. சித்திரவதை மற்றும் கொலை எந்திரத்தை மேற்பார்வையிட்ட என்றில், 1986 ஆம் ஆண்டில் மார்கோஸுக்குப் பதிலாக கோறி அக்கினோவால் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். அவர் பின்னர் செனட் ஜனாதிபதியானார். ஃபெர்டினாண்ட் மார்கோஸ் வெளிநாட்டில் மரணமடைந்தபோது ஆளும்உயரடுக்கு அவரது குடும்பத்திற்கு மறுவாழ்வு அளித்துள்ளது. அவரது விதவை இமெல்டா இன்னும் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்கிறார் மற்றும் அவரது குழந்தைகள் அரசியல் அதிகார பதவிகளை வகிக்கிறார்கள். ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்ற பதவியேற்றதும், Libingan ng mga Bayani இலுள்ள போர்வீரர்களுக்கான தேசிய கல்லறையில் பெர்டினாண்ட் மார்கோஸுக்கு ஒரு அரசமரியாதையுடனான சடங்கிற்கு ஏற்பாடு செய்தார்.

இராணுவச் சட்டத்தை சுமத்துவதில் ஒரு முக்கிய பங்கு இரண்டு போட்டி ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளான பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸ் (PKP) மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) ஆகியோரால் வகிக்கப்பட்டது. போட்டியிடும் உயரடுக்கு, இராணுவச் சட்டம் மற்றும் பிலிப்பைன்ஸின் புரட்சிகர தலைமைத்துவத்தின் நெருக்கடி: இராணுவ சட்டம் மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள் 1957-1974, என்ற தனது UC Berkeley PhD ஆய்வுக்கட்டுரையில் டாக்டர். ஜோசப் ஸ்காலிஸ், சர்வாதிகாரத்திற்காக போட்டியிடும் ஆளும்உயரடுக்கின் பிரிவுகளுக்கு இந்த கட்சிகள் வெகுஜன இயக்கத்தை எவ்வாறு அடிபணிய செய்தன என்பதை மிக விரிவாக நிரூபித்துள்ளார்.

ஸ்ராலினிசத்தின் அரசியல் வேலைத்திட்டத்தை இரு கட்சிகளும் பகிர்ந்து கொண்டன. புரட்சியின் பணிகள் இன்னும் சோசலிசத்தன்மை உடையவை அல்ல, ஆனால் அவை தேசிய மற்றும் ஜனநாயக தன்மை கொண்டவை என்று அவ்விரு கட்சிகளும் வலியுறுத்தின. இந்த அடிப்படையில் அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு முற்போக்கான பிரிவு இருப்பதாகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பணி "தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவினருடன்" ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொள்வதுமாகும் என்று அவர்கள் வாதிட்டனர்.

எவ்வாறாயினும், சீன-சோவியத் சர்ச்சையின் வழியே இரண்டு கட்சிகளும் பிளவுபட்டு, ஆளும்உயரடுக்கின் போட்டி பிரிவுகளை நோக்கி நோக்குநிலை கொண்டதாக இருந்தன. முதிர்ந்த கட்சியான பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸ் மாஸ்கோவின் வழியைப் பின்பற்றி, மார்கோஸுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அவர் இராணுவச் சட்டத்தை சுமத்துவதை ஆதரித்தார். 1965 ஆம் ஆண்டில், பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸ் பிளவுக்கு முன்னர், மார்கோஸிற்கு ஜனாதிபதியாக ஒப்புதல் அளித்தது. அவரது ஒப்புதலில் ஒரு முக்கிய பங்கை ஜோஸ் மரியா சிஸன் வகித்தார். அவர் பின்னர் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மார்கோஸை ஆதரிக்குமாறு சிஸன் அறிவுறுத்தினார். ஏனெனில் வியட்னாம் மீதான அமெரிக்க போரில் மார்க்கோஸ் பிலிப்பைனை ஈடுபடுத்தாது வைத்திருப்பார் என்று கூறினார். தேர்தலுக்கு ஒரு வாரம் கழித்து, மார்கோஸ் வாஷிங்டன் போஸ்ட்டிடம் துருப்புக்களை அனுப்ப திட்டமிட்டதாக கூறினார்.

கட்சியின் ஆதரவின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் சக அங்கத்தவர்களுக்கு மார்கோஸ் நிர்வாகத்தில் சம்பளத்துடன் பதவிகள் வழங்கப்பட்டன. அவர்களது சக அங்கத்தவகளில் ஒருவர் எழுதிய இன்றைய புரட்சி: ஜனநாயகம், என்பது இராணுவ ஆட்சிக்கான மார்கோஸின் கருத்தியல் நியாயப்படுத்தலாக செயல்பட்டது. மணிலா முழுவதும் இராணுவத்தின் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு கட்சியின் பிற பிரிவுகள் இரகசியமாக உதவின.

இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டபோது, சர்வாதிகாரத்தை ஆதரிக்க கட்சி ஒரு சில நாட்களில் நகர்ந்தது. கட்சியின் இளைஞர்களில் ஒரு பகுதியினர் இதை எதிர்த்தனர் கட்சியிலிருந்து வெளியேறினர். சர்வாதிகாரத்திற்கு அதன் ஆதரவை உறுதிப்படுத்தும் பொருட்டு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி இந்த எதிர்த்தரப்பினரை திட்டமிட்டு கொலைசெய்ததுடன், "ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" என்றும் அவர்களுக்கு முத்திரை குத்தியது.

1973 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த உறுப்பினர்களில் எழுபது பேரை சுட்டுக் கொன்றது. பின்னர் ஒரு மாநாட்டை நடத்தி, தேசிய தொழில்மயமாக்கலின் விரைவான வெற்றிக்கு உதவுகிறது என்ற அடிப்படையில் இராணுவச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் அங்கத்துவத்தை பேணுவதற்காக இந்த அறிக்கையுடன் உடன்பாட்டை அறிவிக்க கடமைப்பட்டிருந்தனர். கட்சி 1974 இல் ஒரு பொது செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதியை அதிகாரபூர்வமாக ஆதரித்தது. அதன் முன்னணி உறுப்பினர்கள் தொழிலாளர் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் பதவிகளை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்களுக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்குவதற்கு உதவ இராணுவ உளவுத்துறையில் இருந்து நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

ஆர்ப்பாட்டக்கார்களை கலைக்க பொலிஸார் வருகின்றனர், 1970.

1968 ஆம் ஆண்டின் இறுதியில் நிறுவப்பட்ட பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பெய்ஜிங்கின் அரசியல் நிலைப்பாட்டை பின்பற்றியது. இது கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டத்தையும், "கலாச்சார புரட்சியின்" வார்த்தையாடலையும் பயன்படுத்தி ஆளும்உயரடுக்கின் சதித்திட்ட பிரிவுகளுக்குப் பின்னால் வெகுஜன அமைதியின்மையை திசைதிருப்ப முயன்றது. அக்கினோ பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதில் உதவினார். அக்கினோவின் சர்க்கரை தோட்டத்தில் இயங்கிவந்த விவசாய கெரில்லாக்களின் ஒரு குழுவை சிஸன் சந்திக்க ஏற்பாடு செய்தார். அக்கினோ ஏற்பாடு செய்த கூட்டம் 1969 இல் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மக்கள் இராணுவத்தை ஸ்தாபிக்க வழிவகுத்தது.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி பரந்த முன்னணி அமைப்புகளின் வலைப்பின்னல் மூலம், மிக முக்கியமாக கபடாங் மக்காபயன் (KM, தேசியவாத இளைஞர்) மூலம் 1970 களின் முற்பகுதியின் எழுந்த அமைதியின்மையை அக்கினோ மற்றும் லிபரல் கட்சிக்கு பின்னால் திசைதிருப்பியது. அவர்கள் 1971 தேர்தலில் லிபரல் கட்சியின் பதவிக்காக பிரச்சாரம் செய்தனர். அந்தக் காலத்தின் முழு வெகுஜன இயக்கமும், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் இராணுவச் சட்டத்தின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் வீதிகளில் தள்ளப்பட்டபோது, சர்வாதிகாரத்திற்கான இந்த போட்டியாளர்களுக்கு பின்னால் திசை திருப்பப்பட்டது.

மார்கோஸ் இராணுவச் சட்டத்தை விதித்தபோது, இந்த ஆளும்உயரடுக்கு எதிர்த்தரப்பு அதனை ஒப்புக் கொண்டது. அவர்களின் தலைமைக்கு அடிபணிந்திருந்த அந்த இயக்கம் மறைந்துபோனது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம் மற்றும் சோசலிச வேலைத்திட்டத்திற்கான பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச எதிர்ப்பு மார்கோஸின் இராணுவ ஆட்சியை வெற்றிகரமாக திணிப்பதில் தீர்க்கமான வரலாற்று காரணியாக இருந்தது.

ஜோமா சிஸனும் தேசியவாத இளைஞர் அமைப்பின் தலைவர்களும் (March 1968). ஒரு வருடத்திற்குள் அவர்கள் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். சிஸன் நடுவில் முன்னணியில் நிற்கின்றார்

டாக்டர். ஜோசப் ஸ்காலிஸின் “முதலில் சோகம், இரண்டாவது கேலிக்கூத்து: மார்கோஸ், டுரேற்ற மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்” என்ற அண்மைய விரிவுரையானது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த வரலாற்றை அம்பலப்படுத்தியதுடன், 1970 களின் முற்பகுதியில் அவர்கள் சர்வாதிகாரத்தை இலகுவாக்குவதற்கும், 2016 ஆம் ஆண்டில் "சோசலிச நோக்குநிலையின்" இடது ஜனாதிபதியாக டுரேற்றவிற்கு அவர்கள் கொடுத்த உற்சாகமான ஆதரவிற்கும் இடையில் ஒரு வேலைத்திட்ட தொடர்ச்சி இருப்பதை நிரூபித்தது.

சிஸனும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் டாக்டர் ஸ்காலிஸை பொய்கள் மற்றும் அவதூறுகளால் தாக்கி, அவரை "சிஐஏ இன் ஊதிய முகவர்" என்று அழைத்தனர். இராணுவச் சட்டத்தின் ஆண்டு நிறைவையொட்டி, அவர்கள் சர்வாதிகாரத்திற்கு புரட்சிகர எதிர்ப்பு என்று பல ஆண்டுகளாக வழங்கியுள்ள கட்சி, 1960 கள் மற்றும் 70 களில் கூறிய அதே பழைய வரலாறுகளை கூறுகின்றனர். டாக்டர் ஸ்காலிஸின் வரலாற்று சொற்பொழிவில் எழுப்பப்பட்ட ஒரு முக்கிய விஷயத்திற்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களால் பதிலளிக்கவும் முடியாது. அந்த உரையின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.

அரசாங்கத்தின் தலைமையில் ஒரு பாசிச குண்டரான ரோட்ரிகோ டுரேற்ற, ஃபெர்டினாண்ட் மார்கோஸின் மாதிரியையே உணர்வுபூர்வமாக பின்பற்றுகின்றார். சர்வாதிகாரத்தை திணிப்பதற்கான அவரது நகர்வுகள் மிகவும் முன்னேறியுள்ளன. அவர் பதவியேற்றவுடன் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஆதரித்தது. 1970 களில் அவர்கள் செய்ததைப் போலவே, அவர்கள் இப்போது ஆளும்உயரடுக்கின் எதிர்த்தரப்பின் பின்னால் வெகுஜன அமைதியின்மையை திருப்ப முயற்சிக்கின்றனர். டுரேற்றவின் ஆதரவைத் திரும்பப் பெறவும், எதிர்க் கட்சியான லிபரல் கட்சியின் முன்னணி உறுப்பினரான தனது அரசியல் போட்டியாளரான துணை ஜனாதிபதி லெனி ராபிரெடோவை நிறுவுவதற்கு ஆதரவளிக்கவும் இராணுவ பிரிவினரையும் "தேசபக்தி மற்றும் அமெரிக்க சார்பு பிரிவுகளுக்கும்" சிஸன் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கோஸ் சர்வாதிகாரத்தை திணித்ததன் படிப்பினைகள் தெளிவாக உள்ளன. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். உலகளாவிய சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் ஒரே வழி, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் தமது சர்வாதிகாரத்திற்கு அவர்கள் தலையிடுவதுதான். தொழிலாளர்கள் தங்கள் சொந்த வர்க்க நலன்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது போன்ற சுயாதீனத்தை அடைய முடியும். இது சர்வதேச சோசலிச புரட்சிக்கான போராட்டமாகும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒவ்வொரு ஸ்ராலினிச துரோகத்திற்கும் எதிராக போராடிய உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டம் இதுதான்.