சமூக சமத்துவமின்மையின் புறநிலை வேர்கள்

Nick Beams
13 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொடர்ந்து அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையின் வெடிப்பார்ந்த விளைவுகளை குறித்து அமெரிக்காவிலும் சர்வதேச அரசியலிலும் பதட்டம் அதிகரித்து வருகிறது. ஆளும் நிதியியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்குகளின் செல்வவள திரட்சி கோவிட்-19 தொற்றுநோயின் போதும் தொய்வின்றி தொடர்வதை உறுதிப்படுத்த அவர்களுக்கு ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதன் விளைவாக இப்போது சமூக சமத்துவமின்மை தீவிரமடைந்து வருகிறது.

வர்க்கப் போராட்ட வெடிப்பின் தலையை துண்டித்துவிடும் முயற்சியாக முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏதேனும் ஒரு சில சீர்திருத்தத்தை முன்னெடுக்கலாம் என்ற ஏமாற்று வாதத்தை முன்னெடுப்பதற்கான கடும் முயற்சிகளும் இத்துடன் சேர்ந்துள்ளன.

New apartment buildings are under construction overlooking Central Park, Tuesday, April 17, 2018, in New York. (AP Photo - Mark Lennihan)

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஊடக அரணாக விளங்கும் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையும், பிரதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சஞ்சிகையான Foreign Affairs பத்திரிகையில் மற்றொன்றுமாக இரண்டு சமீபத்திய கட்டுரைகள் இத்தகைய போக்குகளை வெளிப்படுத்துகின்றன.

நீண்டகாலமாக இருந்து வரும் அமெரிக்க சிந்தனைக் குழாம் RAND Corporation பணியாளர்களால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளை, டைம்ஸ் பத்திரிகையின் ஒரு பிரதான கட்டுரை செப்டம்பர் 14 இல் வெளியிட்டது, அது கடந்த 45 ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிகரித்து வந்துள்ள சமூக சமத்துவமின்மையின் பாரிய தாக்கத்தை எடுத்துக்காட்டியது.

அந்த காலகட்டத்தில் வருமானம் ஈட்டுபவர்களில் அடிமட்ட 90 சதவீதத்தினரிடம் இருந்து ஏறக்குறைய 50 ட்ரில்லியன் டாலர் அமெரிக்க சமூகத்தின் உயர்மட்ட அடுக்குகளுக்கு உறிஞ்சப்பட்டிருந்ததாகவும், அதுவும் முக்கியமாக அது உயர்மட்ட 1 சதவீதத்தினருக்குச் சென்றிருந்ததாகவும் RAND அமைப்பு கண்டறிந்தது. 1945 இல் இருந்து 1975 வரையிலான காலகட்டத்தில் என்ன வருமான பகிர்வு இருந்ததோ அதுவே இருந்திருந்தால், பின்னர் 2018 இல் அடிமட்டத்திலுள்ள 90 சதவீத அமெரிக்க தொழிலாளர்களுக்குக் கூடுதலாக 2.5 ட்ரில்லியன் டாலர் வருமானம் கிடைத்திருக்கும் என்பதையும் அந்த அமைப்பு எடுத்துக்காட்டியது.

டைம்ஸ் செய்தி குறிப்பிட்டவாறு: “இந்த தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அண்மித்து 12 சதவீதத்திற்குச் சமம் —இது நடுத்தர குடும்ப வருமானத்தை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக்க போதுமானது— 10 பிரிவுகளாக பகுக்கப்படும் மக்கள்தொகை அடுக்கில் அடிமட்ட அடுக்கின் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு மாதத்திற்கு 1,144 டாலர் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்க போதுமானது.”

அந்த அறிக்கை "வர்க்கம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும் —ஒவ்வொரு சமூக பிரச்சினையையும் இனரீதியில் காட்டுவதற்காக நியூ யோர்க் டைம்ஸ் தலைமையில் முன்னெடுக்கப்படும் முன்முயற்சிக்கு மத்தியில், இது அரசியல் பகுப்பாய்வில் ஏதோவொரு சம்பிரதாயமாக ஆகியுள்ளது என்றாலும்— RAND ஆராய்ச்சியாளர்கள் கார்டல் சி. பிரைஸ் மற்றும் காத்ரின் எட்வார்ட் ஆகியோரால் கொடுக்கப்பட்ட அந்த புள்ளிவிபரங்கள், வருமான பகிர்வின் தீர்மானகரமான விபரங்களைத் தெளிவுபடுத்தியது. “உங்கள் இனம், பாலினம், கல்வி தகுதி, அல்லது வருமானம் என்னவாக இருந்தாலும், நீங்கள் 100 பிரிவுகளாக பகுக்கப்படும் மக்கள்தொகை அடுக்கில் அடிமட்டத்தில் 90 ஆவது அடுக்கில் சம்பாதிப்பவராக இருந்தால், 1975 க்குப் பின்னர் இருந்து உயர்மட்ட வருமான மறுபங்கீடு தயவுதாட்சண்யமின்றி உங்கள் பைகளில் இருந்து தான் வருகிறது என்பதை அந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன,” என்றது குறிப்பிட்டது.

1985 இல் வருமானம் ஈட்டிய ஒரு நடுத்தர குடும்ப ஆண் தொழிலாளருக்கு அவர் குடும்ப வீட்டுவசதி, மருத்துவக் கவனிப்பு மற்றும் கல்விக்குச் செலவிட 30 வாரகால வருமானம் தேவைப்பட்டது, இது 2018 வாக்கில் ஓர் ஆண்டுக்கும் கூடுதலான காலமான 53 வாரங்களாக உயர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டிய American Compass சிந்தனைக் குழாமின் மற்றொரு ஆய்வையும் டைம்ஸ் அறிக்கை மேற்கோளிட்டது.

“2018 இல், திருமணமான இரண்டு முழு நேர தொழிலாளர்களது குடும்பங்களின் கூட்டு வருமானம், சமத்துவமின்மை ஒரே அளவாக இருந்திருந்தால், ஒரேயொருவர் எந்தளவு சம்பாதித்திருந்திருப்பாரோ அந்த குடும்பத்தின் வருமானத்தை விட சற்றுத்தான் அதிகமாக இருந்திருக்கும். இப்போது இரண்டு பேர் சம்பாதிக்கும் குடும்பங்களில் அவர்களின் உணவுப் பங்கு சுருங்கி வருவதற்கு மத்தியில் அவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் அதேவேளையில் பணவீக்க விகிதத்தில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்துள்ள அவர்களின் வீட்டுவசதி, மருத்துவக் கவனிப்பு, கல்வி, குழந்தைகள் கவனிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றுக்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள்,” என்றது குறிப்பிட்டது.

அந்த பணம் உயர் வருவாய் அடுக்குகளுக்குப் போய் சேர்ந்துள்ளது. 1975 இல் மொத்த வருவாயில் உயர்மட்ட 1 சதவீதத்தினரின் பங்கு 9 சதவீதத்திலிருந்து 2018 இல் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதேவேளையில் அடிமட்டத்திலுள்ள 90 சதவீத மக்களின் பங்கு 67 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் வாடகைக்குக் குடியிருப்போரில் 47 சதவீதத்தினர் விளிம்பு நிலையில் வாழும் நிலைமையில் போய் முடிந்துள்ளதுடன், 40 சதவீத குடும்பங்கள் 400 டாலர் அவசர தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர், மக்களில் 55 சதவீதத்தினருக்கு எந்த ஓய்வூதிய சேமிப்புகளும் இல்லாமல் உள்ளனர், 72 மில்லியன் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை அல்லது குறைவான காப்பீட்டில் இருக்கிறார்கள் மற்றும் கூடுதல் செலவுகள் என்றழைக்கப்படுவதை கொடுக்க முடியாமல் உள்ளனர், மில்லியன் கணக்கானவர்களுக்கு உயிர்வாழ்வதற்கு வேறெந்த வழியும் இல்லாததால் கோவிட்-19 ஆல் பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களை வழங்கி உள்ள டைம்ஸின் அந்த அறிக்கை பின்னர் அவற்றின் அடியிலிருக்கும் காரணங்களையும், அதை தடுக்க அவற்றிலிருந்து பெற வேண்டிய அவசியமான அரசியல் தீர்மானங்களையும் மூடிமறைக்க முனைந்தது. “வருவாய், செல்வவளம் மற்றும் அதிகாரத்தை இதுபோன்று மேல்நோக்கி மறுபங்கீடு செய்வது தவிர்க்கவியலாததாக இருந்தது; 1975 க்குப் பின்னர் இருந்து நாம் நடைமுறைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த ஒவ்வொரு சிறிய கொள்கைகளின் நேரடி விளைவாக — அது ஒரு தேர்ந்தெடுப்பாக இருந்தது.” [வலியுறுத்தல் மூலப்பிரதியில் உள்ளவாறு]

அந்த அறிக்கையின்படி, பில்லியனர்களின் வரிகளை வெட்டவும், பங்குச் சந்தையைச் சூழ்ச்சியாக கையாள பங்குகளை வாங்கிவிற்க அனுமதிக்கவும், ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மூலமாக பெருநிறுவனங்கள் பரந்த அதிகாரத்தைப் பெறுவதை அனுமதிக்கவும், குறைந்தபட்ச கூலிகளைக் குறைக்கவும், அமெரிக்க மக்களின் நலன்களை விட பணக்காரர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசியல்வாதிகளைத் தேர்வு செய்வதையும் "நாம்" தான் "தேர்ந்தெடுத்தோம்" என்று அது குறிப்பிடுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறுதி பகுப்பாய்வில், பெருந்திரளான மக்களே மோசமடைந்து வரும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளுக்குப் பொறுப்பு என்றாகிறது.

ஆனால் புறநிலை அரசியல் மற்றும் பொருளாதார உண்மைகள் மீதான ஓர் ஆய்வு, இந்த அவதூறை அம்பலப்படுத்துகிறது. அது, சந்தை செயல்பாடுகள் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் செயல்பாடும் மற்றும் அதன் பொருளாதார விதிகளுமே இதற்கடியிலிருக்கும் காரணம் என்பதையும், இதில் வங்கிகளும் பிரதான பெருநிறுவனங்களே பொருளாதாரம் மீது அதிகாரம் செலுத்தும் உயரிடங்களைத் தனிப்பட்டரீதியில் சொந்தமாக்கி உள்ளன என்பதால் பெருந்திரளான மக்கள் இதில் எந்த கட்டுப்பாடும் கொண்டிருக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

RAND அமைப்பின் பகுப்பாய்வு மேல்நோக்கிய வருவாய் மறுபங்கீட்டின் தொடக்கப்புள்ளியாக 1974-75 ஐ அடையாளம் கண்டது. இந்த காலகட்டம் போருக்குப் பிந்தைய எழுச்சியின் முடிவைக் குறித்ததுடன், இந்த காலகட்டத்தில் அனைத்து மட்டங்களிலும் வருமான அதிகரிப்பானது தோராயமாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்வைத் தொடர்ந்து வந்திருந்தது. இதன் அர்த்தம் அதாவது அப்போதிருந்த வருமான சமத்துவமின்மை விரிவடையவில்லை.

1971 ஆம் ஆண்டில் பிரெட்டன் வூட்ஸ் நாணய முறையின் நிலையான நாணய மாற்று விகிதங்களை அகற்றியதன் மூலம் இந்த எழுச்சி முடிவடைந்தது. ஜனாதிபதி நிக்சன், அதன் போட்டியாளர்களை எதிர்கொள்ளும்போது அமெரிக்க முதலாளித்துவத்தின் பலவீனமான உலகளாவிய பொருளாதார நிலையை எதிர்கொண்டபோது, அமெரிக்க டாலரருடனான தங்க ஆதரவை அகற்றினார்.

இது பெருமந்தநிலைமைக்குப் பின்னர் அந்த தருணத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்த 1974-75 மந்தநிலைக்கு (recession) இட்டுச் சென்ற உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பு காலகட்டத்தைக் கொண்டு வந்தது.

எழுச்சியின் போதும் கூட பின்னடைவுகள் இருந்தன. ஆனால் பண்புரீதியில் 1974-75 அளவுக்கு வித்தியாசமாக இருக்கவில்லை ஏனென்றால் அதன் முடிவு 1950 கள் மற்றும் 1960 களில் நடந்தைப் போல, ஒரு பொருளாதார மறுதொடக்கம் மற்றும் ஒரு உயர் வளர்ச்சி விகிதத்தால் குறிக்கப்படவில்லை, மாறாக மெதுவான வேகத்துடனான பொருளாதார வளர்ச்சி, அதிகரித்த வேலைவாய்ப்பின்மை மட்டங்கள் மற்றும் அதிகரித்து வந்த பணவீக்கம் என தேக்கமந்தநிலை (stagflation) என்று அறியப்பட்டதால் குறிக்கப்பட்டிருந்தது.

1974-75 பின்னடைவானது, மார்க்ஸ் அடையாளம் காட்டிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் மிகவும் அடிப்படை விதிகளில் ஒன்றான அதாவது, இலாப விகித வீழ்ச்சி போக்கு வெடித்து மேற்புறத்திற்கு வந்ததால் ஏற்பட்டிருந்தது.

இந்த எழுச்சியின் போது, அப்போதிருந்த தொழில்துறை முறைக்குள் அதிகரித்து வந்த உழைப்பின் உற்பத்தித்திறன் மூலமாக, இந்த போக்கைத் தடுக்க முடிந்தது. ஆனால் இது போதுமானதாக இருக்கவில்லை. அதற்குப் பின்னர் மூலதனம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பொருளாதாரத்தில் ஒரு அடிப்படையான மறுகட்டுமானத்தை வேண்டி நின்றது.

அது, 1980 களின் தொடக்கத்திலிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தாக்குதல், தொழில்துறையின் ஒட்டுமொத்த மிச்சமீதிகளின் சீரழிப்பு, சர்வதேச அளவில் மலிவு உழைப்பு ஆதாரவளங்களைச் சாதகமாக்கிக் கொள்ள உற்பத்தி நிகழ்வுபோக்குகளை ஒப்பந்த சேவையில் வழங்குதல், கணினி அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் தீவிரப்படுத்தப்பட்ட அபிவிருத்தி, இலாபத் திரட்சிக்கான அடித்தளமாக அதிகரித்தளவில் ஊக வணிக நிதியியல் செயல்பாடுகளுக்குத் திரும்புதல் என இத்தகைய வடிவத்தை எடுத்தது.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழ் ஒன்றுபோல மேற்கொள்ளப்பட்ட மற்றும் தன்னை மூலதனத்தின் பகிரங்க முகமையாக மாற்றிக் கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட 50 ட்ரில்லியன் டாலருக்கு நிகரான மேல்நோக்கிய வருவாய் மறுபங்கீடு, வாக்களிக்கும் மக்களால் தேர்ந்தெர்ந்தெடுக்கப்பட்ட ஒரு "விருப்பத்தெரிவின்" விளைவல்ல. அது முதலாளித்துவ பொருளாதாரத்தின் இதயதானத்திலிருந்து வெளிப்படும் புறநிலை உந்துதல்களின் விளைவாகும், இதுவே இறுதி பகுப்பாய்வில் ஒட்டுமொத்த அரசியல் பெருங்கட்டமைப்பின் திசையையும் செயல்பாடுகளையும் தீர்மானித்தது.

மிக முக்கியமாக, RAND அறிக்கையின் ஆசிரியர்களான பிரைஸூம் எட்வார்டும் இந்த பிரிவில் "இன்னும் அதிக வேலை" செய்ய வேண்டிய அவசியமிருப்பதாக குறிப்பிட்டு, அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கான காரணம் மீது கருத்துரைக்கவில்லை.

ஆனால் மார்க்ஸ் எடுத்துக்காட்டிய முதலாளித்துவ பொருளாதார விதிகளின் அடிப்படையில் விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வு அதன் மூல ஆதாரத்தை வெளிப்படுத்துகிறது. தசாப்த காலங்கள் நெடுகிலும் எல்லா அரசியல் வகையறாக்களின் முதலாளித்துவ வர்க்க பொருளாதார வல்லுனர்களாலும் கண்டிக்கப்பட்ட அவரின் முடிவான தீர்மானம், முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் வரலாற்று அபிவிருத்தியில் என்னதான் வளைவுகளும் திருப்பங்களும் ஏற்பட்டாலும் அதன் உள்ளார்ந்த புறநிலை தர்க்கம் ஒரு முனையில் பாரியளவில் செல்வவளத்தையும் மறுமுனையில் வறுமை மற்றும் அவலத்தையும் குவிப்பதாக இருக்கும் என்று எடுத்துரைத்தது.

இதிலிருந்து தீர்க்கமான அரசியல் தீர்மானங்கள் வருகின்றன, இதை எல்லா விதமான "விமர்சகர்களும்" எல்லாவற்றுக்கும் மேலாக "இடதும்" இவற்றை மூடிமறைக்க மறைக்க முயன்றாலும், தொழிலாள வர்க்கம் மட்டுமே இலாபகர அமைப்புமுறையை முடிவுக்கட்டுவதன் மூலமாக அதன் உழைப்பு உருவாக்கி உள்ள பரந்த செல்வவளம் மற்றும் உற்பத்தி சக்திகளைப் பயன்படுத்தி, அதன் சொந்த தலைவிதியை தானே கட்டுப்பாட்டில் எடுக்க முடியும், அதாவது மிகப் பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் நிதியியல் அமைப்புமுறையை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் சொத்தாக எடுப்பதன் மூலமாக சுரண்டுவோரிடம் இருந்து செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதாகும்.

இந்த "விமர்சகர்களால்" என்ன மாற்றீடு வழங்கப்படுகிறது? இது உயர் அபாய மூலதன முதலீட்டாளர் Nick Hanauer, மற்றும் சர்வதேச சேவை பணியாளர்கள் சங்கத்தின் உள்ளூர் கிளை 775 இன் ஸ்தாபகர் டேவிட் ரோல்ஃப் எழுதிய டைம்ஸ் கட்டுரையின் தீர்மானத்தில் தொகுத்தளிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் சக்தியை அதிகரிக்க செய்யும் "பரிசோதனைகளின்" தேவை குறித்து எழுதிய பின்னர் அவர்கள் பின்வருமாறு நிறைவு செய்கின்றனர்: “இந்த நெருக்கடியைக் கையாள இப்போதைய நிர்வாகத்திற்கு ஏதேனும் ஆர்வம் இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பைடென் நிர்வாகம் வரலாற்றுரீதியில் துணிச்சலாக இருக்கும் என்று நம்புகிறோம்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாள வர்க்கம் தொடர்ந்து முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்குள் கட்டி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்.

“இந்த தொற்றுநோய்க்குப் பின்னர் முதலாளித்துவம், மீட்பை சரியாக செய்தல்,” என்று தலைப்பிட்டு “இடது" பொருளாதார நிபுணர் Mariana Mazzucato எழுதி, அக்டோபர் 2 இல் Foreign Affairs இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை, இப்போதைய இந்த நெருக்கடிக்கு அடியிலிருக்கும் காரணங்களை மூடிமறைப்பதற்கான மற்றொரு முயற்சியாக இருந்தது.

அப்பெண்மணி 2008 நிதியியல் நெருக்கடிக்கான விடையிறுப்பு மீதான ஒரு பகுப்பாய்வுடன் அவர் கட்டுரையைத் தொடங்குகிறார். நிதியியல் அமைப்புமுறைக்கு 3 ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பானது நிறுவனங்களுக்கும் முதலீட்டு வங்கிகளுக்கும் மீட்சிக்கான வெகுமதிகளைப் பெற உதவியது என்றாலும் மக்கள் "முன்னர் போலவே ஒரு முறிந்த, சமநிலையற்ற மற்றும் கார்பன்-செறிந்த ஓர் உலகளாவிய பொருளாதாரத்தில் விடப்பட்டுள்ளனர். இப்போது நாடுகள் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்தும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூக அடைப்புகளிலிருந்தும் வெளியேறி வருகின்ற நிலையில், அவர்கள் அதே தவறு செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார்.

அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளது தற்போதைய "மீட்பு முயற்சிகள்" அவசியம் தான் என்றாலும் "சந்தைகள் தோல்வியடைந்து அல்லது நெருக்கடி ஏற்படும் போது கடைசி முயற்சியாக நிதியுதவி செய்பவராக வெறுமனே தலையீடு செய்வது அரசாங்கங்களுக்கு போதுமானதாக இருக்காது. அவை ஒவ்வொருவருக்கும் பலன் கொடுக்கும் ஒரு விதமான நீண்டகால விளைவை வழங்கும் விதத்தில் செயலூக்கத்துடன் அவை சந்தைகளை வடிவமைக்க வேண்டும். 2008 இல் அதை செய்வதற்கான வாய்ப்பை உலகம் தவற விட்டுவிட்டது, ஆனால் தலைவிதி அதற்கு மற்றொரு வாய்ப்பை வழங்கி உள்ளது,” என்கிறார்.

உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுக்கையில் என்ன நடந்ததோ அது ஒரு "தவறல்ல" மாறாக வர்க்க-முனைப்புடன் கூடிய விடையிறுப்பாகும். 2008 வாக்கில், போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் முடிவுடன் தொடங்கி இருந்த நிதியமயப்படுத்தல், ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஊக வணிகத்தை, ஊழல் மற்றும் முற்றுமுதலான வோல் ஸ்ட்ரீட் குற்றகரத்தன்மையைச் சார்ந்திருக்கும் அளவுக்கு ஒரு புள்ளியை எட்டியிருந்தது —இந்தவொரு நிலைமை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷையே நெருக்கடியின் உச்சத்தில் "இந்த உறிஞ்சுபவர்களின் வீழ்ச்சி" என்று கருத்துரைக்க இட்டுச் சென்றது.

2008 க்குப் பின்னர், மத்திய வங்கியால் மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் நடைமுறை மூலமாக நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் பாய்ச்சபட்டு, போலியான நிதியியல் மூலதன குவியல் இன்னும் அதிக உயரங்களுக்கு உயர்த்தப்பட்டது, இந்த தொற்றுநோய் பாதித்த போது, மார்ச் மாத மத்தியில் ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையும் உறைந்து போனதுடன், அதற்கு நிர்வாகம் மற்றும் மத்திய வங்கியின் தலையீடும் முன்பினும் அதிகமாக தேவைப்பட்டது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் அளவு என்ன என்பது Mazzucato க்கு நன்கு தெரியும். அவர் குறிப்பிடுகிறவாறு: “நிதியியல் துறையின் பெரும்பாலான இலாபங்கள் உள்கட்டமைப்பு அல்லது புதிய கண்டுபிடிப்புகள் போன்ற ஆக்கபூர்வமான பயன்பாடுகளுக்குள் செலுத்தப்படுவதற்குப் பதிலாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் என நிதி நிறுவனங்களுக்குள்ளேயே மீண்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. … இதனால் தற்போதைய நிதிய கட்டமைப்பு கடனால் இயக்கப்படும் ஒரு அமைப்புமுறைக்கும் ஊக வணிக குமிழிகளுக்கும் எரியூட்டி உள்ளதுடன், அவை வெடிக்கும்போது, அவை வங்கிகளையும் ஏனைய அமைப்புகளையும் அரசின் உதவிக்காக பிச்சையெடுக்க கொண்டு வரும்,” என்கிறார்.

ஆனாலும் "சமத்துவமின்மையை குறைவாக உருவாக்கும்" மற்றும் "தனித்துவமான இன்னும் நிலைநிற்கக்கூடிய" ஒரு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை உலகிற்கு வழங்கி, இந்த அமைப்புமுறை இப்போதும் ஏதோவிதத்தில் துரிதமாக திசைதிருப்புவதற்கு ஏதுவாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்த ஆசிரியர் நன்கு அறிந்து வைத்துள்ள தெளிவான ஒரு யதார்த்தம் அவரின் முகத்திற்கு எதிராக திரும்புகையில் இந்த நிலைப்பாட்டை எவ்வாறு விளக்குவது?

ஒரே வார்த்தையில் கூறுவதானால், இதுதான் அரசியல். Mazzucato, உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளை அடிப்படையாக கொண்ட “இடது" வட்டாரத்தின் பாகமாக இருக்கிறார். இது முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது விமர்சனங்களை வழங்கினாலும், அதன் சமூக பொருளாதார தனிச்சலுகைகளை ஆபத்திற்கு உட்படுத்தும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்திற்கு ஆழ்ந்த விரோதமாக உள்ளது. ஆகவே அது சீர்திருத்தத்திற்கான சாத்தியக்கூறு மீது பிரமைகளை முடுக்கி விடுகிறது.

இதுவரையில் ஒரு தத்துவார்த்த நிலைப்பாட்டை விற்கும் ரீதியில் Mazzucato இந்த பிரமையை வழங்க முயல்கிறார் என்றாலும், முதலாளித்துவ நெருக்கடிகள் அதன் புறநிலை மற்றும் தீர்க்கவியலாத முரண்பாடுகளிலிருந்து எழவில்லை மாறாக தவறான வழிகளில் சிந்திப்பதில் இருந்து எழுகிறது என்பதைப் பேணுகிறார்.

“பண்டத்தின் மதிப்பை மீளசிந்தித்தல்,” என்று துணைத்தலைப்பின் கீழ் தற்போதைய நெருக்கடியைக் கையாண்ட பின்னர், அவர் எழுதுகிறார்: “இவை அனைத்தும் பொதுமக்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான உறவு முறிந்துள்ளதையே எடுத்துகிறது. பொருளாதாரத்துறையில் பண்டத்தின் மதிப்பு சார்ந்த கருத்துரு தவறாக சிக்கியுள்ளது எனும் அதற்கு அடியிலுள்ள பிரச்சினையை முதலில் சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.”

ஆனால் Mazzucato க்குமே நன்கு தெரியும், அவருக்கு முன் சென்ற தொல்சீர் அரசியல் பொருளாதார நிபுணர்களின் பணிகளைக் கட்டமைத்த மார்க்ஸ், மூலதன நூலின் முதல் அத்தியாயத்தில், முதலாளித்துவ பொருளாதாரத்தின் அணு-வடிவமான பண்டம் என்பதைக் கையாளுகையில், பண்டத்தின் மதிப்பு என்பது ஒரு கருத்துரு இல்லை மாறாக ஓர் புறநிலை சமூக உறவு என்பதை ஸ்தாபித்துக் காட்டினார்.

பண்டத்தின் மதிப்பு வரலாற்றுத்தன்மை உடையது. அது ஒரு குறிப்பிட்ட வரலாற்று சமூக-பொருளாதார அமைப்புமுறையில், அதாவது முதலாளித்துவத்தில், எழுகிறது. அதில் உற்பத்தி சமூகமயப்பட்டது என்றாலும் உற்பத்தி கருவிகளின் தனியுடமையாளர்களால் செய்யப்படுகிறது. பண்டங்களின் மதிப்பு அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்பவர்கள் அல்லது அவர்களுக்கு விற்பனை செய்பவர்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை மாறாக அவற்றில் உள்ளடங்கிய சமூகரீதியில் தேவைப்படும் உழைப்பின் அளவால் தீர்மானிக்கப்பட்டு, பணத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

தொழிலாள வர்க்கம் கொண்டிருக்கும் ஒரே பண்டமான உழைப்புச் சக்தி சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு, உற்பத்தி கருவிகளின் உரிமையாளர்களால் கொள்முதல் செய்யப்படும் போது, பண்டங்களின் உற்பத்தியாக மாறுகின்ற முதலாளித்துவ உற்பத்தி முறை கூடுதலாக அல்லது உபரி மதிப்பை உறிஞ்சுவதற்காக செயலுக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த உபரி மதிப்பு தொழில்துறை இலாபத்திற்கும் மற்றும் நில உரிமையாளர்கள், வங்கிகள் மற்றும் நிதியாளர்களுக்கு வருவாய் ஓட்டத்தின் ஏனைய வடிவங்களுக்கும் அடித்தளத்தை உருவாக்குகிறது.

இந்த அமைப்புமுறையின் நோக்கம் சமூகத்தை முன்னேற்றுவதற்கு அவசியமான பண்டங்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதல்ல மாறாக மதிப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் பணத்தைக் குவித்துக் கொள்வதாகும். மார்க்ஸ் மேற்கொண்டு விளக்கியவாறு, பணம் என்பது இந்த நிகழ்ச்சிப்போக்கின் தொடக்கமாகவும் முடிவாகவும் உள்ளது, ஆகவே நிதி மூலதனம் அவசியத்திற்கேற்ப இந்த அமைப்புமுறையையும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபகத்தையும் ஆக்கிரமிக்க வரும் சூழல் எழுவதால் அது என்ன சமூக விலையைக் கொடுத்தாவது, இந்த தொற்றுநோய் மிகவும் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியவாறு, உயிரையே கூட விலையாக கொடுத்தாவது, இந்த செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்படுகிறது.

ட்ரொட்ஸ்கி ஒரு முறை எழுதினார், எந்த அரக்கனும் இதுவரையில் தனது கோர நகங்களை தானே முன்வந்து வெட்டிக் கொண்டதில்லை. சமூக உடலுக்குள் ஆழமாக ஊடுருவி வரும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கோர நகங்கள், மதிப்பை எது உருவாக்குகிறதோ அதைக் குறித்த பிழையான மதிப்பீடுகளில் இருந்து எழவில்லை.

அவை உற்பத்தி கருவிகளின் மீது தனியார் சொத்துடைமையின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூக-பொருளாதார ஒழுங்கிற்கு அத்தியாவசிமான விளைபொருளாக உள்ளன. இந்த அமைப்புமுறை இப்போது ஒரு கூடிய சீரழிவான நிலைக்குள் நுழைந்துள்ளதால், மனிதகுல முன்னேற்றம் மீண்டும் தொடர வேண்டுமானால் இப்போது அது தொழிலாள வர்க்கத்தால் வேரிலிருந்து கிளைவரை பிடுங்கி தூக்கிவீசப்பட்டு சோசலிசத்தால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

இந்த பணியைக் குறித்த புரிதலைத் தடுக்க முயற்சிப்பதற்காக முதலாளித்துவ ஒழுங்கின் வாழ்க்கை-அழிக்கும் புறநிலை பொருளாதார தர்க்கத்தை முக்கியமற்றதாக ஆக்கவும் எளிதில் விளங்காதவாறு செய்வதற்காகவும் இத்தகைய அவநம்பிக்கையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஒரு உறுதியான உண்மையாகும். இது அப்பணி நாளாந்த நிகழ்ச்சிநிரலில் இருப்பதற்கான ஒரு நிச்சயமான அடையாளமாகும்.