கிரேக்கத்தில், அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் வன்முறையையும் மாணவர்கள் எதிர்ப்பதால் பள்ளி ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன

Katerina Selin
10 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிரேக்கத்தில், கொரோனா வைரஸ் நோய்தொற்று விவகாரத்தை வலதுசாரி கிரேக்க புதிய ஜனநாயகக் கட்சி (New Democracy-ND) அரசாங்கம் குற்றகரமாக கையாளுவதை எதிர்த்து ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகி உட்பட பல கிரேக்க நகரங்களில் கடந்த வியாழனன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். “முகக்கவசம் மட்டுமே பாதுகாப்பு அல்ல – கல்விக்கு பணம் செலவிடுங்கள்!” மற்றும் “நாங்கள் செலவுகள் அல்ல, நாங்கள் தான் எதிர்காலம்!” என்பது போன்ற சில சுலோகங்கள் கோஷமிடப்பட்டதுடன், பதாகைகளிலும் காட்டப்பட்டன. போராட்டங்களுடன் சேர்ந்து, பொதுக் கூட்டங்களுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாணவர்கள் கொரோனா வைரஸிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான அதிக செலவினங்களுக்காக 2020 அக்டோபர் 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். (ஆதாரம்: Face-book/COVID-19 Solidarity/Menoume energoi)

இரண்டு வாரங்களுக்கு முன்பு பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொலைகார முடிவு எடுக்கப்பட்டதிலிருந்து, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் மாணவர்கள், பாழடைந்துபோன பள்ளி கட்டிடங்களில் கல்வி பயிலுமாறு தங்களை மீண்டும் கட்டாயப்படுத்துவதை எதிர்த்துப் போராடுகின்றனர், ஏனென்றால் அங்கு போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையில் கொரோனா வைரஸ் நோய்தொற்றின் கொடிய அச்சுறுத்தலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். கொரோனா வைரஸ் வெடித்து பரவும் காரணத்தால் 141 பள்ளிகள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும், நூற்றுக்கணக்கான பள்ளிகள் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், அதிகபட்சமாக 15 மாணவர்களை மட்டும் கொண்ட மிகச்சிறிய வகுப்புக்கள், மேலும் கூடுதலாக ஆசிரியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை பணியமர்த்துவது, குறுகிய பாட நேரம், கூடுதல் கட்டிடங்களை கல்விக்கு பயன்படுத்துவது, அத்துடன் பாதுகாப்பான, மலிவான மற்றும் தொடர்ந்து இயங்கும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆர்ப்பாட்டங்களில் அதிகரித்தளவில் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் புள்ளிவிபரங்கள் விரைந்து அதிகரித்து வரும் நிலையில் கூட, வரும் நாட்களில் பல்கலைக்கழகங்களும் திறக்கப்படவுள்ளன என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, கூடுதல் கட்டிடங்கள் மற்றும் விரிவுரை அரங்குகளுக்கு ஏற்பாடு செய்வது, இலவச கொரோனா வைரஸ் பரிசோதனை, மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை பணியமர்த்துவது போன்ற கோரிக்கைகள் உட்பட, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, தெசலோனிகியில் உள்ள அரிஸ்டாட்டில்ஸ் பல்கலைக்கழகத்தில் (Aristotiles University) தலைமையதிகாரியின் அலுவலகத்தை திங்களன்று மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு தயாராக இருப்பது அரசாங்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 700 பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் உண்மையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த இயக்கத்தை கொடூரமான சக்தி கொண்டு நசுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஏனென்றால் இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் பரவிவிடக் கூடாது என்பதே. இதைச் செய்வதற்கு அவர்கள் ஊடகப் பிரச்சாரத்தையும், வலதுசாரி கிளர்ச்சியையும் மட்டும் நம்பியிருக்காமல், அச்சுறுத்தலையும், சரீர ரீதியான வன்முறையையும் கூட பயன்படுத்துகின்றனர்.

சின்டக்மா சதுக்கத்தில் நடந்த முக்கிய பேரணியில், மாணவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், 17 மற்றும் 20 வயதுடைய இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். மேலும், தற்போது ஆக்கிரமிப்பில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாய இணையவழி வகுப்புகளை அறிமுகப்படுத்தி, கல்வி அமைச்சகம் விடுத்துள்ள உத்தரவு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பள்ளி ஆக்கிரமிப்புக்களில் ஈடுபட்டதன் காரணமாக மாணவர்கள் தவறவிட்ட பாட நேரங்கள் சனிக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் மற்றும் கள நாட்களில் ஈடுசெய்யப்படவுள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் நடந்த நாளில், ND கல்வி அமைச்சர் நிகி கெராமியஸ் (Niki Kerameus) ஒரு படி மேலே சென்று, பள்ளி ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடும் அனைத்து மாணவர்களும் இணையவழி வகுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டு, வகுப்பைத் தவறவிட்டவர்கள் என்று குறிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். பள்ளி ஆக்கிரமிப்புக்களால் வகுப்புக்களை மாணவர்கள் தவறவிட்டது பற்றி மாணவர்களின் அறிக்கை அட்டைகளின் நடத்தை மதிப்பீட்டில் சேர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது, அதிலும் தரவு பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்பை மீறுவது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் தான் நடத்தை மதிப்பீட்டு விதிமுறைகள் வகுப்பட்டது என்றாலும் அவ்வாறு செய்யப்படவுள்ளது. மேலும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் மாணவர்களை அவர்களது அடுத்த கல்வி ஆண்டிற்கு முன்னேற அனுமதிக்காமல் தடுக்கக்கூடும். கிரேக்கத்தில், (7 முதல் 9 வரையிலான உடற்பயிற்சிக்கூட (gymnasium) வகுப்புக்கள் மற்றும் 10 முதல் 12 வரையிலான தொழிற்கல்விக்கூட (lyceum) வகுப்புக்கள் உட்பட) உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் 114 மணி நேரங்களுக்கான வகுப்புக்களை தவறவிட்டால், அதே ஆண்டில் அவர் மீண்டும் கல்வி பயில வேண்டும் எனத் தெரிகிறது.

ஆர்ப்பாட்டங்களில் மிகவும் தீவிரமாகவுள்ள மாணவர்களை அடையாளம் காணவும், அவர்களை கண்டிக்கவும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களைப் பயன்படுத்த கெராமியஸ் விரும்புகிறார். “எந்தெந்த மாணவர்கள் தனிப்பட்ட வகுப்புகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என்பது பற்றி ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் நன்கு தெரிந்திருக்கும்,” என்று அவர் கூறுகிறார். மேலும், கிரீட் தீவில் சானியாவில், ஆக்கிரமிப்புக்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பற்றிய விரிவான தகவல்களையும், அவர்களது சட்டபூர்வ பாதுகாவலர்கள் பற்றிய விபரங்களையும் வழங்கக் கோரி பள்ளிகளுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் அதிகாரிகள் இரக்கமற்ற வகையில் வன்முறையை பிரயோகித்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு பொலிஸ் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. “கோவிட்-19 ஒற்றுமை” (Menoume energoi - We will stay active) என்ற பெயரிலான கிரேக்க முகநூல் பக்கம், கடந்த வாரம், ஏதென்ஸின் எக்சார்ச்சியா (Exarcheia) மாவட்டத்தில் 46வது தொழிற்கல்விக் கூடத்தில் மாணவர்கள் தங்களது பள்ளியில் ஒரு பதாகையை தொங்கவிட முயன்றபோது பொலிசாரால் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், “சாதாரண உடை அதிகாரிகள் மற்றும் சிறப்பு OPKE பிரிவின் உறுப்பினர்களால், அஸ்கிலிபியோ மற்றும் இப்போக்ரடஸ் வீதிகளில் உள்ள பள்ளியைச் சுற்றி மாணவர்கள் துரத்தப்பட்டனர். அப்போது, மாணவர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று அச்சுறுத்தி அவர்கள் காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்கள் அவர்களது சட்டபூர்வ பாதுகாவலர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இரண்டு மணி நேரம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தனர்,” என்று முகநூல் பதிவு தெரிவித்தது.

அரசாங்கமும் அதன் பொலிஸ் குண்டர்களும் நடத்திய இந்த முன்னணி தாக்குதல் பரவலான சீற்றத்தையும் கோபத்தையும் எதிர்கொண்டது. மாணவர்கள் ஆக்கிரமிப்புக்களைத் தொடரவும், இணையவழி பொதுக் கூட்டங்களை நடத்தவும் உறுதிபூண்டுள்ளனர். தொற்றுநோய்க்கு முன்னர் மாணவர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து வந்த மாணவர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஏதென்ஸ் மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், தலைநகருக்கு அருகிலுள்ள பிராமா மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்விக்கூடத்தின் மாணவருமான சாந்தோஸ் ஜெர்மானகோஸ் (xanthos Germanakos), கடந்த வெள்ளிக்கிழமை ANT1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காவல்துறையின் நடவடிக்கைகள் முற்றிலும் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கூறினார். மேலும், “அடக்குமுறை மற்றும் பயங்கரவாதத்தை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்றும் அவர் கூறினார். அவரது பள்ளியில், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 170 மாணவர்களில் 125 பேர் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பள்ளி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஊடக பிரச்சாரத்தை அவர் நிராகரித்ததோடு, “சமூகத்தில் ஒவ்வொரு இளைஞனுக்கும் தனது மற்றும் தனது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காகவும், அத்துடன் உயர்மட்ட கல்விக்காகவும் போராட உரிமையும் கடமையும் உள்ளது” என்று வலியுறுத்தினார்.

கிரேக்கத்தில் பல குடும்பங்களில் பேரழிவுகர சமூக நிலைமைகள் எதிர்கொள்ளப்படும் நிலையில், வெறுமனே இணையவழி கற்றலுக்கு மாறுவதற்கு பதிலாக, பள்ளிகளிலும் கல்வி முறையிலும் கணிசமாக முதலீடு செய்ய மாணவர்கள் கோருகின்றனர். அதிலும் “30 சதவிகித மாணவர்களுக்கு இணையவழி அணுகலுக்கான வசதி இல்லை என்பதை நன்கு அறிந்தே அமைச்சகம் இதை புறக்கணிக்கிறது” என்று ஜெர்மானகோஸ் குறிப்பிட்டார். கல்விக்கான மாணவர்களின் உரிமையை நிறுத்தி வைப்பது அரசாங்கமே தவிர, மாணவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்.

மாணவர்களிடமிருந்து ஒரு பதாகை, "முகக்கவசம் மட்டும் பாதுகாப்பு அல்ல, கல்விக்கும் பணம் செலவிடுங்கள்!" (ஆதாரம்: Facebook / COVID-19 Solidarity / Menoume energoi)

மாணவர்கள் மிரட்டலுக்கு பணியாமல் தொடர்ந்து தைரியமாக தங்களது உரிமைகளை கோரி வரும் அதேவேளை, தொழிற்சங்கங்கள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வழிகளையே தீவிரமாக நாடுகின்றன. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கமான OLME, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும், இணையவழி வகுப்புகளில் பங்கேற்க மறுக்கவிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இது ஆசிரியர்களிடையே நிலவும் கோபமான மனநிலைக்கு அளிக்கப்படும் பதிலிறுப்பாக உள்ளது. தொழிற்சங்கங்கள் பெருகிவரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதுடன், கொடிய வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான ஒரு பரந்த அணிதிரட்டலையும் தடுக்கின்றன.

OLME இன் வலதுசாரி நோக்குநிலைக்கான ஒரு வெளிப்படையான உதாரணம் என்னவென்றால், அதன் தலைவரான Theodoros Tsouchlos, வலதுசாரி தீவிரவாத பத்திரிகையாளரும் ND பாராளுமன்ற துணைத் தலைவருமான Konstantinos Bogdanos க்கு அளித்த நேர்காணல் ஆகும். போக்டனோஸ் முன்னர் மாணவர்களை “பாம்புகள்” என்று கண்டித்ததுடன், ஆக்கிரமிப்புகளை “சட்டவிரோதமானது” என்று விவரித்தார். இந்த முறை, மாணவர்கள் குற்றகரமானவர்கள் என்றும், வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் மொத்தமாக குற்றம்சாட்டினார்.

ND இன் தொழிற்சங்கப் பிரிவான DAKE இன் உறுப்பினரான Tsouchlos, போக்டனோஸை “சிறந்த சமூகவியலாளர், Panteion பல்கலைக்கழகத்தின் பட்டதாரி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்” என்று பாராட்டியதுடன், இந்த பள்ளி ஆக்கிரமிப்பு விவகாரங்களைத் தீர்ப்பதற்கு அவரது ஆதரவு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

OLME இன் முக்கிய அக்கறை பள்ளிகள் தொடர்ந்து திறந்திருப்பதை உறுதி செய்வதாகும் என்று Tsouchlos வலியுறுத்தினார். இருந்தாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் கணிகாணிப்பது அவசியமாகிறது என்கிறார். இது மேலும் எதிர்ப்பைத் தூண்டக்கூடும் என்று Tsouchlos அஞ்சுவதால், இந்த எதிர்ப்புக்களை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும், “நாங்கள் மாணவர்களுக்கான வகுப்புக்களை உறுதி செய்ய வேண்டும், அப்போது தான் முழு சூழ்நிலையையும் அமைதிப்படுத்த முடியும்” என்கிறார்.

நேர்காணலின் முடிவில், பள்ளி ஆக்கிரமிப்புக்களை OLME எதிர்ப்பதாக அவர் ஒப்புக்கொண்டார், மேலும் கெராமியஸூடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கம் இரண்டு வாரங்களாக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். OLME பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே, இந்த சூழ்நிலைக்கான தீர்வுகளை எட்டுவதில் அது ஒரு நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்று Tsouchlos கூறினார். நேர்மறையான பாத்திரம் வகிப்பது மற்றும் ஒரு தீர்வை எட்டுவது தொடர்பான குறிப்புக்கள் என்பது இந்த ஒன்றை மட்டுமே குறிக்கும்: அதாவது ஆர்ப்பாட்டங்களை நசுக்கவும், கட்டுப்படுத்தவும் OLME தயாராகவுள்ளது, அப்போது தான் ஆர்ப்பாட்டங்கள் காட்டுத்தீ போல பரவாது என்பதுடன், போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கமும் இழுக்கப்படமாட்டாது என்பதாகும்.

உண்மை என்னவென்றால், Tsouchlos, வலதுசாரி தீவிரவாதியான போக்டனோஸூடன் விரிவாகப் பேசுவதுடன், அவரது உதவி மற்றும் ஆலோசனைக்காக முறையிட தொழிற்சங்கங்கள் மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Greece-KKE) மற்றும் போலி-இடது சிரிசா கட்சி உள்ளிட்ட கட்சிகள் பற்றியும் பெரியளவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த கட்சிகளின் இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் செல்வாக்குப் பெற முயன்று வருகின்றன, அதன் மூலமாகத்தான் முற்றிலும் தேசியவாத கண்ணோட்டத்துடன் அவர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகின்றனர். கொடிய வகையில் பள்ளிக்கும் பணியிடங்களுக்கும் மீண்டும் திரும்பச் செய்வதற்கு எதிரான எதிர்ப்பு எங்கும் அதிகரித்து வருகிறது, என்றாலும் தொழிற்சங்கங்களோ ஐரோப்பிய அளவிலான பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவோ அல்லது உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கவோ முயற்சிக்கவில்லை.

ஐரோப்பா முழுவதிலுமுள்ள KKE மற்றும் சிரிசாவின் துணை அமைப்புக்களின் பிரசுரங்கள் அவற்றின் முதலாளித்துவ சகாக்களைப் போல ஆக்கிரமிப்புக்கள் பற்றி எதுவும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருக்கின்றன. அது எதனால் என்று எங்களுக்குத் தெரியும். ஸ்பெயினில் பொடேமோஸ் மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி போன்ற கட்சிகள், பள்ளிகளையும் பணியிடங்களையும் மீண்டும் திறப்பதில் தாமே ஈடுபட்டன, அப்போதுதான் முதலாளித்துவ பொருளாதாரம் தொடர்ந்து இயங்க முடியும் என அவை கருதுகின்றன. கீழ் மட்டத்திலிருந்து எழும் புரட்சி என்பது, அவர்கள் பரிந்து பேசும் நடுத்தர வர்க்கத்தின் சலுகைகள் மற்றும் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதாலேயே அவர்கள் அஞ்சுகின்றனர்.

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், மற்றும் தொழிலாளர்களும் இந்த அனுபவங்களிலிருந்து தேவையான படிப்பினைகளைப் பெற வேண்டும். பள்ளிகளிலும் பணியிடங்களிலும் பாதுகாப்பான நிலைமைகளுக்காகவும், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளிலிருந்து சுயாதீனமான எதிர்ப்புடன் கூட சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராகவும் அவர்களது போராட்டங்களை அவர்கள் மட்டுமே நடத்த முடியும். அவர்கள் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்துடன் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதற்காக போராட வேண்டும்.

குறிப்பாக கிரேக்கத்தில், தொற்றுநோய் சமீபத்திய தசாப்தங்களின் சமூக வீழ்ச்சியை பரவலாக்கி துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுக் கல்வித் துறையில், 20,000 வேலைகள் நீக்கப்பட்டுவிட்டன என்பதுடன், அதற்கான வரவு-செலவுத் திட்டமும் 27 சதவிகிதமாக குறைக்கப்பட்டுவிட்டது. இந்த தாக்குதல், பள்ளிகளை பேரழிவிற்குள்ளாக்கும் மற்றும் குடும்பங்களை வறுமைக்குள் தள்ளும் விளைவுகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஒரு கடைசி உதாரணமாக, கிரீட்டிலுள்ள ஹெராக்லியோனில் 100 ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்ட ஒரு பள்ளி பெற்றோர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தில் ஏற்பட்ட பேரழிவுகர நிலைமைகளுக்கு எதிராகவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், அதாவது தற்காலிக தீர்வாக மட்டுமே கருதப்பட்டு, 10 ஆண்டுகளாக இந்த கட்டிடம் அப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட தாயாரில் ஒருவரான மரியா மெர்கவுலிடி (Maria Merkoulidi), Mega தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இவை மூன்றாம் உலக நிலைமைகளாகும். கட்டிட அனுமதி இல்லாத, வெப்பமூட்டல் வசதியில்லாத, மற்றும் ஊனமுற்றவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதியில்லாத நிலைமைகளில் எங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குளிர்காலத்திலும், கட்டிடத்திற்குள் வெள்ளம் ஏற்படுகிறது, மேலும் போதுமான மின்சாரம் இல்லாத நிலையில் பள்ளிகளை மூட வேண்டியுள்ளது, மேலும் மின்சார அதிர்ச்சிகள் ஏற்படும் அபாயமும் அங்கு உள்ளது. அத்துடன், கூரை கசிவும் ஏற்படும்” என்று கூறினார். மேலும், கொரோனா வைரஸ் எந்தளவிற்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது என்பது பற்றியும் அந்த தாய் விளக்கினார்.

ஆனால் மாணவர்கள் தங்களது போராட்டங்களில் பலமுறை வலியுறுத்தியுள்ளது போல, அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார பாதுகாப்புக்காக பில்லியன்களை செலவழிக்கவில்லை, மாறாக மறுஆயுதமயமாக்கலுக்கும் போருக்கும் செலவிடுகிறது. பிரான்சில் இருந்து 16 ரஃபால் போர் விமானங்களை அநேகமாக 4 பில்லியன் யூரோக்களுக்கு வாங்குவதற்கு அரசாங்கம் அறிவித்துள்ளது, மேலும் துருக்கிக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களையும் முடுக்கி வருகிறது. கூடுதலாக, இராணுவ சேவை மேலும் 10 மாதங்களுக்கு அதிகரிக்கப்படவும், இராணுவ சேவைக்கான வயது 18 ஆக குறைக்கப்படவும் உள்ளது.

கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சரான Nikos Panagiotopoulos, கிரீட்டில் நேட்டோவின் சவுடா (Souda) தளத்தை வலுப்படுத்தும் வகையிலான அமெரிக்கா உடனான ஒரு புதிய ஒப்பந்தத்தை முன்வைத்தார். இந்த ஒப்பந்தத்திற்கு ND மற்றும் முன்னாள் சமூக ஜனநாயகவாதிகளான Kinal இயக்கம் ஆகியவற்றின் ஆதரவு கிடைத்தது மட்டுமல்லாமல், 2015-2019 காலகட்டத்தில் தான் ஆட்சியில் இருந்தபோது ட்ரம்ப் நிர்வாகத்துடனான ஒரு உடன்படிக்கைக்கு அடித்தளம் அமைத்த சிரிசாவும் ஆதரவளித்தது. சிரிசாவின் அரசாங்க காலத்தில், கிரீட்டில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் கணிசமாக வளர்ந்தன. மேலும், இந்த தளம் போர் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருவதான கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் நேட்டோ நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய தளவாட மற்றும் புவிசார் அரசியல் பாத்திரத்தை வகிக்கிறது.