பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்க்கும் மாணவர்களால் 700 கிரேக்கப் பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

By Robert Stevens and John Vassilopoulos
2 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிரீஸில் நேற்றைய நிலவரப்படி, பள்ளி மாணவர்கள் 35 நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள 700 பள்ளிகளை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி, பாதுகாப்பற்ற வகையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த வார அணிவகுப்புக்கள் மற்றும் பேரணிகளைத் தொடர்ந்து, நாளை ஏதென்ஸிலும், கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிகி மற்றும் ஏனைய நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களிலும் மீண்டும் எதிர்ப்புக்கள் தொடரவுள்ளன. மேலும், கிரீட் மற்றும் ரோடோஸ் உள்ளிட்ட கிரேக்க தீவுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பள்ளி ஆக்கிரமிப்புக்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளி ஆக்கிரமிப்புக்களின் எண்ணிக்கை 200 க்கும் அதிகமானது, பின்னர் கிரீஸின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியமான அட்டிக்காவில் 250 பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டது உட்பட, தற்போதைய எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இது, முக்கியமாக மேல்நிலைக் கல்வியை பாதித்துள்ளது என்பதுடன், நாட்டின் 3,168 உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட பள்ளிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளன.

ஏதென்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் வைத்திருந்த பதாகை, (இடது நெடுவரிசை) டாங்கிகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுகள் வாங்க இங்கு “பணம்” உள்ளது; (வலது நெடுவரிசை) பள்ளிகள், மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, மற்றும் அமைதிக்கு இங்கு “பணம் இல்லை” என்று குறிப்பிடுகிறது (Credit: Keep Talking Greece)

நேற்று, மேலும் 416 புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களும் —24 மணி நேரத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக இது உள்ளது— ஐந்து இறப்புக்களும் கிரீஸில் பதிவாகின. சுற்றுலாத் துறை உட்பட பொருளாதாரத்தையும், அதனைத் தொடர்ந்து இந்த கல்வி காலத்திற்கு பள்ளிகளையும் (செப்டம்பர் 14 முதல்) பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி (ND) அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்ததைத் தொடர்ந்து, கல்வி அமைப்பு முழுவதுமாக கொரோனா வைரஸ் காட்டுத்தீப் போல விரைந்து பரவி வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தொற்றுநோயின் காரணமாக 150 பள்ளிகள் அவற்றின் துறைகளை மூடுவதற்கு அல்லது முழுமையாக மூடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டன.

மாணவர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் பள்ளிகளில் கிட்டத்தட்ட எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. செப்டம்பர் 23 க்குள் —அதாவது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வெறும் எட்டு நாட்களில்— 50 மாணவர்கள், 16 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளருக்கு கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது, என்றாலும் உண்மையான எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி மிக அதிகமாக இருந்திருக்கும்.

இந்த ஆக்கிரமிப்புக்கள், வகுப்பறைக் குழுக்களை அதிகபட்சமாக 15 மாணவர்களுடன் கட்டுப்படுத்தவும், இடைவெளிகளை நிரப்ப கூடுதலாக ஆசிரியர்களை வாடகைக்கு பணியமர்த்தவும் —குறிப்பாக கல்வி வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் 27 சதவிகிதம் குறைக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பல தசாப்த கால காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு பின்னர் 20,000 கல்வி ஊழியர்களை கிரீஸ் இழந்துவிட்டது— கூடுதல் நிரந்தர துப்புரவுப் பணியாளர்களை பணியமர்த்தவும் கோருவதுடன், அரசாங்கம் முன்மொழிந்துள்ளபடி, இணையவழி கற்றலுக்காக பள்ளிகளில் புகைப்படக் கருவிகள் நிறுவப்படக்கூடாது என்றும் கோருகின்றன.

செப்டம்பர் 14, 2020, திங்கட்கிழமை, ஏதென்ஸில் புதிய பள்ளி ஆண்டு தொடக்கத்தின் போது ஒரு தொடக்கப் பள்ளியில் வகுப்புக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு மாணவர் தனது தாயை அணைத்துக் கொள்கிறார். (AP Photo / Thanassis Stavrakis, Pool)

தங்களது கோரிக்கைகளுக்காக போராடும் மாணவர்கள், அரசாங்கம் கிரேக்கத்தின் இராணுவச் செலவினங்களைக் குறைத்து, பள்ளிகளுக்கும், மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கக் கோருகின்றனர்.

ஏதென்ஸ் மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆக்கிரமிப்புக்களை ஆதரிக்கும் அழைப்பின் ஒரு பகுதி, “நாங்கள் அணிதிரட்டுவதற்கான காரணங்கள் தீவிரமானவை என்பதை மாணவர்களாகிய நாங்கள் எங்களது நிலைப்பாட்டிலிருந்து நிரூபித்துள்ளோம். எல்லா இடங்களையும் போல எங்களது பள்ளிகளில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் நாங்களும் போராடுகிறோம்! எங்களை “ஒன்றுமில்லாத இயக்கம்”, “முகக்கவச எதிர்ப்பு மாணவர்கள்”, என்று சித்தரிப்பதன் மூலம் எங்களது போராட்டத்தின் மீதான அவதூறையும் தவறான விளக்கத்தையும் நாங்கள் எதிர்கொண்டோம், மேலும் வழக்கமாக எல்லா விடயங்களையும் போல ‘பாடங்களைத் தவிர்ப்பதற்காக இதைச் செய்கிறார்கள்’ என்றும் எங்களைப் பற்றி அவர்கள் குறை கூறுகின்றனர். மேலும், தற்போது எங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர்கள் பொது சுகாதாரத்திற்கு வைக்கப்படும் நேர-வெடிகுண்டுகள் என்கிறார்கள். பள்ளிகள் பொது சுகாதாரத்திற்கான நேர-வெடிகுண்டுகள்! முகக்கவசங்களை அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம், அவை அப்படியல்ல என்று நாங்கள் போராடுகிறோம்… மேலும் இதுதான் எங்களை வீதிகளில் இறங்கி போராட வைக்கிறது” என்று தெரிவிக்கிறது.

“இந்த வாரம் அவர்கள் [அரசாங்கம்] தொலைக்காட்சி சேனல்களுக்கு 2 மில்லியன் யூரோக்களைக் கொடுத்தனர், அதன் மூலம் தொற்றுநோய் குறித்த தொலைக்காட்சி இடங்களை அவர்கள் உருவாக்குகின்றனர். எங்களது விடயத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பள்ளியிலும் மேலும் ஒரு துப்புரவுப் பணியாளரைக் கூட வாடகைக்கு பணியமர்த்த முடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? அவர்கள் எங்களுக்காக ஒரு யூரோவைக் கூட ஏன் கொடுக்கவில்லை?

“எங்களது பெற்றோரின் வரிகள் கல்விக்குச் செலுத்தப்படுவதை விட, ஆயுதங்களுக்காக அதை செலவிட விரும்புகிறீர்கள் என்று நாங்கள் அவர்களிடம் கூறியபோது அவர்கள் கோபமடைந்தார்கள்! இத்தகைய விடயங்களைப் பற்றி எங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும்? குழந்தைகள் கொல்லப்படும் போர் நடவடிக்கைகளில் தங்களது நாடு பங்கேற்பதை மாணவர்கள் விரும்புவார்களா?”

வடக்கு கிரேக்கத்தில் உள்ள இமதியா மாகாணத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்பகுதியான ரிசோமாட்டாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தொழிற்கல்விக் கூடத்தின் வாயில்கள். பள்ளி வேலியில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பதாகை, மேலே, “ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்றும், கீழே, “செவ்வாய் கிரகத்தின் ஒரு மூலையில் அவர்கள் தண்ணீரைக் கண்டுபிடித்தனர், அதேவேளை ஒரு மாதமாக [எங்கள் பள்ளி] இயற்பியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இந்த ஆக்கிரமிப்புக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக ஆதரிக்கப்பட்டு வருகின்றன. Menoume Energoi – We are staying active என்ற கிரேக்க கோவிட்-19 ஒற்றுமை பிரச்சார முகநூல் பக்கம் ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த குழு கோவிட்-19 பரவுவது தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE) இல்லாதது தொடர்பாக பிரச்சாரம் செய்துள்ளது. மேலும், வடக்கு கிரேக்கத்தில் உள்ள இமதியா மாகாணத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்பகுதியான ரிசோமாட்டாவில் தொழிற்கல்விக் கூடத்தை (lyceum) ஆக்கிரமித்த மாணவர்களுக்கு அவர்கள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர். பள்ளி வேலியில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பதாகை “செவ்வாய் கிரகத்தின் ஒரு மூலையில் அவர்கள் தண்ணீரைக் கண்டுபிடித்தனர், அதேவேளை ஒரு மாதமாக [எங்கள் பள்ளி] இயற்பியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிடுகிறது.

Menoume Energoi, “தொழிற்கல்விக் கூடத்தில் மாணவர்கள் இறுதியாக ஒரு இயற்பியல் மற்றும் ஆங்கில ஆசிரியரை பணியமர்த்துமாறு கோருகின்றனர், மேலும் அவர்களது ஆசிரியர்களில் ஒருவரது கணவருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ஆசிரியருக்கும் நோய்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை குறிப்பிட்டு, இலவச கோவிட்-19 பரிசோதனைகளை நடத்தவும் கோருகின்றனர்” என்று தெரிவிக்கிறது.

கடந்த வாரம், கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அரசாங்கம் பல பள்ளிகளுக்கு பொலிஸ் குழுக்களை அனுப்பியதன் பின்னர், மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு ஆதரவளித்த பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அது அச்சுறுத்துகிறது, மேலும், இந்த வாரம் ஆக்கிரமிப்புக்களை கண்டனம் செய்வதில் அது நச்சுத்தன்மையுடன் இருந்தது, கல்வி அமைச்சகத்தின் பொதுச் செயலாளரான அனஸ்தேசியா கிகா (Anastasia Gika), “ஒரு பொது கட்டிடத்தை கையகப்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும் என்றும், கொரோனா வைரஸ் காரணமாக முந்தைய மாதங்களில் பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டிருந்த நிலையில், ஒருவர் செய்யக்கூடிய மிக மோசமான செயல் இது என்றும் கூறி” பள்ளி ஆக்கிரமிப்புக்களை கண்டித்தார்.

தீவிர வலதுசாரியை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ள ND துணைத் தலைவரான கான்ஸ்டான்டினோஸ் போட்கனோஸ் (Constantinos Bodganos), தனது ட்விட்டர் இடுகையில் பள்ளிளை ஆக்கிரமிக்கும் மாணவர்களை “பாம்புகள்” என்று குறிப்பிட்டதுடன், அவர்களை குரங்குகள் என்றும் ஆத்திரமூட்டும் வகையில் சித்தரித்துள்ளார்.

1990 களில் நிகழ்ந்த தேசிய பள்ளி ஆக்கிரமிப்புக்கள் பற்றி குறிப்பிட்டு, அவர், “எனது தலைமுறைக் காலத்தில் பள்ளி ஆக்கிரமிப்புக்களில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு புதிய தேசிய பிளவுக்கும், கூடுதல் 100 பில்லியன் கடனுக்கும், மாசிடோனியா பிரச்சினையில் தேசிய தோல்விக்கும், [புலம்பெயர்ந்தவர்களுக்கான] கட்டாய தீர்வுக்கும் மற்றும் தண்டனையின்றி ஆர்ப்பாட்டங்களில் அழிவை ஏற்படுத்துவதற்கும் எங்களை இட்டுச் சென்றனர். மன்னிக்கவும், எங்களது பள்ளிகளின் இதயதானத்தில் எந்த வகையான பாம்பின் செயலை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிகிறது” என்றும் அறிவித்தார்.

நேற்று Mega Channel க்கு தான் அளித்த பேட்டியில், இரு மடங்காக மாணவர்களைத் தாக்கியதுடன், “ஆக்கிரமிப்புக்கள் பள்ளி உள்கட்டமைப்பை அழித்து வருகின்றன, மேலும் தண்டனை, கொடுமைப்படுத்துதல் மற்றும் சட்டவிரோதம் ஆகியவை நிறைந்த கலாச்சாரத்தை பலப்படுத்துகின்றன” என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் “ஆக்கிரமிப்புக்கள் [குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது], அரசாங்கம் தாமதிக்கிறது” என்று அச்சுறுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டு, “தேவைப்பட்டால் ஆக்கிரமிப்புக்கள் சட்ட வழிமுறைகள் கொண்டு உடைக்கப்பட வேண்டும்” என்றும் கோரினார்.

கல்வி அமைச்சர் நிகி கெராமியஸ் (Niki Kerameus), திங்களன்று, மாணவர்களது கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை அவரது அரசாங்கம் பரிசீலிக்கும் என்று ANT1 TV க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார், ஆனால், “பள்ளிகள் திறக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஒருவரது கல்வி கற்கும் உரிமையை எவராலும் மறுக்க முடியாது என்பதுடன், கல்வி செயல்முறையை சீர்குலைக்கவும் முடியாது” என்றும் வலியுறுத்தினார்.

வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு (OLME) தொழிற்சங்கம் ஆதரிக்கிறது, அவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். OLME இன் தலைவர் ஆளும் புதிய ஜனநாயகக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஜனநாயக சுயாதீன தொழிலாளர் இயக்கத்தின் (Democratic Independent Workers’ Movement- DAKE) அதிகாரியாக உள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலான OLME இன் அறிவிப்பு, ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பள்ளி ஊழியர்களின் எதிர்ப்பை அதிகரிப்பதற்கு அவசியமானது. என்றாலும், OLME இன் உண்மையான நிலைப்பாடு என்னவென்றால், பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்க வேண்டும் என்பதே. கடந்த வாரம் நடந்த மருத்துவர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஆசிரியர்கள் காட்டும் ஈடுபாடானது, பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளால் தமது சமூக நிலை பேரழிவிற்குள்ளான தொழிலாளர்களின் மத்தியில் சமூக எதிர்ப்பு பரவலாக எழுவதை சுட்டிக்காட்டுகிறது.

மேலதிக வாசிப்புக்களுக்கு:

பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்த்து கிரீஸ் எங்கிலுமுள்ள பள்ளிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

[23 September 2020]

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கிரீஸ் எங்கிலுமாக பரவுகிறது

[25 September 2020]