நேட்டோவுக்குள் பிளவுகள் வெடிக்கையில்

ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒருவருக்கொருவர் நகரங்களின் மீது குண்டுகளை வீசுகின்றனர்

By Alex Lantier
7 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே போர் வெடித்து ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்த வார இறுதியில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நகரங்களில் குண்டுவீசித் தாக்கியதால் இரத்தக்களரி நிலைமை அதிகரித்துள்ளது.1991 ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கு முன்னதாக வெடித்த சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பகுதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-1994 போரின் இப்போதைய புதிய வெடிப்பானது அனைத்துப் பிராந்தியப் போராக வெடிப்பதற்கான ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது.

இரு நாடுகளின் முக்கிய பிராந்திய ஆதரவாளர்களான ஆர்மீனியாவை ஆதரிக்கும் ரஷ்யா, அஜர்பைஜானை ஆதரிக்கும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போர் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல் நேட்டோவிற்குள்ளும் பிளவுகளை தீவிரப்படுத்துகிறது. லிபியாவில் துருக்கிய ஆதரவு சக்திகளுக்கு எதிராக, ஏற்கனவே ஒரு பினாமிப் போரை நடத்தி வருவதோடு, துருக்கிக்கு எதிரான மத்தியதரைக் கடலில் கிரேக்க கடல்சார் உரிமைகோரல்களை ஆதரிக்கும் பிரான்சில், ஆர்மீனியாவுக்கு ஆதரவாக இன்னும் தீவிரமாக தலையிடுவதற்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

1994 ஆண்டு முதல் ஆர்மீனியப் படைகள் வைத்திருக்கும் நாகோர்னோ-கராபாக்கிலுள்ள பல நகரங்களை அஸெரியின் பீரங்கித் தளங்கள் இலக்கு வைத்து, அஸெரி படைகள் மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றன. அஸெரி படைகள் அங்கு பல கிராமங்களை கைப்பற்றியதாகவும் அறிவித்தது.

In this image taken from footage released by Azerbaijan’s Defense Ministry on Sunday, Sept. 27, 2020, Azerbaijan’s soldiers fire from a mortar at the contact line of the self-proclaimed Republic of Nagorno-Karabakh, Azerbaijan. (Azerbaijan's Defense Ministry via AP)

“இன்று அஸெரி இராணுவம் டெர்ட்டர் பகுதியிலுள்ள தலிஷ் கிராமத்தை விடுவித்தது; ஜெபிரைல் பகுதியிலுள்ள மெஹ்திலி, சாகிர்லி, ஆஷாகி மராலியன், ஷெய்பே மற்றும் கைட்ஷாக் கிராமங்கள்; மற்றும் பிசுலி பகுதிலுள்ள ஆஷாகி அப்துர்ரஹ்மான்லி கிராமம், கராபாக் அஜர்பைஜானாக உள்ளது” என்று அஸெரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ட்டுவீட்டரில் அறிவித்தார்.

அக்டோபர் 2 ம் திகதி, ஆர்மீனிய அதிகாரிகள் இஸ்ரேலிய தயாரிப்பு லோரா ஏவுகணையால் ஆர்மீனியாவை நாகோர்னோ-கராபாக் உடன் இணைக்கும் சாலையைத் தாக்கியதாக தெரிவித்தனர்.

நேற்று, ஆர்மீனிய படைகள் பாகுவிற்குப் பின்னர் அஜர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான கஞ்சா மீது குண்டுவீச்சு நடத்தியது, பொதுமக்கள் உயிரிழப்பதற்கான ஆபத்து அவர்களின் தாக்குதலைத் தடுக்காது என்று கூறியது. கஞ்சாவில், "எதிரிகளின் தாக்குதல்கள் காரணமாக, பொதுமக்கள், பொதுமக்களின் உள்கட்டமைப்பு மற்றும் பண்டைய வரலாற்று கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று அஸெரி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாகோர்னோ-கராபக்கின் ஆர்மீனிய பெயரான ஆர்ட்சாக்கின் தலைவரான அராயிக் ஹருதுயன்யன், தனது தலைநகரான ஸ்டெபனகெர்ட் மீதான தாக்குதல்களுக்கு அஸெரி நகரங்களில் குண்டுவீச்சு மூலம் பதிலடிகொடுத்தாக கூறினார். “அஸெரி பயங்கரவாத இராணுவம் ஸ்டெபனகெர்ட்டிலுள்ள பொதுமக்களை குறிவைத்து, பொலோனெஸ் மற்றும் ஸ்மெர்ச் ஆயுத முறைகளைப் பயன்படுத்துகிறது. இனிமேல், பெரிய அஸெரி நகரங்களிலுள்ள இராணுவ இலக்குகள் ஆர்ட்சாக்கின் பாதுகாப்பு இராணுவத்தின் இலக்காகும். தவிர்க்க முடியாத இழப்புகளைத் தவிர்ப்பதற்காக இந்த நகரங்களை விட்டு வெளியேறுமாறு அஸெரி மக்களுக்கு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்” என்று அவர் அறிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் இராணுவ இழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வார இறுதியில் அஜர்பைஜானில் 21 பொதுமக்கள் மற்றும் ஆர்மீனியாவில் 13 பொதுமக்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், அத்தோடு தரையில் இராணுவ நிலைமை தெளிவாக இல்லை. நாகோர்னோ-கராபாக்கில் ஆர்மீனியப் படைகள் சனிக்கிழமையன்று 51 படைவீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தன, அதே நேரத்தில் அஸெரி படைகள் தங்கள் இராணுவ இழப்புகளைக் கூற மறுத்துவிட்டன.

“இப்போதைக்கு, எங்களுக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் பொதுமக்கள் மனித இழப்புகள் உள்ளன, பெரிய அளவிலான இராணுவ உபகரணங்கள் இனி பயன்படுத்த முடியாதவை, ஆனால் எதிரியால் இன்னும் அதன் மூலோபாய பிரச்சினைகள் எதனையும் தீர்க்க முடியவில்லை” என்று சனிக்கிழமையன்று ஒரு தொலைக்காட்சி உரையில், ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் கூறினார்.

ஆர்மீனிய-அஸெரி சண்டையிலிருந்து வந்த மோட்டர் குண்டு அண்டை நாடான ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திலும் தரையிறங்கியது, இதனால் கோடாஃபாரி இருட்டில் மூழ்கிய நிலைமை உட்பட சேதமும் ஏற்பட்டது. ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே ஈரானிய பிரதேசத்தின் அனைத்து மீறல்களுக்கும் எதிராக எச்சரித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்தார்.

இந்தப் போரில், 1991 ல் முதலாளித்துவ மீட்சிக்கு முன்னதாக சோவியத் அதிகாரத்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட இன தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான தாக்கங்களானது இப்பகுதியில் மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா தலைமையிலான போர்களால் ஏற்பட்ட வெடிக்கும் பூகோள அரசியல் பதட்டங்களுடன் சேர்ந்து வருகின்றன. சோவியத்துக்கு பிந்தைய காலத்தில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான முந்தைய பேச்சுவார்த்தைகளையும், துருக்கியுடனான கலந்துரையாடல்களையும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா தரகு செய்தன. எவ்வாறாயினும், லிபியா முதல் சிரியா மற்றும் ஈராக் வரையிலான பிராந்தியத்தில் இரத்தக்களரி பினாமி போர்களுக்கு மத்தியில் இந்த சக்திகளுக்கு இடையிலான உறவுகள் நிலைகுலைந்துவிட்டன.

ஐரோப்பிய சக்திகளும் ரஷ்யாவும் பலமுறை ஆனால் பயனற்ற முறையில் போர்த் தணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. வெள்ளிக்கிழமை இரவு, இத்தாலிய வெளியுறவு மந்திரி லூய்சி டி மாயோ "மோதல்கள் (மற்றும்) இராணுவ தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் குறித்து கவலை" தெரிவித்த பின்னர், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அலியேவ் மற்றும் பாஷினியன் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாக பாரிசிலுள்ள எலிசே மாளிகை தெரிவித்தது. அதாவது "அவர் ஒரு போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் ஒரு செயல்முறையையும் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வழிவகுக்கும் ஒரு முறையையும் தொடங்க அழைப்பு விடுத்தார்," என்றும் "இன்று மாலை வேலை தொடங்குகிறது" என்று எலிசே மேலும் கூறியது.

ஆனால் இந்த வார இறுதியில் சண்டை வியத்தகு முறையில் அதிகரித்ததுடன், பாரிஸ் நடந்து கொண்டிருப்பதாக நம்பிய பேச்சுவார்த்தைகளின் "வேலை" உடனடியாக முடிவிற்கு வந்தது.

ஜேர்மன் சான்சேலர் அங்கேலா மேர்க்கெல் நேற்று பாஷினியனை அழைத்து "அனைத்து கட்சிகளும் உடனடியாக மோதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்" என தெரிவித்ததாக செய்தித் தொடர்பாளர் உல்ரிக்கே டெம்மெர் கூறினார்.

துருக்கிய அரசாங்கம் எந்தவொரு போர் நிறுத்தத்தையும் நிராகரித்தது, நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தின் அஸெரி உரிமைகோரல்களைத் தொடர்ந்து ஆதரிப்பதாக உறுதியளித்தது. காக்கசஸில் "ஒடுக்கப்பட்டவர்களை" பாதுகாப்பதற்கான ஒரு பகுதியாக பாகுவுக்கு துருக்கிய ஆதரவு இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்த பின்னர், வெளியுறவு மந்திரி Mevlüt Çavuşoğlu இத்தாலிய நாளேடான லா ஸ்டாம்பா விடம், "மோதல்களுக்கு உடனடி முடிவு மற்றும் ஒரு நிரந்தர போர்நிறுத்தம் போன்ற மேலோட்டமான கோரிக்கைகள் இந்த நேரத்தில் பயனுள்ளதாக இருக்காது" என்று தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிரான அதிகரித்து வரும் அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பூகோள புவிசார் அரசியல் பதட்டங்கள் வெடிக்கின்றன. சிஐஏ ஆதரவுடைய சிரிய இஸ்லாமிய போராளிகள் சிரியாவிலிருந்து துருக்கி வழியாக ஈரான் மற்றும் ரஷ்யாவின் எல்லையிலுள்ள அஜர்பைஜானுக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன, இது பிராந்திய பதட்டங்களின் ஒரு முக்கிய புதிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் வர்த்தக உறவுகள் குறித்தும் வாஷிங்டன் கோபமடைந்து சமீபத்தில் ஈராக்கில் ஈரானின் ஆதரவுப் படைகளுக்கு குண்டு வீசியது.

குறிப்பிடத்தக்க வகையில், ஆர்மீனிய-அஸெரி போரை நிறுத்த வாஷிங்டன் மிகச் சில பொது முயற்சிகளை மேற்கொண்டது. இது இரு நாடுகளுக்கும் மில்லியன் கணக்கான டாலர்களை இராணுவ உதவியாகக் கொடுக்கும் அதே வேளையில், ஈரானுக்கு எதிரான போர்த் திட்டங்களுக்கு மத்தியில் அது கடந்த ஆண்டு அஜர்பைஜானுக்கு உதவியை அதிகரித்தது. ஈரானுக்கு எதிரான கடல்சார் பாதுகாப்பை உயர்த்துவதற்காக அது அஜர்பைஜானுக்கு 100 மில்லியன் டாலர்களைக் கொடுத்தது, அதே நேரத்தில் ஆர்மீனியாவுக்கு இராணுவ உதவி 4.2 மில்லியன் டாலர்களாக இருந்தது. சமீபத்திய சண்டையில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான இஸ்ரேலிய ஸ்கைஸ்ட்ரைக்கர் ட்ரோன்களை அஜர்பைஜான் வாங்கியதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சில அமெரிக்க அதிகாரிகள் ஆர்மீனியாவை ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக பார்க்கிறார்கள் என்று சர்வதேச அளவில் இராஜதந்திர வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு, அஜர்பைஜானுக்கு அமெரிக்க இராணுவ உதவி பற்றி விவாதித்த ரஷ்ய ஆய்வாளர் பாவெல் ஃபெல்கன்ஹவுர் என்பவர் Eurasianet.org இடம் கூறினார்: “அமெரிக்க-ஈரானிய உறவுகள் மிக விரைவாக மோசமடைந்துள்ளன, எனவே அஜர்பைஜான் வாஷிங்டனின் கவனத்தில் தன்னை காண்கிறது ஆனால் ஆர்மீனியா அல்ல. ஆர்மீனியா ஒரு ஈரானிய நட்பு நாடாகவே பார்க்கப்படுகிறது.”

இந்த நிலைமைகளின் கீழ், துருக்கிய அரசாங்கம், ஆர்மீனிய-அஸெரி பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புகளை நிராகரிப்பதை சுதந்திரமாக உணர்ந்தது, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வரும் எச்சரிக்கைகளையும் எதிர்க்கிறது.

ஏற்கனவே லிபியா மற்றும் மத்தியதரைக் கடலில் துருக்கியுடன் ஒரு வெளிப்படையான மோதலின் விளிம்பில், இன்னும் ஆக்கிரோஷமான கொள்கைக்கான அழைப்புகள் பிரான்சில் அதிகரித்து வருகின்றன. நேற்று, 173 பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள், பெரும்பாலும் தெற்கு ஆர்மீனிய சமூகங்களைக் கொண்ட தெற்கு பிரான்சின் பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன், பாரிஸை "நடுநிலையின் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிலையை கைவிட" அழைப்பு விடுத்தனர். அஸெரி தாக்குதலின் குறிக்கோளானது “இந்த பிராந்தியத்திலிருந்து ஆர்மீனிய மக்களை காணாமல் போகச் செய்தல்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைப் பின்தொடர்ந்து வந்தது பஷினியனுடனான ஒரு நீண்ட நேர்காணலை பிரெஞ்சு வலதுசாரி நாளேடான லு பிகாரோ வெளியிட்டது. அதில் அஜர்பைஜான் "நாகோர்னோ-கராபாக்கில் பொதுமக்கள் பகுதிகளுக்கு குண்டு வீச ட்ரோன்கள் மற்றும் துருக்கிய எஃப் -16 விமானங்களைப் பயன்படுத்துகிறது" என்றும் "துருக்கிய இராணுவத் தளபதிகள் நேரடியாக மோதலில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் ஆர்மீனிய பிரதமர் கூறினார்.

அஸெரி மற்றும் துருக்கியப் படைகள் இனப்படுகொலைக்கு திட்டமிட்டிருப்பதாக பாஷினியன் வெடிப்புமிகுந்த குற்றஞ்சாட்டினார்: "நிலைமை மிகவும் மேலும் மோசமானது [முந்தைய எல்லை மோதல்களைக் காட்டிலும்]. 20 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட 1915 இல் நடந்ததை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது.” முதலாம் உலகப் போரின்போது துருக்கியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை பஷினியன் குறிப்பிடுகிறார். "கடந்த காலத்தை தொடர்ந்து மறுத்து வரும் துருக்கிய அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலை பாதையில் இறங்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

எவ்வாறெனினும், கைகளில் மிகப் பெருமளவு இரத்தங்களை கைகளில் ஏந்தியுள்ள எந்தவொரு முதலாளித்துவ முகாம்களையும் ஆதரிப்பதன் மூலம் போரையும் இனச்சுத்திகரிப் போரையும் ஒருவர் எதிர்த்துப் போராட முடியாது. 1988-1994 போரில் 20,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களுக்கு வழிவகுத்தது மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்மீனிய வெற்றியின் மத்தியில் நாகோர்னோ-கராபாக் இருந்து தப்பிச் சென்றவர்கள். இந்த மோதல்கள் தேசிய அரசு அமைப்புமுறையின் பிற்போக்குத் தன்மையைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

பெரும் சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மோதலாக விரிவடையும் இன்னும் மேலும் போர்களையும் படுகொலைகளையும் தவிர்க்க, போருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் ஆர்மீனியாவிலும், அஜர்பைஜானிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.