உலகளவில் தொற்றுநோய் அதிரடியாக பரவி வரும் நிலையில், அரசாங்கங்கள் புதிய அடைப்புக்களை எதிர்ப்பதுடன், மீண்டும் வேலைக்குத் திரும்பும் உந்துதலை முடுக்கி வருகிறது

Benjamin Mateus
14 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் உலகளவில் கோவிட்-19 புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரிப்பைக் கண்டது. வார இறுதியில், உலகளவில் நாளாந்த நோய்தொற்றுக்களின் புதிய அதிகரிப்புக்கள் 360,000 க்கு நெருக்கமான எண்ணிக்கைகளில் பதிவாகின.

இந்த மேல்நோக்கிய அதிகரிப்பு, எந்தவொரு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாத, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் வழங்கப்படாத மற்றும் நோய்தொற்றுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாத நிலைமைகளின் கீழ் அரசாங்கங்கள் பள்ளிகளையும் வளாகங்களையும் மீண்டும் திறப்பதற்கான உந்துதலை தொடங்கி வைத்த அனைத்து நாடுகளிலும் ஏற்கனவே கடந்த மாதம் தெளிவாக நிகழ்ந்தது. இதன் விளைவாக முன்கணித்தபடி புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்தன. என்றாலும், முதலாளித்துவ அரசாங்கங்கள், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு வலியுறுத்தவும் பெருநிறுவன இலாபங்களை பெருக்கவும் பள்ளிகளை மீண்டும் திறப்பது இன்றியமையாதது எனக் கருதுகின்றன.

உலகளவில் தற்போது வரை 37.7 மில்லியன் நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதுடன், 1.08 மில்லியன் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும், தற்போது செயலில் உள்ள நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 8.3 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதானது, தற்போது கூட நோய்தொற்று பரவும் வீதம் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொடர்ந்து அதிகமாக இருப்பதையே குறிக்கிறது.

Cemetery workers place crosses over a common grave after burying five people at the Nossa Senhora Aparecida cemetery in Manaus, Brazil [Credit: AP Photo/Felipe Dana]

இந்நிலையில், கோடை காலத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மிக அதிகளவு புதிய நோய்தொற்றுக்கள் உருவாகின, அதேபோல கடந்த இரண்டு வாரங்களில் ஐரோப்பாவும் அதி விரைவாக புதிய நோய்தொற்றுக்கள் பரவுவதை எதிர்கொண்டது, இவை ஐரோப்பா முன்னர் எதிர்கொண்ட நோய்தொற்று எண்ணிக்கைகளை விட மிகவுயர்ந்த மட்டங்களில் இருந்தன. மேலும், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு மில்லியனுக்கு உறுதிப்படுத்தப்படும் நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைகள் கூட தற்போது அமெரிக்காவிற்கு சமமானவையாக உள்ளன.

இந்த தொற்றுநோயியல் புள்ளிவிபரங்களுக்குப் பின்னால், தற்போதைய பங்குச் சந்தை ஏற்றம் கண்டாலும், மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி குறித்த அச்சங்கள் நிதிய வட்டாரங்களுக்குள் அதிகரித்து வருகிறது. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்ட படி: “கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட எழுச்சி அலை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகளை கீழறுப்பதால், வணிகங்கள், குடியிருப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது, கூடுதல் நாணயக் கொள்கை ஊக்கத்திற்கான சிறிய வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், தொற்றுநோய்க்கு முந்தைய உற்பத்தி மட்டங்களை எட்டுவதற்கு பெரும்பாலான நாடுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.”

சமீபத்திய Brookings-Financial Times கண்காணிப்பு குறியீட்டின் படி, “வலுவான” மீட்டெடுப்பின் மீது குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் உள்ளன. பங்குச் சந்தை எழுச்சி என்பது, அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் மற்றும் உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகளும் பராமரிக்கும் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டி விகிதங்களைச் சார்ந்துள்ளது, மேலும், தொற்றுநோய் காலத்தில் பெருநிறுவன நிதிய தன்னலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான பொது நிதியையும் இது சார்ந்துள்ளது. என்றாலும் உண்மையான பொருளாதாரம் பெரும் மந்தநிலைக்கு பின்னர் ஆழமான வீழ்ச்சிக்கு சென்றுவிட்டது. Brookings மற்றும் Financial Times, “நிதிய ஊக்க நடவடிக்கைகள் வீழ்ச்சி காணும் நிலையில், தனியார் நுகர்வின் வளர்ச்சி குறைந்துள்ளது, இது வீட்டு செலவுகளுக்கான வருமானத்தில் சரிவை ஏற்படுத்தியதுடன், மேலதிக நிதிய ஊக்கத்திற்கான வாய்ப்புக்களை மேலும் நிச்சயமற்றதாக்குகிறது” என்று குறிப்பிடுகின்றன.

ஜப்பான் மற்றும் ஜேர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட யூரோ மண்டலங்கள் கடுமையான மற்றும் நீண்டகால பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொள்வதால், அவற்றின் பெருளாதார நிலைகள் ஆபத்தான வடிவில் உள்ளன. உலகளவிலான மீட்சிக்கு சீனா வழிவகுக்கும் என்று பத்திரிகைகளில் கருத்துக்கள் வெளிவந்தாலும், சர்வதேச தேவைக்கு ஏற்ப கணிசமான அதிகரிப்பை சீனா வழங்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. இதற்கிடையில், ஏழ்மையான நாடுகளோ ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன.

அதே நேரத்தில், அதிகரித்து வரும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும், அதிகரித்தளவில் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதும் இந்த நெருக்கடிக்கு பதிலிறுக்க குறிப்பிடத்தக்க அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. ஆயினும்கூட, ஒவ்வொரு அரசாங்கமும் எதிர்கால அடைப்புக்களுக்கோ அல்லது ஏனைய பரந்த அடிப்படையிலான கட்டுப்படுத்தல் முயற்சிகளுக்கோ உறுதியாக எதிர்ப்பு தெரிவிப்பதால் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களால் எந்தவித குறைவுமின்றி தூண்டப்பட்டு, அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்த அதே அடிப்படையிலான பாதையை ஐரோப்பிய அரசாங்கங்களும் பின்பற்றுகின்றன.

நோய்தொற்றுக்களின் அதிரடியான வளர்ச்சியை எதிர்கொள்கையில், கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களை பாதிக்கும் வகையில், மாட்ரிட்டில் பகுதியளவிலான அடைப்பை பராமரிக்க அனுமதிக்கும் அவசரகாலநிலையை ஸ்பெயின் அரசாங்கம் விதித்துள்ளது. இந்நிலையில், நகரின் மருத்துவமனைகள் கோவிட்-19 புதிய நோயாளிகளின் கட்டுக்கடங்காத வருகையை எதிர்கொண்டுள்ளன.

அக்டோபர் 8 நிலவரப்படி அங்கு 12,000 புதிய நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருந்ததுடன், அக்டோபர் 9 இன் படி 241 இறப்புக்களும் நிகழ்ந்திருந்தன. அனைத்து தீவிர சிகிச்சை படுக்கைகளில் 40 சதவிகித அளவிற்கு கோவிட்-19 நோயாளிகள் தான் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

என்றாலும், வணிகங்களும் உள்ளூர் அதிகாரிகளும் இந்த புதிய கட்டுப்பாடுகளை எதிர்க்கின்றனர். வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துப்படி, சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள ஸ்பெயினின் பொருளாதாரம், 2020 ஆம் ஆண்டில் 10.5 சதவிகிதம் மற்றும் 12.6 சதவிகிதத்திற்கு உட்பட்ட வகையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜேர்னல், “மைய-வலது பிராந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை எதிர்த்ததோடு, உத்தரவை இரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் முறையிட்டது” என்று சேர்த்து கூறியது. இந்த கட்டுப்பாடுகள், சமூக மோதல்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், “குடிமகனின் அடிப்படை உரிமைகளை,” மீறும் என்று மாட்ரிட் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரான்சில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கணிசமான வேகத்தில் அதிகரித்து வருகின்றன, இது ஏப்ரல் உச்சங்களை விட மும்மடங்கு கூடுதலானது. சனிக்கிழமை அன்று, சுகாதார அதிகாரிகள் 27,000 க்கு நெருக்கமாக புதிய நோய்தொற்றுக்கள் பரவியிருப்பதாகக் கூறினர். அசோசியேட்டட் பிரஸ்ஸின் கூற்றுப்படி, பாரிஸ் பிராந்தியத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 40 சதவிகித படுக்கைகள் தற்போது கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன. ஸ்பெயினைப் போலவே, இறப்பு எண்ணிக்கையும் இங்கு அதிகரித்து வருகிறது. தெற்கு நகரமான ஆர்ல் இல் ஒரு சிறிய தீவிர சிகிச்சைப் பிரிவை நடத்தி வரும் டாக்டர் கரீம் டெபாட் (Dr.Karim Debbat), நோயாளிகளை மேலும் சேர்க்க தன்னிடம் கூடுதல் இடவசதி இல்லை என்று AP க்கு தெரிவித்தார். மேலும் மீட்பு அறைகளை மாற்றுவதற்காக திருத்த வேலைகளை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட அறுவைசிகிச்சைக்களை தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

Daily new cases of COVID-19 per million Europe vs US

ஜனாதிபதி மக்ரோன் தனது மிக மோசமான பதிவுகளை பாதுகாத்தார். மருத்துவமனை அமைப்புக்களில் அதிக முதலீடுகள் செய்யக் கோரி பாரிஸ் சுகாதாரப் பணியாளர்கள் போராடிய போது, “இது வளங்கள் பற்றிய கேள்வியாக இனிமேல் இருக்காது, மாறாக இது அமைப்பு பற்றிய கேள்வியாகும்” என்று இழிவாக கூறினார். இரண்டாம் கட்ட நோய்தொற்று எழுச்சியை எதிர்கொள்ள தயாராவதற்கு இங்கு சிறிதளவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், பல ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர், சுகாதார அமைப்புமுறை சிக்கல்களுக்குள் விடப்பட்டுள்ளது. பிரான்சின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் கொள்திறன் 6,000 ஆக உள்ள நிலையில், 1,400 படுக்கைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன.

இங்கிலாந்தும் புதிய நோய்தொற்றுக்களின் வெடிப்பை எதிர்கொள்கிறது, குறிப்பாக அக்டோபர் 8 அன்று 17,540 நோய்தொற்றுக்கள் என்றளவிற்கு ஒருநாள் அதிகரிப்பைக் கண்டது. சனிக்கிழமை அன்று 81 இறப்புக்கள் நிகழ்ந்தன, ஓரிலக்கங்களிலான கோடைக்கால குறைவுக்குப் பின்னர் அதிகபட்ச உச்சங்களைக் கொண்ட போக்குகள் தற்போது அங்கு உருவாகியுள்ளன. மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் சேர்க்கை 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் 3,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரிட்டனின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி ஜொனாதன் வான்-டாம் (Jonathan Van-Tam), அடுத்த சில வாரங்களில் வட மேற்கில் உள்ள தீவிர சிகிச்சை மையங்கள் அவற்றின் முழு கொள்திறனை எட்டக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் (MPs) தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்தொற்று விரைந்து பரவுவதை தடுக்க பகுதியளவிலான அடைப்புக்களை அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட உள்ளார். நோய்தொற்றின் புதிய எழுச்சி அலை பிரிட்டனின் பரிசோதனை நடவடிக்கைகளையும், நோய் தடமறியும் திட்டங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது, ஏனெனில் முடிவுகளின் தாமதம் பிரளயத்திற்கு முந்தைய முன்முயற்சிகளை பெரிதும் தடுக்கிறது.

நோவ்ஸ்லி கவுன்சிலின் துணைத் தலைவரான சீன் டொன்னெல்லி (Sean Donnelly), “வைரஸ் நோய்தொற்று சமூகம் எங்கும் பரவியுள்ளது. அதிலும், வயோதிகர்கள் மத்தியில் தான் நாம் நிறையப் பார்க்கிறோம். இது எவ்வாறு பரவுகிறது என்பதை நாம் சுட்டிக்காட்ட முடிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நமக்கு அது தெரியாது. எனவே நமக்கு முழு அடைப்பு தேவை தான்” என்று பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தார்.

எழுச்சிக்கான பெரும்பாலான குற்றச்சாட்டாக, பெரிய வளாகங்களுக்கும் நெருக்கடி நிறைந்த தங்கிப்பயிலும் அரங்குகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் திரும்பியது தான் காரணமாக உள்ளது.

Global cumulative deaths due to COVID-19 WHO Dashboard

ஜோன்சன் அவரது கன்சர்வேடிவ் கட்சிக்கு உள்ளிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “சமூக கலப்பை” தடுப்பதற்கான விதிமுறைகள் வேலை செய்யவில்லை என்று கூறி புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவரது திட்டங்களை டசின் கணக்கான டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர். சிலர் “ஸ்வீடன் மாதிரி” என்றழைக்கப்படும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையுடன் தாமே ஒத்துப்போகின்றனர், இது, இளைய தலைமுறையினருக்கு வைரஸ் நோய்தொற்று பாதிப்பு ஏற்பட அனுமதிக்கும் அதேவேளை வயோதிகர்களை பாதுகாக்கும் என்று தவறாக கூறுகிறது. டோரி நாடாளுமன்ற உறுப்பினரான கிரகாம் பிராடி (Graham Brady) என்பவர், இந்த விதிகள் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் மக்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் ஒரு பெரிய ஊடுருவலாகும் என்பதுடன், அவை பேரழிவுகர பொருளாதார விளைவையும் கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

ஜேர்மனி, ஏனைய முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எழுச்சியை எதிர்கொள்கிறது. அதனால், ஜேர்மன் அரசியல்வாதிகளும் மேர்க்கெலும் புதன்கிழமை சந்தித்து மேலதிக கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக விவாதிக்கவுள்ளனர்.

ரஷ்யா சனிக்கிழமை அன்று ஒருநாள் அதிகரிப்பாக 12,846 கோவிட்-19 நோய்தொற்றுக்களை எதிர்கொண்டது, என்றாலும் வார இறுதி நாட்களில் மக்களை வீட்டிலேயே அடைந்திருக்குமாறு வெறுமனே எச்சரித்து, அடைப்புக்களை கிரெம்ளின் எதிர்த்தது. ரஷ்யாவால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இன்னமும் முழுமையாக பரிசோதிக்கப்படவில்லை என்ற உண்மை ஒருபுறமிருக்க, இந்த மாதத்தில் பெரியளவில் தடுப்புமருந்து கொடுக்கும் நடவடிக்கைகளை தொடங்க அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்தார்.

உலகளவிலான நோய்தொற்று அதிகரிப்புகளுக்கு இணையாக, வெள்ளியன்று 60,000 ஐ தாண்டிய நாளாந்த நோய்தொற்று எண்ணிக்கையுடன் அதிரடியான எழுச்சியை அமெரிக்கா எதிர்கொண்டது. நியூ யோர்க் டைம்ஸின் கூற்றுப்படி, இரண்டு வார காலத்தில் அங்கு 12 சதவிகித அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 8 மில்லியன் நோய்தொற்றுக்கள் மற்றும் 220,000 இறப்புக்கள் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மறுதிறப்பினால் விளைந்த இந்த நிலைமையை பல ஊடகங்கள் “மூன்றாவது அலை” என்றே குறிப்பிடுகின்றன. புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் போக்கு சராசரியில் பதினோரு மாநிலங்கள் பெரும் அதிகரிப்பை கண்டன, மேலும் நோய்தொற்று பரவும் சாத்தியமான விகிதங்கள் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பதாக 13 மாநிலங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரே வாரத்தில், நியூயோர்க் நகரில் ஒரு நாளைக்கு சராசரியாக 574 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது, இரண்டு வாரங்களுக்கு முந்தைய சராசரியிலிருந்து 60 சதவிகிதம் கூடுதலானது என்பதுடன், ஜூன் மாதத்திற்கு பின்னர் பதிவான உச்சபட்ச எண்ணிக்கையுமாகும்.