இந்தியா: 13,000 ஆசிரியர்கள் வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை கேட்டு டெல்லியில் வேலைநிறுத்தப் போராட்டம்; பாகிஸ்தானில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

12 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: டெல்லி மாநகராட்சி ஆசிரியர்கள் வழங்கப்படாத ஊதியத்திற்காக வேலைநிறுத்தப் போராட்டம் செய்கிறார்கள்

வடக்கு டெல்லி மாநகாராட்சியிலிருந்து சுமார் 9,000 ஆசிரியர்களும் மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சியிலிருந்து 4,200 ஆசிரியர்களுத் திங்களன்று செலுத்தப்படாத ஊதிய நிலுவையை வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். வடக்கு டெல்லி மாநகராட்சி ஆசிரியர்களுக்கு மே மாதமும், கிழக்கு மாநகராட்சி ஆசிரியர்களுக்கு யூன் மாதமும் இறுதியாக சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஆசிரியர்கள் குழு வடக்கு டெல்லி மாநகராட்சி தலைமை அலுவலகங்களில் மூன்று வாரங்களுக்கு மேலாக தினமும் இரண்டு மணிநேரம் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். சம்பளம் வழங்கப்படாத நிலையிலும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் பணியில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் கூறினார்கள். தங்களுடைய நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைவில் வழங்கவில்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக அவர்கள் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

டெல்லி மாநில அரசால் நிதியளிக்கப்படும் 59 கல்லூரிகளுக்கு நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 14 கல்லூரிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போதைய நிதி அளவுகள் போதுமானதாக இல்லை என்றும் வேலைநிறுத்தம் செய்தவர்கள் புகார் கூறினர்.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் செப்டம்பர் 16 அன்று ஒரு மூன்றுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

ஹரியானா தொழிற்துறை பயிற்சித் தொழிலாளர்கள் குறைந்தளவு ஊதியத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

குறைந்தளவு சம்பளம் மற்றும் வேலை பாதுகாப்பின்மையை எதிர்ந்து செப்டம்பர் 27 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் இன் தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தின் சுமார் 150 வெளியிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் (outsourced) பிரிவு 4 ஒப்பந்த தொழிலாளர்கள் நகரில் அணிவகுத்துச் சென்று போராட்டத்தை நடத்தினார்கள். அவர்கள் தொழில்நுட்ப கல்வி அமைச்சரிடம் மனு ஒன்றினை கொடுத்துள்ளார்கள்.

தொழிற்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு பிரிவு 4 ஊழியர்களை வெளியிலிருந்து வேலைக்கு நியமிப்பதில் ஊழல் இருப்பதாக ஹரியானா வெளியிலிருந்து வேலைக்கு அமர்த்தும் அனைத்து ஐடிஐ தொழிலாளர்கள் அமைப்பு கூறுகிறது. இத்தகைய தொழிற்துறை பயிற்சி நிறுவனத் தொழிலாளர்கள் அவர்களுடைய சம்பளத்தில் 40 சதவீதத்தை அவர்களுடைய ஒப்பந்ததாரருக்கு கொடுக்கவேண்டும் அல்லது அவர்களுடைய வேலையை இழக்க நேரிடும் என கட்டாயப்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஊதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், அவர்களின் முதலாளிகள் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் அரசு காப்பீட்டு பங்களிப்பு தேவைகளுக்கு வழங்க அரிதாகத் தான் இணங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது..

கர்நாடகா நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர வேலை கோருகின்றனர்

கர்நாடகா மாநிலத்தின் மைசூர் நகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே புதன்கிழமையன்று நிரந்தர வேலைகள் மற்றும் சம ஊதியம் மற்றும் நிரந்தர ஊழியர்களாக்குவதற்கான நிபந்தனைகளை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். வண்டி ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உட்பட வெளியிலிருந்து அமர்த்தப்படும் தொழிலாளர்கள் அதே தொழிலைச் செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மிக மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது என்று அவர்கள் கூறினார்கள்.

மைசூர் நகர பாலிகே கயம் ஹகு குட்டிகே பூரகர்மிகாரா மகா சங்கத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களுடைய கோரிக்கைகள் மனுவொன்றினை மைசூர் நகராட்சி ஆணையரிடன் கொடுத்தனர்.

கேரளாவில் வீட்டுப் பணியாளர்களை தொழிலாளர்கள் சீர்திருத்த மசோதாவில் சேர்க்கவேண்டும் என கோருகின்றனர்

கேரளா, திருவனந்தபுரம் வீடுகளில் பணிபுரியும் பணியாளர்கள் செப்டம்பர் 26 அன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்கள் சீர்திருத்த மசோதாவில் தங்களை சேர்க்கவில்லை என்பதற்காக மத்திய அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சமூக பாதுகாப்பு, வேலைத்தள பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு மற்றும் வேலை நிலைமைகளில் மேம்பாடு போன்றவற்றிற்கான ஏற்பாடுகள் அந்த சீர்திருத்த மசோதாவில் உள்ளடங்கியிருக்கிறது.

தொழிலாளர் குறியீட்டில் வீடுகளில் பணிபுரியும் பணியாளர்களை முறையாக வரையறைப்படுத்தவில்லை என்று சுயதொழில் மகளீர் சங்கம் கூறியுள்ளது. நகர்ப்புற ஊழியர் உத்தரவாத திட்டம் மற்றும் கோவிட்-19 காரணமாக இழந்த வேலை நாட்களுக்கு இழப்பீடு ஆகியவற்றை செயல்படுத்தவேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.

மும்பாய் கோவிட்-19 சிகிச்சை மைய பணியாளர்கள் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம்

பிரஹன்மும்பை மாநகராட்சியின் நெஸ்கோ-கோவிட்-19 சிகிச்சை மையத்தின் துப்புரவு மற்றும் சிற்றுண்டிச்சாலைத் தொழிலாளர்கள் செப்டம்பர் 24 மற்றும் 25 வழங்கப்படாத நிலுவை ஊதியத்திற்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மூத்த அதிகாரிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலும் அதனால் தேவையான ஆவணங்களில் கையெழுத்து பெற முடியாததால் நிலுவை ஊதியங்களை வழங்க முடியவில்லை என்று நெஸ்கோ நிர்வாகம் கூறியுள்ளது. மோசமான COVID-19 தொற்றுநோய் மற்றும் சேவையின் தேவை குறித்து அக்கறை கொண்டிருந்த தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

பங்களாதேஷ் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அக்டோபர் 5 வேலைநிறுத்தப் போராட்டம்

பங்களாதேஷ் ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தின் மாத ஊதிய ஆணைத் திட்டத்தில் [Monthly Pay Order (MPO) scheme] அனைத்து தனியார் ஆசிரியர்களையும் சேர்க்க வலியுறுத்தி அக்டோபர் 5 அன்று நடத்தவிருக்கும் பேரணியில் கலந்துகொள்ள நாடுமுழுவதிலுமுள்ள ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. டாக்காவில் கடந்த ஞாயிறன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த அழைப்பை வெளியிட்டனர். கோவிட்-19 தொற்றுபரவலுக்கு பதிலளிக்கும்விதமாக மார்ச் 17 இல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசாங்கம் மூடியிருந்த நிலையில் மாத ஊதிய ஆணைத் திட்டத்தில் இல்லாத பல ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

வரி அதிகரிப்பு தொடர்பாக பங்களாதேஷ் பீடி தொழிலாளர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

நான்கு மாதத்தில் நாலாவது தடவையாக, பீடி (கையால் சுருட்டப்பட்ட சிகரெட்) தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில் பீடி தொழிலுக்கு 28.2 சதவீத வரி விதிக்கும் முடிவை பங்களாதேஷ் அரசு மாற்றியமைக்கவேண்டும் என கோரி இந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள டாங்கைல் பிரஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை, பங்களாதேஷ் பீடி ஸ்ராமிக் கூட்டமைப்பைச் சேர்ந்த பீடி தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகஸ்ட் மாதத்தில் ஒரு போராட்டத்தையும் ஜூன் மாதம் இரண்டு போராட்டத்தையும் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை நடந்துள்ளது.

பீடி தொழிற்துறையை "கொல்ல" அரசாங்கம் முயற்சிப்பதாக யூனியன் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், மற்ற சிகரெட்டுகளுக்கு உத்தேசித்திருக்கும் வரி அதிகரிப்பு 5.14 சதவீதம் மட்டுமே என்று சுட்டிக்காட்டினர். புதிய வரியானது ஒரு பீடி பாக்கெட்டின் விலையை அதிகரித்துள்ளது, இதனால் அவர்களின் சிகரெட்டுகள் போட்டியிடமுடியாதவைகளாகின்றன என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறினர். இந்தத் தொழிலில் 400,000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

பாகிஸ்தான்: கராச்சியில் அரசு மருத்துவர்கள் போராட்டம்

சிந்து மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கராச்சி பிரஸ் கிளப்பிற்கு வெளியே செவ்வாய்க்கிழமை ஒப்பந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்துதல், கொடுப்பனவுகளை வழங்கத் தவறியது மற்றும் கோவிட் -19 ஒப்பந்தம் செய்த சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு குடை தொழிற்சங்கமாக இயங்கும் சிந்து டாக்டர்கள் தொழிற்சங்கம், கோவிட் பாதிப்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, சரியான நேரத்தில் பதவி உயர்வு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரப்படுத்தவும் கோரியது. டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால், முதலமைச்சரின் இல்லத்திற்கு வெளியே உட்பட பல எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தப்போவதாக தொழிற்சங்கம் அச்சுறுத்தியுள்ளது.