கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 100,000 ஐ கடந்த போதிலும், இந்தியா பள்ளிகளை மீண்டும் திறக்கிறது

Saman Gunadasa
6 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் அதிகாரபூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை நேற்று 102,685 ஆக இருந்தது, கடந்த ஞாயிற்றுக்கிழமை 100,000 என்ற கடுமையான மைல்கல்லை அது தாண்டியது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புகளில் உலகின் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை விரைவில் விஞ்சிவிடும் பாதையில் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சென்று கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 31 முதல், புதிய நோய்த்தொற்றுகள் ஒரு நாளைக்கு சராசரியாக 85,000 க்கும் அதிகமாக வளர்ந்து வருகின்றன. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இந்தியா பதிவு செய்துள்ள 6,623,815 கோவிட் -19 தொற்றுகளில், கடந்த 35 நாட்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவை பதிவாகியுள்ளன.

தொற்றுநோய்களின் கொடிய மாதமான செப்டம்பரில் 32,209 பேர் இறந்தனர், தினசரி சராசரியாக 1,072 பேர்.

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தும் மையத்தில் ஒரு மருத்துவர் கோவிட்-19 பாதிப்புக்குள்ளானநோயாளியுடன் பேசுகிறார். (AP Photo/Rajanish Kakade)

இவை எதுவுமே, பிரதமர் நரேந்திர மோடி, அவரது பாரதீய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பல்வேறு பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் மற்றும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான 28 மாநில அரசாங்கங்கள் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்காக விரைந்து முன் செல்வதை தடுத்துவிடவில்லை.

சினிமா அரங்குகள், பல்வேறு அமைப்புகளை கொண்டவை, கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை, செப்டம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்க மோடி அரசாங்கம் பச்சை விளக்கு காட்டியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

ஆளும் உயரடுக்கின் முழு ஆதரவோடு, இந்திய அரசாங்கங்கள் COVID-19 பரவுவதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியையும் வெகு காலத்திற்கு முன்பே கைவிட்டுள்ளன. அவர்கள் கொலைகார ”சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையை பின்பற்றுகிறார்கள், தொற்றுநோயை பரவலாக்க அனுமதிக்கின்றனர், அதே நேரத்தில் தொழிலாளர்கள் மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் என்ன இழப்பு ஏற்பட்டாலும் பெருவணிகத்திற்கான இலாபங்களை ஈட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

இந்த கொடூரமான யதார்த்தத்தை மூடிமறைக்க, அரசாங்க அதிகாரிகள் ஒப்பீட்டளவில் இந்தியாவின் மக்கள் தொகையில் தலைக்கு குறைந்த தொற்று மற்றும் இறப்பு விகிதங்கள் குறித்து பலமுறை தம்பட்டம் அடித்துள்ளனர். இந்தியாவின் அதிகளவிலான1.37 பில்லியன் மக்கள்தொகை காரணமாக இவை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன, ஆனால் அவை கூட குறைந்த பட்சமாக மிகவும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தனிநபர் சோதனை விகிதங்கள் மிகக் குறைவானதாக இருப்பது மட்டுமல்லாமல் சாதாரண சமயங்களில் கூட இறப்புக்கான காரணங்கள் பெரும்பாலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையில் (ICMR) நடத்திய கொரோனா வைரஸ் எதிர்புரதம் மூலம் மக்கள்தொகையின் சதவீதத்தை அளவிடும் சமீபத்திய செரோ-கணக்கெடுப்பு, பத்து வயதுக்கு மேற்பட்ட நபர்களிடையே வைரஸ் பாதிப்பு 6.6 சதவிகிதம் அல்லது ஆகஸ்டில் 15 ல் ஒரு நபர் என்று காட்டியது. செப்டம்பர் 29 அன்று இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, ICMR இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா இது மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே குறிக்கிறது என்று வலியுறுத்தினார்- அதாவது பெரும்பான்மையானவர்கள் COVID-19 இன் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

மேலும் சோதனை, தடமறிதல், சிகிச்சை ஆகியவை மிகப்பெருமளவிலான இறப்பை தவிர்ப்பதற்கு ஒரு முழுமையான அவசியமாக உள்ளது.

நகர்ப்புற சேரிகளில் COVID-19 எதிர்புரதத்தின் பாதிப்பு சேரி அல்லாத பகுதிகளை விட இரு மடங்கு அதிகம் என்று ஆய்வின் கண்டுபிடிப்பையும் அவர் எடுத்துரைத்தார். மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளில் வைரஸ் பரவுகிறது, இது குழந்தைகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் போலி கூற்றுக்களை நிராகரிக்கிறது.

அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது வைரஸின் கட்டுப்பாடற்ற பரவலை ஊக்குவிக்கும் என்று பல சுயாதீன வல்லுநர்கள் கண்டித்துள்ளனர். ICMR-ல் இந்தியாவின் முன்னாள் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவரான லலித் கான்ட் செப்டம்பர் 29 அன்று, இந்தியா தொற்றுநோயின் மேல்நோக்கி வளைவில் இருப்பதாகக் கூறினார். அரசாங்கத்தின் "தளர்த்தல்" கொள்கை என்று அழைக்கப்படும் ஆபத்தான சூழ்நிலையை விளக்கி, குறிப்பாக மும்பை போன்ற பெரிய நகரங்களில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இப்போது, நீங்கள் திறந்தவுடன், நிச்சயமாக மும்பை போன்ற நெரிசலான இடத்தில், ஒருவருக்கொருவர் இடையிலான ஒரு பாதுகாப்பான இடைவெளியை பராமரிப்பது மிகவும் கடினம். நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளப் போகிறோம், பாதிப்புகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும்.”

தொற்றுநோயால் சில நகரங்களில் ஏற்கனவே மூழ்கியிருக்கும் இந்தியாவின் நீண்டகால நிதியுதவி அற்ற சுகாதார அமைப்பு, அதிகரித்தளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களை சமாளிக்க போராடும் என்றும் அவர் எச்சரித்தார். "இலட்சங்களில் (100,000 கள்) பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ICU படுக்கைகளின் தேவைப்படும் எண்ணிக்கை பல நூறாயிரக்கணக்கில் மேலே செல்லும்" என்று அவர் கூறினார். ICU படுக்கைகள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களின் பற்றாக்குறை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.5 சதவீதத்திற்கும் குறைவான அற்ப சுகாதாரப் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு செய்து வந்ததன் விளைவாகும் என்பதை ஒப்புக்கொண்ட கான்ட், அவர்கள் "சுகாதாரத் துறையை (அவர்களின்) மோசமான வரவு-செலவுத் திட்டத்தில் அக்கறை காட்டவில்லை.” என்றார்.

தொற்றுநோய் பரவுவது அதிகரிக்கையில், சுகாதார சேவைகள் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், கிராமப்புற நிலப்பரப்பு உட்பட எல்லா இடங்களிலும் நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்படுகின்றன என்று அவர் விளக்கினார். முன்னர் மிகக் குறைவான தொற்றுநோய்களைக் கொண்டிருந்த மாநிலங்கள் இப்போது விரைவான அதிகரிப்புகளைப் பதிவு செய்கின்றன, தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறிய மற்றவை இப்போது தொற்றுகளின் புதிய எழுச்சியை அனுபவித்து வருகின்றன.

மகாத்மா காந்தி மருத்துவ விஞ்ஞான கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகவும், தற்போது கிழக்கு மகாராஷ்டிராவின் கிராமப்புற வறிய வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமில் உள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராகவும் உள்ள எஸ்.பி.கலன்திரி செப்டம்பர் 20 அன்று ஊடகங்களுக்கு கருத்துகளில் எச்சரித்தார்; “இந்த தொற்றுகள் எங்கிருந்து வருகிறது யாரிடமிருந்து வருகிறது என்று எங்களுக்கு தெரியாது. சிறிய கிராமங்கள், சிறிய பட்டணங்களிலிருந்து மக்கள் வருகின்றனர், அவர்கள் இதற்கு முன்னால் எப்போதுமே பயணம் செய்ததில்லை.”

இந்த மதிப்பீட்டை ஆதரிக்கும் கருத்துக்களில், பீகார் வடமாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் சிவில் சர்ஜன் டாக்டர் இந்திரதேவ் ரஞ்சன் தொடர்பு தடமறிதல் உடைந்துவிட்டது என்று விளக்கினார். “தொற்று எல்லா இடங்களிலும் பரவியிருப்பதால் இப்போது அவ்வாறு செய்ய முடியாது. எத்தனை நபர்களின் தொடர்பு வரலாறு கண்டறியப்பட வேண்டும் (இருக்க வேண்டும்)? ”

பீகாரில் உள்ள ரோட்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகளின் கடுமையான புறக்கணிப்பை சுட்டிக்காட்டி, கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்புத் தடமறிதல் மற்றும் பரிசோதனை குறித்து எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் இல்லை. முன்னதாக அத்தகைய உத்தரவு இருந்தது, இப்போது இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மீண்டு வரும் நோயாளிகள் கூட மறு பரிசோதனை செய்யப்படுவதில்லை. இரண்டு வாரங்கள் தனிமைபடுத்தி வைக்கப்பட்ட பின்னர், நோயாளி மேலதிக பரிசோதனை இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.”

பெரிய பொது மருத்துவமனைகளில், COVID-19 நோயாளிகளை COVID-19 நோயற்றவர்களிடம் இருந்து பிரிப்பது அனேகமாக சாத்தியமற்றது என்று கலந்த்ரி சுட்டிக்காட்டினார். உதாரணமாக, அவரது மருத்துவமனை ஒவ்வொரு நாளும் வெளிநோயாளர் துறையில் 1,600 நோயாளிகளைப் பெறுகிறது. இவற்றில், 20 முதல் 30 சதவீதம் பேர் காய்ச்சல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கின்றனர், இது டெங்கு அல்லது மலேரியா குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இருப்பினும், இந்த நோயாளிகளுக்கு பொதுவாக COVID-19 இருப்பதாக கண்டறியப்படுகிறது." எங்களுக்குள்ள வசதிகளில் -பழைய கட்டிடங்கள், பழைய உள்கட்டமைப்பு- சுகாதாரப் பணியாளர்கள் "தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், கோவிட் அல்லாத நோய்களை கோவிட் இலிருந்து நம்பத்தகுந்த முறையில் வேறுபடுத்துவதும் மிகவும் கடினமானது" என்று கலந்த்ரி கூறினார்.

பலர் பாதிக்கப்பட்டிருப்பதால் "சுகாதார தொழிலாளர்களிடையே நியாயமான அளவு பயம் மற்றும் பீதி" இருப்பதாக அவர் விளக்கினார். செப்டம்பர் மாத நிலவரப்படி, “கோவிட் -19 ஐ எதிர்த்து போராடும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான” தேசிய அளவிலான காப்பீட்டுத் திட்டத்தின் படி, 64 மருத்துவர்கள் உட்பட 11,155 சுகாதாரப் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்துள்ளனர். சுகாதார தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி மோடி அரசாங்கத்தின் குற்றவியல் புறக்கணிப்பை வெளிப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி சௌபே செப்டம்பர் நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் இழிந்த முறையில் கருத்துத் தெரிவித்தார், “COVID கடமையின் போது சோதனையில் நேர்மறையாக உறுதி செய்யப்பட்ட அல்லது இறந்த சுகாதாரத் தொழிலாளர்கள் குறித்த மையத் தகவல்கள் எதுவும் இல்லை." என்றார்.

வறிய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் கடுமையான சமூகப் பிரச்சினைகள், தொற்றுநோய் மற்றும் மருத்துவமனை கூட்டத்தை எவ்வாறு அதிகரிக்கின்றன என்பதையும் கலந்த்ரி குறிப்பிட்டார். “இப்போது வீட்டு தனிமைப்படுத்தல் இல்லை; நமக்குள்ள சமூக அமைப்பு முறையில் அதாவது தனிப்பட்ட படுக்கையறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத சிறிய வீடுகளைப் பொறுத்தவரை, மக்களை அவர்களது வீடுகளுக்குள் அடைத்து வைக்கும் ஆடம்பரத்தை வழங்க முடியாது.”

இந்தியாவின் வீடற்ற மக்கள்தொகையின் நிலைமை இன்னும் மோசமானது, இது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.7 மில்லியனாக இருந்தது. தொற்றுநோயின் தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்ததால், வீடற்றவர்களின் எண்ணிக்கை இப்போது நிச்சயமாக மிக அதிகமாக உள்ளது.

தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் சுகாதார மற்றும் சமூக உதவிகளை வழங்க மோடி அரசாங்கமும் முழு ஆளும் உயரடுக்கும் எதுவும் செய்யவில்லை.

மாறாக, அவர்களின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கை, வர்க்க உறவுகளை மறுசீரமைக்கவும் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவும் தொற்றுநோயைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளின் வெட்டு முனையாக உள்ளது.

தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் அவர்களின் சொந்த திட்டமிடப்படாத பொது முடக்கத்திற்கு மோடியும் அவரது பாஜக அரசாங்கமும் - முதலீட்டாளர் சார்பு கொள்கைகளில் "பெரும் பாய்ச்சலை" அறிவிப்பதன் மூலம் பதிலிறுத்தன - இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 23.9 சதவீதம் சுருங்கியது. "சீர்திருத்தங்கள்" என்று அழைக்கப்படும் இந்த கொள்கைகள் பூகோள முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த மாதம் பாராளுமன்றத்தின் குறுகிய "குளிர் கால கூட்டத்தொடரில்", மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக அரை டஜன் கார்ப்பரேட்-சார்பு சட்டங்களை இயற்றியது, இது இந்தியாவின் விவசாயத் துறையை நாடுகடந்த விவசாய-வணிக நிறுவனங்களுக்குத் திறந்நு விட்டது மற்றும் "முக்கிய உற்பத்தி" உட்பட, பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் பயன்பாடு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. பாஜக அரசாங்கத்தின் துடைத்தெறியும் தொழிலாளர் குறியீடு “சீர்திருத்தம்” பெரும்பாலான வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழிலாளர் நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்குகிறது.

அரசாங்கம் துடைத்து வீசும் ஒரு தனியார்மயமாக்கல் திட்டத்தையும் அறிவித்துள்ளது, அதன் மூலம் பெரும்பாலான பொதுத்துறை அலகுகள் பொது சொத்துக்களின் தீ போன்ற விற்பனையில் விற்கப்படுவதைக் காண முடியும்.

இந்தியாவின் பில்லியனர்கள் மற்றும் பல மில்லியனர்களை வளப்படுத்த புதிய வழிகளை வகுக்க முற்படுகையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கையைப் பற்றி ஆளும் உயரடுக்கின் இழிவான அணுகுமுறை, தொற்றுநோயை எதிர்த்துப் போராட தொழிலாள வர்க்கம் தனது சொந்த சோசலிச வேலைத்திட்டத்துடன் தலையிடுவதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஜூன் 23 அறிக்கையில் வலியுறுத்தியது போல், “வைரஸைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் -அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடல், தனிமைப்படுத்தல், வெகுஜன சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகியவை- ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களுக்கு எதிராக செல்கிறது. "தொற்றுநோயால்" பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமான ஆதரவை உறுதி செய்வதற்கு ”சமூக வளங்களை பெருமளவில் வேறு பக்கமாக திருப்ப வேண்டியுள்ளது. ...

“தொற்றுநோய்க்கான பதிலிறுப்பின் மீதான கட்டுப்பாடு முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இப்போது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன நடவடிக்கை அவசியம். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டும் அல்ல அல்லது அது முதன்மையானதாக கூட இல்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டம் குறித்த ஒரு விடயமாகும்.”