நீதித்துறையின் மற்றொரு கேலிக்கூத்தாக இந்திய நீதிமன்றம் பாபர் மசூதியை தரைமட்டமாக்கிய பாஜக தலைவர்களை விடுதலை செய்கிறது

Deepal Jayasekera
9 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆளும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் உயர் தலைவர்கள் உட்பட, பாபர் மசூதி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விசேஷமாக அமைத்த இந்திய நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர்களில் 1998 முதல் 2004 வரை பாஜகவின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் உள்துறை அமைச்சருமான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் ஆகியோரும் உள்ளடங்குவர்.

டிசம்பர் 6, 1992 அன்று, அத்வானி, பாரதி, பிற உயர்மட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இந்து தீவிரவாத அமைப்புகளால் அணிதிரட்டப்பட்டு தூண்டப்பட்ட இந்து வெறியர்கள், வட இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அமைந்துள்ள 475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை இடித்தனர். பல வருடங்கள் நீடித்த ஒரு மோசமான வகுப்புவாத பிரச்சாரத்தின் உச்சமாக வரலாற்று மசூதி இருந்த இடத்தை புராண இந்து கடவுளான இராமருக்கு ஒரு கோயிலாக மாற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது, பாபர் மசூதி தரைமட்டம் ஆக்கப்பட்டதானது, இந்தியாவில் மிகப்பெரிய வகுப்புவாத வன்முறை அலையை தூண்டி விட்டது, அது 1947 ஆம் ஆண்டு துணைக் கண்டம் ஒரு வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்து ஆதிக்க இந்தியாவாக வகுப்புவாதப் பிரிவினை செய்யப்பட்டதற்கு பின்னர் இந்தியாவில் தூண்டிவிடப்பட்ட மிகப்பெரிய வகுப்புவாத வன்முறையாகும்.

நீதிமன்றத் தீர்ப்பு ஒரு சட்டபூர்வமான மோசடி. டிசம்பர் 6, 1992 இல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் தொலைக்காட்சித் திரைகளில் இடிப்பதை பார்த்தது உட்பட பெரும் ஆதாரங்களை புறக்கணித்த மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம், பாபர் மசூதியின் இடிப்பு ஒரு “திட்டமிடப்பட்ட சதியின்” விளைவு அல்ல என்று தீர்ப்பளித்தது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர்மசுதிஇடிக்கப்பட்டது, அதனை அயோத்தி சர்ச்சை தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் ஆர்வலர்களின்ஒரு பெரிய குழு சட்டவிரோதமாக செய்தது(Source: Wikimedia).

வரலாற்று மசூதியை இடித்துத் தள்ள பயன்படுத்துவதற்கான கோடாரிகள், கடப்பாரைகள், கயிறுகள் மற்றும் இதர கருவிகளுடன் ஆயுதபாணிகளாக பல்லாயிரக்கணக்கான இந்து அதிதீவிரவாதிகள் அயோத்திக்கு வந்து, ஒரு பேரணியில் பங்கெடுத்து, அந்த இடத்தில் கடுங்கோப செயலில் ஈடுபட்டது “தன்னிச்சையானது” அல்லது அவ்வாறு நீதிமன்றம் கூறியது. அதேபோல் மசூதி பாதுகாக்கப்படும் என்று நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் கல்யாண் சிங் உறுதி அளித்திருந்தாலும் உத்தரபிரதேச மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் இருந்த காவல்துறையினர் இடிப்பதைத் தடுக்க தலையிடத் தவறியதை நீதிமன்றம் முக்கியமற்றதாக புறக்கணித்தது.

மூர்க்கத்தனமாக இருந்தாலும், இந்த தீர்ப்பை ஆச்சரியம் என்று சொல்ல முடியாது, நீதித்துறை உட்பட முழு இந்திய அரச எந்திரமும் சமீபத்திய தசாப்தங்களில் இந்துத்துவ-வாதியாக மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் தற்போதைய ஆறு வருட கால பாஜக அரசாங்கத்தின் கீழ் இந்த நிகழ்வுப்போக்கு தீவிரமடைந்துள்ளது, அவர் 2002 குஜராத் முஸ்லீம்-விரோத இனப்படுகொலையில் தனது பங்கிற்காக தானாகவே தேசிய அளவில் முதல் முறையாக பிரபல்யமானார்.

புதன்கிழமை நீதிமன்ற தீர்ப்பு மோடியையும் பாஜக அரசாங்கத்தையும் அவர்களின் இந்து பேரினவாத கூட்டணிகளையும் அவர்களது வகுப்புவாத ஆத்திரமூட்டல்களிலும், இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வெகுஜனங்களின் மிகவும் அடிப்படையான சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களை தொடுப்பதற்கு மேலும் துணிச்சலை வழங்கும். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே, முன்னணி அரசாங்க நபர்கள் அதைப் பற்றி கூச்சலிடத் தொடங்கினர்.

பாபர் மசூதியை தரைமட்டமாக்குவது ஒரு குற்றவியல் சதி, பாஜக, அதன் கருத்தியல் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) போன்ற இணைந்த இந்து மேலாதிக்கவாத அமைப்புகளால் தூண்டப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இது, இந்தியா முதலும் முக்கியமாகவும் ஒரு "இந்து தேசம்" என நிலைநாட்டும் நோக்கம் கொண்டது.

டிசம்பர் 6 ம் தேதி, அத்வானி, ஜோஷி மற்றும் பாரதி போன்ற பாஜக தலைவர்கள் 100,000 பேர் கொண்ட “கர சேவகர்கள்” (மதத் தொண்டர்கள்) மத்தியில் ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கினர், அப்போது அவர்கள் "ஒரே அடியில் மசூதியை இடித்து தள்ளுங்கள்" போன்ற கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் பிரசங்க மேடையில் ஒளிரும் போது அவர்களது ஆதரவாளர்கள் அதைத் தான் செய்தனர்.

சிபிஐ நீதிமன்றம் இடிப்பு மற்றும் தொடர்புடைய நிகழ்வுகள் தொடர்பான 100 க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகளை ஆதாரமாக ஏற்க மறுத்துவிட்டது, அதற்கு ஆடியோ தெளிவாக இல்லை மற்றும் சிலவற்றை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற போலிக் காரணங்கள் கூறப்பட்டது. நூற்றுக்கணக்கான சாட்சியங்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்களை புறக்கணித்து, சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதியை இடித்தது "ஒரு சதி அல்ல", ஆனால் அறியப்படாத "சமூக விரோத சக்திகளால்" மேற்கொள்ளப்பட்ட "தன்னிச்சையான" செயல் என்று தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர், அதில் வன்முறையைத் தூண்டுவது, குற்றம் செய்ய சதி செய்தல் மற்றும் சட்டவிரோதமாக கூடியிருத்தல் ஆகியவை அடங்கும்.

நீதிமன்றத்தின் முடிவு ஒரு திட்டமிட்ட அரசியல் தீர்ப்பாகும், இது நேரடியாக இந்து வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் மோடி அரசாங்கத்தின் கைகளில் விளையாடுகிறது, அது தீவிர வலதுசாரி சக்திகளை அணிதிரட்டி அதன் அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும். இந்த அரசு அடக்குமுறையின் முக்கிய இலக்குகள் தொழிலாள வர்க்கமும் கிராமப்புற உழைப்பாளர்களும் தான். அவர்கள் ஆளும் உயரடுக்கின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர் சார்பு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்களில் நுழைகிறனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் மோடி அரசாங்கத்தினால் பேரழிவுகரமான முறையில் கையாளப்பட்டு வருவது குறித்து கோபமும் அதிகரித்து வருகிறது, கடுமையாக குறைத்து கணக்கிடப்பட்ட உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை கூட 100,000 ஐ நெருங்குகிறது.

புதன்கிழமை தீர்ப்பு என்பது கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் இணைப்பாகும், அது மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இந்து வலதிடம் ஒப்படைத்தது. இந்த இடத்தை இந்து மற்றும் முஸ்லீம் குழுக்களிடையே பிரித்து வழங்க வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை ஒதுக்கி வைத்து, அந்த இடத்தில் கடவுள் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலை கட்ட நீதிமன்றம் பாஜகவுக்கு "உத்தரவிட்டது”- அதாவது அதன் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதாகும். இதற்கு இணங்க ஆகஸ்ட் 5 ம் தேதி இராமர் கோயிலுக்கு மோடி தனிப்பட்ட முறையில் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவால்-தூண்டப்பட்ட இந்து அதிதீவிரவாதிகளால் பாபர் மசூதி சட்டவிரோத அழிக்கப்பட்டதை செல்லுபடியாக்கியது.

மோடி அரசாங்கம், பாஜக மற்றும் இந்து வலதுக்கு ஒரு அபார சட்ட மற்றும் அரசியல் வெற்றியாக ஒரே மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டதை வழங்க உச்சநீதிமன்றம் வேண்டுமென்றே சட்டத்தை வளைத்தது. இருப்பினும் மசூதி இடிப்பு “சட்டத்தை மிக மோசமாக மீறிய செயல்” என்று அதன் நவம்பர் 2019 தீர்ப்பில் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொதுமக்களின் உரத்த கோரிக்கையின் காரணமாக 32 குற்றவாளிகள் மீதான கைவிடப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் நிலைநாட்ட நீதிமன்றம் நிர்ப்பந்திக்கப்பட்டது. சிக்கலான மற்றும் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை விரைவுபடுத்தவும் பயன்படுத்தப்படும் சிபிஐ நீதிமன்றத்திற்கு வழக்கை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

டிசம்பர் 6, 1992 நிகழ்வுகளை விசாரிக்க நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் தேசிய அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், 2009 இல் வெளியிடப்பட்ட அதன் இறுதி அறிக்கையில், லிபர்ஹான் கமிஷன் மசூதியை இடிக்கப்பட்டது "தன்னிச்சையாகவோ அல்லது தன்னார்வமாகவோ நடக்கவில்லை" என்று முடிவு செய்தது. மாறாக, அது ஏற்பாடு செய்யப்ட்டு “திட்டமிடப்பட்டது.” அத்வானி, ஜோஷி, பாரதி, அடல் பிஹாரி வாஜ்பாய் (1998 முதல் 2004 வரை இந்தியாவின் பிரதமர்), மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் மற்றும் உ.பி. முதலமைச்சர் கல்யாண் சிங் உட்பட 60 க்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் "நாட்டை வகுப்புவாத பிளவின் விளிம்பிற்கு இட்டுச் சென்றதற்காக" ”குற்றவாளிகள்" என்று பெயரிடப்பட்டனர். ”அவர்கள் இடிப்பதை தீவிரமாக அல்லது செயலற்ற முறையில் ஆதரித்தனர்." என்று அந்த அறிக்கை கூறியது.

புதன்கிழமை நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, கமிஷனுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதிபதி மன்மோகன் சிங் லிபர்ஹான், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இவ்வாறு கூறினார், “எனக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்தும், பாபர் மசுதி இடிப்பு நன்றாக திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகிறது... … உமா பாரதி திட்டவட்டமாக அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது.” எவ்வாறாயினும், சிபிஐ நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், வெறுமனே இவ்வாறாக குறிப்பிட்டார், "ஒவ்வொருவரும் தனது வேலையை நேர்மையாக செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீதிமன்றத்திற்கு வேறுபடுவதற்கான உரிமை உண்டு, அதன் அதிகாரம் அல்லது வேலை குறித்து எந்த சர்ச்சையும் இருக்க முடியாது.”

கடந்த நவம்பரின் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் போலவே, புதன்கிழமை தீர்ப்பு முழு இந்திய அரசியல் ஸ்தாபகமும் இந்து வகுப்புவாத பிற்போக்குதனத்தில் எவ்வாறு ஆழமாக மூழ்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அவற்றுடன் இணைந்த அமைப்புகளுக்கு மட்டுமல்ல, உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். அயோத்தியில் ராம் கோயில் கட்டும் இந்து அதிதீவிரவாத பிரச்சாரத்தில் தங்கள் கட்சியின் ஒத்துழைப்பை மூடிமறைக்க ஒரு தெளிவான முயற்சியில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்துள்ளார், "பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அரசியலமைப்பு மனப்பான்மையையும் கூட எதிர்க்கிறது."

யதார்த்தத்தில் கடந்த புதன்கிழமை தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மேல் உருவாக்கப்பட்டது. இதை காங்கிரஸ் வரவேற்றது. இது பாபர் மசூதி இருந்த இடத்தை அதனை சட்டவிரோதமாகக் சுக்கு நூறாக்கியவர்களுக்கு திறம்பட வழங்கியது இந்த நிகழ்வுப்போக்கில் இந்தியாவை வகுப்புவாத வன்முறையில் மூழ்கடித்தது.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இராமர் கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் பாஜகவுடன் இணைந்த ராம் மந்திர் அறக்கட்டளையை காங்கிரஸ், ஆவேசமாக தாக்கியது, ஏனெனில் ஆகஸ்ட் 5ல் தனது பூமி பூஜை (தரையில் உடைக்கும்) திட்டத்தில் மோடியுடன் பங்கேற்க தனது கட்சித் தலைமையை அழைக்கவில்லை என்பதற்காகவாகும்.

வகுப்புவாதத்தின் மிக மோசமான வடிவங்களுக்கு காங்கிரஸின் அடிபணிவு ஒன்றும் புதிதல்ல. 1980 களில், இந்து வலது பாபர் மசூதியை அதன் கிளர்ச்சியின் முக்கிய குவிமையமாக மாற்றத் தொடங்கியபோது, காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி அந்த இயக்கத்திற்கு ஆதரவளித்தார். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசுதி சட்டவிரோதமாக அழிக்கப்படுவது பற்றி முன்னதாகவே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும் அதனை தடுக்க பிரதமர் நரசிம்ம ராவ் எதுவும் செய்யவில்லை.

புதன்கிழமை வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு ஒரு மாறுபாடு அல்ல. மாறாக இது பரந்தளவில் வகுப்புவாத வன்முறையை, நேரடியாக ஏற்பாடு செய்யவில்லை என்றாலும் அதனை தூண்டிவிடுபவர்களாக செயல்படும் அரசியல் தலைவர்களை பொறுப்பாளிகளாக்க இந்திய அரசு நீண்டகாலமாகத் தவறியதன் மற்றொரு எடுத்துக்காட்டு -மிக முக்கியமாக 1984 இல் காங்கிரஸ் தூண்டிவிட்ட சீக்கிய-விரோத படுகொலை, 1992-93ல் பாபரி மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து உருவான முஸ்லீம்-விரோத வன்முறை அலை, மற்றும் 2002 இல் குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலை.

தற்போதைய பாஜக அரசாங்கமும், அதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையும், அதன் முஸ்லிம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) எதிர்ப்பாளர்களை கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு காரணமாக ஜோடிக்க சதி செய்து வருகின்றது. பிரதானமாக பாதிக்கப்பட்டவர்களாக முஸ்லிம்கள் இருந்த அந்தக் கலவரங்கள் உண்மையில் உள்ளூர் பாஜக தலைவர்களால் தூண்டப்பட்டன.

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) புதன்கிழமை நீதிமன்ற தீர்ப்பை "மோசடியானது" என்று விமர்சித்தது. இருப்பினும், எவ்வாறாயினும் அதன் முக்கிய கவலையாக இருந்தது என்னவென்றால் அது முதலாளித்துவ அரசின் நிறுவனங்களை மதிப்பிழக்க செய்யக்கூடும் என்பதாகும். "இந்த தீர்ப்பு அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு மதசார்பற்ற-ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்தும்" என்று சிபிஎம் எச்சரித்தது.

மோடி அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஸ்ராலினிஸ்டுகள் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை பெருவணிக காங்கிரஸ் கட்சி, பிற வலதுசாரி பிராந்தியவாத மற்றும் சாதி-கட்சிகள் மற்றும் இந்திய குடியரசின் பிற்போக்குத்தனமான அரசு நிறுவனங்களுக்கு அடிபணிய வைக்க உறுதியாக உள்ளனர், அவற்றை அவர்கள் தொடர்ந்து "மதச்சார்பற்ற" மற்றும் "ஜனநாயக" ரீதியானவை என்று புகழ்கின்றன. இந்த அழிவுகரமான கொள்கைதான் தொழிலாள வர்க்கத்தை செயலிழக்கச் செய்துள்ளது, இந்திய முதலாளித்துவத்தின் வெளிப்படையான தோல்வியிலிருந்து —மக்களின் மோசமான வாழ்நிலை மற்றும் பசியிலிருந்து— விடுவிப்பதற்கான ஒரு சோசலிச தீர்வை முன்னெடுப்பதை தடுக்கிறது — இதுதான் பாஜக மற்றும் இந்து மேலாதிக்க பிற்போக்குதனத்தின் வளர்ச்சிக்கான பாதையை திறந்து விட்டுள்ளது.